Monday, June 30, 2014

நடிப்புக்காக ரூ.11 சம்பளம் வாங்கிய இயக்குனர்

இந்தித் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கரண் ஜோஹர். 'பாம்பே வெல்வெட்' என்ற படத்தில் நடித்ததற்காக வெறும் 11 ரூபாய் மட்டுமே சம்பளமாகப் பெற்றுக் கொண்டுள்ளார். 

இந்தப் படத்தில் நடிப்பதற்காக அவர் சம்பளமே வேண்டாம் என்று சொன்னாராம். 

ஆனால், நட்பின் அடையாளமாக கரணுக்கு 11 ரூபாய்க்கான பிரம்மாண்டமான ஒரு செக்கை வழங்கியிருக்கிறார்கள். இந்த படத்தில் கரண் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இது பற்றி தயாரிப்பாளர்களில் ஒருவரான விகாஸ் பாஹ்ல் கூறும் போது,
“இந்த படத்திற்காக அவர் சம்பளம் எதையும் பெறவில்லை. இந்த படத்தில் நடிப்பது அவருக்கு மிகப் பெரும் ஆர்வமாக இருந்தது. எங்களது மொத்தக் குழுவுமே அவருக்கு கடமைப்பட்டுள்ளோம். 

இந்த படத்தில் நடிக்க அவர் சம்மதித்ததற்கு மிகப் பெரிய நன்றி சொல்ல வேண்டும். அவர் நடித்துள்ள கதாபாத்திரத்தில் மிகவும் அற்புதமாக நடித்திருக்கிறார். 

அதைப் பற்றி விவரிக்க வார்த்தைகளே இல்லை. ஒரு நடிகராக எங்கள் படத்தில் அவர் அறிமுகமாவது எங்களுக்குப் பெருமைதான், ” என்கிறார்.

கரண் ஜோஹர் இதற்கு முன் 'தில்வாலே துஹானியா லே ஜாயங்கே, லக் பை சான்ஸ்' ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடித்திருக்கிறார். 

'பாம்பே வெல்வெட்' திரைப்படம் ஒரு ரொமான்டிக் திரில்லர் படம். ரண்பீர் கபூர், அனுஷ்கா சர்மா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இத்திரைப்படம் நவம்பர் மாதம் வெளிவர உள்ளது. 

Thursday, June 26, 2014

புதிய சாதனை படைக்கும் துப்பாக்கி ரீமேக்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், அக்ஷய் குமார், சோனாக்ஷி சின்ஹா, கோவிந்தா மற்றும் பலர் நடித்து வெளிவந்த 'ஹாலிடே' திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி விட்டதாம். 

அது மட்டுமல்ல இந்த ஆண்டு வெளிவந்த படங்களிலேயே அதிக வசூலை பெறும் படம் என்ற சாதனையையும் இந்த வாரம் புரியும் என்கிறார்கள்.

இந்தித் திரையுலகைப் பொறுத்தவரை 100 கோடி ரூபாய் மேல் வசூலிக்கும் படங்கள் '100 கோடி ரூபாய் கிளப்' என பெருமையாக அழைப்பது வழக்கம். 

அந்த விதத்தில் இந்த ஆண்டில் சல்மான் கான் நடித்த 'ஜெய் ஹோ', அர்ஜுன் கபூர், அலியா பட் நடித்த '2 ஸ்டேட்ஸ்' ஆகிய படங்கள் மட்டுமே 100 கோடி வசூலைக் கடந்துள்ளன. 

'ஜெய் ஹோ' இதுவரை 109 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம். இந்த வசூலை இந்த வார இறுதிக்குள் 'ஹாலிடே' திரைப்படம் பெற்றுவிடும் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இதற்கு முன் ஆமிர் கான் நடித்து வெளிவந்த 'கஜினி' படமும் 100 கோடி ரூபாய் வசூலைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

தனது இரண்டு படங்களும் பெரிய வெற்றி பெற்றுள்ளதால் முருகதாஸ் மகிழ்ச்சியில் இருக்கிறாராம். 

அந்த வெற்றிப் பெருமிதத்துடன் விஜய், சமந்தா நடிப்பில் அவரது இயக்கத்தில் உருவாகி வரும் 'கத்தி' படத்தையும் மாபெரும் வெற்றிப் படமாக்க முயன்று வருகிறாராம். 

இந்த படத்தின் ரீமேக் உரிமையை வாங்க அக்ஷய் குமார் விருப்பத்தை தெரிவித்துள்ளாராம். தமிழ் இயக்குனர்களில் தற்போது ஷங்கருக்கு அடுத்த இடத்தில் உள்ளவர் முருகதாஸ் தான்.

Wednesday, June 25, 2014

கலெக்டர் வேடத்தில் நடிக்கும் ரஜினி

பெரும்பாலும் சாமான்யனாக நடிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டுபவர் ரஜினி. அதனால் பெரிய பெரிய பொறுப்புகளில் இருக்கும் அதிகாரி வேடங்களை தவிர்ப்பார். 

அப்படித்தான் ஷங்கர் இயக்கிய முதல்வன் படத்தில் நடிப்பதற்கும் மறுப்பு தெரிவித்தார். 

அந்த படத்தில் கதைப்படி முதல்வராவது போன்று கதை பண்ணியிருந்ததால், அதில் தான் நடித்தால் அதை வைத்தே சர்ச்சைகள் வரும் என்று அப்போதைய அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு முதல்வன் படத்தில் நடிக்க மறுத்தார் ரஜினி.

ஆனால், இப்போது காலங்களின் மாற்றம், ரஜினியின் உடல் நிலை மாற்றம் என்று ஏற்பட்டிருப்பதால், அதற்கேற்ப கதையை தேர்ந்தெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் ரஜினி, தற்போது தான் நடித்து வரும் லிங்காவில் ஒரு கேரக்டரில் கலெக்டராக நடிக்கிறாராம். 

ஒரு மாவட்டத்தின் ஆட்சியாளராக இருக்கும் அவர் மக்கள் நலனில் ஈடுபடும்போது என்னென்ன எதிர்விளைவுகளை சந்திக்கிறார் என்பதுதான் கதையாம்.

