Tuesday, November 24, 2015

அடுத்த வருட தீபாவளிக்கு விஜய் 60

'புலி' படத்திற்கு ஏற்பட்ட தோல்வியினால் தற்போது அட்லி இயக்கும் தாறு மாறு படத்தை வெற்றியடைய வைத்தே ஆக வேண்டும் என்ற வெறியில் இருக்கிறாராம் விஜய்.

அதனால், அவசரஅடியாக படத்தை எடுக்காமல் நிதானமாக எடுக்கும்படி அட்லீயிடம் சொல்லி இருக்கிறார் விஜய். எனவே தற்போது நடித்துவரும் தாறுமாறு படத்தின் வேலைகள் முடிய அடுத்த ஆண்டு பிப்ரவரி ஆகிவிடும் என்று சொல்லப்படுகிறது. 

படத்தை 2016 ஏப்ரல் 14 அன்று வெளியிட உள்ளனர். இப்படத்தைத் தொடர்ந்து 'அழகிய தமிழ் மகன்' படத்தை இயக்கிய பரதன் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கவிருக்கிறார் விஜய். 

துப்பாக்கி, ஜில்லா படங்களைத் தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறாராம் காஜல் அகர்வால்.  விஜய் 60 படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவிருக்கிறார். 

இந்தப்படத்தின் மூலம் விஜய்யுடன் முதல்முறையாக இணைவிருக்கிறாராம் சந்தோஷ் நாராயணன். பிரவீன் கே.எல். எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். விஜயா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாக உள்ள  'விஜய் 60' படத்தின் துவக்கவிழா ஏப்ரல் மாதம் நடைபெறுமாம். 

அன்றைய தினமே  படப்பிடிப்பையும் துவங்க திட்டமிட்டிருக்கிறார்கள். 2016 ஆம் ஆண்டு தீபாவளிக்கு விஜய் 60 படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Thursday, October 29, 2015

பாட்ஷாவுக்கு இணையாக கபாலி ரஜினி

ரஜினி டான் வேடத்தில் நடித்து வரும் படம் கபாலி. இந்த படத்தில் சென்னை மயிலாப்பூரில் வாழ்ந்த ரவுடி கபாலியின் வேடத்தில் ரஜினி நடித்து வருவதாக கூறப்படுகிறது. 

ஆரம்பத்தில் சாதாரண ரவுடியாக இருக்கும் ரஜினி பின்னர் பெரிய டானாக வளர்ந்து மக்களுக்கு நன்மை செய்வது, அவர்களை பல பிரச்சினைகளில் இருந்து காப்பாற்றுவதுதான் இப்படத்தின் கதையாம்.

அந்த வகையில், இப்படத்தில் அவர் சென்னையில் நடிக்க வேண்டிய காட்சிகளை இங்கு செட் போட்டு படமாக்கினர். அப்போது ஒரு காட்சியில் நூற்றுக்கணக்கான மக்கள் தீ விபத்தில் சிக்கி விடுவார்களாம். 

அவர்களை உயிருடன் காப்பாற்றும் காட்சியில் ரஜினி நடித்தாராம். அந்த ஒரே காட்சியை சுமார் ஒரு வாரம் படமாக்கினாராம் டைரக்டர் ரஞ்சித்.

அதேபோல், பிழைப்புத்தேடி வெளிநாடுகளுக்கு செல்லும் ஏழை மக்களை ஒரு கும்பல் சிறை பிடித்துக்கொள்ளும் காட்சியும் இப்படத்தில் உள்ளதாம். 

அவர்களை ரஜினி சென்று மீட்டு வருவது போன்ற காட்சிகள் தற்போது மலேசியாவில் படமாக்கப்படுகிறதாம். 

மேலும், இந்த படத்தில் ஆரம்பகால ரஜினியை நினைவுபடுத்தும் வகையில், அதிரடி சண்டை காட்சிகளில் நடித்துள்ள ரஜினி, சில காட்சிகளில் பாட்ஷாவுக்கு இணையாக ஆவேச நடிப்பையும் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறாராம்.

Tuesday, October 27, 2015

நானும் ரவுடித்தான் - விமர்சனம்

நயன்தாரா ஹீரோயினாக நடிக்க, அவருடன் தற்போது அப்படி, இப்படி பேசப்படும் இயக்குனர் விக்னேஷ் சிவன் டைரக்ட் செய்துள்ள திரைப்படம், முன்னணி இளம் நடிகர் தனுஷ் தயாரிக்க, வளரும் இளம் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள படம்.

முதலில் இப்பட இசையமைப்பாளர் அனிருத் ஹீரோவாக அறிமுகமாக இருந்த திரைப்படம், இது நாள் வரை நாயகராக மட்டும் தான் நடிப்பேன்... என அடம் பிடித்திருந்து வந்த இயக்குனர் பார்த்திபனை வில்லன் ஆக்கியுள்ள படம்... என ஏகப்பட்ட பில்டப்புகளுடன் வந்திருக்கும் படம் தான் நானும் ரவுடிதான்.

பாண்டிச்சேரி பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதிகாவின் செல்லமகன் விஜய் சேதுபதி, சின்ன வயதில் அம்மாவுடன் அடிக்கடி ஸ்டேஷனுக்கு வந்து போய் லாக்கப்பில் ரெஸ்ட் எடுத்து வளர்ந்த சேதுபதிக்கு, அங்கு வரும் ரவுடிகளைப் பார்த்து, வளர்ந்து பெரியவன் ஆனதும் ரவுடி ஆக வேண்டும் என்பது ஆசை. 

ஆனால் பிள்ளையை பெரிய போலீஸ் ஆபிஸர் ஆக்க வேண்டுமென்பது அவரது அம்மா ராதிகா சரத்தின் லட்சியம்.  

அம்மாவின் செல்வாக்கில் போலீஸ்ஆவதற்கு முன், லோக்கல் ரவுடியாக தன்னை காட்டிக் கொள்ள முயலும் விஜய் சேதுபதிக்கு நயன்தாராவை, ஒரு முறை தன் அம்மாவின் ஸ்டேஷனில் வைத்து யதேச்சையாக பார்த்ததும் காதல் தொற்றிக் கொள்கிறது.

அதனால், தன் செல்போனை கைத்தவறி உடைத்து விட்டு மனம் உடைந்து காணப்படும் செவித்திறன் குறைபாடுள்ள நயனுக்கு உதவுவது போல், அவர் பின்னால் சுற்றும் விஜய் சேதுபதி, நயனின் சோகக்கதையைக் கேட்டு மெர்சலாகிறார்.  

ஒரு நல்ல அமைதியான போலீஸ் ஆபிஸரான நயனின் அப்பாவிற்கு வந்த வெடிகுண்டு பார்சலில், நயன்தாரா, தன் அம்மாவை இழந்து, தன் இரண்டு காதுகளின் கேட்கும் தன்மையையும் இழக்கிறார். 

கொஞ்ச காலத்தில் தன் காவலர் தந்தையையும், இழந்து தனி மரமாக இருக்கும் நயனுக்கு, தன் பெற்றோரின் சாவுக்கும் தனது காதுகள் கேட்காது போனதற்கும் காரணம், முன்பு பாண்டியிலும்,  தற்போது சென்னையிலும் கோலோச்சி வரும்  தாதா பார்த்திபன் என்பது தெரிய வருகிறது.

பார்த்திபனை பழி தீர்க்க சரியான ஆஜானுபாகுவான ரவுடி, நயனுக்கு வேண்டி இருக்கிறார். அந்த சமயம் விஜய் சேதுபதி வலிய வந்து நயன்தாரா மீதான தன் காதலை  மெல்ல, மெல்ல காட்ட, தன் இந்த நிலைக்கு காரணமான பார்த்திபனை தீர்த்து கட்ட தனக்கு உதவினால் விஜய் சேதுபதியை தான் காதலிப்பதாக உறுதி கொடுக்கிறார். அப்போதைக்கு விஜய் விரும்பும் உதடுகொடுக்க உஷாராய் மறுக்கிறார்.

வடிவேலு காமெடி பாணியில், நானும் ரவுடிதான், ரவுடிதான்.... எல்லோரும் பார்த்துக்கங்க.... பார்த்துக்குங்க... என., பள்ளிக்கூட பசங்க காதல், மோதல் பஞ்சாயத்து உள்ளிட்டவைகளில் மட்டுமே தலையிட்டு பெரிதாய் ரவுடி பில்டப் மட்டும் கொடுத்து வரும் சாதா விஜய் சேதுபதி, பெரிய ரவுடி தாதாவான பார்த்திபனை கொன்றிட  நயனுக்கு உதவினாரா? அல்லது விஜய் சேதுபதியே நயனின் சோகக்கதை, சொந்தக் கதைக் கேட்ட பின்,  வெறிகொண்ட வேங்கையாக புறப்பட்டு பார்த்தியை தீர்த்தாரா ..? அல்லது அவரது மம்மி ராதிகாவின் ஆசைப்படி போலீஸ் ஆனாரா..? நயனுடனான காதலில் தோற்றாரா.? வென்றாரா..?  என்பதை பின்பாதி நீள, நீள... சொல்கிறது நானும் ரவுடிதான்  படத்தின் மீதிக் கதை!

பாண்டியாக நானும் ரவுடிதான் என்றபடி வரும் விஜய் சேதுபதி, நான் கடவுள் ராஜேந்திரன் சொல்வது மாதிரி ரவுடிக்கே உரிய நடை, உடை, பாவனைகளில் பட்டையை கிளப்பி இருக்கிறார். நெஞ்சில் ரவுடி தனத்திற்குரிய துணிவு இல்லாமல் அவர் ஆரம்பத்தில் படும் அவஸ்தைகள் காமெடி கலாட்டாக்கள்!

காதல் பற்றியும், நட்பு பற்றியும் நயன்தாராவை தவறாக வழிநடத்த முற்படும் தனது அன்வர் எனும் நன்பருக்கு வழங்கும் லக்சர், நண்பனின் காதலியை லவட்ட முற்படும் நம்பிக்கை துரோகிகளுக்கு, நற்போதனை.  நானும் ரவுடி என அவர்  தன் போலீஸ் இன்ஸ்  அம்மா இருக்கும் தைரியத்தில் ஆரம்பத்தில் அவர் பண்ணும் லொள்ளு  செம ரகளை. 

நயன் மீதான காதலுக்காக, இவர் ஏங்குவதும் அது கிட்டத்தில் கிடைத்தும், கிடைக்காமல் போனதும் இவர் பார்த்திபனை கொள்ள காமெடி வடிவேலு பாணியில் எதையும் பிளான்  பண்ணி பண்ணனும் ... என்பது மாதிரி சொதப்பல் பிளான்களில் இறங்குவதும், அதன் பின் ஒருவழியாக காதலிக்காக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பார்த்திபனை அட்டாக் பண்ண கிளம்புவதும் ஹாஸ்யம். அம்மாவை  மா என்று கூட  கூப்பிடாமல் மம்மி என்பதின் சுருக்கமாக மீ,மீ ... என்று ஏதோ மலையாளிகள் மாதிரி சேதுபதி, படம் முழுக்க ராதிகாவை அழைப்பது... தமிழனாய், ரசிகனை சற்றே கடுப்பேற்றுகிறது.

