Thursday, October 30, 2014

100 கோடியை நெருங்குகிறது கத்தி பட வசூல்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்து வெளிவந்திருக்கும் கத்தி படம் வசூலை அள்ளி குவித்து வருகிறது. தீபாவளிக்கு வெளியான இந்த படம், ரிலீசான ஒரு வாரத்திலேயே வசூலில் ஒரு கோடியை நெருங்கி வருகிறது.

ஏகப்பட்ட எதிர்ப்புக்களை மீறி வெளியான கத்தி படம் முதல் நாளிலேயே 23.8 கோடியை வசூலித்துள்ளது. இப்படம் இந்தியாவில் மட்டும் 47.7 கோடியையும், வெளிநாடுகளில் 23.35 கோடியையும் வசூலித்துள்ளது. இன்னும் சில நாட்களில் 100 கோடியை இந்த வசூல் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Wednesday, October 29, 2014

சின்னத்திரையிலிருந்து வரும் இன்னொரு ஹீரோ

சந்தானம், சிவகார்த்திகேயன், ம.பா.கா.ஆனந்த் வரிசையில் சின்னத்திரையிலிருந்து வந்திருக்கும் இன்னொரு ஹீரோ முரளி ராம். இவர் பழம்பெரும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஜி.என்.ரங்கராஜனின் பேரன். 

மியூசிக் சேனலில் தொகுப்பாளராக இருந்த முரளி ராம், அவ்வப்போது படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்து வந்தார். பொறியாளன், போங்கடி நீங்களும் உங்க காதலும், கண்டுபிடி கண்டுபிடி படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

தற்போது யுரேகா இயக்கும் தொப்பி படத்தில் ஹீரோவாகியிருக்கிறார். மைனா டைப்பில் மலைவாழ் மக்களின் வாழ்க்கை பின்னணியில் நடக்கும் காதல் கதை. "7 வருடங்களுக்கு முன்பு சின்னத்திரை தொகுப்பாளராக வாழ்க்கையை தொடங்கினேன். 

கிடைக்கிற வாய்ப்புகளை பயன்படுத்தி வந்தேன். இப்போது ஹீரோவாகி இருக்கிறேன். சினிமா பின்னணியுள்ள குடும்பம்தான் என்றாலும் எனது கடின உழைப்பால் இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன். 

கமல், விக்ரமை மானசீக குருவாகவும், விஜயசேதுபதி, சிவகார்த்திகேயனை வழிகாட்டிகளாகவும் ஏற்றுக் கொண்டு எனது சினிமா வாழ்க்கையை தொடங்கி இருக்கிறேன்" என்கிறார் முரளிராம். 

Sunday, October 26, 2014

நவம்பர் 17ல் மீண்டும் சூட்டிங்கிற்கு வருகிறார் ஜோதிகா

நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த ஜோதிகா, 7 ஆண்டுகளுக்கு பின், ஹவ் ஓல்ட் ஆர் யூ என்ற மலையாள படத்தின் ரீமேக் மூலம் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கிறார். 

இந்த படத்தின் சூட்டிங் நவம்பர் 17ம் தேதி துவங்குகிறது. 

இந்த படத்தில் ஜோதிகாவின் கணவராக நடிகர் ரகுமான் நடிக்கிறாராம்.

டைரக்டர் ரோஷன் ஆன்ட்ரிவ் இந்த படத்தை இயக்குகிறார். தற்போது அவர் இயக்கும் மலையாள பட வேலைகளில் பிஸியாக இருப்பதால் தான் ஹவ் ஓல்ட் ஆர் யூ படத்தின் ரீமே பணிகளை நவம்பரில் துவங்க உள்ளார்களாம். 

தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ள ஹவ் ஓல்ட் ஆர் யூ படம், துவக்கத்தில் சென்னையிலும் பிறகு டில்லி மற்றும் ராஜஸ்தானிலும் படமாக்கப்பட உள்ளதாம்.

தமிழ் மற்றும் மலையாளத்தில் குணசித்திர வேடங்களில் நடித்து வரும் ரகுமான், நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹீரோயினின் கணவராக இந்த படத்தில் நடிக்க உள்ளாராம்.