மேலும், கோச்சடையான் ரசிகர்களை ஏமாற்றிவிட்டது என்பதால், இந்த லிங்கா அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யக்கூடிய படமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு விசயத்தையும் பார்த்து பார்த்து செய்து வரும் ரஜினி, தனது பழைய வெற்றி செண்டிமென்ட்டுகளையும் இந்த படத்தில் பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்.

ஒரு படம் வெற்றி பெற வேண்டுமென்றால் நல்ல கதைதான் அவசியம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், ஏற்கனவே வெற்றியை கொடுத்த படங்களில் தான் கடைபிடித்தவற்றை தொடர்வது சினிமா உலகின் பாலிஸி என்பதால், தான் நடித்ததில் ரயில் சண்டை காட்சிகள் இடம்பெற்ற படங்கள் அனைத்துமே ஹிட்டடித்திருக்கின்றன என்பதால், இந்த படத்திலும் கட்டாயம் ஒரு ரயில் சண்டை காட்சி வேண்டும் என்று செண்டிமென்டுக்காக கதைக்குள் புகுத்தியிருக்கிறாராம் ரஜினி. அந்த காட்சியையும் ஐதராபாத்திலேயே படமாக்கப்போகிறார்களாம்.

Tuesday, June 24, 2014

இந்த ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் 3 படங்கள்

ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற முக்கிய முன்னணி நடிகர்கள் நடித்து ஆண்டுக்கு ஒரு படம் மட்டுமே வெளிவருவது வழக்கம். சில வருடங்களுக்கு முன் அப்படி கூட வராமல் இருந்தது. 

அவர்களுக்கேற்ற கதைகளும், பொருத்தமான ஜோடிகளும் கூட கிடைப்பது சிரமமாகவே இருந்ததாகச் சொல்லப்பட்டது. 

தற்போது பல புது இயக்குனர்களின் வரவால் புதுப் புதுக் கதைகள் வெளிவந்து அந்தப் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அது முன்னணி நடிகர்களுக்கும் ஒரு புதிய ரத்தத்தை பாய்ச்சியது.

இந்த ஆண்டு ரஜினிகாந்த் நடித்து 'கோச்சடையான்' படம் ஏற்கெனவே வெளிவந்தது, இன்னும் சில மாதங்களில் 'லிங்கா' படம் வெளிவர உள்ளது. அதே சமயம், கமல்ஹாசன் நடித்து மூன்று படங்கள் வெளிவர உள்ளது. 

கமல் நடித்து 'விஸ்வரூபம் 2' படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டது. இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. 

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் நடித்து வரும் 'உத்தம வில்லன்' படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது. இதன் பின் 'த்ரிஷ்யம்' படத்தின் ரீமேக் படப்பிடிப்பில் கமல் ஜுலை மாதம் முதல் கலந்து கொள்ள உள்ளார்.

இந்த மூன்று படங்களும் இந்த ஆண்டில் அடுத்தடுத்து வெளிவரும் வாய்ப்புள்ளது. அதில் முதலில் வருவது 'உத்தம வில்லன்' படமா அல்லது 'விஸ்வரூபம் 2' படமா என்பது விரைவில் தெரிந்து விடும். 

ஆனாலும், ஒரு படம் 50 நாட்கள் ஓடி முடிப்பதற்குள் அடுத்த படம் வெளிவந்துவிடும் என்றே தெரிகிறது. 

கமல்ஹாசன் நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரே ஆண்டில் மூன்று படங்கள் வெளிவர உள்ளது ஆச்சரியமான விஷயம்தான்.

Monday, June 23, 2014

100 கோடிக்கு மேல் எதிர்பார்க்கும் அஞ்சான்

'அஞ்சான்' படத்தை எப்படியாவது 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து வைத்து விட வேண்டும் என்று இயக்குனர் லிங்குசாமி கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறாராம். 

சூர்யா - சமந்தா என புது ஜோடியுடன், முற்றிலும் இளமையுடன் படத்தை எடுத்திருப்பதால் இளைஞர்களை இந்தப் படம் அதிகமாகவே கவரும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளதாம். 

செலவைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் சுமார் 70 கோடி வரை படத்திற்கு செலவு செய்திருக்கிறார்களாம். 

படத்தை ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் உருவாக்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். தெலுங்கிலும் படம் நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளதாம்.

கண்டிப்பான வெற்றியை எதிர்நோக்கி இருக்கும் சூர்யா இந்த படத்தை மிகவும் நம்புகிறாராம். அதனால்தான் வேறு எந்தப் படத்திலும் நடிக்காமல் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறாராம். 

அதோடு அவருக்கும் சமந்தாவுக்குமான 'கெமிஸ்ட்ரி' நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறதாம். தமிழில் நம்பர்-1 அந்தஸ்தைப் பெற வேண்டும் என்பதற்காக சமந்தா மிகவும் தாராளமாக நடித்திருக்கிறாராம். 

லிங்குசாமி கடைசியாக இயக்கிய 'வேட்டை' படம் சுமாராகத்தான் ஓடியது. அந்தப் படம் வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டதால் இந்த படத்தின் வெற்றிதான் ஒரு இயக்குனராக தன்னை நிலை நிறுத்தும் என லிங்குசாமி நினைக்கிறாராம்.

முற்றிலும் மும்பையில் நடக்கும் அதிரடி ஆக்ஷன் கதை. அஜித், விஜய் இருவரும் தற்போதுதான் மும்பை தாதாக்களை அழித்தார்கள். 

இப்போது சூர்யா அவர்களை எதிர்த்து அழிக்கப் போகிறாராம். சமீபத்திய மும்பை சென்டிமென்ட்டில் இந்த படத்தையும் எடுத்திருக்கிறார்கள் என கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள். 

விரைவில் படத்தின் இசையை பிரம்மமாண்டமாக வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். ஆகஸ்ட் 15 அன்று படம் வெளியாக உள்ளது.

Sunday, June 22, 2014

வேர்ல்ட் நாயகனை கரெக்ட் செய்த இசையமைப்பாளர்

சினிமாவில் திறமை இருக்கிறதோ இல்லையோ, பிழைக்கத் தெரிந்திருக்க வேண்டும். அந்த விதத்தில் ஒரு புதிய இசையமைப்பாளரை மிகவும் பிழைக்கத் தெரிந்தவர் என கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள். 