காதம்பரி -நயன்தாரா செவித்திறன் குறைபாடுள்ள அழகுப்பெண்ணாக நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். தான், செவித்திறன் குறைபாடுள்ளவர் என்பதை யாரிடமும் சொல்லாதீர் என எதிர்படும் எல்லோரிடமும் நயனனே சொல்வது...., இது மாதிரி குறைபாடுள்ளவர்கள்... 

எப்படி அந்த குறைப்பாட்டை காட்டிக் கொள்ளாமல் காலம் தள்ள முயற்சிப்பார்களோ, அதை அப்பட்டமாக, அழகாக பிரதிபலித்திருக்கிறார் நயன்.  நயன்தாராவைத் தவிர இன்றைய தமிழ் சினிமாவில் இது மாதிரி கணமான பாத்திரத்தை வேறு யாரும் சிறப்பாக செய்ய முடியுமா...? என்பது  சந்தேகமே! இந்தப் படத்தில் அவரது சொந்த குரலும் கூடுதல் ப்ளஸ்!

அதே நேரம், அவ்வளவு நாள் பார்த்திபனை பழி தீர்க்க வெறியுடன் காத்திருந்த நயன்தாரா, ஒரு கட்டத்தில் தன் பெற்றோர் மரணத்திற்கு காரணமான பார்த்திபனை தன் காதலன் சேதுபதி பிடித்துக் கொள்ள, நயன் கத்தியால் குத்த நல் வாய்ப்பு நச்சென்று கிடைத்தும், பார்த்தியை குத்தாமல் சித்தாந்தம் பேசுவது... 

இந்த படத்தில் நயன் ஏற்றிருக்கும் பாத்திரத்தையே கேள்வி குறியாக்கி, கேலிகுரிய தாக்கி விடுகிறது.  அதே போன்று தன் பெற்றோர் சாவுக்கும், தன் செவித்திறன் போனதற்கும் ஒரு ரவுடிதான் காரணம் என்பது தெரிந்திருந்தும்... ஒரு சீனில் விஜய் சேதுபதியிடம்  ரவுடி வேற, ப்ராடு வேற.... நீ ப்ராடு. ரவுடிகள்  எல்லோரும் நல்லவர்கள் , நேர்மையாளர்கள் ..என லக்சர் கொடுப்பது ரொம்பவும் சினிமாட்டிக்காக, லாஜிக் இல்லாமல் அபத்தமாக இருக்கிறது .

கிள்ளிவளவன் எனும் வளவள  பார்த்திபனின் வில்லத்தனத்தில் கள்ளத்தாமான சில்மிஷங்கள் தான் நிரம்பி  இருப்பதாக தெரிகிறது. நயன், தேடி வந்து அவரை போட வேண்டும் ... என்பதைக் கூட புரிந்து கொள்ள முடியாமல் என்ன ரவுடி சார், இவர்? என சலிப்பாய் கேட்க வைத்து விடுகிறார். 

அதே மாதிரி, பக்கம் பக்கமாய் எந்த ரவுடி பேசுவான்? என எக்குத்தப்பாய் கேட்க வைக்கும் பார்த்தி, ஒரு சீனில் எதிராளிகளை பாத்தி கட்டி, சுத்தி சுத்தி அடிப்பது மட்டும் ரசனை. மற்றபடி பார்த்திபன் வரும் சீன்கள் சோதனை மேல் சோதனை! எத்தனை பேர் வந்தாலும் எதிர்த்து நின்று மல்லுகட்டும் ரவுடிகளை பார்த்திருக்கிறோம்... இப்பட வில்லன் -பார்த்திபன் வாயிலாக ஒரு மாஸான ரவுடி எக்கச்சக்க எதிராளிகளைப் பார்த்ததும் கக்கூஸில் ஒளிவதை இந்தப் படத்ததில் தான் பார்க்க முடிகிறது... ம்!

பார்த்திபனும் ஒரு கிரியேட்டர், டைரக்டர் ... ஸ்பாட்டில் ஸ்கிரிப்ட் பேப்பரை பார்த்ததும் இப்பட டைரக்டரிடம் இதுபற்றி டிஸ்கஸ் ஏதும் செய்திடாமல், சமீபத்திய நா.ர. தான்  பிரஸ்மீட்டில் தானே வலிய சொன்னது மாதிரி நயனையும், இப்பட இயக்குனரையுமே வைத்த கண் வாங்காமல் கண்காணித்துக் கொண்டிருந்திருப்பாரோ .?! என அலுப்பு தட்ட வைத்து விடுகிறார் மனிதர்.

ஆனால், பார்த்திபன் மாதிரி அல்லாமல், கொலை பாதக ரவுடியான பார்த்தியை, அரசியலில் எதிர்க்கும் மன்சூர்., சைலண்டாக தன் பாணி நடிப்பில் ஸ்கோர் செய்திருப்பது ஆறுதல். மன்சூர் மாதிரியே, பத்து லட்சம் பார்த்து பதறும் பாண்டி, பழைய தாதா ஆனந்தராஜ், ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.என்.ஆர்.மனோகர் உள்ளிட்டவர்களும் படத்திற்கும் தாங்கள் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கும் வலு சேர்த்துள்ளனர்.

சேதுபதியின் நண்பராக வரும் ரேடியோ ஜாக்கி பாலாஜி, "அசராப் புலி, அசால்ட்டு புலி .. ஏன்னா இது சாதாபுலி அல்ல ... பாகுபலி ... என்பது உள்ளிட்ட  டைமிங்  காமெடி டயலாக்குகளில் தியேட்டரில் அப்ளாஸ் அள்ளுகிறார். 

அவரை மாதிரியே சேதுபதியின் பிற சகாக்களான தாத்தா ராகுல், அன்வர், காமாட்சி ஆகியோரும் பாண்டிச்சேரி சாதா விஜய் சேதுபதிக்கு தாதா பயிற்சி தரும் நார்த் மெட்ராஸ் ரவுடி நான் கடவுள் ராஜேந்திரன் - உள்ளிட்டோரும்  விஜய் சேதுபதியின் மீ  யாக வரும் போலீஸ் மம்மி ராதிகா சரத்தும் கச்சிதம் .

அனிருத்தின் மெலடி, அதிரடி.... என வகைக்கு ஒன்றாக வசீகரிக்கும் நானும் ரவுடி தான்... படப்பாடல்கள் இசையும், அதிரும் பின்னணி இசையும், இப்படத்திற்கு பெரிய பலம்.  "ஜார்ஜ.C. வில்லியம்ஸின் ஒளிப்பதிவும்., ஸ்ரீகர் பிரசாத்தின் முன்பாதி படத்தின் படத்தொகுப்பும் கூட நானும் ரவுடிதான் படத்திற்கு கூடுதல் பலமே !

விக்னேஷ்சிவனின் எழுத்து, இயக்கத்தில் , ஒரு நண்பனின் காதலில் ஊடல்... என்றால் ,  உடன் இருப்பவர்கள் உதவி பண்ண முடியலை... என்றாலும்  உபத்திரம் பண்ற மாதிரி  ஊடால புகுந்து காதலியை களவாட, கண்டபடி வழி நடத்த முயற்சிக்க கூடாது...எனும் ரீதியில் விஜய் சேதுபதி பேசுவது மாதிரியான  பன்ச் டயலாக்கில் இயக்குனர், யாருக்கோ, எதற்கோ தன்னிலை விளக்கம் தர முற்பட்டிருப்பதாகவே தெரிகிறது. 

வலிய வைக்கப்பட்டிருக்கும் அந்த வசனம், வந்து போகட்டும்.. பரவாயில்லை ... ஆனால், நயன், தன் பெற்றோரின் சாவுக்கு காரணமானது ஒரு ரவுடி என தெரிந்தும், தன் மீதுள்ள காதலால் நானும் ரவுடி தான் ....என பில்டப் கொடுத்து பிராடு பண்ணும் விஜய் சேதுபதியிடம், ரவுடிகள் நல்லவர்கள், நேர்மையாளர்கள்.... என பேசுவதும், பார்த்திபன் வகையாக நயன் கையில் கிடைத்தும்  தன் விருப்பப்படி, பார்த்தியை போடாமல், கழிவிறக்கத்தில் அவருக்கு உயிர் பயம் கூட காட்டாமல் விடுவதும், லாஜிக்காக இடிப்பதை  இயக்குனர் கவனிக்கத் தவறியிருப்பது பலவீனம் .

அதே மாதிரி, பாண்டிச்சேரி அரசாங்கத்தை சார்ந்த மாஹி பகுதியில் இருந்து மீண்டும் மாற்றலாகி பாண்டிக்கு வரும் நயனின் போலீஸ் அப்பா அழகம்பெருமாள் பாண்டி  மண்ணுக்கு மட்டும் தான், சரக்கு மணம் உண்டென்று சிலேகித்து பேசுவதும், உடனே மகள் நயன்தாரா வண்டியை நிறுத்த சொல்லி ஒயின்ஷாப்பில் அப்பாவுக்கு இரண்டு பீர் கொடுங்க... என வாங்குவதும் கொடுமை! 

நாம் கொடுமை என்பது நயன்,அப்பாவுக்காக பீர் வாங்குவதை அல்ல .... பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தை சார்ந்த மாஹி , காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் தமிழ்நாட்டை காட்டிலும்  சரக்கு ரொம்பவும் கம்மி விலையில் கிடைக்கும், பாண்டச்சேரியின் வாசம் அப்பகுதிகளிலும் பக்காவாக வீசும்  எனும் போது, பார்க்காததை பார்த்த மாதிரி நாக்கை தொங்க போடும் பெருமாளின் (அழகம்) பெருமூச்சும், அதற்கு நயன்தாராவின் பீர் வாங்கும் ரியாக்ஷனும் ., இயக்குனரின் அறியாமையை காட்டுவதாகவே இருக்கிறது . 

இது மாதிரி ஒரு சில குறைகளை பூதக்கண்ணாடி கொண்டு பாரகாமல் , கேஷுவலாக பார்த்தோமென்றால் ., சிம்பு நடிப்பில்  போடா போடி "படத்தை முதன்முதலாக இயக்கிய விக்னேஷ் சிவன்,  தனுஷ் தயாரிப்பில், இயக்கி இருக்கும், "நானும் ரவுடிதான்  ஜனரஞ்சகமான லவ் ,காமெடி , ஆக்ஷன் அதிரி- புதிரி அட்டகாசம் தான் ..

