Tuesday, December 30, 2014

ஷங்கர் இயக்கும் பீகே (PK) தமிழ் ரீமேக்கில் விஜய்

படத்துக்குப் படம் வித்தியாசமான கதைகளை, கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கும் அமீர்கானின் சமீபத்திய படம் - பீகே. சமீபத்தில் வெளியான பீகே ஹிந்தி திரைப்படம் உலகமெங்கும் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.  

அண்மையில் பீகே படத்தை பார்த்த இயக்குநர் ஷங்கர், அந்தப் படத்தை ட்விட்டரில் பாராட்டித்தள்ளி இருக்கிறார். 

பீகே படத்தில் அமைந்துள்ள யதார்த்தமான காமெடி காட்சிகளையும், அமீர்கானின் சிறந்த நடிப்பையும் பாராட்டிய ஷங்கர், தனக்கு பீகே படம் மிகவும் பிடித்திருக்கிறது என்றும் ட்விட்டரில் தனது கருத்தை தெரிவித்திருந்தார். 

சில வருடங்களுக்கு முன் அமீர்கான் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற 3 இடியட்ஸ் ஹிந்திப்படத்தை இயக்கியவர் ராஜ்குமார் இரானி. 

இவர்தான் தற்போது வெளியான பீகே படத்தையும் இயக்கியிருக்கிறார்.  ராஜ்குமார் இரானி இயக்கிய 3 இடியட்ஸ் படத்தை விஜய்யை வைத்து தமிழில் நண்பன் என்ற பெயரில் ரீ-மேக் செய்தார் இயக்குனர் ஷங்கர். 

இப்போது, பீகே படத்தைப்பார்த்து மிகவும் இம்ப்ரஸ்ஸான ஷங்கர் இந்தப்படத்தையும் தமிழில் ரீ-மேக் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் அடிபடுகிறது. 

அதுமட்டுமல்ல, விஜய்க்கு போன் செய்த ஷங்கர் பீகே படத்தை பார்க்கும்படியும், அதை ரீமேக் செய்தால் நடிப்பீர்களா என்றும் கேட்டதாகவும் கேள்வி. விஜய்க்கு பீகே படம் பிடித்தால் ரீமேக் செய்யும் முயற்சியில் இறங்குவாராம் ஷங்கர்.

Monday, December 29, 2014

2015 ல் மீண்டும் துவங்குகிறது கமலின் மருதநாயகம்

நிதி சிக்கலால் கிடப்பில் போடப்பட்ட கமலின், மருதநாயகம் படம், 2015ம் ஆண்டு மீண்டும் உயிர் பெற இருக்கிறது. 

கமல்ஹாசனின் கனவு படம் ''மருதநாயகம்''. 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த போர்வீரர், முகமது யூசப் கானின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. 

1997-ம் ஆண்டு இங்கிலாந்து ராணி எலிசபத், இந்தியா வந்து ''மருதநாயகம்'' படத்தை துவக்கி வைத்தார். பிரமாண்டமாய் தொடங்கிய இப்படத்தின் ஷூட்டிங், தொடர்ந்து நடந்து வந்த நிலையில் நிதி சிக்கல் காரணமாக ஒருக்கட்டத்தில் இப்படம் கிடப்பில் போடப்பட்டது. மருதநாயகம் படத்தை புதுப்பிக்க கமல் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். 

மருதநாயகம் படத்தின் வேலைகள் எப்போது வேண்டுமானாலும் துவங்கலாம். இந்தப் படத்தை இப்போது தயாரிக்க நிச்சயமாக 100 கோடி தேவைப்படும். 

நான் சொல்வது உண்மையிலேயே 100 கோடி. மருதநாயகம் படத் தயாரிப்புக்கு பணம் மட்டும் ஒரு பிரச்சனையல்ல. படத்தை உலகம் முழுக்க கொண்டு சேர்க்க பவர்ஃபுல்லான ஒரு டிஸ்ட்ரிப்யூஷன் நெட்வொர்க் தேவை. அதற்கான ஆட்கள் வரவேண்டும் என்று கூறியிருந்தார் கமல்.

இந்நிலையில், சமீபகாலமாக இந்தியாவிலும் ரூ.100 கோடிக்கு மேலான பட்ஜெட்டில் படங்கள் உருவாக தொடங்கியுள்ளன. அதன்காரணமாக கமலுக்கும் தனது மருதநாயகம் படத்தை மீண்டும் புதுப்பிக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்ததுள்ளது. 

இதற்கிடையே சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு பேட்டியளித்த கமல், மருதநாயகம் படம் 2015ம் ஆண்டு துவங்கும் என்று கூறியிருக்கிறார். 

மருதநாயகம் படத்தை, லண்டனை சேர்ந்த தொழிலதிபரும், கமலின் நண்பருமான ஒருவர் தயாரிக்க முன்வந்திருப்பதாக லேட்டஸ்ட் தகவல்.