அவர் இசையமைத்து இதுவரை பெரிதாக எந்தப் படமும் வெற்றி பெறவில்லை. அப்படியிருக்க வேர்ல்ட் நாயகனை எப்படியோ கரெக்ட் செய்து விட்டாரே என்றுதான் பேசிக் கொள்கிறார்கள்.

வேர்ல்ட் நாயகன் தற்போது நடித்து வரும் இரண்டு படங்களுக்கும், அடுத்து நடிக்கப் போகும் படத்திற்கும் அந்த இசையமைப்பாளர்தான் இசையமைக்கிறார். 

இதில் நல்ல வில்லன் படத்தில் இன்னொருத்தர் வாய்ப்பைத்தான் தட்டிப் பறித்துள்ளார். அந்த படத்திற்கு முதலில் இளைய அரசரின் இளைய மகன்தான் இசையமைப்பதாக இருந்தது. 

வேர்ல்ட் நாகயனும் இளைய மகனும் சந்தித்துப் பேசியதெல்லாம் நடந்தது. அதன் பின் என்ன நடந்ததோ திடீரென இசையமைப்பாளர் மாற்றப்பட்டார். அதற்கான காரணமும் தெரிவிக்கப்படவில்லை.

இதுவரை ஐந்தே ஐந்து படங்களுக்கு மட்டுமே இசையமைத்த ஒரு இசையமைப்பாளருக்கு இப்படி தொடர்ந்து வேர்ல்ட் நாயகன் படத்தில் இசையமைக்க வாய்ப்பா என மற்ற இளம் இசையமைப்பாளர்கள் பொறாமைப்படுகிறார்களாம். 

ஆனாலும், ஒரு சாரார் பெயருக்குத்தான் அவர் இசையமைப்பாளர் மற்ற எல்லா வேலையையும் வேர்ல்ட் நாயகன்தானே செய்யப் போகிறார். அதுக்கு எதற்காக இப்படி பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டும் என்கிறார்கள். 

அவர் படத்தில் இயக்குனர்கள் கூட பெயருக்குத்தானே, இது திரையுலகத்துக்கு மட்டுமல்ல அனைவருக்குமே தெரிந்ததுதானே என்றும் சமாதானமடைகிறார்கள். 

அதோடு, அந்த இசையமைப்பாளர் வேர்ல்ட் நாயகனுடன் எப்படி நெருக்கமானார் என்பதன் காரணத்தையும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்களாம்.

Thursday, June 19, 2014

சுந்தர்.சியுடன் ஹாட்ரிக் அடிக்கிறார் ஹன்சிகா

ஹன்சிகா, சுந்தர்.சி இயக்கிய, 'தீயா வேலை செய்யணும் குமாரு' படத்தில் அவருடன் இணைந்தார். தற்போது அரண்மனை படத்தில் நடித்து வருகிறார். 

அடுத்து சுந்தர்.சி. விஷால் ஹீரோவாக நடிக்க ஒரு படம் இயக்க இருக்கிறார். இதில் விஷால் ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். 

சுந்தர்.சியுடன் ஹாட்ரிக் அடிக்கப்போகும் மகிழ்ச்சியில் இருக்கிறார் ஹன்சிகா. 

"சுந்தர்.சியுடன் மூன்றாவது படத்தில் நடிக்கிறேன். விஷால் ஹீரோ ரொம்ப சந்தோஷமா இருக்கேன்" என்கிறார் ஹன்சிகா.

"இது வழக்கமான சுந்தர்.சியின் காமெடி படம் இல்லை. வித்தியாசமான ஆக்ஷன் படம். ஹன்சிகாவுக்கு நடிக்க வாய்ப்புள்ள கேரக்டர். 

அழுத்தமான கேரக்டர், ஹன்சிகா, சுந்தர்.சி, குஷ்பு இடையே தீயா வேலை செய்யணும் குமாரு படத்திலிருந்தே நல்ல நட்பு இருக்கிறது. 

ஹன்சிகா குஷ்புவிடம்தான் தனிப்பட்ட விஷயங்களுக்கே ஆலோசனை கேட்கிறார். அவர்களது நட்பால்தான் இது தொடர்கிறது" என்கிறார்கள் சுந்தர்.சிக்கு நெருக்கமான நண்பர்கள்.

Tuesday, June 17, 2014

வேலையில்லா பட்டதாரியை வாங்கிய மதன்

சிவகார்த்திகேயனை வைத்து தயாரித்த மான் கராத்தே படம் 75 ஆவது நாளை கடந்துவிட்டநிலையில், அப்படத்தின் தயாரிப்பாளரான எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் இன்னும் அடுத்தப்படத்தை ஆரம்பிக்கவில்லை. 

சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல் படங்களின் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரனை ஒப்பந்தம் செய்திருக்கிறார் மதன். சிவகார்த்திகேயனின் கால்ஷீட்டும் கையில் வைத்திருக்கிறார். 

ஆனாலும் உடனடி பலன் இல்லை. எஸ்.ஆர்.பிரபாகரன் இன்னும் ஸ்கிரிப்ட்டையே தயார் செய்யவில்லை.

சிவகார்த்திகேயன் டானா, ரஜினி முருகன் ஆகிய இரண்டு படங்களை முடித்த பிறகுதான் மதனுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார். 

அதுவரை சும்மா இருக்க முடியமா? எனவே தனுஷ் தயாரித்த வேலையில்லா பட்டதாரி படத்தை வாங்கி வெளியிட இருக்கிறார் மதன். 

பெரும் தொகை கொடுத்து அந்தப் படத்தை வாங்கி இருக்கும் மதன் வழக்கம்போல் பிரம்மாண்டமானமுறையில் விளம்பரங்கள் செய்து வேலையில்லா பட்டதாரி படத்தை பெரிய அளவில் மக்களிடம் கொண்டு செல்ல திட்டமிட்டிருக்கிறார் மதன்.

வேலையில்லா பட்டதாரி - தனுஷின் 25 ஆவது படமாம். அதை குறிக்கும்வகையில் விளம்பரங்களில் டி25 என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். 