ஆகமொத்தத்தில், "நானும் ரவுடிதான் - ரசிகனுக்கு பிடித்த நல்ல  படம்தான்!"

Friday, October 23, 2015

5 மில்லியனை தொடப் போகும் வேதாளம் டீசர்

தீபாவளிக்கு இன்னும் பதினைந்து நாட்களே உள்ள நிலையில் தீபாவளி தினத்தன்று வரும் படங்களைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகிக் கொண்டே போகிறது. 

'தூங்காவனம், வேதாளம்' ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே தீபாவளிக்கு வர உள்ளதால் இந்த இரண்டு படங்களுக்கிடையேதான் போட்டி நிலவும். அதிலும் 'வேதாளம்' படம் அஜித் ரசிகர்களால் அதிகமாகவே கொண்டாடப்பட்டுவிடும். 

'வேதாளம்' தீபாவளிக்கு நான்கு நாட்களுக்கு முன்னதாக வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றுதான் கோலிவுட்டில் ஒரு தகவல் உலா வருகிறது. 'தூங்காவனம்' படம் தீபாவளியன்றுதான் திரைக்கு வர உள்ளது, அதில் எந்த மாற்றமும் இருக்காது என்றே சொல்கிறார்கள்.

இதனிடையே 'வேதாளம்' படத்தின் டிரைலரை அஜித் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். அனேகமாக இன்னும் சில தினங்களில் 'வேதாளம்' டிரைலர் வெளியாகும் என்று தெரிகிறது. 

'வேதாளம்' டீசர் இரண்டு வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இந்த இரண்டு வாரத்திலேயே இந்த டீசர் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விரைவில் இந்த டீசர் யு டியூபில் 5 மில்லியன் பார்வையாளர் கணக்கைத் தொட இருக்கிறது. இன்னும் 50000 பேர் பார்வையிட்டால் அந்த சாதனையை 'வேதாளம்' டீசர் நிகழ்த்திவிடும். 

'வேதாளம்' டிரைலர் வெளிவந்தால் அது டீசரின் சாதனையையும் முறியடிக்க வாய்ப்புள்ளது.

Wednesday, October 14, 2015

மெல்லிசை படம் விஜய்சேதுபதிக்கு பிரேக்காக அமையுமா?



ஹீரோவாக வெற்றியடைவது என்பது சாதாரணமான விஷயமில்லை. அதிலும் எந்தப் பின்புலமும் இல்லாமல் சினிமாவுக்குள் வந்து போராடி ஜெயிப்பது மிகப்பெரிய விஷயம். 

அப்படி வெற்றியடைந்தவர்களில் சிலர் தனக்குக் கிடைத்த நட்சத்திர அந்தஸ்த்தை தக்க வைத்துக்கொள்ள தவறிவிடுகிறார்கள். இந்தப்பட்டியலில் விஜய்சேதுபதியும் சேர்ந்தவிடுவாரோ என்று தோன்றுகிறது.

தென்மேற்கு பருவக்காற்று படத்தில் ஹீரோவாக அறிமுகமான விஜய்சேதுபதி அடுத்தடுத்து வித்தியாசமான படங்களில் நடித்து பேர் வாங்கினார். ஆனால் கடந்த சில வருடங்களாக அவர் நடிப்பில் வெளியான அத்தனை படங்களும் தோல்வியடைந்து வருகின்றன. 

கடைசியாக அவர் நடிப்பில் வெளியான ஆரஞ்சுமிட்டாய் படம் சரித்திரம் காணாத தோல்வியை சந்தித்தது. பல தியேட்டர்களில் போதிய பார்வையாளர்கள் இல்லாத காரணத்தினால் காட்சிகளே ரத்து செய்யப்பட்டன.

இந்த சூழலில் அவர் நடித்த இடம்பொருள் ஏவல் படம் வெளிவராமலே முடங்கிக்கிடக்கிறது. முடங்கிக் கிடந்த மற்றொரு படமான மெல்லிசை படத்தை எப்படியாவது வெளியிட முயற்சி செய்து வருகின்றனர். 

இப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில் இரண்டு பாடல்காட்சிகளை திரையிட்டனர். திரையிடப்பட்ட இரண்டு பாடல்களும் இனிமையாக இருந்தாலும் கமர்ஷியலாக இல்லை என்று விமர்சனம் பரவலாக எழுந்தது. 

மெல்லிசை படம் விஜய்சேதுபதிக்கு பிரேக்காக அமையும் என்ற நம்பிக்கையில் கீறல் விழுந்துள்ளது.

Monday, October 5, 2015

நயன்தாரவை கடத்தலிலிருந்து காப்பாற்றும் விஜய்சேதுபதி

ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்திய விருது வழங்கும் விழாவின் தொகுப்பாளர், மேடையேறிய விஜய் சேதுபதியிடம் "இங்கு வந்திருக்கிற நடிகைகளில் ஒருவரை கடத்தச் சொன்னால் யாரை கடத்துவீர்கள்?" என்று கேட்டார். 

அதற்கு விஜய்சேதுபதி பளிச்சென்று சொன்ன பதில் "நயன்தாரா". அதைக் கேட்டு வெட்கத்தால் சிரித்த நயன்தாரா மனதுக்குள் அந்த நிமிடமே இடம் பிடித்து விட்டார் விஜய் சேதுபதி. 

அடுத்த சில மாதங்களுக்குள் அந்த மாயம் நடந்தது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில், தனுஷ் தயாரிக்கும், ''நானும் ரவுடிதான்'' படத்தில் நயன்தாராவின் ஜோடி விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதிக்கு முன் படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் நயன்தாரா. தனுஷின் நட்புக்காக உடன் நடிக்கும் நடிகர் யார் என்று கூட கேட்காமல் ஒப்புக் கொண்டார். 

ரவுடி கேரக்டர் ஆனாலும் பார்க்க நல்லவராக தெரியணும் யாரை நடிக்க வைக்கலாம் என்று சிலரை இயக்குருதும் தயாரிப்பாளரும், யோசித்தபோது விஜய்சேதுபதி என்று பளிச்சென்று கருத்து சொன்னார் நயன்தாரா, பீட்சா, சூதுகவ்வும் படங்களில் அவர் நெகட்டிவ் கேரக்டர்தான் பண்ணினார் ஆனால் யாருக்குமே அவர் கோபம் வரவில்லை. என்று அதற்கு விளக்கமும் சொல்ல உடனே டிக் அடிக்கப்பட்டார் விஜய்சேதுபதி.  இப்போது மொத்த படமும் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.

கதைப்படி படத்தின் நாயகி நயன்தாராவுக்கு ஒரு பிரச்னை. அவரை கடத்த ஒரு கும்பல் திட்டமிடுகிறது. தனியயொ பெண்ணால் அவர்களை எதிர்த்து போராட முடியாது. போலீசுக்கு போனால் விஷயம் திசை திரும்பிவிடும். போலீசும் கிரிமினல்களும் எப்போது ஒன்று சேர்வார்கள் என்று சொல்ல முடியாது. 

மீடியா, செய்தி, பப்ளிசிட்டி என்று வெளியில் தலைகாட்ட முடியாது. இதனால் நண்பர் ஒருவர் உதவியுடன் சென்னையில் இருக்கிற ஒரு டெரரான ரவுடியை தேர்வு செய்கிறார். அவர்தான் விஜய்சேதுபதி. தனக்கான பிரச்சனையை அவரிடம் கூறி தப்பிக்க வைத்தால் இவ்வளவு பணம் தருகிறேன். என்கிறார் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. 

நயன்தாராவுக்கு பாதுகாப்பு அரணாகிறார் விஜய்சேதுபதி. செவித்திறன் குறைந்த நயன்தாரா மற்றவர்களின் மவுத் ரீடிங்கை கவனித்து பேசக்கூடியவர். இதனால் ரவுடியாக இருந்த விஜய்சேதுபதி அவர் மீது காதல் கொள்கிறார். கடைசிவரை அவருக்கு காவலாக இருக்க விரும்புகிறார். 

தன் சம்பளமாக அவரையே கேட்க நினைக்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது? நயன்தாராவுக்கு என்னதான் பிரச்சினை. விஜய்சேதுபதி உண்மையில் ரவுடிதானா? என்பது போன்ற கேள்விகளுக்கு பதிளிக்கும் படம்.

Tuesday, September 29, 2015

முறுக்கு மீசையுடன் புதிய தோற்றத்தில் கமல்



உத்தம வில்லன், பாபநாசம், தூங்காவனம் என அடுத்தடுத்து படங்களில் நடித்து இன்றைய இளம் நடிகர்களையே ஆச்சர்யப்பட வைத்து கொண்டிருக்கிறார் 60வது இளமை கதாநாயகன் கமல்ஹாசன். 

ஒரு படத்தை முடித்த அடுத்த சில தினங்களிலேயே தனது அடுத்தபடத்தில் நடிக்க தொடங்கி முன்பை விட ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறார்.

 பாபநாசம் படத்தின் வெற்றிக்கு பின்னர் தனது உதவியாளர் ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில், தூங்காவனம் படத்தில் நடித்தவர், அந்தப்படத்தை முடித்துவிட்டார். தற்போது தூங்காவனம் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் தூங்காவனம் படத்தை முடித்த கையோடு சத்தமில்லாமல் அடுத்தபடத்திலும் நடிக்க தொடங்கிவிட்டார் கமல். 

இதை அவரது புதிய தோற்றமே சொல்கிறது. தூங்காவனம் படத்தின் தெலுங்கு பதிப்பான சீகட்டி ராஜ்யம் படத்தின் பிரஸ்மீட்டில் பங்கேற்ற கமல், முறுக்கு மீசையுடன் தோன்றினார். 

கமலின் இந்ததோற்றம் கிட்டத்தட்ட தேவர் மகன் பட லுக் போன்று தோன்றுகிறது. கமலின் அடுத்தப்படத்தையும் தூங்காவனம் ராஜேஷ் தான் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, September 23, 2015

புலி படத்துக்கு தடைகோரி வழக்கு

விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் நடித்துள்ள புலி படத்தை சிம்புதேவன் இயக்கியுள்ளார், சிபு, பி.டி.செல்வகுமார் தயாரித்துள்ளனர். 

பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி உள்ள இந்தப் படம் வருகிற அக்டோபர் 1ந் தேதி வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் படத்துக்கு தடைகோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுபள்ளியைச் சேர்ந் அன்பு ராஜசேகர் என்பவர் ஏ.ஆர்.முருதாஸ் இயக்கி, விஜய் நடித்த கத்தி படத்தின் கதை, தான் இயக்கிய தாகபூமி என்ற குறும்படத்தின் கதை என்று வழக்கு தொடர்ந்திருக்கிறார். 

