Tuesday, March 31, 2015

கொம்பனுக்கு ஆதரவாக திரள்கிறது திரையுலகம்



ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகவிருந்த 'கொம்பன்' படத்தை தடைசெய்யக்கோரி, புதிய தமிழகம் கிருஷ்ணசாமி எழுப்பிய சர்ச்சை தற்போது புதிய கட்டத்தை எட்டி இருக்கிறது. 

உயர்நீதமன்ற மதுரை கிளையில் கிருஷ்ணசாமி  சார்பாக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. 

அதனையடுத்து ஓய்வுபெற்ற நீதிபதிகளைக்கொண்ட குழுவினருக்கு 'கொம்பன்' படத்தை திரையிட்டு காண்பித்து அவர்களின் கருத்துக்களை பெற நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அதன்படி இன்று காலை நீதிபதிகள் அடங்கிய குழுவினருடன் கிருஷ்ணாசாமி தரப்பைச் சேர்ந்த சிலருக்கும் 'கொம்பன்' படத்தை காலை 7 மணிக்கு போட்டுக் காண்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

திட்டமிட்டபடி நீதிபதிகள் வந்தும்கூட, கிருஷ்ணாசாமியும் அவரது ஆதரவாளர்களும் காலதாமதமாக படம் பார்க்க வந்ததோடு, 'கொம்பன்' படத்தின் முழு ஸ்கிரிப்டையும் தயாரிப்பாளர்களிடம் கேட்டிருக்கிறார்கள்.  

அதற்கு நீதிபதிகள் ஆட்சேபம் தெரிவித்திருக்கின்றனர்.  பின்னர் ஒருவழியாக படம் ஆரம்பமாகி 10 நிமிடங்களில், படத்தை மறுபடியும் முதலிலிருந்து போட்டுக் காண்பிக்கும்படி கிருஷ்ணாசாமியும் அவரது ஆதரவாளர்களும் பிரச்சனை செய்ய, நீதிபதிகளுக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். 

ஒரு கட்டத்தில் தியேட்டரை நீதிபதிகள் தியேட்டரைவிட்டே சென்றுவிட்டனர். நடந்த விஷயங்களை சென்னை நீதிமன்றத்தில் அறிக்கையாக சமர்ப்பிக்கப்போவதாகக் கூறி கிளம்பிவிட்டார்களாம். 

நீதிபதிகள் தரும் அறிக்கை சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து மதுரை கோர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர் இன்று மாலை 4 மணிக்கு 'கொம்பன்' பட வழக்கில் தீர்ப்பு வெளிவரும் என்று தெரிகிறது. 

இதுஒருபுறமிருக்க 'கொம்பன்' படத்தை கண்டிப்பாக ரிலீஸ் செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் ஆதரவுக் குரல்கள் அதிகரித்து வருகின்றன.'கொம்பனு'க்கு ஆதரவாக #SUPPORTKOMBAN என்ற ஹேஷ்டேக் மூலம் ஆதரவை தெரிவித்த வண்ணமுள்ளனர். 

ரசிகர்களும் இந்த ஹேஷ்டேக் மூலம் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். திரையுலகைச் சேர்ந்த பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். 

இப்பிரச்சனையில் நடிகர் சங்கம், இயக்குநர் சங்கம், தயாரிப்பாளர் சங்கமும் தலையிட்டு கொம்பன் படத்துக்கு தன் ஆதரவை தெரிவிக்க உள்ளது. இதுகுறித்து இன்று மாலை சங்க நிர்வாகிகள் பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேச உள்ளனர்.