Saturday, October 25, 2014

அனிருத்துக்குக் கிடைத்த ஹாட்ரிக் வெற்றி

கத்தி' படத்தின் இசையமைப்பாளர் அனிருத் இந்த ஆண்டு தொடர்ச்சியாக மூன்று ஹிட் படங்களைக் கொடுத்து ஹாட்ரிக் அடித்திருக்கிறார். 

'3' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத்திற்கு குறுகிய காலத்திலேயே மிகப் பெரிய ஹீரோ விஜய், இயக்குனர் ஏஆர்.முருகதாஸ் ஆகியோருடன் இணைந்து 'கத்தி' படத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்ததுமே பலர் ஆச்சரியத்தில் மூழ்கிப் போயினர். 

ஏ.ஆர்.முருகதாஸ் கடந்த சில படங்களாக அவருடைய படங்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜையே இசையமைப்பாளராக பயன்படுத்தி வந்தார். அவரும் திடீரென அனிருத் பக்கம் சாய்ந்தது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

'கத்தி' படத்தில் இடம் பெற்ற “செல்ஃபி புள்ள..., ஆத்தி..., பக்கம் வந்து..., யார் பெற்ற மகனோ...” என ஒவ்வொரு பாடலும் வெரைட்டியாக அமைந்து மீண்டும் ஒரு மியூசிக்கல் ஹிட்டைக் கொடுத்து விட்டார். 

இந்த ஆண்டில் இதற்கு முன் அவர் இசையமைத்து வெளிவந்த 'வேலையில்லா பட்டதாரி, மான் கராத்தே” ஆகிய படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்தது. 

அந்தப் படங்களின் பாடல்களும் ஹிட்டான பாடல்களாக அமைந்தது. அனிருத் இசையமைத்த படங்களின் எண்ணிக்கை இதுவரை பத்து என்பதைக் கூடத் தாண்டவில்லை. அதற்குள்ளாக பரபரப்பாக பேசப்படும் இசையமைப்பாளராக மாறிவிட்டார்.

Friday, October 24, 2014

பூஜை - சினிமா விமர்சனம்

ஹரி இயக்கத்தில், தாமிரபரணி படத்திற்கு பிறகு விஷால் நடித்திருக்கும் திரைப்படம், விஷால்-ஸ்ருதிஹாசன் முதன்முதலாக ஜோடி சேர்ந்திருக்கும் படம், விஷால் சொந்தமாக தயாரித்திருக்கும் படம் என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு தீபாவளி விருந்தாக வந்திருக்கும் படம் தான் ''பூஜை''.

கோயம்புத்தூரில் பெரிய பெரிய பிஸினஸ் எல்லாம் செய்யும் பெரிய குடும்பத்து வாரிசு, வாசு எனும் விஷால். ஆனால் ஒருசின்ன மனவருத்தத்தில் குடும்பத்தை பிரிந்து காய்கறி மார்க்கெட்டில் வட்டிக்கு விட்டு பக்காவாக சொந்தக்காலில் வாழுகிறார் விஷால். எதிர்பாராமல் ஷாப்பிங் மால் ஒன்றில் சந்திக்கும் திவ்யா எனும் ஸ்ருதிஹாசன் உடன் முதலில் நட்பும், அதன்பின் காதலும் கொள்கிறார் மனிதர்.

பொள்ளாச்சியில் பெரிய மனிதர் அந்தஸ்த்துடன் வாழும் கூலிப்படை தலைவன் அன்னை தாண்டவம் எனும் வில்லன் முகேஷ் திவாரியிடம் மோதுகிறார். சொந்த பகைக்காவும், அதேநேரம் விஷாலின் குடும்பத்துடனான பெரும்பகைக்காவும் விஷாலை தீர்த்துக்கட்ட துடிக்கும் முகேஷ், விஷாலை வென்றாரா.? 