இந்த வழக்கு தஞ்சை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. விஜய், முருகதாஸ் உள்ளிட்டவர்கள் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில் வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அன்பு செல்வராஜ் மேலும் ஒரு வழக்கு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் "கத்தி பட விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் விஜய் நடித்துள்ள புலி படம் வெளிவர உள்ளது. 

விஜய்யும் வழக்கில் உள்ள நிலையில் வரவிருக்கும் புலி படம் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படம் ஆகியவற்றை வழக்கு முடியும் வரை வெளிவர தடைவிதிக்க வேண்டும்" என்று அந்த மனுவில் கூறியிருக்கிறார். 

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இந்த மனுமீது விளக்கம் அளிக்க இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் ஆகியோருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 28ந் தேதிக்கு தள்ளிவைத்ததது.

Monday, September 21, 2015

முதன்முறையாக விளம்பர படத்தில் நடிக்கிறார் கமல்

கமல் சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகளாகிவிட்டது. களத்தூர் கண்ணம்மா தொடங்கி, பாபநாசம் வரை சுமார் 200 படங்களில் நடித்துவிட்டார். இதுநாள் வரை ஒரு விளம்பர படத்தில்(வர்த்தகம்) கூட நடித்ததில்லை கமல். 

விழிப்புணர் தொடர்பான விளம்பர படங்களில் மட்டுமே நடித்து வந்தார். பல முன்னணி நிறுவனங்கள், கமலை நடிக்க கேட்டும் அவர் நடிக்க மறுத்துவிட்டார். 

ஆனால் இப்போது முதன்முறையாக ஒரு விளம்பர படத்தில் கமல் நடிக்க இருக்கிறார் கமல். இதற்கான படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் ஆரம்பமாக இருக்கிறது. 

இந்த விளம்பர படத்தை 5 ஸ்டார், அறிந்தும் அறியாமலும், ஆட்டோகிராப், சரவணா உள்ளிட்ட பல படங்களில் நடித்த கிருஷ்ணா இயக்க இருக்கிறார். 

Sunday, September 20, 2015

எந்திரன் 2 முதல்கட்ட வேலைகளை தொடங்கிய ஷங்கர்

ஜென்டில்மேன், இந்தியன், அந்நியன் என பல தரமான படைப்புகளை கொடுத்தவர் இயக்குனர் ஷங்கர். பிரமாண்டத்துக்கு பேர் போன அவர், ரஜினியை வைத்து சிவாஜி, எந்திரன் என்ற இரண்டு மெகா படங்களை இயக்கினார். 

அதையடுத்து, விக்ரமை வைத்து ஐ படத்தை இயக்கினார். அந்த படத்தின் ஆடியோ விழாவுக்கு ஹாலிவுட் நடிகர் அர்னால்டை சென்னைக்கு வரவைத்தும் பரபரப்பு கூட்டினார்.

இந்த நிலையில், ஷங்கரின் அடுத்த படத்தில் நடிப்பது யார்? அது என்ன படம்? என்பது குறித்து அவர்தரப்பில் இருந்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. 

ஆனால், அடுத்து அவர் மூன்றாவது முறையாக மீண்டும் ரஜினியுடன் எந்திரன்-2 படம் மூலம் இணையவிருப்பதாக செய்திகள் வெளியாகிக்கொண்டு வந்தன. ஆனால் அப்படி வந்து கொண்டிருந்தபோதே, கபாலியில் ரஜினி நடிக்கும் செய்திகள் உறுதிப்படுத்தப்பட்டன.

ஆனால், தற்போது எந்திரன்-2 படத்தை எந்திரனை விடவும் பிரமாண்டமாக இயக்க திட்டமிட்டிருக்கும் ஷங்கர், அப்படத்தின் ப்ரீ புரொடக்சன் வேலைகளில் தற்போது இறங்கி விட்டார். 

இதற்காக சில ஹாலிவுட் டெக்னீசியன்கள் மற்றும் அனிமேஷன் டெக்னீசியன்களுடன் அவர் முதல்கட்ட வேலைகளை தொடங்கியிருக்கிறார். ஆக, கபாலி படத்துக்கு 60 நாட்கள் கால்சீட் கொடுத்துள்ள ரஜினி, அந்த படத்தை இந்த ஆண்டுக்குள் முடித்து விடுவார் என்று தெரிகிறது. 

அதனால், எந்திரன்-2 படத்தின் அறிவிப்பு ரஜினி பிறந்த நாளான டிசம்பர் 12-ந்தேதி வெளியிடப்பட்டு, ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கும் என்று செய்திகள் கசிந்துள்ளன.

Friday, September 18, 2015

36 மணிநேரத்தில் 10 லட்சம் பேர் பார்த்த கமல் பட டிலைர்

கமலஹாசனின் தூங்காவனம் படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாக இருக்கிறது. 

த்ரிஷா, பிரகாஷ்ராஜ், கிஷோர், யூகிசேது, சம்பத், மது ஷாலினி, சோமசுந்தரம், சந்தானபாரதி, உமா ரியாஸ்கான் உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படத்தை ராஜேஷ் எம் செல்வா இயக்கி இருக்கிறார். 

கமலின் திரைக்கதையில் உருவாகி இருக்கும் தூங்காவனம் படத்தில் கிஷோர், பிரகாஷ்ராஜ் இரவரும் வில்லன்களாக நடித்துள்ளதாக தகவல். 10 வயது மகனுக்கு தந்தையாக வந்த கமல், என் மகனுக்கு ஏதாவது ஒன்று என்றால் உங்களை தொலைத்து விடுவேன் என்ற வசனம் இடம் பெற்றுள்ளது. 

நான் சொன்னா அதை செய்வேன் என்று பேசும் பஞ்ச் டயலாக்கும் இருக்கிறது.
தூங்காவனம் டிரெய்லரில், பப் ஒன்றில் வில்லன்களுடன் கமல் மோதும் காட்சிகள் ஆவேசமாக இருந்தன. நேற்றைய முன்தினம்தான் தூங்காவனம் டிரெய்லர் வெளியானது.

அதற்குள் ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தூங்காவனம் டிரெய்லர் வெளியான 36 மணி நேரத்தில் 10 லட்சத்து 23 ஆயிரத்து 494 பேர் யூடியூப்பில் பார்த்து ரசித்துள்ளனர். 8035 பேர் அதற்கு லைக் கொடுத்துள்ளனர். 282 பேருக்கு டிரெய்லர் பிடிக்கவில்லையாம்.

அதேசமயம், தூங்காவனம் படத்தின் தெலுங்கு பதிப்பான சீக்கட்டி ராஜ்யம் படத்தின் டிரெய்லரை 168542 பேர் மட்டுமே பார்த்துள்ளனர்.

Monday, September 14, 2015

வெற்றிக்காகக் காத்திருக்கும் விஜய் சேதுபதி

2012ம் ஆண்டு 'பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' ஆகிய இரண்டு படங்களின் வெற்றி மூலம் வெற்றிப் பாதையில் பயணிக்க ஆரம்பித்து முன்னணி நடிகர்களின் பட்டியலில் இணைந்தார் விஜய் சேதுபதி. 

அடுத்து 2013ம் ஆண்டில் வெளிவந்த 'சூது கவ்வும்' படமும் வெற்றிகரமாக அமைய விஜய் சேதுபதியின் இமேஜ் அப்படியே வானுயர உயர்ந்தது. அதற்கடுத்து வந்த 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக விஜய் சேதுபதிக்கு பாராட்டுக்களை அள்ளிக் கொடுத்தது. 

அதன் பின் யார் கண் பட்டதோ தெரியவில்லை, தொடர்ந்து சறுக்கிக் கொண்டேயிருக்கிறார் விஜய் சேதுபதி.

கடந்த ஆண்டில் வெளிவந்த “ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், வன்மம்”, இந்த ஆண்டில் இதுவரை வெளிவந்த “புறம்போக்கு, ஆரஞ்சு மிட்டாய்'' ஆகிய ஐந்து படங்கள் தொடர்ச்சியாகத் தோல்வியடைந்து அவருடைய வெற்றிப் பயணத்திற்கு தடைக் கற்களாக அமைந்தன. 

ஆனால், விஜய் சேதுபதி நடித்து அடுத்து வெளிவர இருக்கும் ஒவ்வொரு படங்களும் மீண்டும் அவரை வெற்றிப் பாதையில் பயணிக்க வைக்கும் அளவிற்கு உருவாகி வருவதாக அந்தப் படங்களின் இயக்குனர்கள் நம்பிக்கையாக இருக்கிறார்கள். 

“நானும் ரெளடிதான், இடம் பொருள் ஏவல், மெல்லிசை, நலன் குமாரசாமியின் படம், இறைவி” ஆகிய படங்கள் விஜய் சேதுபதிக்கு நம்பிக்கை தரும் படங்களாகவே இருக்கின்றன. 

நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் 'மெல்லிசை' படத்தின் டீசர் இன்று வெளியாக உள்ளது. இனி, விஜய்சேதுபதி மெல்ல மெல்ல மீண்டு வருவார் என்று எதிர்பார்க்கலாம். 

Friday, September 11, 2015

திசை மாறிய லிங்கா விவகாரம் - சிக்கலில் விஷால்

லிங்கா  நஷ்டஈடு தொடர்பாக தியேட்டர் அதிபர்கள் சங்கத்துக்கும் வேந்தர் மூவீஸ் நிறுவனத்துக்கும் இடையில் பிரச்சனை எற்பட்டது. 

இந்த விவகாரத்தில் பாயும்புலி படத்துக்கு ரெட் போடுவதாக தியேட்டர் அதிபர்கள் சங்கம் அறிவிக்க, அதைக் கண்டிக்கும் வகையில் இனி படங்களை ரிலீஸ் பண்ண மாட்டோம் என ஸ்டிரைக் அறிவித்தது தயாரிப்பாளர் சங்கம்.  

அடுத்த சில நாட்களில் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் பாயும் புலி படம் வெளியானது. அந்தப் படத்துக்கு ரெட் போடுவதாக சொல்லப்பட்ட செங்கல்பட்டு ஏரியாவிலும் பாயும் புலி பல தியேட்டர்களில் வெளியானது. 

என்ன அதிசயம் நடந்தது? ரகசியமாக நடைபெற்ற பேரமும், பெரும் தொகை கைமாறியதுதான் காரணம் என்கிறார்கள் படத்துறையினர். லிங்கா  நஷ்டஈடாக தியேட்டர் அதிபர்கள் கேட்ட சில கோடிகளை வேந்தர் மூவிஸ் கொடுக்க மறுத்துவிட்டது.

இதனால்  பாயும் புலி படம் திட்டமிட்ட தேதியில் வெளியாகாமல்போய்விடுமோ என பதறிப்போன விஷால், அந்த பணத்தை தானே தருவதாக தியேட்டர் அதிபர்களுக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறார். 