வேலையில்லா பட்டதாரி படத்தை அடுத்து தனுஷ் தயாரிக்கும் டாணா படத்தையும் மதன் வாங்கி வெளியிடுகிறார்.

Monday, June 16, 2014

முண்டாசுப்பட்டி - சினிமா விமர்சனம்

கிராமத்துல இருக்கிற எல்லாரும் முண்டாசு கட்டி இருக்கிறதால படத்துக்குப் பேரு 'முண்டாசுப்பட்டி'யாம். அப்ப வேட்டி மட்டும் கட்டியிருந்தால் 'வேட்டிப்பட்டி'…

அப்புறம்…வேண்டாம் இதோட நிறுத்திக்குவோம். கற்பனையான ஒரு கிராமத்துல நடக்கிற அதி கற்பனையான ஒரு விஷயம்தான் படத்தோட கதை.

தலைக்கு உள்ள சில பல சுவாரசியமான விஷயங்களை யோசிச்ச இயக்குனர் ராம்குமார் தலைக்கு வெளிய இருக்கிற தலைமுடியைப் பத்தி கொஞ்சம் கூட யோசிக்கலை. 

அவனவன் அமெரிக்காவுல இருந்து மேக்கப் மேனையும், ஹேர் டிரஸ்ஸரையும் கூட்டிட்டு வந்து அப்படியே யதார்த்தமா இருக்கிற மாதிரி கெட்-அப்பையே மாத்தறாங்க. இவங்க என்னடான்னா, ஆதி கால சினிமாவுல பயன்படுத்தின அதே 'விக்'கை எடுத்து மாட்டிக்கிட்டு ஃபேன்சி டிரஸ் காம்படிஷன் நடத்தியிருக்காங்க.

1980-கள்னா ஒண்ணு இளையராஜா பாட்டு பின்னணியில பாடணும், இல்லை பெல்பாட்டம் பேண்ட் போடணும், ஸ்டெப் கட்டிங் தலைமுடி இருக்கணும்னு இதுதான் இவங்களுக்குத் தெரிஞ்சது போல. ஆனால், அதையும் மீறி உணர்வுன்னு ஒரு விஷயம் இருக்கிறது இவங்க கண்ணுக்குலாம் தெரியலை.

ஒரு காலத்துல முண்டாசுபட்டி கிராமத்துல ஒரு வெள்ளைக் காரன் வந்து போட்டோ புடிச்சதாலதான் கிராமத்துல இருக்கிற பலர் வித்தியாசமான நோய் வந்து இறக்கறாங்கன்னு ஒரு பீதி. அப்ப எங்க இருந்தோ வந்து விழுற ஒரு எரி கல், அப்படியே கரெக்டா அவங்க கிராமத்து கோயில்ல போயி செட் ஆகிடுது. 

அந்த சாமிதான் இவங்கள காப்பாத்துனதா நினைச்சி அந்த ஊர்ல இருக்கிற யாருமே போட்டோ எடுத்துக்கறதில்லை. அப்படி போட்டோ எடுத்தால் அவங்களுக்கு ஆயுசு முடிஞ்சிடும்னு ஒரு நெனப்பு.

இப்படிப்பட்ட கிராமத்துக்கு இறந்து போன ஊர் பெருசை போட்டோ எடுக்க போட்டோகிராபரான விஷ்ணு விஷால் அவர் உதவியாளர் காளி வெங்கட்டோட ஊருக்குள்ள வர்றாரு. அப்புறம் என்ன வழக்கம் போல ஊர் பெரிய மனுஷர் மகளான நந்திதாவைக் காதலிக்கிறாரு. அப்புறம் எப்படி ஊர் மனசை மாத்தறாருங்கறதுதான் படத்தோட கதை.

படத்துல இருக்கிற ஒரு பெரிய ஆறுதலே தேவையில்லாத காதல் காட்சிகள், காதல் பாடல்கள், முட்டல் மோதல் இப்படி எதுவும் இல்லாததுதான். அதே சமயம் அதுவே ஒரு மைனஸ் பாயின்டாவும் ஆயிடுது. 

முழுக்க முழுக்க ஒரு நகைச்சுவைக் கதையில காதலுக்குலாம் கூட பெரிய முக்கியத்துவம் கொடுத்த மாதிரி தெரியலை. மூடநம்பிக்கையை எதிர்க்கறோம்னு உஷாரா ஃபிராடா இருக்கிற மத்தவங்க மேலயும், பல்லி மேலயும் காட்சிகளை வச்சி எதுக்கு வம்பும்னு தப்பிச்சிக்கறாங்க.

விஷ்ணு விஷால், அவருக்குக் கொஞ்சமும் பொருந்தாத ஒரு விக், பொருத்தமில்லாத ஒரு பேண்ட், சட்டையோட முடிஞ்சவரைக்கும் முட்டி மோதி பார்த்திருக்காரு. டயலாக் டெலிவரியை நிதானமா சொல்லி புரியற மாதிரி பேசறதுல கொஞ்சம் தப்பிச்சிக்கிறாரு. 

அதுலயும், சத்தமேயில்லாம நந்திதாவை சைட் அடிக்கிறதுல சான்ஸே இல்லை. ஆனாலும், நடிப்புத் திறமையை கொட்டறதுக்கு படத்துல எந்த காட்சியும் இல்லை. அப்படியே இருந்துட்டாலும்னு நீங்க கேக்கறது புரியுது. நம்பிக்கையை தளர விடாதீங்க விஷ்ணு, இப்படியே கொஞ்சம் கொஞ்சமா போனால் விஷால் மாதிரி ஆகிடலாம்.

'அட்டகத்தி' நந்திதா, முண்டாசுபட்டி கிராமத்தோட ஊர் பெரிய மனிதரோட ஒரே செல்லப் பொண்ணு. அப்புறம் கேக்கணுமா, கண்டிப்பா ஹீரோவைத்தான் லவ் பண்ணும். நீலம், சிகப்பு, பச்சை கலர்ல பாவாடை தாவணி, காமாட்சி டாலர் செயின் இதுதான் 80களோட ஹீரோயின் தோற்றம்னு இயக்குனர் ஃபிக்ஸ் ஆகிட்டாப்ல, என்ன பண்றது. ஆனாலும், நந்திதாவுக்கு இந்த கதாபாத்திரமும் அழகு. இப்படி நல்லா நடிக்கிற பொண்ணை அப்படியே சும்மா பார்க்கிறதுலயும், நடக்கிறதுலயும் மட்டுமே விட்டுட்டாரு இயக்குனர்.