விஷால், முகேஷை கொன்றாரா.? எனும் அதிரடி ஆக்ஷ்ன் கதையுடன், விஷால்-ஸ்ருதியின் காதல் களியாட்டத்தையும் கலந்துகட்டி அதிரடியாக, அதேநேரம் லவ், காமெடி, சென்ட்டிமென்ட் என ஜனரஞ்சமாக தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி, ''பூஜை'' போட்டிருக்கிறார் இயக்குநர் ஹரி!

வாசு எனும் வாசுதேவனாக விஷால், செய்யாத குற்றத்திற்காக குடும்பத்தை பிரிந்து தாயின் அன்பிற்கு ஏங்கும் காட்சிகளிலாகட்டும், ஸ்ருதிஹாசன் உடனான காதல் காட்சிகளாகட்டும், ஒற்றை ஆளாய் 30-40 ஆட்களை அடித்து துவம்சம் செய்வதிலாகட்டும், சூரியுடன் சேர்ந்து காமெடி காட்சிகளில் கலக்குவதிலாகட்டும்... அனைத்தையும் அசால்ட்டாக செய்து சக்கைபோடு போட்டிருக்கிறார். கீப்ட்-அப் விஷால்!

ஸ்ருதி, திவ்யாவாக நடிப்பிலும், இளமை துடிப்பிலும், 16 அடி, இல்லை இல்லை... 32 அடி பாய்ந்திருக்கிறார். அம்மணி காட்டுவது ஓவர் கிளாமர் என்றாலும் அது ஓவராக தெரியாதது ஸ்ருதியின் ப்ளஸ்!

பரோட்டா சூரி - பிளாக் பாண்டி - இமான் அண்ணாச்சி கூட்டணி, கவுண்டமணி-செந்தில் அண்ட் கோவினரை நம் கண்முன் ரொம்ப நாளைக்கு அப்புறம் நிறுத்துகிறது என்றால் மிகையல்ல. அதிலும் அந்த உரித்த வாழைப்பழ காமெடி செம சிரிப்பு.

விஷால் - ஸ்ருதி - சூரி அண்ட் கோவினர் மாதிரியே, போலீஸ் ஆபிசராக வரும் சத்யராஜ், விஷாலின் அம்மாவாக வரும் ராதிகா, சித்தாரா, ரேணுகா, கெளசல்யா(பழைய கதாநாயகிகள் மீது இயக்குநர் ஹரிக்கு அப்படி என்ன ஈர்ப்போ...?), தலைவாசல் விஜய், ஜெய்பிரகாஷ், பிரதாப் போத்தன், வில்லன் முகேஷ் திவாரி உள்ளிட்ட ஒவ்வொரு கேரக்டரும் தங்களது பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில், ''இப்படியே... என தொடங்கும் பாடல் உள்ளிட்ட 6 பாடல்களும் 'நச்' என்று இருக்கிறது. ப்ரியனின் ஒளிப்பதிவு, வி.டி.விஜயன்-டி.எஸ்.ஜாய் இருவரது படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள், 'பூஜை'க்கு மாவிலை தோரணம் கட்டியிருக்கின்றன.

ஹரியின் எழுத்து-இயக்கத்தில், 'பூஜை' படம் படு ஸ்பீடாக செல்வது, இந்த தீபாவளி ரேசில், இளைய தளபதியை காட்டிலும், புரட்சி தளபதியின் படத்திற்கு மவுஸை கூட்டியிருக்கிறது.

ஆகமொத்தத்தில், விஷால்-ஹரி கூட்டணியின் ''பூஜை'' - ''ஆர்டினரி பூஜை அல்ல, அசத்தும் அதிரடி ஆயுத பூஜை!''

Thursday, October 23, 2014

கத்தி - சினிமா விமர்சனம்

குறையொன்றுமில்லை'', ''வெண்ணிலா வீடு'' என... தமிழ் சினிமாக்காரர்களுக்கு விவசாயிகள் மீதும், விவசாயத்தின் மீதும் சமீபகாலமாக பெருகிவரும் அக்கறையின் தொடர்ச்சியாக விஜய்(டூயல் ரோலில்...) - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் ''கத்தி''! 