Sunday, December 28, 2014

கயல் (2014) - சினிமா விமர்சனம்

சிறு வயதிலேயே தனது தாய், தந்தையை இழந்துவிட்ட நாயகன் சந்திரன் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்து வருகிறார். இங்கு அவருக்கு நெருங்கிய நண்பராகிறார் வின்சென்ட். 

நாயகன் சந்திரனுடைய அப்பா பார்வையற்றவர். இவர் இறப்பதற்கு முன் சந்திரனிடம், நான் பார்க்காத இந்த உலகை பார்க்க நீ பிறந்திருக்கிறாய். ஆகையால், இந்த உலகை நீ நன்றாக ரசிக்க வேண்டும் என்று கூறிவிட்டு இறக்கிறார். 

இதனால், சந்திரன் கிடைத்த பணத்தை சேர்த்து வைக்க நினைக்காமல் இந்த உலகத்தை சுற்றிப் பார்க்க ஆசைப்படுகிறான். இதற்காக 6 மாதம் கடுமையாக உழைத்து, மீதி 6 மாதங்கள் ஊர் சுற்றக் கிளம்பி விடுவான். 

அதன்படி, ஒருநாள் கன்னியாகுமரிக்கு தனது நண்பனுடன் செல்கிறான். போகும்வழியில் இருவரும் ஒரு தோட்டத்தில் அமர்ந்திருக்கிறார்கள். அப்போது, ஒரு காதல் ஜோடி இவர்களை கடந்து ஓடிச் செல்கிறது. 

ஊரைவிட்டு ஓடிச் செல்லும் அவர்கள் தங்கள் கையில் இருந்த பையை தவறவிடுகிறார்கள். இதை எடுத்துக் கொண்டு நண்பர்கள் இருவரும் அந்த காதல் ஜோடியை பின்தொடர்ந்து அவர்களிடம் ஒப்படைக்கின்றனர். 

காதல் ஜோடியை துரத்தி வருபவர்கள் இதை பார்த்துவிடுகின்றனர். நண்பர்கள் இருவரும்தான் அந்த காதல் ஜோடி ஊரைவிட்டு ஓடிச்செல்ல உதவியிருக்கிறார்கள் என்று நினைத்து, அவர்களை அடித்து உதைத்து, தங்களது இடத்துக்கு கொண்டு செல்கின்றனர். 

அங்கு சென்றபிறகுதான் தெரிகிறது. ஒடிச் சென்ற பெண் அந்த ஊரின் பண்ணையாரான யோகி தேவராஜின் மகள் என்று. அவரிடம் தாங்கள் அவர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று நண்பர்கள் முறையிடுகிறார்கள். ஆனால், தேவராஜோ இவர்களது பேச்சை கேட்பதாக இல்லை. 

ஆகையால், அவர்களிடமிருந்து உண்மையை வரவழைக்கும்வரை அங்கேயே ஓரிடத்தில் அடைத்து வைக்கிறார்கள். இந்நிலையில், அந்த வீட்டில் வேலை செய்யும் பெண்ணான நாயகி ஆனந்தி, இவர்களிடம் சென்று பண்ணையாரின் மகள் பற்றி விசாரிக்கிறாள். 

அவளைப் பார்த்ததுமே அவள்மீது காதல்வயப்படுகிறார் சந்திரன். பண்ணையார் மகளைப் பற்றி தனக்கு தெரிந்தாற்போல் அவளிடம் காட்டிக் கொள்கிறான். இதையெல்லாம், ஆனந்தி, தான் மறைத்து வைத்திருந்த டேப்ரெக்கார்டரில் பதிவு செய்து பண்ணையாரிடம் கொண்டு சென்று ஒப்படைக்கிறார். 

சந்திரன் வேண்டுமென்றே தங்களிடம் உண்மையை மறைக்கிறான் என்று பண்ணையாரின் ஆட்கள் அவனை மேலும் அடித்து உதைக்கிறார்கள். ஒருகட்டத்தில், சந்திரன் தான் ஆனந்தியை விரும்புவதாகவும், அவள் தன்னிடம் பேசுவதற்காகத்தான் பண்ணையார் மகளைப் பற்றி தெரிந்ததாக கூறியதாக கூறுகிறான். 

ஆனால், அதை பண்ணையாரின் ஆட்கள் ஏற்றுக் கொள்வதாக இல்லை. அவனை எரித்து கொன்றுவிட துணிகின்றனர். அந்த நேரத்தில் ஊரைவிட்டு ஓடிச்சென்ற பண்ணையாரின் மகள் திரும்பி வந்துவிடுகிறாள். அவள் வந்து தான் ஊரைவிட்டு ஓடிச்சென்றதுக்கும், சந்திரனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பண்ணையாரிடம் சொன்னபிறகு, சந்திரனை ஊரைவிட்டே சென்றுவிடும்படி கூறி அனுப்பி விடுகின்றனர். 