படத்தோட கலகலப்புக்கு ரெண்டு பேர் உத்தரவாதம். ஒண்ணு காளி வெங்கட், இன்னொண்ணு ராமதாஸ். காளி வெங்கட் , விஷ்ணுவோட உதவியாளர் அப்பப்பட சரியான சமயத்துல சரியா பேசி கொஞ்சம் சிரிக்க வைக்கிறாரு. 

ஆனாலும் , நகைச்சுவையில இவரை ஓவர் டேக் பண்ணிடறாரு ராமதாஸ். சினிமா ஆசையில முனீஷ்காந்த்-னு பேரை வச்சிக்கிட்டு கிராமத்துல இவர் பண்ற அட்டூழியம் அப்பப்ப கொஞ்சம் பொறுமைய சோதிச்சாலும் சில காட்சிகள்ல சிரிக்க வைக்குது.

ஷான் ரோல்டன் இசையில் “இது என்ன….' பாடலும், “ராசா மகராசா…” பாடலும் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையில் வாசித்துத் தள்ளுகிறார். சில இடங்களில் வசனங்கள் கூடப் புரியவில்லை. கிராமத்துக் காட்சிகளில் ஷங்கரின் ஒளிப்பதிவு பாராட்ட வைக்கிறது.

முண்டாசுப்பட்டி - வண்ணக் காலத்தில் ஒரு கருப்பு வெள்ளை…!

Sunday, June 15, 2014

சூர்யாவின் வில்லனாக நடிக்கிறார் மைக் மோகன்

மைக்கை பிடித்து பாட்டு பாடியே பல வெள்ளிவிழா படங்களை கொடுத்தவர் மோகன். கமலஹாசன் சாயலில் பெங்களூரில் இருந்து வந்து ஒரு கலக்கு கலக்கியவர். 

திடீரென அவர் மார்க்கெட் முடிவுக்கு வந்தது. அவரும் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று ஒற்றக் காலில் நின்று பல வருடங்கள் நடிக்காமலேயே இருந்தால். சில வருடங்கள் எங்கிருக்கிறார் என்று தெரியாமலும் இருந்தார். இதனால் அவரைப் பற்றி பல தவறான வதந்திகளும் பரவியது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுட்டபழம் என்ற ஒரு படத்தில் நடித்தார். படு கவர்ச்சிப் படமான அது ஓடவில்லை. அதனால் மீண்டும் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு உலக பட விழாக்களில் சுஹாசினி, பூர்ணிமாக ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார்.

இப்போது சூர்யாவை வைத்து வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் மோகன் வில்லனாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை (பேய், பூச்சாண்டி என்று சொல்கிறார்கள்). 

ஹீரோயினை ஒரு தலையாய் காதலித்து தற்கொலை செய்து கொள்ளும் ஒருவன் ஆவியாக வந்து நிஜமாக காதலிப்பவனுக்கு டார்ச்சர் கொடுத்து காதலை கெடுக்கிற மாதிரியான கதையாம். 

இதில் அந்த ஆவியாக நடிக்கத்தான் மோகனை பேசி வருவதாக கூறப்படுகிறது. கதையை கேட்டுக் கொண்ட மோகன் ஓகே சொல்வதற்காக கொஞ்சம் டயம் கேட்டிருக்கிறாராம்.

Saturday, June 14, 2014

இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்படும் இசையமைப்பாளர்கள்

சினிமாவில் யாருக்கு எப்போது நடிப்பதற்கு ஆசை வரும் என்று சொல்லவே முடியாது. தயாரிப்பாளர்கள் நடிகர்களாக மாறியிருக்கிறார்கள், இயக்குனர்கள் நடிகர்களாக மாறியிருக்கிறார்கள். 

ஆனால், அப்போதெல்லாம் அதை யாருமே பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு சிலர் மட்டுமே அவர்களுக்கு எது சரியாக வருமோ அப்படிப்பட்ட கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வெற்றியும் பெற்று வருகிறார்கள்.

இதையெல்லாம் விட, சமீபத்தில் நடிகர்களான இல்லை..இல்லை…ஹீரோக்களான இரு இசையமைப்பாளர்களைப் பற்றித்தான் கோலிவுட்டில் அதிகமாக பேசிக்கொள்கிறார்களாம் உதவி இயக்குனர்கள். 

ஒருவர் இசைப்புயலுக்கு சொந்தக்காரர், இன்னொருவர் பெரிலேயே முன்னணி நடிகர் ஒருவரின் பெயரை வைத்திருப்பவர். இந்த இரண்டு இசையமைப்பாளர்களுக்குமே ஒரு ஒற்றுமை உண்டு. 

இரண்டு பேருமே ஒரு முன்னணி ஆக்ஷன் நடிகரின் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்கள். இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா இரண்டு பேருக்குமே திருமணம் ஆகிடுச்சி.

“இசையமைப்பாளரா இவங்க ரூட்டு நல்லாத்தானே போய்க்கிட்டிருந்தது, இவங்களுக்கு ஏன் திடீர்னு நடிக்கிற ஆசை வந்துச்சின்னு தெரியலையே” என டீக்கடைகளில் கூடினால் பேசிக் கொள்கிறார்களாம். 

ஒருவேளை அந்த முன்னணி ஹீரோக்கு அதிரடியா இசையமைச்சதால இவங்களுக்கு இப்படி ஒரு ஆசை வந்துடச்சோ என்கிறார்களாம். அது மட்டுமல்ல ஒருத்தர் ஒரு படி மேல போய் ரசிகர் மன்றம் வேற ஆரம்பிச்சிட்டாராம். 

இருக்கிறத விட்டுட்டு பறக்கிறதுக்கு ஆசைப்படலாமா, அப்புறம் இருக்கிறதும் போயிடுச்சின்னா என்ன பண்ணுவாங்க என உதவி இயக்குனர்கள் கவலைப்படுகிறார்களாம்.