விஜய்யின் முந்தைய படங்களான ''காவலன்'', ''துப்பாக்கி'', ''தலைவா'' படங்களை போலவே கத்தி படமும், பல பிரச்னைகளை சந்தித்து, படம் வெளியாகும் முதல்நாள் வரை படம் வெளிவருமா, வெளிவராத என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவிட்டு ஒருவழியாக வெளிவந்திருக்கிறது கத்தி!!

வட இந்தியாவில் உள்ள பிரமாண்ட சிறையிலிருந்து அசால்ட்டாக தப்பிக்கும் ஒரு விஜய், நண்பன் காமெடி சதீஷின் அறைக்குள் அடியெடுத்து வைக்கிறார். அதன்பின் விஜய்க்கு நல்லநேரமும், சதீஷ்க்கு கெட்டநேரமும் ஆரம்பிக்கிறது. 

போலீசிடமிருந்து எஸ்கேப் ஆவதற்காக உடனடியாக தாய்லாந்து - பாங்காக் கிளம்புவதாக சொல்லி விமானநிலையம் செல்லும் விஜய், தாய்க்குலம் - அதாங்க., நாயகி சமந்தாவை ஏர்போர்ட்டில் பார்த்ததும் தன் முடிவை மாற்றிக்கொண்டு இந்தியாவிலேயே இருந்துவிடும் முடிவுக்கு வருகிறார்.

அதற்குபின் எதிர்பாராத தருணத்தில், வில்லன்களால் சுடப்பட்டு உயிருக்கு போராடும் இன்னொரு விஜய்யான ஜீவானந்தத்தை சந்திக்கும், கத்தி விஜய்க்கு ஆச்சர்யம். கூடவே ரசிகர்களுக்கும் தான்! ஜீவானந்தம் விஜய் எதற்காக சுடப்பட்டார்.? 

கத்தி விஜய், ஜீவானந்தம் விஜய்யாக உருமாறி செய்யும் செயற்கரிய காரியங்கள், விவசாய புரட்சிகள், வில்லன்கள்... பழிவாங்கல்கள் தான் சுத்தி சுத்தி, ''கத்தி'' மொத்தமும். கூடவே கதாநாயகி சமந்தாவுடனான கொஞ்சலையும், மிஞ்சலையும் கலந்துகட்டி கத்தியை புத்தியாக கூர்த்தீட்டி இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

விஜய்., ஜீவானந்தமும், ஆனந்தமுமாக(கத்தி எனும் கதிரேசன்) இருவேறு பாத்திரங்களில் பக்காவாக பொருந்தி நடித்தியிருக்கிறார். 

ஜீவானந்தமாக விஜய் செய்யும் விவசாய புரட்சிகளை காட்டிலும், அவருக்காக போராடும் 'கத்தி' கதிரேசன் விஜய் செய்யும் புரட்சிகளும், போராட்டங்களும், வில்லன்கள் உடனான முட்டல் மோதல்களும் தான் கத்தின் ஹைலைட். விஜய் வழக்கம்போலவே லவ், ஆக்ஷ்ன் காமெடி என ஜனரஞ்சமாக வெளுத்து வாங்கியிருக்கிறார். பலே, பலே!

கதாநாயகியாக சமந்தா, என்ட்ரியாவதில் தொடங்கி, எக்குதப்பாக ரசிகர்களின் பல்சை எகிற வைப்பது வரை, ஒரு ஆக்ஷ்ன் படத்தில், இந்திய சினிமாக்களில் ஹீரோயின்களில் வேலை என்னவோ அதை சரியாக செய்திருக்கிறார். சமந்தாவின் 'நான் ஈ' பிளாஷ்பேக் சூப்பர். கத்தி விஜய்யிடம் சிக்கி சின்னாபின்னமாகும் சதீஷூம் காமெடியில் பொளுந்து கட்டியிருக்கிறார்.

தமிழ், தமிழ் என குரல் கொடுக்கும் விஜய் படத்தில் வர வர லோக்கேஷன்களும் சரி, வில்லன்களும் சரி வட இந்தியாவாகவே இருப்பதின் மர்மம் என்ன.? விஜய்க்கும், முருகதாஸூக்குமே வெளிச்சம். ஆனாலும் வில்லனாக வரும் பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷ் தனது கேரக்டருக்கான பங்கை சரியாக செய்திருக்கிறார்.