அதாவது அந்த பணத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை உடனே தருவதாகவும், பாக்கியை பாயும் புலி வெளியாகி மூன்று நாட்கள் கழித்து  அதாவது 06.09.2015 அன்று தருவதாகவும் சொல்லி இருக்கிறார் விஷால். 

அவர் சொன்ன டீலுக்கு தியேட்டர் அதிபர்கள் ஓகே சொன்ன அதன் பிறகே பாயும் புலி ரிலீஸ் ஆகி இருக்கிறது. விஷால் சொன்னபடியே  திங்கள்கிழமை பாக்கி ரூபாயை வசூலிக்க ஒரு தியேட்டர் அதிபரை அனுப்பி வைத்துள்ளனர்.  

பாயும்புலி படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை என்பதால் அப்செட்டில் இருந்த விஷால், தன்னால் இப்போதைக்கு அப்பணம் தர முடியாது என்று சொல்லிவிட்டாராம். இதன் காரணமாக விஷாலின் அடுத்த படத்துக்கு இப்போதே சிக்கல் ஆரம்பமாகிவிட்டது...! 

Wednesday, August 5, 2015

சகலகலா வல்லவன் (அப்பாடக்கர்) - விமர்சனம்

ஜெயம் ரவி, த்ரிஷா, அஞ்சலி, சூரி, பிரபு, ராதாரவி, ஜான் விஜய், அஸ்வின், 'நான் கடவுள்' ராஜேந்திரன், ரேகா உள்ளிட்ட ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே இயக்குநர் சுராஜின் இயக்கத்தில் நடித்திருக்கும் முழுநீள காமெடி படம் தான் ''சகலகலா வல்லவன் - அப்பாடக்கர்''. 

ஏற்கனவே பல சினிமாக்களில் பார்த்து சலித்த காமெடி காட்சிகள் தான் என்றாலும் அதை பார்க்க பார்க்க சலிக்காத வகையில் படமாக்கியிருப்பதில் 'அப்பாடக்கர் டாப்டக்கராக' ஜொலிக்க முயன்றிருக்கிறது.

ஊர் பெரிய மனிதரும், தன் தந்தையுமான பிரபுவிற்கு ஒன்றென்றால் ஊரையே ரெண்டு பண்ணிவிடும் ஜெயம் ரவி, அப்பா சொல் தட்டாத பிள்ளை! தனது பங்காளியும், தனது லோக்கல் அரசியல் விரோதியுமான நண்பர் சூரியின் அத்தை மகள் அஞ்சலியை பார்த்தவுடன் காதலில் விழுகிறார் ஜெயம் ரவி! 

பதிலுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயமான ஜெயம் ரவியின் அத்தை மகள் த்ரிஷாவை, ஒருதலையாக காதலிக்கும் சூரிக்கு உதவுவதற்காக திருமணத்தை நிறுத்த சென்னைக்கு வருகின்றனர் ரவியும், சூரியும்! அது முடியாமல் போகிறது! 

ஊரும், உறவும் திருமணத்திற்கு வந்து சேர்ந்த நிலையில், மணமேடையில் வைத்து போலீஸ் மாப்பிள்ளை ஜான் விஜய்யை போலி என்-கவுன்ட்டர் செய்த வழக்கில் கைது செய்து அழைத்து போகிறது போலீஸ்.

இதனால் நிலைகுலைந்து போகும் த்ரிஷாவின் அப்பா ராதாரவிக்கு ஆறுதல் கூறி, தன் மகன் ஜெயம் ரவியை அதே மேடையில் த்ரிஷா கழுத்தில் தாலிகட்ட சொல்கிறார் பிரபு! அப்பா சொல் தட்டாத பிள்ளையான ரவியும், அவ்வாறே செய்கிறார். 

அப்புறம்.? அப்புறமென்ன.? அஞ்சலி - ஜெயம் ரவியின் காதல் என்னாயிற்று..?, திருமணம் செய்து கொண்ட த்ரிஷா - ஜெயம் ரவியின் கல்யாண வாழ்க்கை, கலகலப்பாக சென்றதா.? இல்லையா..? சூரியின் சூழ்ச்சிகள் வீழ்ச்சியை சந்தித்தனவா.? ஜெயம் ரவிக்கு எதிராக வளர்ச்சி அடைந்தனவா.? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு காமெடியாகவும், கலர்புல்லாகவும் விடை சொல்ல முயன்றிருக்கிறது ''சகலகலா வல்லவன்'' படத்தின் மீதிக்கதையும் காட்சியமைப்புகளும்.

ஜெயம் ரவி, அப்பாடக்கர் ரவியாக, அப்பாவுக்கு அடங்கி நடக்கும் பிள்ளையாக அதேநேரம் காமெடி, ஆக்ஷ்ன், ரொமான்ஸ், சென்ட்டிமென்ட், சகலத்திலும் சக்கைபோடு போடும் ஹீரோவாக 'டாப் டக்கராக' ஜொலித்திருக்கிறார்.

த்ரிஷா, அஞ்சலி இருநாயகியரில் முன்பாதி முழுவதையும், மொத்த குத்தகைக்கு எடுத்திருக்கிறார் அஞ்சலி என்றால், பின்பாதியைில் பிடிக்காத கணவன், குடும்ப சண்டை சச்சரவு, அதன்பின் உறவுகளை புரிதல்... என த்ரிஷா வியாபித்திருக்கிறார். 

ரசிகர்கள் நெஞ்சிலும் பெரிதாய் வியாபிப்பது த்ரிஷா தான். காரணம் அஞ்சலி, அஞ்சலியா.? நமீதாவா.? என ஆரம்ப காட்சிகளில் சந்தேகம் ஏற்படுமளவிற்கு சதை போட்டிருப்பது தான் பாவம்!

சூரி செய்யும் சேட்டைகள் எல்லாம் சிரிப்பை வலிய வரவழைக்க முயன்று பல இடங்களில் கடுப்பையும், சில இடங்களில் சிரிப்பையும் தருகின்றன! பிரபு, ராதாரவி, ஜான் விஜய், அஸ்வின், 'நான் கடவுள்' ராஜேந்திரன், ரேகா, சித்ரா லட்சுமணன் உள்ளிட்டோரில் 'நான் கடவுள்' ராஜேந்திரன், த்ரிஷா - ரவியின் குடும்ப சண்டையால் போலீஸ் வேலையை இழந்து பிச்சை எடுக்கும் காமெடி எபிசோட் சுவாரஸ்யம்!

எஸ்.எஸ்.தமனின் இசையில் பாடல்களில் தெலுங்கு வாடை என்றாலும், செம குத்து! யூ.கே.செந்தில் குமாரின் ஒளிப்பதிவு பலத்துடன், சுராஜின் எழுத்து, இயக்கத்தில் ''சகலகலா வல்லவன்'' டைட்டில் மட்டுமல்ல கதையும் பழசு என்றாலும் காமெடி ரவுசு!

மொத்தத்தில், ''சகலகலா வல்லவன் - காமெடி வல்லவன்!''

Monday, June 15, 2015

ரோமியோ ஜூலியட் - சினிமா விமர்சனம்

ஜெயம் ரவி - ஹன்சிகா மோத்வானி ஜோடி நடித்து, லக்ஷ்மன் இயக்கத்தில் ''ஒருத்தனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருத்தன்'' எனும் கருத்தை வலியுறுத்தி வெளிவந்திருக்கும் படம் தான் ''ரோமியோ ஜூலியட்''. 

டி.இமானின் இசையில், அனிருத் ரவிச்சந்தர் பாடிய ''டண்டணக்கா...'' பாடலின் மூலம் படம் ரிலீஸாவதற்கு பல மாதங்களுக்கு முன்பே பட்டி தொட்டியெங்கும் எதிர்பார்ப்பையும், டி.ராஜேந்தரின் எதிர்ப்பையும் கிளப்பிய ''ரோமியோ ஜூலியட்'' என்ன கதை, எப்படி இருக்கிறது.? பார்ப்போம்...!

கதைப்படி பெற்றோர், உற்றார், உறவினர் யாருமில்லாத ஜூலியட் ஹன்சிகா, ஒரு ஹோமில் வளர்ந்து ஆளாகிறார். ஆளான பின் ஏர்ஹோஸ்டர்ஸாக விமானத்தில் பணிபுரியும் அம்மணி, தோழிகளுடன் ஒரு வசதியான குடியிருப்பில் வசிக்கிறார். 

எதையும் நெகட்டீவ்வாக யோசிக்கும் ஹன்சிகா, பணக்கார வாழ்க்கைக்கு ஆசைப்படுகிறார். அதன் வெளிப்பாடாக பாசிட்டீவ் பிரியரான ரோமியோ -கார்த்திக் எனும் ஜெயம் ரவியை, பணக்காரர் கெட் - அப்பில் பார்த்து காதலிக்க தொடங்குகிறார்.

நடிகர்கள், அரசியல் பிரபலங்கள், உள்ளிட்ட பெரும் புள்ளிகளின் 'ஜிம்' கோச்சரான ஜெயம் ரவி தொழில் நிமித்தம், படத்தயாரிப்பாளர் விடிவி கணேசின் பென்ஸ் காரிலும், காசிலும் பவனி வருவது, ஹன்சிகாவுக்கு ரவியை வசதியானவராகவும், பெரும் புள்ளியாகவும் காட்டுகிறது. 

அதனால் ரவி பின்னால் அலைந்து திரிந்து அவரை காதலிக்க தொடங்குகிறார் ஹன்சிகா. ஒருக்கட்டத்தில் ரவி, வசதியானவர் அல்ல, வசதி படைத்தவர்களின் ஜிம் கோச்சர் எனும் உண்மை ஹன்சிகாவுக்கு தெரிய வருகிறது. காதல் 'பணால்' ஆகிறது. 

ஆனால் ஒருத்தனுக்கு ஒருத்தி எனும் கொள்கை உடைய ரவி மீண்டும், ஹன்சிகாவுடன் கை கோர்த்தாரா.? அல்லது ஹன்சிகா வசதியான வேறு ஒருவருக்கு மாலையிட்டு மகிழ்ந்தாரா.? என்பது தான் ''ரோமியோ ஜூலியட்'' படத்தின் கரு, கதை, களம் எல்லாம்!

ஜெயம் ரவி - கார்த்திக் எனும் ஜிம் கோச்சராக செம கெத்தாக இருக்கிறார். ''டண்டணக்கா'' பாடலில் டி.ஆரின் ரசிகராக செம குத்து குத்துகிறார். ஒரேநாளில் காதலிக்காக ஒன்றரை லட்சம் செலவு செய்து விழி பிதுங்கும் இடங்களிலும், காதலியை மீண்டும் கைபிடிக்க போராடும் இடங்களிலும், நடிப்பிலும் உச்சம் தொட்டிருக்கிறார். 'ஹேட்ஸ் ஆப், கீப் இட் அப்' ரவி!