ம்ம்ம்..புரிய வேண்டியவங்களுக்கு புரிஞ்சால் சரி…!

Friday, June 13, 2014

நயன்தாராவுக்கு வில்லியாக ஷெரின்

துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமானவர் ஷெரின். அதன் பிறகு சில படங்களில் நடித்தவர், சரியான வாய்ப்பு இல்லாமல் கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்கச் சென்று விட்டார். 

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பூவா தலையா என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு தற்போது திருமலை இயக்கி நடிக்கும் மலேசிய நண்பர்கள் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

இதற்கிடையில் நயன்தாராவும், உதயநிதி ஸ்டாலினும் இணைந்து நடிக்கும் நண்பேன்டா படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். 

இதுகுறித்து படத்தின் இயக்குனர் ஜெகதீஸ் கூறும்போது: "ஷெரின் திறமை மிக்க ஒரு நடிகை. நண்பேன்டா படத்தில் நான்கைந்து காட்சிகளில் நடித்தாலும் படத்திற்கு திருப்புமுனையான கேரக்டர். உதயநிதியை ஒரு தலையாக காதலிக்கும் பெண்ணின் கேரக்டர். அவரது கேரக்டர் பேசப்படுவதாக இருக்கும்" என்றார்.

நயன்தாரா, உதயநிதியின் காதலை பிரிக்க நினைக்கும் அழகு வில்லியாக ஷெரின் நடிப்பதாக பட வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.

Wednesday, June 11, 2014

தீபாவளிக்கு ரஜினி, விஜய், விஷால் படங்கள் மோதுவது உறுதியாகி விட்டது

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி நடித்ததாக கூறப்பட்ட அனிமேஷன் படம் வெளியானபோதும் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. 

இருப்பினும், தமிழ் நாட்டிற்குள் ஓடாத ரஜினி படம், வெளிநாடுகளில் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருப்பதாக பில்டப் செய்திகளை மட்டும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், சினிமாவில் ரஜினிக்கு ஏற்பட்டுள்ள இந்த இடைவெளியை குறைக்கும் முயற்சியாக, லிங்கா படத்தை வேகமாக முடித்து, வருகிற தீபாவளி தினத்தில் வெளியிடும் வேலைகள் துரிதமாக நடந்து வருகிறது. 

தற்போது கிட்டத்தட்ட பாதி படத்தை முடித்து விட்ட கே.எஸ்.ரவிக்குமார், இதுவரை படமாக்கியதை எடிட் செய்யும் வேலைகளிலும் அவ்வப்போது ஈடுபட்டு வருவதோடு, ஏ.ஆர்.ரகுமானிடமும் சீக்கிரமே பாடல்களை தருமாறும் அவரை கேட்டுக்கொண்டு வருகிறாராம். ஆக, இந்த தீபாவளிக்கு லிங்கா வெளிவருவது உறுதிதான் என்கிறார்கள்.

இதற்கிடையே, மின்னல் வேகத்தில் படப்பிடிப்பு நடத்தும் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் பூஜை படம் கண்டிப்பாக தீபாவளிக்கு வெளியாகிறது. இந்த படத்தை தொடங்கும்போதே தீபாவளி ரிலீஸ் செய்து சொல்லித்தான் ஆரம்பித்தார் விஷால். 

அதேபோல், முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கத்தியும் தீபாவளிக்கு வந்து விடும். தற்போது படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு நடந்து முடிந்து விட்டதால், அப்படம் வெளிவருவதும் உறுதியாகியுள்ளது.

ஆனால், இந்த பட்டியலில் கெளதம்னேன் இயக்கத்தில், அஜீத் நடித்து வரும் படம் மட்டுமே இன்னும் உறுதியில்லாமல் இருக்கிறது. 

தீபாவளிக்கு வந்து விடும் என்று தயாரிப்பு தரப்பில் சொல்லிக்கொண்டாலும், கெளதம்மேனன் தரப்பில் ட்ரை பண்றோம், பார்க்கலாம் என்கிறார்கள். 

ஆக, அஜீத் படம் படம் இந்த தீபாவளி ரேஸில் இருந்து விலகிக்கொள்ள வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

அதேசமயம், இது இப்போதைக்கு வெளியாகியுள்ள தகவல் தான் என்றாலும் தீபாவளி நெருங்கும் நேரத்தில் இதில் மாற்றம் இருக்கலாம் என தெரிகிறது.

Monday, June 9, 2014

பூவரசம் பீப்பீ - சினிமா விமர்சனம்

ஹலிதா ஷமீம் எனும் இளம் அறிமுக பெண் இயக்குநர், கவுரவ் காளை, பிரவீன் கிஷோர், வசந்த் ஆகிய மூன்று சிறுவர்களை வைத்து கொண்டு புதுமையாக கதை சொல்லியிருக்கும் படம் தான் ''பூவரசம் பீப்பீ!'' 

ஆனால், ஹலிதா ஷமீம் புதுமை கதை சொல்லல... சில இடங்களில் முகசுளிப்பையும், பல இடங்களில் முன்முறுவலையும் ரசிகர்களிடையே ஏற்படுத்துவது தான் ''பூவரசம் பீப்பீ'' படத்தின் பலம், பலவீனம் எல்லாம்!

கதைப்படி பள்ளி விடுமுறையில், மாணவர்கள் ஊர், உறவு என வேறு ஒரு புதுமாதிரி உலகத்தை அனுபவிக்கும் தருணத்தில், ஆறாங்கிளாஸ் மாணவர்கள் மூவர் தங்கள் ஊரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்படும் ஒரு அபலையின் கொலையில், குற்றவாளிகளை துப்பறிந்து கண்டுபிடித்து, சட்டத்தின் முன் நிறுத்துவதும், புத்தாலி சிறுவர்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் எனும் 'தீமும்' தான் 'பூவரசம் பீப்பீ' படத்தின் கதை, களம் எல்லாம்!

இந்த நல்ல கதையில் சிறுவர்களின் செக்ஸ் தேடல், மீசை அரும்பாத வயசிலேயே ஆசை அரும்பும் பருவமாற்றங்கள் உள்ளிட்ட எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா விஷயங்களையும் சேர்த்து சற்றே விஷமாக கதை சொல்லியிருப்பதில் இயக்குநர் ஹலிதா ஷமிம் சற்றே கவனிக்க பட வைக்கிறார் என்பதுடன், கண்டனத்திற்கும் உள்ளாகி இருக்கிறார் என்பது தான் ஷைலைட்!