பத்திரிகை மற்றும் மீடியாக்களின் மீது நடிகர் விஜய்க்கும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்க்கும் அப்படி என்ன கோபமோ.? ஒட்டுமொத்த மீடியாக்களையும், கிடைத்த கேப்பில் எல்லாம் இஷ்டத்திற்கும் போட்டு தாக்கியிருக்கிறார்கள் இருவரும்! ஏன் இந்த கொலவெறி.?

குளிர்பாண கம்பெனிகளின் தண்ணீர் திருட்டு, விவசாய நில திருட்டு, புரட்டு என ஏகப்பட்ட திருட்டுகளையும், புரட்டுகளையும் சொல்லி நியாயம் பேசி இருக்கும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், இனியாவது கதைதிருட்டு குற்றச்சாட்டுகளில் அடிக்கடி சிக்காது இருக்க வேண்டுமென்று, ஆங்காங்கே ஒரே கருத்தை திரும்ப திரும்ப வலியுறுத்தும் கத்தி படக்காட்சிகள் போரடிக்கும்போது நம்மையும் அறியாமல் தோன்றுகிறது. படம் சில இடங்களில் அநியாயத்திற்கு ஸ்லோவாக தெரிவது கத்தியின் பலமா.? பலவீனமா தெரியவில்லை.!

ஜார்ஜ்.சி. வில்லியம்ஸின் ஒளிப்பதிவு அழகு ஓவியம். உள்ளூர் லோக்கேஷன்களிலும் சரி, பாடல் காட்சிகளிலும் வரும் அயல்நாட்டு லோகேசன்களிலும் சரி பியித்து பெடலெடுத்திருக்கிறார் மனிதர். ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பும் பக்கா.

அனிருத்தின் இசையில் பாடல்களும், பின்னணியும் அபாரம். குறிப்பாக விஜய் பாடியிருக்கும் செல்பிபுள்ள பாடல் செம கிளாஸ். முதன்முறையாக விஜய் படத்திற்கு இசையமைத்திருக்கிறார் அனிருத். அதனால் தனது இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருப்பது போன்று தெரிந்தாலும் விஜய் படங்களில் வழக்கமாக இருக்கும் கொண்டாட்டம் கத்தியில் சற்றே மிஸ்ஸிங்!

''ரமணா'', ''7ம் அறிவு'', ''துப்பாக்கி...'' என ஒவ்வொரு படங்களிலும் ஒருவித கருத்துக்களை சொன்ன இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ''கத்தி'' படத்திலும், விவசாயம் சார்ந்த புரட்சி கருத்துக்களை சொல்லி, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இப்படத்திற்கு விவசாய புரட்சி கருத்துக்களும், டபுள் ஆக்ட்டு விஜய்யின் நடிப்பும் பெரும்பலம்.

ஆகமொத்தத்தில், ''கத்தி'' - காலத்திற்கேற்ற ''''புத்தி!'' - கலெக்ஷ்ன் ''உத்தி''யும் கூட...!!

Tuesday, October 21, 2014

திட்டமிட்டபடி நாளை கத்தி வெளியாகிறது

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள படம் கத்தி. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. கத்தி, நாளை(அக்., 22ம் தேதி) தீபாவளியன்று வெளியாகிறது. 

லைகா நிறுவனம், இலங்கை அதிபர் ராஜபக்ஷே உடன் மிகவும் நெருக்கமானவர் என்றும், அவரது பினாமியாக இப்படத்தை சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரித்து இருப்பதாகவும் கூறி தமிழகத்தில் இப்படத்தை திரையிட விட மாட்டோம் என தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இந்நிலையில், படத்தின் தயாரிப்பு தரப்பினருடன், தமிழ் அமைப்புகள் சார்பில் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டு திட்டமிட்டபடி நாளை கத்தி படத்தை திரையிட முடிவு செய்யப்பட்டது. 