இதனால், சந்திரன் அந்த ஊரைவிட்டு கன்னியாகுமரிக்கு செல்கிறான். அவன் சென்றபிறகு, அவன் நினைவாகவே இருந்து வருகிறாள் ஆனந்தி. இதையறியும் அவளது பாட்டி, சந்திரன் கன்னியாகுமரிக்குத்தான் சென்றிருக்கிறான். அவனைத் தேடிக் கண்டுபிடித்து, அவனுடனே சேர்ந்து வாழ் என்று செலவுக்கு பணம் கொடுத்து அவளை அனுப்பி வைக்கிறாள். 

சந்திரனை தொடர்புகொள்ள எந்த வழியுமே இல்லாத நிலையிலும், அவனைத் தேடி புறப்படுகிறாள் ஆனந்தி. இறுதியில், அவனைத் தேடிக் கண்டுபிடித்து அவனுடன் சேர்ந்து வாழ்ந்தாளா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை. 

படத்தின் நாயகன் சந்திரனுக்கு ரொம்பவும் யதார்த்தமான கதாபாத்திரம். அதை சிறப்பாக செய்திருக்கிறார். இவருக்கு இதுதான் முதல்படம் என்றாலும் நடிப்பில் அது தெரியவில்லை. இவருடைய நண்பராக வரும் வின்சென்டும் நடிப்பில் கலக்கியிருக்கிறார். 

ஆனந்தி, ஒரு கிராமத்து பெண்ணாக நம் மனதில் எளிதாக பதிகிறார். படம் முழுக்க பாவாடை சட்டையில் வலம் வரும் இவர் பார்க்க சிறுபெண்ணாக இருந்தாலும் நடிப்பில் சிகரம் தொட்டிருக்கிறார். இவரிடம் இருக்கும் திறமைகளை நன்றாக வேலை வாங்கி வெளிக்கொண்டு வந்திருக்கிறார் பிரபு சாலமன். 

இதுவரையிலான படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்த யோகி தேவராஜுக்கு, இப்படத்தில் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார். அதை ஏற்று திறம்பட நடித்திருக்கிறார். 

யதார்த்தமான மனிதர்கள், வித்தியாசமான கதைக்களம், ஒவ்வொரு காட்சியிலும் ஏதாவது ஒரு புதுமை என தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசம் கொடுப்பதில் பிரபு சாலமனுக்கு நிகர் அவரே. இப்படத்திலும் அந்த வித்தியாசத்தை காணமுடிகிறது. 

நாயகனை தேடி செல்லும் பரபரப்பான சூழ்நிலையிலும், ஜமீன் தாத்தாவை வைத்து கதையோடு பயணிக்கும் காமெடியை கொண்டுவந்து கலகலப்பூட்டியிருப்பது சிறப்பு. படத்தின் ஆரம்பத்தில் நாயகனை அறிமுகப்படுத்தும்போது, பின்னணியில் பிரபு சாலமன் பேசும் வசனங்கள் அனைத்தும் எதார்த்த வாழ்க்கையை பிரதிபலிப்பதாக இருக்கிறது.

படத்தின் முதல் பாதி மிகவும் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் செல்கிறது. ஆனால், பிற்பாதி முழுக்க நாயகி, நாயகனை தேடுவதிலேயே கதை நகர்வதால் சற்று போரடிக்கிறது. இரண்டாம் பாதியில் மட்டும் படத்தின் நீளத்தை சற்று குறைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். சுனாமி வரும் காட்சிகளும் அருமை.

டி.இமான்-பிரபு சாலமன் கூட்டணி என்றாலே பாடல்கள் மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அந்த எதிர்பார்ப்பை டி.இமான் இந்த படத்தில் ஓரளவுக்குத்தான் நிறைவேற்றியிருக்கிறார் என்று சொல்ல முடியும். ஒருசில பாடல்களை தவிர, மற்ற பாடல்கள் எல்லாம் சுமார்தான். பின்னணி இசையில் மெனக்கெட்டிருப்பது தெரிகிறது. 

வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு ஒவ்வொரு காட்சியையும் அழகாக படமாக்கியிருக்கிறது. பாடல் காட்சிகளில் பலே சொல்ல வைக்கிறது. 

மொத்தத்தில் ‘கயல்’ மயில் போல அழகு.

Saturday, December 27, 2014

மீகாமன் (2014) - சினிமா விமர்சனம்

கோவாவில் மிகப்பெரிய போதைப் பொருள் கடத்தல் மன்னனாக வலம்வருபவன் ஜோதி. இவன் பெயரைத் தவிர, அவன் யார்? எப்படி இருப்பான்? என்பது யாருக்குமே தெரியாது. அவனுடைய நெருங்கிய கூட்டாளிகளுக்குகூட ஜோதி பற்றிய எந்த விவரமும் தெரியாது. 

இந்நிலையில், ஜோதியை பிடிக்க மும்பை போலீஸ் ரகசிய ஆபரேஷன் ஒன்றை தொடங்குகிறது. அதில் ஆர்யாவும், அவரது நண்பரான ரமணாவும் முக்கிய அதிகாரிகளாக இருக்கின்றனர். 