கவுரவ், பிரவீன், வசந்த் மூன்று சிறுவர்களும் யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள். அவர்களை மாதிரியே வர்ஷினி, அகல்யா உள்ளிட்ட சிறுமிகளும், காளி, ஸ்ரீஹரி உள்ளிட்ட வில்லன்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். 

குற்றவாளிகளை பேய், பிசாசு என பயமுறுத்தி உண்மையை வெளிக் கொண்டு வருவது, விளையாட்டு ஹெலிகாப்டரில் காமிரா பொறுத்தி கண்காணிப்பது, உண்மையை ஊருக்கு உரைக்க, பீப்பீ எப்.எம். என 6ம் கிளாஸ் மாணவர்களின் மனநிலையில் புதுமையாக சிந்தித்து ரசிகர்களை கவர்ந்து விடுகிறார் இயக்குநர்!

அருள்தேவின் பின்னணி இசை, மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு, ஹலிதா ஷமீமின் இயக்கம் உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்டுகள், ஒரு சில குறைகள் இருந்தாலும் ''பூவரசம் பீப்பீ'' - ''புதுமை பீப்பீ''-யாக காட்டிவிடுகின்றன என்றால் மிகையல்ல!

Sunday, June 8, 2014

அஜீத்தின் 55வது படக்கதை கசிந்தது

கடந்த மாதம்தான் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கத்தி படத்தின் கதை கசிந்தது. வில்லனாக நடிக்கும் விஜய் 90 பேரை பிணய கைதிகளாக கடத்தி வைத்துக்கொள்ள, அவரிடமிருந்து ஹீரோ விஜய் அந்த பிணயக்கைதிகளை மீட்பது போன்று அப்படத்தின் கதை கசிந்தது.

அதையடுத்து கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் அவரது 55வது படத்தின் கதையும் இப்போது பேஸ்புக் மூலமாக கசிந்துள்ளது. 

அதாவது, கதைப்படி சென்னையிலுள்ள ஈசிஆர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது சில மர்ம நபர்களால் த்ரிஷா கொல்லபபடுவாராம். 

அவரை கொலை செய்தவர்கள் யார், எதற்காக செய்தார்கள் என்பதைத்தான் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள அஜீத் புலனாய்வு செய்து கண்டு பிடிப்பாராம். 

இதில் அஜீத்துக்கு உதவி செய்வது போன்று அனுஷ்காவின் கேரக்டர் அமைக்கப்பட்டுள்ளதாம்.

இந்த தகவலை சீக்ரெட்டாக வைத்திருந்த கெளதம்மேனன், மீடியாக்களைகூட சந்திக்காமல் இருந்தார். 

ஆனால், அவருடன் இருந்த யாரோ ஒருவர்தான் இந்த கதையை பேஸ்புக்கில் வெளியிட்டு விட்டாராம். 

இதனால் கடும் கோபத்துக்கு ஆளான கெளதம்மேனன் இப்போது அந்த நபரை தனது டீமில் இருந்தே வெளியேற்றி விட்டாராம்.

Wednesday, June 4, 2014

லிங்காவைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் எந்திரன் 2

தமிழ்த்திரைப்பட வரலாற்றிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட படம் - எந்திரன். ஷங்கரின் இயக்கத்தில் ரஜினி சிட்டி ரோபோவாகவும், வசீகரன் என்ற விஞ்ஞானியாகவும் இரட்டை வேடங்களில் இப்படத்தில் நடித்திருந்தார். 

ரஜினிக்கு ஜோடியாக இப்படத்தில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் பிளாக் பஸ்டர் ஹிட்டாகி, எந்திரன் படத்தின் வெற்றிக்கு பேருதவி புரிந்தன. 

மீண்டும் ஷங்கரும், ரஜினியும் இணைந்து தற்போது எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க இருப்பதாக தகவல் அடிபடுகிறது!

விக்ரம் நடிப்பில் எடுக்கப்பட்ட ஐ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் தற்போது பிஸியாக இருக்கிறார் இயக்குநர் ஷங்கர். 

அதேபோல் கே.எஸ்.ரவிகுமாரின் இயக்கத்தில் லிங்கா படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் ரஜினி. 

இந்த இரண்டு படங்களும் வெளியான பிறகு இவர்கள் மீண்டும் இணைகிற எந்திரன் 2 படம் தொடங்கப்படவிருக்கிறது. 

240 கோடி செலவில் தயாராக உள்ள இப்படத்தை கல்பாத்தி அகோரம் மறுத்துவிட்டதால் தற்போது ஈராஸ் இன்டர்நேஷனல் இப்படத்தை தயாரிக்க முன் வந்திருக்கிறது.

Tuesday, June 3, 2014

விஜய் நடிக்கும் கத்தி, ஜீவா நடிக்கும் யான் ஒரே கதையா?

சமீபத்தில் வெளியாகி வெற்றியடைந்த யாமிருக்க பயமே படமும், விரைவில் வெளிவரவிருக்கும் அரண்மனை படமும் ஒரே கதை. 

தயாரிப்பில் உள்ள முண்டாசுபட்டி, அப்புச்சி கிராமம் ஆகிய இரண்டு படங்களின் கதையும் ஒரே கதை என்ற தகவல் காதில் விழுகிறது. 

இந்நிலையில், ரவி கே சந்திரன் இயக்கத்தில் ஜீவா நடித்து வரும் யான் படத்தின் கதையும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கத்தி படத்தின் கதையும் ஒரே கதை என்று கிசுகிசுக்கின்றனர் திரையுலகினர்.

இத்தனைக்கும் யான் படத்தின் கதையே ஏற்கனவே வெளியான மரியான் கதையை ஒத்திருக்கிறது என்ற சொல்லப்படுகிறது. 

யான் படத்தின் கதைப்படி வெளிநாட்டுக்கு செல்லும் ஜீவாவை தீவிரவாதிகள் கடத்திச் சென்று பிணயக்கைதியாக அடைத்து வைக்கின்றனர். 