ஆனால் நேற்று திடீரென மர்மநபர்கள் சிலர் சென்னையில் உள்ள தியேட்டர்களை தாக்கிவிட்டு, பெட்ரோல் குண்டுகளையும் வீசிவிட்டு சென்றனர். இதனால் கத்தி படம் வெளியாவதில் மீண்டும் சிக்கல் உருவானது.


விஜய் அறிக்கை

இந்த சூழலில், கத்தி படத்தின் ஹீரோவான விஜய், ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், சில நாட்களாக தமிழ் அமைப்புகள், கத்தி திரைப்படத்தின் தயாரிப்பாளர் லைக்கா நிறுவனத்தின் பெயரை விளம்பரங்களில் நீக்க கோரிக்கை வைத்தனர். 

அவர்களின் வேண்டுகோளை மதித்து படத்தின் விளம்பரங்களில் லைக்கா பெயரை நீக்க தயாரிப்பாளர் ஒத்துக்கொண்டனர். எனவே இந்த பிரச்னை சுமூகமாக முடிந்துவிட்டது. எனவே எதிர்பார்ப்போடு காத்திருந்த ரசிகர்களும், மக்களும், கத்தி திரைப்படத்தை சந்தோஷமாக கண்டுகளிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.

கத்தி திரைப்படம் சுமூகமாக வெளிவர எங்களுக்கு ஆதரவு தந்த ஜெயலலிதாவுக்கும், தமிழக காவல் துறைக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும், தமிழக அமைப்புகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து லைக்கா பெயரை நீக்கிய தயாரிப்பாளருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். 

அனைவருக்கு எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார் விஜய்.

Monday, October 20, 2014

ஒரே நாளில் லிங்கா பட டப்பிங்கை பேசி முடித்த ரஜினி

ஒரே நாளில் லிங்கா படத்தின் டப்பிங்கை பேசி முடித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். 

கோச்சடையான் படத்திற்கு பிறகு நடிகர் ரஜினி இரட்டை வேடத்தில் நடித்து வரும் படம் லிங்கா. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் இப்படத்தில், ரஜினி ஜோடியாக அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடிக்கின்றனர். 

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிந்தது. இன்னும் ஒரு பாடல் மட்டுமே பாக்கி உள்ளது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் நடந்து வரும் நிலையில், டப்பிங் பணிகள் நடக்கிறது. 

இதில் படத்தில் தான் பேச வேண்டிய அனைத்து டப்பிங்கை ஒரேநாளில் பேசி முடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்திவிட்டார் ரஜினி. 

லிங்கா படம் ரஜினி பிறந்தநாள் அன்று அல்லது பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.

Wednesday, October 15, 2014

அஜித் 55 பொங்கலுக்கு இல்லை

அஜித்தை வைத்து கௌதம் மேனன் இயக்கி வரும் தல 55 படத்தின் 85 சதவிகித படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது க்ளைமேக்ஸிற்காக ஹைதராபாத்தில் முகாமிட்டிருக்கிறது கௌதம் மேனனின் டீம். 

இப்படத்தின் ஹீரோ... 28 வயதிலிருந்து 38 வயது வரைக்கும் 10 வருட காலகட்டத்திற்கு பயணிப்பதுபோல் கதையை உருவாக்கியிருக்கிறாராம் கௌதம். 

இந்தக் கதையை அஜித்திடம் சொன்னபோது அவர் வேறு எந்தவிதமான மாற்றத்தையும் சொல்லவே இல்லையாம். அவராகவே முன்வந்து ஜிம்மிற்கு சென்று உடம்பைக் குறைத்து ஸ்லிம்மாக வந்தாராம். 

ஒரு கெட்அப்பிற்கு சால்ட் அன்ட் பெப்பர் லுக் அதாவது நரைத்த தலைமுடி தேவைப்பட்டதால் தன் நிஜமான தோற்றத்தை அப்படியே பயன்படுத்திக் கொள்ளச் சொன்னாராம். 