ஜோதியை வெளிக்கொண்டு வர அவரது ஆட்களில் ஒருவராக மாறினால்தான் முடியும் என முடிவு செய்து, ஆர்யா தனது பெயரை மாற்றி ஜோதியின் கூட்டத்தில் அடியாளாக சேருகிறான். அவர்களுடன் சேர்ந்து தன் திறமையை வெளிப்படுத்தி, ஜோதியின் வலதுகரமாக இருக்கும் மகாதேவனுக்கு நெருக்கமாகிறார். 

மறுபுறம், ஜோதியை எப்படியாவது வெளியே கொண்டுவர வேண்டும் என்று ரமணா திட்டமிட்டுக் கொண்டே இருக்கிறார். ஆர்யாவும் பொறுமையாக அந்த டீமில் இருந்து எப்படி ஜோதியை வெளியே கொண்டு வருவது என்ற யோசனையில் இருக்கிறார். 

இந்நிலையில், இவர்கள் ஒரு ஆபரேஷனை செய்ய நினைக்கிறார்கள். அதாவது, போதை பொருள் ஏஜென்டாக இருக்கும் ஆஷிஷ் வித்யார்த்தியிடம் 1000 கிலோ போதைப் பொருளை விற்கக்கூறி, அவர்மூலம் ஜோதியை எப்படியாவது வெளியே கொண்டு வந்துவிடலாம் என முடிவு செய்கின்றனர். 

அதன்படி, 1000 கிலோ போதை மருந்தை ஆஷிஷ் வித்யார்த்திடம் கொடுத்து விற்றுத்தரச் சொல்கிறார் ரமணா. ஆஷிஷ் வித்யார்த்தியும், ஜோதியின் ஆட்களிடம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். ஜோதி முன்னிலையில் இந்த டீலை முடித்துக் கொள்வதாக ஆஷிஷ் வித்யார்த்தி கூறுகிறார். 

அவர்களும் ஜோதியிடம் இந்த தகவலை தெரிவிக்கின்றனர். ஜோதியோ, முதலில் சாம்பிளாக 100 கிலோ போதை மருந்தை கொடுக்கச் சொல்லுமாறும், அது சரியாக நடந்தால், பிறகு நானே நேரில் வந்து வாங்கிக் கொள்கிறேன் என்று கூறுகிறான். 

இதற்கிடையில், ஜோதி எப்படியாவது வெளியே வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில், அவனை கைது செய்ய ரமணாவின் உயரதிகாரியான அனுபமா குமார் தீவிர முயற்சியில் இறங்குகிறார். ஆனால், அதற்குள் முதலில் ஜோதிக்கு கொடுப்பதாக இருந்த 100 கிலோ போதை மருந்தையும் போலீஸ் கைப்பற்றிக் கொள்கிறது. 

தனக்கு வந்த பெரிய ஆர்டர் கைநழுவிப் போனதே என்று ஜோதி மிகுந்த வேதனையடைகிறான். ரமணாதான் இந்த விஷயத்தை போலீசுக்கு காட்டிக் கொடுத்தான் என்று அவனைப் பிடித்து ஜோதியின் ஆட்களிடம் ஒப்படைக்கிறார் ஆஷிஷ் வித்யார்த்தி. மேலும், ஜோதியின் கூட்டத்திலேயே எதிரி ஒருவன் இருக்கிறான் என்றும் சொல்லிவிட்டு செல்கிறார். 

இறுதியில், ஜோதியின் கூட்டத்தில் உள்ள ஆர்யாவை அவர்கள் கண்டுபிடித்தார்களா? அல்லது ஆர்யா, ஜோதியை வெளியே கொண்டு வந்து கைது செய்தாரா? என்பதே மீதிக்கதை. 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆர்யா, முழுநீள ஆக்ஷன் படத்தில் நடித்துள்ளார். தன்னைவிட்டு ஆக்ஷன் சென்றுவிடவில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் ஆர்யா. இறுக்கமான முகத்துடன் இருக்கும் போலீஸ் அதிகாரி வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். 

ஹன்சிகாவுக்கு படத்தில் மிகப்பெரிய வேலை இல்லை. முழுநீள ஆக்ஷன் படமென்பதால் இவருடைய கதாபாத்திரம் படத்தில் வீணடிக்கப்பட்டிருக்கிறது. ஒருசில காட்சிகளே வந்தாலும் வசீகரிக்கும் முகத்துடன், நடிப்பையும் வெளிப்படுத்தி கவர்கிறார். 

படத்தின் வில்லனாக வரும் அஷுடோஸ் ராணா வித்தியாசமான நடிப்பால் கைதட்டல் பெறுகிறார். கோலிவுட்டில் மிரட்டலான வில்லனாக வருவார் என நம்பலாம். இவரைத்தவிர, படத்தில் ஏகப்பட்ட வில்லன்கள் இருக்கிறார்கள். அவரவர் தங்கள் கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள். ஆர்யாவின் நண்பராக வரும் ரமணாவுக்கும் அழுத்தமான கதாபாத்திரம். அதை அழகாக செய்திருக்கிறார். 