ஐஸ்வர்யாவாக ஹன்சிகா மோத்வானி, அழகு பதுமையாக வந்து அம்சமாக நடித்திருக்கிறார். ஆனாலும், அநாதையான அவர் பாசத்திற்காக தானே ஏங்க வேண்டும், பணத்திற்காக ஏங்குவது ஆரம்பத்தில் லாஜிக்காக இடிக்கிறது.

வசதியான வீட்டுப்பிள்ளையாக அர்ஜூனாக வரும் வம்சி கிருஷ்ணா மேற்படி நாயகர் - நாயகியின் காதல் ஜெயிக்க வேண்டி வலிய காதல் வில்லன் ஆக்கப்பட்டிருப்பதும் செயற்கைதனமாக இருப்பது ரசிகனை சோர்வடைய செய்கிறது. 

விடிவி கணேஷ், உமா பத்மநாபன், சங்கர நாராயணன், ஸ்ரேயா, மதுமிதா.. உள்ளிட்டவர்களுடன் சிறப்பு தோற்றத்தில் நடிகராகவே வரும் ஆர்யாவும் அசத்தியிருக்கிறார். 

''டண்டணக்கா...'', ''இதற்கு தானே ஆசைபட்டாய்...'', ''அடியே அடியே...' உள்ளி்ட்ட ஐந்து பாடல்களும் டி.இமானின் இசையில் படத்திற்கு பக்காவாக பலம் சேர்த்திருக்கின்றன. சந்துருவின் வசனம், எஸ்.செளந்தர் ராஜனின் ஒளிப்பதிவு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள், லக்ஷ்மனின் எழுத்து இயக்கத்திற்கு மேலும் ப்ளஸ்.

''ரோமியோ ஜூலியட் - இக்காலத்திற்கும் கரெக்ட்! ரசிகனுக்கு.?!''

Sunday, May 17, 2015

36 வயதினிலே - சினிமா விமர்சனம்

ஜோதிகா, ஜோதிகா சூர்யா ஆனதற்கு பிறகு, ஏழெட்டு ஆண்டுகள் கழித்து நடித்து, வௌிவந்திருக்கும் திரைப்படம் என்பதில் இருந்தே தெரிந்திருக்கும் எத்தனை கணமான கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையம்சம் பொருந்திய படமாக இருக்கும் 36 வயதினிலே? என்பது! 

கணவர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் முதல் தயாரிப்பில், மனைவி ஜோதிகாவே நடித்து வந்திருக்கும் 36 வயதினிலே திரைப்படம் ''ஹவ் ஓல்ட் ஆர் யூ'' மலையாளப் படத்தின் தழுவல் என்றாலும், தமிழுக்கு தக்கபடி தகதக தங்கமாக ஜொலித்திருக்கும் ஜோவின் 36 வயதினிலே படத்தின் கதை மற்றும் விமர்சனத்தை இனி பார்ப்போம்...!

கல்லூரியில் படிக்கும் காலத்தில் சக மாணவிகளுக்கு எடுத்துக்காட்டாக பொதுப்பிரச்னைகளில் போராடி ஜெயிக்கும் குணம் நிரம்பியவராக திகழ்ந்த வசந்தி எனும் ஜோதிகா, தமிழ் செல்வன் எனும் ரகுமானின் மனைவியாகவும், பருவ வயதை எட்ட இருக்கும் ஒரு மகளுக்கு தாயாகவும் ஆனபின், குடும்ப தலைவியாக பொறுப்புகளை சுமந்து ரெவின்யூ ஆபிஸில் சக ஊழியர்களின் கிண்டலுக்கும், கேலிக்கும் ஆளாகும் கிளார்க்காக தானுண்டு, தன் வேலையுண்டு என மகளுக்காகவும், கணவருக்காகவும், குடும்பத்திற்காகவும், சராசரி நடுத்தர வர்க்கத்து அம்மாஞ்சி அம்மாவாக தன் உலகை சுருக்கி கொண்டு வாழ்கிறார், அதுவே அவருக்கு வினையாகிறது.

ஆசை கணவரும், அன்பு மகளும், அலுவலக ஊழியர்கள் சிலரும் ஜோதிகாவை இஷ்டத்திற்கு அலட்சியப்படுத்த ஏகத்துக்கும் மன உளைச்சலுக்கு ஆளாகும் ஜோ, அதிலிருந்து மீண்டு எவ்வாறு? தன் கனவுகளிலும், திறமைகளிலும் ஜெயித்து ஜொலிக்கிறார்.? என்பது தான் 36 வயதினிலே படத்தின் கரு, கதை, களம் எல்லாம்!

வசந்தி தமிழ் செல்வனாக ஜோதிகா நடிக்கவில்லை... தமிழ் சினிமாவில் ரொம்ப நாளைக்கு அப்புறம் அந்த பாத்திரமாகவே வாழ்ந்திருக்கும் கதாநாயகி யார்.? என்று எங்காவது கேட்டால் ஜோ என்று தான் சொல்ல வேண்டும் எனும் அளவிற்கு! அத்தனை அற்புதமாக வசந்தி தமிழ் செல்வன் பாத்திரத்தை தன்னுள் வாங்கி ஏக்கம், ஏமாற்றம், ஏற்றம் எல்லாவற்றிலும் அது அதற்கு ஏற்புடைய முகபாவங்களை காட்டி நடித்து ரசிகனை சீட்டோடு கட்டிப்போடுகிறார் அம்மணி!

சுயநல கணவரின் ஏச்சு, பேச்சுகளை தாங்கி கொள்ளும் மனைவியாக, பல மாணவிகளுக்கும் ரோல் - மாடல் மாணவியாக, அலட்சியப்படுத்தும் மகளுக்கு அன்பாக புரியவைக்கும் தாயாக, மாமனார்-மாமியாரை மதிக்கும் மருமகளாக, சக ஊழியர்களின் உதாசீனங்களை உதறித்தள்ள முடியாது பொங்கி பொறுமும் அலுவல்வாசியாக, மகளின் சாதனைக்காக ஜனாதிபதியை பார்க்க போய் மயங்கி விழும் பத்தாம்பசலியாக, பின்நாளில் தங்கள் குடியிருப்பு பகுதி வீட்டு மொட்டை மாடிகளில் காய்கறி தோட்டம் அமைத்து உர விஷம் பாயாத ஆர்கானிக் காய்கறிகளை மகசூல் செய்து சாதனை படைத்து ஜனாதிபதியை சந்தித்து பரிசு பெறும் பாக்கியசாலி சாதனையாளராக பல்வேறு முகம் காட்டி, 36 வயதினிலே படத்தில் பக்காவாக பவனி வந்திருக்கும் ஜோதிகாவிற்கு ஒரு சல்யூட் அடிக்கலாம், பலப்பல சபாஷ் சொல்லலாம்! கூடவே ஜோவை மீண்டும் நடிக்க வைத்து இதுமாதிரி ஒருநல்ல படத்தை தயாரித்தமைக்காக ஜோவின் கணவர் சூர்யாவுக்கும் ஒரு 'வெல்கமும்', 'தேங்ஸூம்' சொல்லியே ஆக வேண்டும்.


ஜோவின் கணவர் தமிழ் செல்வனாக ரகுமான், நடுத்தர வர்க்கத்து சுயநல கணவர்களை  சரியாக தோலுரித்து காட்டியிருக்கிறார். அதிலும் ஜோவின் டிரைவிங் லைசென்ஸ் காலாவதியானது என தெரிந்ததும் தன் அயல்நாட்டு கனவு அதோகதி ஆன வருத்தத்தில் ரகுமான் கொடுக்கும் ரியாக்ஷ்ன் சாட்த் சாட்த் நடுத்தர வர்க்கத்து கணவன்மார்களை பக்காவாக பிரதிபலித்திருப்பது சூப்பர்ப்!

ஜோதிகாவின் கல்லூரி சினேகிதியாக, திருப்புமுனை கேரக்டரில் வரும் அபிராமி, அலுவலக தோழி தேவதர்ஷினி, அலுவலக சீனியர் பிரேம், ஜோவின் பருவ வயது மகளாக வரும் அமிர்தா, மாமனார் டெல்லி கணேஷ், போலீஸ் கமிஷனர் நாசர், போக்குவரத்து காவலர் எம்.எஸ்.பாஸ்கர், ஜோவின் மாடித்தோட்டத்து காய்கறி பிஸினஸூக்கு பிள்ளையார் சுழி போடும் வேலைக்காரம்மா, அலட்டல் ராணியாக கோலி சோடா சுஜாதா, போஸ்வெங்கட், க்ளைமாக்ஸில் முக்கிய கருத்துகளுக்கு முகம் காட்டாமல் பின்னணியில் மட்டும் குரல் கொடுத்திருக்கும் நடிகர் சிவக்குமார்(மருமகளுக்காக.?)  உள்ளிட்ட ஒவ்வொருவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்! பலே, பலே!

''இன்னொரு வசந்தியாக என் மகள் இருந்திட கூடாதுன்னு...  என் கணவர் சொல்றார், அப்படீன்னா.? இத்தனை காலமும் வசந்தி அந்த வீட்டில் என்னவாக இருந்தாள்.?'' என்று தோழி தேவதர்ஷினியிடம் ஜோ குமுறி அழும் காட்சி உட்பட ஒவ்வொரு 'நச்-டச்' வசனகாட்சிகளிலும் வசனகர்த்தா யார்.? என கேட்க வைக்கிறார் வசனகர்த்தா விஜி! வாவ் விஜி!!

ரோஷன் ஆண்ட்ரூஸின் இயக்கத்தில், ஆர்க்கானிக் காய்கறியின் நன்மை உள்ளிட்ட நல்ல விஷயங்களை கூறும், சமூக அக்கறையுடன் கூடிய குடும்ப படமாக வௌிவந்திருக்கும் 36 வயதினிலே திரைப்படம், குடும்பத்துடன் பார்க்க வேண்டிய ப(பா)டம்!

மொத்தத்தில், பெண் அடிமைத்தனத்தை பேராண்மையுடன் களைய முற்பட்டிருக்கும் 36+ வயதினிலே - அனைத்து வயதினரும் ஆண்-பெண் இரு பாலினரும் பார்க்ககூடிய, பார்க்க வேண்டிய நல்லதொரு பாடமாகும்!

Monday, April 6, 2015

வந்தாச்சு - உத்தமவில்லனுக்கும் பிரச்னை வந்தாச்சு

கமல் நடித்துள்ள, ''உத்தம வில்லன்'' படத்தை தடை செய்ய கோரி விஷ்வ இந்து பரீஷத் சார்பில், சென்னை கமிஷனரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. 