அவர்களிடமிருந்து ஜீவா எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் யான் படத்தின் திரைக்கதை.

கத்தி படத்தின் கதையிலும் இதே பிணயக்கைதிகள் சமாச்சாரம்தான். சுமார் 90 பேரை தீவிரவாதிகள் கடத்தின் சென்று ஒரு இடத்தில் பிணயக்கைதியாக அடைத்து வைக்கின்றனர். அவர்களை விஜய் மீட்பதுதான் கத்தி படத்தின் கதை.

திரைக்கதையிலும், காட்சி அமைப்பிலும் யான் மற்றும் கத்தி படங்களுக்கு இடையில் சின்னசின்ன வித்தியாசங்கள் இருந்தாலும் ப்ளாட் என்னவோ ஒன்றுதான் என்கிறார்கள்.

Monday, June 2, 2014

பெருகி வரும் ஏடாகூட பட தலைப்புகள்

சினிமாவுக்கு தலைப்பு வைப்பது குழந்தைக்கு பெயர் வைக்கிற மாதிரி" என்பார் ஏவிஎம் மெய்யப்ப செட்டியார். "படத்தின் தலைப்பே பாதி கதை சொல்ல வேண்டும்" என்பார் அடூர் கோபால கிருஷ்ணன், 

"தலைப்புக்குள் கதை இருக்க வேண்டும்" என்பார் கே.பாலச்சந்தர். ஆனால் இன்றைக்கு வருகிற தலைப்புகளை பார்க்கும்போது கூவத்தின் கரையில் செல்லும்போது மூக்கை பொத்திக் கொள்வதைப்போல, கேட்கும்போதே காதை பொத்திக் கொள்ள வேண்டும் போல இருக்கிறது.

படிக்காத மேதை, பாவை விளக்கு, படித்தால் மட்டும் போதுமா, ஆயிரத்தில் ஒருவன், அடிமைப் பெண், நாடோடி மன்னன், ஒரு கைதியின் டயரி, கடல் மீன்கள், நெற்றிக்கண், அபூர்வ ராகங்கள், தப்புதாளங்கள், அன்புக்கு நான் அடிமை... இப்படி தலைப்புகளே கதை சொன்ன காலம் ஒன்று இருந்தது. 

இந்த தலைப்புகள் அந்தந்த படங்களை கவுரப்படுத்தியது. கதைக்கேற்ற நல்ல தலைப்பு அமையாவிட்டால் பேசாமல் படத்தின் ஹீரோ, அல்லது ஹீரோயின் கேரக்டர் பெயரையே தலைப்பாக வைத்து விடுவார்கள். 

எப்படி இருந்தாலும் தலைப்பில் ஒரு கண்ணியம் இருந்தது. ஆனால் இன்றைக்கு வைக்கப்படும் தலைப்புகளில் கண்ணியமும் இல்லை, கவுரவமும் இல்லை.

வாரணம் ஆயிரம், நீதானே என் பொன்வசந்தம் என்று தன் படங்களுக்கு அழகான தமிழ் பெயர்களை வைத்த கவுதம் மேனன், நடுநிசி நாய்கள் என்ற தலைப்பையும் வைத்தார். கே.பாலச்சந்தருக்கு பிறகு தலைப்பில் கவனமும் கண்ணியமும் காக்கிறவர்கள் மணிரத்னம், ஷங்கர் உள்ளிட்ட சிலர்தான். இவர்களின் தலைப்புகளில் கனம் இருக்கும், கதை இருக்கும்.

நானே ஒரு டுபாக்கூடர் எனக்கிட்டேவா, மண்ணாங்கட்டி பயலுக, பித்தேரி, தீத்துக்கட்டு, பட்ற,
தருதல, குபீர்,

நம்புங்க இதெல்லாம் இப்போது தயாரிப்பில் இருக்கிற சில படங்களோட தலைப்புகள். 3லட்சம் வார்த்தைகள் கொண்ட தமிழ் மொழியில் எப்படியெல்லாம் தலைப்பு வைத்திருக்கிறார்கள் பாருங்கள். 

ஒருவேளை இந்த தலைப்புகளுக்கும், இவர்கள் எடுக்கிற கதைக்கும் சம்பந்தம் இருப்பதாக வைத்துக் கொண்டால் அந்த கதையும், காட்சிகளும் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. தமிழில் வார்த்தைக்கு பஞ்சமில்லை. இயக்குனர்களின் கற்பனை வறட்சியே இதற்கு காரணம்.

எதையாவது ஏடாகூடமாக செய்து மக்கள் கவனத்தை படத்தின் பக்கம் திருப்ப வேண்டும் என்பதற்காக இப்படி தலைப்புகள் வைப்பதாக கூறப்படுகிறது. அதற்கு வேறு ஏதாவது நல்ல வழிகளை தேட வேண்டியதுதானே. 

தன் பிள்ளைகள் மற்றவர்களிடமிருந்து தனித்து தெரிய வேண்டும் என்பதற்காக எருமை, கழுதை, தண்டம்னு யாராவது பெயர் வைப்பார்களா?
தயாரிப்பில் இருக்கும் இன்னும் சில தலைப்புகளை பாருங்கள்...

பட்டைய கிளப்பணும் பாண்டியா

ஆடாம ஜெயிச்சோமடா

நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்

நாங்கெல்லாம் ஏடாகூடம்

நாங்கெல்லாம் அப்பவே அப்படி

நீ என்ன பெரிய அப்பாடக்கரா

கள்ளபடம்

சுட்ட படம்

ஆயா வடை சுட்ட கதை

சேர்ந்து போலாமா

தலைகால் புரியல

காயலான்கடை கந்தன்

எவ்வளவோ பார்த்தாச்சு

மங்குனி பாண்டியர்கள்

ஆறுமுகம் காதலிக்கிறான்

வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்

நட்பு காப்புக் குழு

கிடாரி பூசாரி மகுடி

நேரா போய் நேரா வா

பதினேழு ஜி.பி

8 எம் எம்

எண்றதுக்குள்ள

அழகர் களத்துல இறங்கிட்டாரு

இவை சின்ன பட்டியல்தான் இதை விட இன்னும் நிறைய இருக்கிறது.