ப்ளாஷ்பேக்கில் கரு கரு தலைமுடியோடு ஒரு கெட்டப்பும், தாடி, மீசையுடன் இன்னொரு கெட்அப்பும் தேவைப்பட்டிருக்கிறது. இந்த கெட்அப்புக்களுக்காக டை அடித்து தலைமுடியை கருப்பாக்கிக் கொண்டு வந்தாராம் அஜித்.

தல 55 படத்தின் அனைத்து வேலைகளும் திட்டமிட்டபடி சரியாக நடந்தால் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸரை தீபாவளிக்கு அன்று வெளியிட திட்டமிட்டுள்ளனர். 

அதேபோல் டிசம்பரிலேயே படத்தை வெளியிடவும் திட்டமிட்டிருந்தனர். பிறகு என்ன நினைத்தார்களோ....2015 பொங்கலுக்கு ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்தனர். தற்போது கிடைத்த தகவலின்படி....அதிலும் மாற்றம் இருக்கும் போல் தோன்றுகிறது. 

இந்த வருடம் பொங்கலை முன்னிட்டு சிவாவின் இயக்கத்தில் அஜித் நடித்த வீரம் படம் ஜனவரி 10ஆம் தேதி வெளியானது. அந்தப் படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 

இதே சென்டிமென்ட்டை வைத்து, தற்போது கௌதம் மேனன் படத்தையும் பொங்கலுக்கு முந்தைய வெள்ளிக்கிழமையான ஜனவரி 9 ஆம் தேதியில் ரிலீஸ் செய்யலாம் என்ற எண்ணம் தயாரிப்பாளருக்கு ஏற்பட்டிருக்கிறதாம்! 

இதற்கு அஜித் தரப்பிலும் ஓகே சொல்லிவிட்டதாக கேள்வி!

Sunday, October 12, 2014

மீண்டும் ரஜினியை இழுக்கும் அரசியல் சக்திகள்.?

1996ல் திமுகவுக்கு ஆதரவாக சேனல்கள் மூலம் பிரச்சாரம் செய்தவர் ரஜினி. அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றதால், ரஜினியின் செல்வாக்கு உயர்ந்தது. 

இதனையடுத்து அவர் அரசியலில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பின்னர் அவர் அரசியலில் ஈடுபடவில்லை. அதையடுத்து, 2004ல் பாமகவுடன் மோதல் ஏற்பட்டபோது ரஜினி தனிக்கட்சி தொடங்கி விடுவார் என்று எதிர்பார்க்கபபட்டது. அப்போதும் அவர் அமைதியாகி விட்டார். 

இந்த நிலையில், ராணா படத்தில் நடிப்பதற்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, ரஜினி இனிமேல் அரசியலுக்கு வருவது கடினம் என்றுதான் கருதப்பட்டது. 

கடந்த பார்லிமென்ட் தேர்தலுக்கு முன்பு ரஜினியை மரியாதை நிமித்தமாக பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தது மீண்டும் ரஜினி எதிர்காலத்தில் அரசியலுக்கு வரக்கூடும் என்கிற எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதையடுத்து, பாஜகவினர் ரஜினிக்கு அழைப்பு விடுத்தும் அவர் அதற்கு எந்த பதிலும் இதுவரை சொல்லவில்லை.

இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் அசாதாரண அரசியல் சூழல் நிலவி வருகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழகத்தில் தங்களது கட்சிகளை பலப்படுத்த தேசிய கட்சிகள் முதல் தமிழகத்தில் உள்ள சிறிய கட்சிகள் வரை தீவிரமாக இறங்கியுள்ளது. 

இந்தவகையில், நடிகர் ரஜினிகாந்த்தை சில கட்சிகள் அழைக்க எண்ணியுள்ளதாம். இதேப்போல், சில அரசியல் ஆர்வலர்களும் ரஜினி அரசியலுக்கு வருவதற்கு இதுதான் சரியான நேரம் என்று அவரை உசுப்பேற்றி விட்டும் வருகிறார்களாம். 

ஆனால், தற்போதைய நிலவரப்படி யாருக்கும் எந்த பதிலும் சொல்லாமல், நடப்பதை உற்று நோக்கியபடி, வழக்கபடி அமைதியே உருவாக இருந்து வருகிறார் ரஜினி.