விஸ்வரூபம் படத்திற்கு பிறகு கமல் நடித்துள்ள படம் உத்தம வில்லன். ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ள இப்படத்தில், கமல் உடன் ஆண்டரியா, பூஜா குமார், பார்வதி, ஊர்வசி, ஜெயராமன், நாசர், எம்.எஸ்.பாஸ்கர், கே.பாலசந்தர், கே.விஸ்வநாத் என... ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். 

இப்படத்தின் இசை வௌியீடு சமீபத்தில் நடந்து முடிந்தது. படம் இம்மாதம் ஏப்ரலில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்திற்கு தடை கோரி சென்னை, கமிஷனரிடம், விஷ்வ இந்து பரீஷத்தின் சென்னை அமைப்பாளர் சத்யமூர்த்தி என்பவர் புகார் மனு அளித்துள்ளார். 

அதில் கூறியிருப்பதாவது, உத்தம வில்லன் படத்தில் பெருமாளின் அவதாரங்களை கொச்சைப்படுத்துவது போன்று வசனங்கள் உள்ளன. பக்த பிரகலாதன் மற்றும் அவரது தந்தை இரணியனின் உரையாடல்களை, உதிரத்தின் கதை என்று வில்லுப்பாட்டாக படத்தில் சேர்த்துள்ளனர். 

தன்னை எப்போதும் இந்து மதத்தை எதிர்க்கும் நாத்திகனாக காட்டிக்கொள்ளும் கமல், இந்து கடவுளை விமர்சித்து இருப்பது, இந்துக்கள் மனதை புண்படுத்துவது போன்று உள்ளது. எனவே இப்படத்தை தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு சத்யமூர்த்தி தனது புகார் மனுவில் கூறியுள்ளார்.

சமீபத்தில் தான் கார்த்தி நடித்த கொம்பன் படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது. இப்போது கமலின், உத்தமவில்லன் படத்திற்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கமலின் படங்களுக்கு எதிர்ப்பு கிளம்புவது இது ஒன்றும் முதல்முறையல்ல... ஏற்கனவே சண்டியர்(விருமாண்டி), விஸ்வரூபம் என பல படங்களுக்கு பிரச்னை உருவானது குறிப்பிடத்தக்கது.

Tuesday, March 31, 2015

கொம்பனுக்கு ஆதரவாக திரள்கிறது திரையுலகம்



ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகவிருந்த 'கொம்பன்' படத்தை தடைசெய்யக்கோரி, புதிய தமிழகம் கிருஷ்ணசாமி எழுப்பிய சர்ச்சை தற்போது புதிய கட்டத்தை எட்டி இருக்கிறது. 

உயர்நீதமன்ற மதுரை கிளையில் கிருஷ்ணசாமி  சார்பாக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. 

அதனையடுத்து ஓய்வுபெற்ற நீதிபதிகளைக்கொண்ட குழுவினருக்கு 'கொம்பன்' படத்தை திரையிட்டு காண்பித்து அவர்களின் கருத்துக்களை பெற நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அதன்படி இன்று காலை நீதிபதிகள் அடங்கிய குழுவினருடன் கிருஷ்ணாசாமி தரப்பைச் சேர்ந்த சிலருக்கும் 'கொம்பன்' படத்தை காலை 7 மணிக்கு போட்டுக் காண்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

திட்டமிட்டபடி நீதிபதிகள் வந்தும்கூட, கிருஷ்ணாசாமியும் அவரது ஆதரவாளர்களும் காலதாமதமாக படம் பார்க்க வந்ததோடு, 'கொம்பன்' படத்தின் முழு ஸ்கிரிப்டையும் தயாரிப்பாளர்களிடம் கேட்டிருக்கிறார்கள்.  

அதற்கு நீதிபதிகள் ஆட்சேபம் தெரிவித்திருக்கின்றனர்.  பின்னர் ஒருவழியாக படம் ஆரம்பமாகி 10 நிமிடங்களில், படத்தை மறுபடியும் முதலிலிருந்து போட்டுக் காண்பிக்கும்படி கிருஷ்ணாசாமியும் அவரது ஆதரவாளர்களும் பிரச்சனை செய்ய, நீதிபதிகளுக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். 

ஒரு கட்டத்தில் தியேட்டரை நீதிபதிகள் தியேட்டரைவிட்டே சென்றுவிட்டனர். நடந்த விஷயங்களை சென்னை நீதிமன்றத்தில் அறிக்கையாக சமர்ப்பிக்கப்போவதாகக் கூறி கிளம்பிவிட்டார்களாம். 

நீதிபதிகள் தரும் அறிக்கை சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து மதுரை கோர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர் இன்று மாலை 4 மணிக்கு 'கொம்பன்' பட வழக்கில் தீர்ப்பு வெளிவரும் என்று தெரிகிறது. 

இதுஒருபுறமிருக்க 'கொம்பன்' படத்தை கண்டிப்பாக ரிலீஸ் செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் ஆதரவுக் குரல்கள் அதிகரித்து வருகின்றன.'கொம்பனு'க்கு ஆதரவாக #SUPPORTKOMBAN என்ற ஹேஷ்டேக் மூலம் ஆதரவை தெரிவித்த வண்ணமுள்ளனர். 

ரசிகர்களும் இந்த ஹேஷ்டேக் மூலம் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். திரையுலகைச் சேர்ந்த பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். 

இப்பிரச்சனையில் நடிகர் சங்கம், இயக்குநர் சங்கம், தயாரிப்பாளர் சங்கமும் தலையிட்டு கொம்பன் படத்துக்கு தன் ஆதரவை தெரிவிக்க உள்ளது. இதுகுறித்து இன்று மாலை சங்க நிர்வாகிகள் பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேச உள்ளனர்.

Sunday, March 29, 2015

காமெடியனை கைவிட்ட விஜய்

பேரரசு இயக்கத்தில் விஜய்-த்ரிஷா நடித்த படம் திருப்பாச்சி. இந்த படத்தில் விஜய்யின் நண்பனாக காமெடி ரோலில் நடித்திருந்தவர் பெஞ்சமின். 

அதற்கு முன்பே அவர் சில படங்களில் நடித்திருந்தபோதும் திருப்பாச்சி படத்தில் படம் முழுக்க விஜய்யுடன் நடிக்கும் காட்சியில் நடித்ததால் அடுத்து இவர் பெரிய காமெடியனாகும் நிலை இருந்தது.

ஆனால், பின்னர் அவருக்கு பெரிய ஹீரோக்களின் படங்களே கிடைக்கவில்லை. அதனால் சில சின்ன படங்களில் நடித்த பெஞ்சமின் மார்க்கெட்டில் இருந்தே காணாமல் போய் விட்டார். 

அதையடுத்து, விஜய்யை சந்தித்தும் தனக்கு சான்ஸ் தருமாறு கேட்டாராம். ஆனால், அவரோ, நான் நடிக்கும் படங்களில் யார் யார் நடிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதே டைரக்டர்கள்தான். 

நான் அதில் தலையிடுவதே இல்லை. அதனால் என்னை வைத்து படமெடுக்கும் டைரக்டர்களை சந்தித்து நீங்களே கேளுங்கள். கதைக்கு ஓகே என்றால் அவர்கள் சான்ஸ் கொடுப்பார்கள் என்று கூறிவிட்டாராம்.

அதையடுத்து, பெஞ்சமின் விஜய் நடித்த படங்களில் நடிக்க முயற்சி எடுத்திருக்கிறார் ஆனால் யாரும் கைகொடுக்கவில்லையாம். அதனால் இப்போதும் சில சிறிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் பெஞ்சமின், ஓஹோ என்றொரு படத்தில் தனி காமெடியனாக நடித்துள்ளார். 

தன்னை கோலிவுட் டைரக்டர்கள் திரும்பிப்பார்க்க வேண்டும் என்பதற்காக, வித்தியாசமான காமெடி சீன்களை யோசித்து நடித்துள்ளாராம். அதனால் இந்த ஓஹோ படத்திற்கு பிறகு எனது நடிப்பையும் ஆஹா ஓஹோ என்று பேசுவார்கள் என்று கூறி வருகிறார் பெஞ்சமின். 

Wednesday, March 25, 2015

ரஜினியின் அடுத்த படம் காமெடி படம்

சிவாஜி, எந்திரன், கோச்சடையான் என ஆக்சன், சீரியஸ் படங்களிலேயே தொடர்ந்து நடித்து வந்த ரஜினி, விரைவில் முழுநீள காமெடி படம் ஒன்றி்ல் நடிக்க உள்ளார்.

ரஜினி நடித்த காமெடி படங்களான தில்லுமுல்லு, குரு சிஷ்யன் படங்கள் வசூலிலும் வெற்றி பெற்றதோடு, ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவையும் பெற்றன. 

இந்நிலையில், மீண்டும், காமெடி படம் ஒன்றில் ரஜினி நடிக்க உள்ளார். இதுதொடர்பாக, கிரேசி மோகனை, சில நாட்களுக்கு முன் ரஜினி சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.

ரஜினி நடிப்பில் உருவான அருணாச்சலம் படத்தின் திரைக்கதையை, கிரேசிமோகன் தான் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tuesday, March 24, 2015

மொட்டை தலைக்கு புது மவுசு

மில்க் இயக்குனரால் ஐ காட் படத்தில் வில்லனாக அறிமுகப்படுத்தப்பட்ட மொட்டை தலை நடிகர் காட்டில் இப்போது அடை மழை. 

அவரை ஹீரோவாக நடிக்க கேட்டு நான்கு கம்பெனிகள் வரிசையில் இருக்கிறது. "நமக்கு இந்த ஹீரோல்லாம் சரிப்படாதுப்பா. எதுனாச்சும் சின்ன ரோலா கொடுங்க சின்ன சம்பளம் கொடுங்க போதும்பா" என்று சொல்லிக் கொண்டிருந்தவர் இப்போது ஆளே மாறிட்டாராம்.

தனி மானேஜர், கால்ஷீட் மானேஜர், செய்தி தொடர்பாளர், பி.ஏ. உதவியாளர் என அவரைச்சுற்றி ஒரு கூட்டமே உருவாகிவிட்டதாம். சம்பளம், கால்ஷீட் தேதியை அவர்களே தீர்மாணிக்குறாங்களாம். 

கதையும் அவர்கள்தான் கேட்கிறார்களாம். "அண்ணன் அம்புட்டு சிம்பிள். எவ்வளவு கஷ்டப்பட்டு வேணாலும் நடிப்பாரு, கொடுக்கிற சம்பளத்தை சந்தோஷமா வாங்கிக்குவாரு. 

இப்போ புதுசா வந்திருக்கிற ஜால்ரா கூட்டத்துக்கு நடுவுல கைதி மாதிரி இருக்காரு" என்று புலம்புகிறார்கள். அவருக்கு நெருக்கமானவர்கள்.