தமிழ் சினிமாவுக்கு பழகிப்போன கேங்ஸ்டர் படத்தையே வித்தியாசமான கதைக்களத்தோடு படமாக்கியிருக்கிறார் இயக்குனர் மகிழ்திருமேனி. குடும்பத்தோடு சென்று ரசிக்க பொழுதுபோக்கு படமாக இல்லாமல், இளைஞர்களை கவர்கிற மாதிரியான தரமான படமாக தந்திருக்கிறார். படத்திற்கு தேவையான காட்சிகளை மட்டும் படமாக்கி, ரசிக்கும்படி செய்திருக்கிறார். 

படம் ஆரம்பம் முதல் இறுதிவரை விறுவிறுப்பாக செல்வதால் தமன் இசையில் வந்த பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. ஆனால், பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். பின்னணி இசையுடன் சதீஷ்குமாரின் ஒளிப்பதிவும் சேர்ந்து மிரட்டுகிறது. 

மொத்தத்தில் ‘மீகாமன்’ கரை சேருவான்.

Wednesday, December 24, 2014

ஜெயப்ரதா தயாரிக்கும் படத்தில் நடிக்கிறாரா ரஜினி

எண்பதுகளில் கதாநாயகியாக கொடிகட்டிப்பறந்தவர்களில் ஒருவர் ஜெயப்ரதா. நினைத்தாலே இனிக்கும், சலங்கை ஒலி, ஏழை ஜாதி, தசாவதாரம் போன்ற பல படங்களில் நடித்த ஜெயப்ரதா, தற்போது தன் மகன் சித்துவை ஹீரோவாக்க உயிரே உயிரே என்ற படத்தை தயாரித்துள்ளார். 

இந்த படத்தில் சித்துவுக்கு ஜோடியாக ஹன்சிகா கதாநாயகியாக நடித்துள்ளார். விஷால் நடித்த சத்யம் என்ற படத்தை இயக்கிய ராஜசேகர் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். 

ஹன்சிகா கதாநாயகியாக நடித்தாலம் ஹீரோ சித்து புதுமுகம் என்பதால் உயிரே உயிரே படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் ஆர்வம் காட்டவில்லை. 

எனவே, ரஜினியை கௌரவ வேட்த்தில் நடிக்க வைத்தால் உயிரே உயிரே படத்தை பெரிய அளவில் பிசினஸ் செய்துவிடலாம் என்று கணக்குப்போட்டிருக்கிறார் ஜெயப்ரதா. 

இந்த எண்ணத்தில் உயிரே உயிரே படத்தின் டிரைலரை ரஜினிக்காக ஸ்பெஷலாக போட்டு காண்பித்தார்ஜெயப்ரதா. டிரைலரை பார்த்து சித்துவை வெகுவாக பாராட்டிய ரஜினி, லிங்கா படம் ஓடும் தியேட்டர்களில் உயிரே உயிரே டிரைலரை வெளியிட ஏற்பாடும் செய்தார். 

அதோடு, ரஜினி கழன்று கொள்ள நினைக்க, இந்த படத்தில் சிறப்புத்தோற்றத்தில் ஒரு கேரக்டரில் நடிக்கும்படி ரஜினியிடம் கேட்டாராம் ஜெயப்ரதா. அதற்கு பட்டும்படாமலும் பதில் சொல்லிவிட்டு போய்விட்டாராம் ரஜினி. 

நிச்சயமாக ரஜினி நடிக்க ஒப்புக்கொள்வார் என்ற நம்பிக்கையில் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இயக்குனர் ராஜசேகர் ரஜினி நடிக்க வேண்டிய காட்சிகளை தயார் பண்ண ஆரம்பித்துவிட்டாராம். 

Tuesday, December 23, 2014

இயக்குநர் பாலச்சந்தர் காலமானார்

நாடக இயக்குநர், திரைப்பட இயக்குநர், நடிகர், கதாயாசிரியர், தயாரிப்பாளர், தொலைக்காட்சி சீரியல் இயக்குநர் என பன்முக திறமை கொண்டவர் கே.பாலச்சந்தர். 

"இயக்குநர் சிகரம்' மற்றும் "தமிழ் சினிமாவின் பீஷ்மர்' என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். தமிழ் திரையுலக வரலாற்றில் தனி இடம் பிடித்த இவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் காலமானார்

1930 ஜூலை 9ம் தேதி திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடி என்ற கிராமத்தில், சினிமாவுக்கு தொடர்பில்லாத குடும்பத்தில் பிறந்தார். தந்தை கைலாசம், தாயார் காமாட்சியம்மாள். 

நன்னிலத்தில் பள்ளியில் படிக்கும் போதே நாடகம் மற்றும் சினிமா மீது விருப்பம் கொண்டார். நண்பர்களை வைத்து திண்ணை நாடகங்களை நடத்தினார். 