Wednesday, March 18, 2015

போலீஸ் ரோல் - ஜிம்முக்கு செல்லும் விஜய்சேதுபதி



ஒரு படத்தை முடித்த பிறகே அடுத்தப் படத்தில் நடிப்பது என்பதை பெரும்பாலான ஹீரோக்கள் பின்பற்றி வருகின்றனர். இந்த விஷயத்தில் விஜய்சேதுபதி விதிவிலக்கு. 

நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் விஜய்சேதுபதி. எனவே நண்பர்கள் தன்னிடம் கால்ஷீட் கேட்டு வந்தால் அதை தட்டமுடியாமல் கால்ஷீட் கொடுத்துவிடுகிறார். இதன் காரணமாக, நிறைய படங்களில் நடிக்கும் நடிகராக மாறிவிட்டார் விஜய்சேதுபதி. 

தற்போது இடம் பொருள் ஏவல், புறம்போக்கு, ஆரஞ்சுமிட்டாய், மெல்லிசை, நானும் ரௌடிதான், இறைவி, கைநீளம் ஆகிய படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். இவை தவிர புஷ்கர் காயத்ரி, கோகுல் இயக்கத்தில் நடிக்கவும் தலையாட்டி இருக்கிறார். 

இவற்றோடு பண்ணையாரும் பத்மினியும் படத்தின் இயக்குநரான அருண்குமார் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் விஜய்சேதுபதி. 

இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரி கேரக்டராம் விஜய்சேதுபதிக்கு. தற்போது கொஞ்சம் தொப்பையுடன் காணப்படும் விஜய்சேதுபதி போலீஸ் கேரக்டரில் நடிக்க இருப்பதால் தினமும் ஜிம்முக்கு சென்று தீவிரமாக வொர்க்அவுட் செய்ய திட்டமிட்டிருக்கிறாராம்.

Tuesday, March 17, 2015

தடைகளை தகர்தெறிந்த கமல்ஹாசனின் பாபநாசம்

வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் சார்பாக சுரேஷ் பாலாஜி, ஜார்ஜ் பியுஸ் மற்றும் ராஜ் குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடட் சார்பாக ராஜ்குமார் சேதுபதி தயாரிப்பில், ஜீத்து ஜோசப் இயக்கத்தில், கமல்ஹாசன் மற்றும் கவுதமி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் “பாபநாசம்”.

சில மாதங்களுக்கு முன்பு சதிஷ் பால் என்பவர், “பாபநாசம்” (த்ரிஷ்யம்) படத்தின் கதை தான் எழுதிய “ஒரு மழகாலத்” என்னும் நாவலில் உள்ள கதையை ஒற்றிருக்கிறது என்றும், த்ரிஷ்யம் படத்தின் தயாரிப்பாளர்கள் தனது அனுமதியில்லாமல் திரைப்படமாக்கிவிட்டதாகவும் எனவே பாபநாசம் படபிடிப்பை நிறுத்த கோரியும் படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது எர்ணாகுலம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, பாபநாசம் படப்பிடிப்பிற்க்கு இடைக்கால தடை பெற்றிருந்தார். அந்த மனுவின் மீது மேல்முறையீடு செய்த தயாரிப்பாளர் தரப்பு, தற்காலிகமாக இடப்பட்ட தடையை நீக்கி படப்பிடிப்பை தொடர்ந்தனர்.

இந்நிலையில் எர்ணாகுலம் 2வது கூடதல் நீதிமன்ற அமர்விர்க்கு வந்த இவ்வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இவ்வழக்கினை தள்ளுபடி செய்து தயாரிப்பாளருக்கு ஆதரவான தீர்ப்பினை அளித்துள்ளார்.
இதனால் பாபநாசம் படத்திற்கான தடை முற்றிலுமாக நீங்கியுள்ளது.

Monday, March 16, 2015

மீண்டும் விஜய்யுடன் இணையும் ஆர்யா

இயக்குநர் விஜய்யை பெரிய அளவில் பேச வைத்த படம் ''மதராசப்பட்டினம்''. ஆர்யா, எமி ஜாக்சன் நடிப்பில் வெளியான இப்படம், சூப்பர் டூப்பர் ஹிட்டானது. 

மேலும் பழைய சென்னையை நம் கண்முன் நிறுத்தியது.  எமிக்கும் தமிழ் சினிமாவில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. 

இந்நிலையில் மதராசப்பட்டினம் படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் ஆர்யாவும், இயக்குநர் விஜய்யும் இணைந்து ஒரு படம் பண்ணப்போவதாக தகவல் வௌியாகியுள்ளது. 

தற்போது விஜய், விக்ரம் பிரபுவை வைத்து, ''இது என்ன மாயம்'' படத்தை இயக்கி வருகிறார். 

அதேப்போல் ஆர்யாவும், புறம்போக்கு, யட்சன்,  மற்றும் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சுவங்க படங்களில் பிஸியாக இருக்கிறார். இருவரும் அவர்களது படங்களை முடித்த பின்னர் இந்த புதிய படத்தில் இணைவார்கள் என தெரிகிறது. 

Wednesday, March 11, 2015

ரஜினி மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய கோரி வழக்கு

ரஜினிகாந்த் நடிப்பில், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா ஆகியோரது நடிப்பில், கடந்த டிசம்பர் 12ம் தேதி வௌியான படம் லிங்கா. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய இப்படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்திருந்தார். 

இப்படம் ரிலீஸால் கடந்த சில மாதங்களாக பிரச்னைகள் நிலவி வருகிறது. குறிப்பாக இப்படத்தால் தங்களுக்கு ரூ.31 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும் இப்பிரச்னை தொடர்பாக உண்ணாவிரத போராட்டங்கள் எல்லாம் நடந்தது. இதற்கிடையே லிங்கா படம் தொடர்பாக தன்னையும், ரஜினிகாந்தையும் விமர்சிக்க கூடாது என்று கூறி கர்நாடக கோர்ட்டில் தடை உத்தரவு வாங்கினார் ராக்லைன் வெங்கடேஷ்.

இந்நிலையில், லிங்கா படத்திற்கு கேளிக்கை வரி பெற்றது தொடர்பாக அரசுக்கு ரூ.21 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக ரஜினி மற்றும் ராக்லைன் வெங்கடேஷ் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய வேண்டும் என்று கூறி சிங்கார வடிவேலன், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்று தொடர்ந்தார். 

இந்த வழக்கு நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை ஏற்று கொண்ட நீதிபதி, வழக்கை நாளைக்கு(மார்ச் 12ம் தேதி) ஒத்தி வைத்தார். 

Monday, March 9, 2015

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் விஜய்மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 10 எண்றதுக்குள்ளே படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.

நேபாளில் சில காட்சிகள் எடுக்கப்பட வேண்டி இருப்பதால் இந்த மாதம் செல்கின்றனர். அதோடு 10 எண்றதுக்குள்ளே படப்பிடிப்பு ஓவர்.

இப்படத்தை அடுத்து விக்ரம் இரண்டு படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். அவற்றில் ஒரு படம்... கௌதம் மேனன் இயக்கும் படம். இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பை ஜூன் மாதம் தொடங்க திட்டமிட்டிருக்கிறார் கௌதம் மேனன். இப்படத்தில் பாதிக்கும் மேற்பட்ட காட்சிகள் அமெரிக்காவில் படமாக்கப்பட உள்ளது. எனவே படத்தின் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பை அமெரிக்காவில் நடத்திவிட்டு, அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த திட்டமிட்டிருக்கிறார் கௌதம்மேனன்.

அப்ப சிம்புவை வைத்து இயக்கி வந்த அச்சம் என்பது மடமையடா படம்? சிம்புவுக்கே வெளிச்சம்

Saturday, March 7, 2015

சந்தானத்தை பழிவாங்கிய ஆர்யா

ஆர்யாவுக்கும், சந்தானத்துக்கும் உள்ள நட்பு திரைக்கு அப்பாலும் மிக உறுதியானது என்பதற்கு சான்றாக பல்வேறு சம்பவங்கள் இருந்தாலும், சமீபத்தில் பாண்டிசேரியில் நடந்த  ஒரு சம்பவம் அதை உறுதிபடுத்தியது. 

சந்தானம் மற்றும் ஆஷ்னா சவேரி இணையாக நடிக்கும் இனிமே இப்படிதான் படப்பிடிப்பு பாண்டியில் நடந்துக் கொண்டு இருக்கிறது. அருகிலேயே ஆர்யா யட்சன் படப்பிடிப்புக்காக வந்து இருந்தார்.

அவருக்கு சந்தானம் அருகில் இருப்பது தெரிந்ததும் அந்த படப்பிடிப்பு தளத்துக்கு செல்ல முடிவெடுத்தார். அது ஒரு சம்பிரதாயத்துக்கு வரும் வருகை அல்ல என சந்தானத்துக்கு தெரிய வாய்ப்பில்லை. 

சந்தானம் சமீபகாலமாக தனக்கு ஈடுபாடு அதிகமுள்ள நடன காட்சியில் மும்முரமாக ஈடுப்பட்டு வந்தார். அந்த நேரம் அங்கு ஆர்யா வந்தாரே  பார்க்கலாம், ஒரே களேபரம் தான். 

டான்ஸ் மாஸ்டர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட ஆர்யா, சந்தானத்திடம்  இன்னும் நல்லா நடனம் ஆட வேண்டும் என நிர்பந்தித்து கொண்டே இருந்தார். 

நண்பர் அக்கறையில்  தானே  சொல்கிறார் என மீண்டும் மீண்டும்  ஆடிய சந்தானத்துக்கு, தனது சக்தி மொத்தமும் இழந்து  சோர்வு  அடைந்த பின்னர் தான் ஆர்யா வேண்டுமென்றே அவ்வாறு செய்வதை உணர்ந்துக் கொண்டார். 

திரையில் தான் ஆர்யாவுக்கு செய்ததை ஒரு பழி வாங்கும் முயற்சியாக ஆர்யா தன்னிடம் இப்போது செய்வதை தெரிந்துக் கொண்டு சந்தானம், ஆர்யாவிடம் ஐயா சாமி போதும் உங்க விளையாட்டு எனக்கூறி தப்பித்தார். 

Wednesday, March 4, 2015

பாலிவுட்டிலும் மங்காத்தா கேம்

வெங்கட்பிரபு இயக்கத்தில், தல அஜித் நடித்த மங்காத்தா படம், ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. 

அஜித் நடிப்பில், ஆரம்பம் படம், பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், மங்காத்தா படமும் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட உள்ளது. 

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம், இந்த ரீமேக் பணிகளை மேற்கொள்ள உள்ளது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம், பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

மங்காத்தா ஹிந்தி ரீமேக்கில் நடிக்க இருப்பவர்களின் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அர்ஜூன் மற்றும் த்ரிஷா, முக்கிய ரோல்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.