அப்போதைய தமிழ் சினிமாவின் "சூப்பர் ஸ்டாராக' விளங்கிய தியாகராஜ பாகவதரின் படங்களால் ஈர்க்கப்பட்டார். 12 வயதிலேயே சினிமா மற்றும் நாடகங்களுக்கு அடிக்கடி சென்றார். 

இதன் மூலம் அவர் மனதில் சினிமா ஆசை வளரத் தொடங்கியது. பின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி., (விலங்கியல்) படிப்பில் சேர்ந்தார். கல்லூரியில் படிக்கும் போதும் கதை எழுதுவது, நாடகங்களில் நடிப்பது போன்ற திறமைகளை வளர்த்துக் கொண்டார். 

கல்லூரிகளில் விழா என்றால் அதில் பாலசந்தரின் நாடகம் கண்டிப்பாக இடம்பெறும். 1949ல் பட்டப்படிப்பை முடித்ததும், முத்துப்பேட்டையில் உள்ள பள்ளியில் ஓராண்டு ஆசிரியராக பணியாற்றினார். 

அங்கும் மாணவர்களை வைத்து நாடகம் நடத்துவார். 1950ல் சென்னை வந்தார். அங்கு மத்திய அரசின் அக்கவுண்டண்ட் ஜென்ரல் அலுவலகத்தில் கிளார்க் பணியில் சேர்ந்தார். 

அங்கு இருக்கும்போதே கிடைக்கும் நேரத்தில் நாடக கம்பெனியில் சேர்ந்து நாடகம் இயக்கும் திறமையை வளர்த்துக்கொண்டார். 

ஆங்கிலத்தில் வெளியான "மேஜர் சந்திரகாந்த்' என்ற நாடகத்தை தமிழில் மொழி பெயர்த்து இயக்கினார். இந்நாடகம் பெரும் வரவேற்பை பெற்றது. இதன் பின் நீர்க்குமிழி, சர்வர் சுந்தரம், மெழுகுவர்த்தி, நாணல், நவக்கிரகம் உள்ளிட்ட நாடகங்களையும் இயக்கினார். 

Monday, December 22, 2014

கத்தி படம் 50 நாட்களில் 146 கோடி வசூல் - உண்மையா?

கத்தி படம் வெளியான ஒரே வாரத்தில் 100 கோடி வசூல் செய்ததாக அப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சொன்னார்.  

அவர் சொல்வது பொய் என்றும், கத்தி படம் 100 கோடி வசூல் செய்யவில்லை என்றும் திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்கள் கூறினார்கள். 

விநியோகஸ்தர்கள் தரப்பிலும், கத்தி படம் 100 கோடி வசூல் செய்ததாக சொல்வது தவறான தகவல் என்று அப்போது சொல்லப்பட்டது. 

இந்நிலையில், 50 ஆவது நாளைக் கடந்திருக்கிறது கத்தி படம்.  50 நாட்களில் கத்தி படம் வசூல் செய்ததே 146 கோடிதான் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.  

அதாவது கத்தி படம் அமெரிக்காவில் 15.16 கோடியும், இங்கிலாந்தில் 3.23 கோடியும், மலேஷியாவில் 11.79 கோடியும், கனடாவில் 3.84 கோடியும் வசூல் செய்திருப்பதாகவும் புள்ளி விவரம் சொல்கிறார்கள். 

இந்த தொகை போக மீதமுள்ள தொகையை தமிழநாட்டில் வசூல் செய்ததாக சொல்கிறார்கள். இந்த புள்ளிவிவரத்தின்படி தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 112 கோடி ரூபாயை கத்தி படம் வசூல்செய்திருக்கிறதாம்.  

இந்த தகவலை மறுக்கும் விநியோகஸ்தர்கள், 12 நாட்களில் 100 கோடி வசூல் செய்ததாக சொன்னவர்கள் இப்போது 50 நாட்களில் 146 கோடி என்று சொல்கிறார்கள். சினிமா வியாபாரம் பற்றி தெரியாதவர்கள் கிளப்பிவிடும் தகவல் இது. என்று கூறுகிறார்கள். 

Sunday, December 21, 2014

லிங்கா படத்தால் நஷ்டம் - நாளை ரஜினியை சந்திக்க விநியோகஸ்தர்கள் திட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த லிங்கா படம் கடந்த 12ந் தேதி வெளிவந்தது. 4 வருடங்களுக்கு பிறகு ரஜினி நடித்த படம் என்பதால் படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. 

இதனால் விநியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் பெரிய விலை கொடுத்து வாங்கினார்கள். ஆனால் படம் எதிர்பார்த்த வசூலைக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

இதனால் விநியோகஸ்தர்கள் நஷ்டமான தொகையை தயாரிப்பாளரிடம் திருப்பிக் கேட்க முடிவு செய்திருக்கிறார்கள்.

"அரையாண்டு தேர்வுகள் நடைபெற்றதாலும், 600 தியேட்டர்களில் ரிலீஸ் செய்ததாலும் எதிர்பார்த்ததை விட வசூல் குறைவாக இருந்தது. இப்போது பிக்அப் ஆகிவிட்டது. படத்தின் வசூல்பற்றி அவதூறு பரப்புகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று படத்தை வாங்கி விநியோகித்த வேந்தர் மூவீஸ் அறிவித்தது.

இதற்கிடையில் லிங்கா படத்தை வாங்கி நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்கள் நாளை (டிச 22) ராகேவந்திரா திருமண மண்டபத்தில் ரஜினியை சந்திக்க முடிவு செய்திருக்கிறார்கள். இதற்காக அவர்கள் நேற்று (டிச 20) போலீஸ் கமிஷனரை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர்.

 "ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தை கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கி திரையிட்டோம். ஆனால் படம் எதிர்பார்த்த வசூலைக் கொடுக்கவில்லை. 

இதனால் தியேட்டர்காரர்கள் எங்களை நெருக்குகிறார்கள். இது தொடர்பாக 22ந் தேதி ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினியை சந்தித்து கோரிக்கை விடுக்க இருக்கிறோம். 

தமிழ்நாடு முழுவதுலுமிருந்து விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் வருகிறார்கள் அதனால் எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று அந்த மனுவில் கூறியுள்ளனர். 

Saturday, December 20, 2014

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் 'ஐ'

தமிழ்த் திரையுலக ரசிகர்களின் அடுத்த பார்வை தற்போது 'ஐ' படத்தை நோக்கி திரும்பியிருக்கிறது. 

தமிழ்த் திரையுலகம் என்றும் ஒரு வட்டத்துக்குள் இந்தப் படத்தை அடக்கி விட முடியாது, ஷங்கர் என்ற இயக்குனரின் படம் என்பதால் இந்தியத் திரையுலகமும் இந்தப் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது. 

இரு தினங்களுக்கு முன் யு டியூபில் வெளியிடப்பட்ட 'ஐ' படத்தின் புதிய டிரைலர் இரு நாட்களுக்குள்ளேயே 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

பொங்கலுக்கு வெளிவரும் படங்களில் மற்ற எல்லா படங்களையும் விட இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம்தான். 

ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான், பி.சி.ஸ்ரீராம் போன்ற முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்களும், நடிப்புக்காக எதையும் செய்யத் தயங்காத விக்ரம், செலவுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யத் தயாராக இருக்கும் ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றால் இந்தப் படம் அதிகம் பேசப்படும் படமாக அமைந்துள்ளது என்பதுதான் உண்மை. 

அதே சமயம் தமிழ்த் திரையுலகத்தையும், தமிழ்ப் படங்களையும் உலக அளவிலும் பேசப்பட வைக்கும் முக்கியமான இயக்குனரான ஷங்கர் இந்தப் படத்தையும் அவருடைய முந்தைய படங்களையும் விட அதிகம் பேச வைப்பார் என்று நம்பலாம்.

தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, உலக அளவிலும் ஒரு தமிழ்ப் படத்திற்கு இதுவரை இல்லாத ஒரு எதிர்பார்ப்பும், வியாபாரமும் இந்தப் படத்திற்கு இருப்பதாகச் சொல்கிறார்கள். 

ஷங்கரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'எந்திரன்' படம் உலக அளவில் பல சாதனைகளில் முதலிடத்தில் இதுவரை இருந்து வருகிறது. அதை 'ஐ' படம் கண்டிப்பாக முறியடித்து பல சாதனைகைளைப் புரியும் என்பதை இப்போதே சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

Wednesday, December 17, 2014

ஐ படத்தில் நடித்தது விக்ரம்தானா? வியக்க வைத்த புகைப்படம்

'ஐ’ படத்திற்காக விக்ரம் தனது உடல் எடையை கூட்டியும், குறைத்தும் கஷ்டப்பட்டு, அதே நேரத்தில் இஷ்டப்பட்டும் நடித்துக் கொடுத்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. 

இப்படத்தில் வரும் கூனன் கதாபாத்திரத்திற்காக உடல் எடையை குறைத்து நடித்துள்ளார். இதை அவரே விருப்பப்பட்டு செய்ததாக கூறப்பட்டது. 

தற்போது, ‘ஐ’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் விக்ரம் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை டுவிட்டர் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். 

இதில், உடல் மெலிதான விக்ரம், ரொம்பவும் களைப்புடன் இருக்கையில் அமர்ந்திருப்பது போன்று எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த படத்தை பார்த்தவர்கள் இது விக்ரம்தானா? என்று வியக்கும் அளவுக்கு அந்த படம் அமைந்துள்ளது. 

‘ஐ’ படத்தை பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கியுள்ளார். எமிஜாக்சன் விக்ரமுக்கு ஜோடியாக நடித்துள்ளார். 

ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, ஆஸ்கார் ரவிச்சந்திரன் மிகப்பிரம்மாண்டாக தயாரித்துள்ளார். நீண்டகால தயாரிப்பில் இருந்த இப்படம் வருகிற பொங்கலுக்கு முன்கூட்டியே வெளிவரும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Tuesday, December 16, 2014

100 பிரபலங்கள் பட்டியலில் 13வது இடத்தில் ஏ.ஆர். ரகுமான்

இந்தியாவின் 100 பிரபலங்கள் பட்டியலில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், 13வது இடத்தை பிடித்துள்ளார்.  

இந்தியாவின் முதல் 100 பிரபலங்கள் பட்டியலை , போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. 

சம்பளம் மற்றும் எந்த அளவு பிரபலமாக உள்ளார்கள் என்பதன் அடிப்படையில், இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. 

பட்டியலின் முதலிடத்தில் சல்மான் கானும், இரண்டாம் இடத்தில் அமிதாப் பச்சனும், மூன்றாம் இடத்தில் ஷாரூக் கானும் மற்றும் நான்காம் இடத்தில் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியும், 5ம் இடத்தில் அக்ஷய் குமாரும், 6ம் இடத்தில் விராட் கோஹ்லியும், 7ம் இடத்தில் அமீர் கானும், 8ம் இடத்தில் தீபிகா படுகோனேவும், 9வது இடத்தில் ஹிருத்தி்க் ரோஷனும் மற்றும் 10ம் இடத்தில் சச்சின் டெண்டுல்கரும் உள்ளனர். 13வது இடத்தில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உள்ளார்.

இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள பிரபலங்களில், ஒரே தமிழ்நாட்டுக்காரர், ஏ.ஆர்.ரகுமான் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, December 15, 2014

லிங்கா படத்தில் 26 நிமிட காட்சிகள் நீக்கம்

ரஜினி நடித்த லிங்கா படத்தை ரஜினி ரசிகர்கள் தலையில் வைத்து கொண்டாடப்பட்டு வந்தாலும், ரஜினி ரசிகர் அல்லாத சாதாரண பொது மக்களுக்கு லிங்கா படம் 100 சதவிகிதம் திருப்தி தரவில்லை. 

ரஜினியின் நடிப்பில் படம் வெளி வந்து நீண்டகாலமாகிவிட்டதால், திருவிழாவுக்கு செல்லும் மனநிலையில் லிங்கா படத்தை பார்த்துவிட்டு செல்கின்றனர். இப்படி படம் பார்க்க வந்த மக்களினால்தான் 3 நாட்களில் 100 கோடி வசூல் செய்திருக்கிறது லிங்கா படம். 

அதே நேரம், லிங்கா படத்தைப் பற்றிய மவுத்டாக் என்கிற மக்களின் வாய்வழி விமர்சனம் பாசிட்டிவ்வாக இல்லை. படம் சுமார் என்றும், பட் நன்றாக இல்லை என்பதாகவும்தான் மக்களின் விமர்சனம் இருக்கிறது.

இந்த வகை கருத்துக்கு மாறாக படம் சூப்பர் என்று சொல்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள். சூப்பர் என்ற சொன்னவர்களும், சொதப்பல் என்று சொன்னவர்களும் ஒரு கருத்தில் மட்டும் மாறுபடாமல் ஒத்த கருத்தை வெளிப்படுத்தினர். 

அதாவது லிங்கா படம் நீளம் அதிகமாக இருக்கிறது என்பதே அந்த கருத்து. 174 நிமிடங்கள், அதாவது ஏறக்குறைய 3 மணி நேரப்படமாக இருந்தது லிங்கா.

இது குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுவதை கவனித்த தியேட்டர்காரர்கள், இந்த தகவலை தயாரிப்பாளர் ராக்லைன் வெக்டேஷ் கவனத்துக்கு கொண்டு சென்றனர். 

அவர் ரஜினியிடம் சொல்ல, உடனடியாய் கே.எஸ்.ரவிகுமாரை அழைத்தார் ரஜினி. என்னென்ன காட்சிகள் மொக்கையாய் இருக்கின்றன என்பதை பட்டியல் போட்டுள்ளனர். 

அதன்படி சில காட்சிகளை நீக்கம் செய்துள்ளனர்.  சுமார் 26 நிமிடக்காட்சிகள் நீக்கம் செய்யப்பட்டதால் தற்போது லிங்கா படம் இரண்டு மணிநேரம் 20 நிமிட படமாகிவிட்டது.

Saturday, December 13, 2014

லிங்காவை பார்த்து கண்கலங்கிய ராய் லட்சுமி

லிங்கா படத்தை பார்த்து கண்கலங்கியிருக்கிறார் நடிகை ராய் லட்சுமி என்ற லட்சுமி ராய். ரஜினி மற்றும் அவரது ரசிகர்களுக்கு நேற்று(டிச., 12ம் தேதி) டபுள் கொண்டாட்டம். 

ஒன்று ரஜினியின் பிறந்தநாள் மற்றும் அவரது லிங்கா படம் ரிலீஸ். இந்த இரண்டையும் அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். 

ரசிகர்கள் மட்டுமல்லாது ஏராளமான திரைநட்சத்திரங்களும் ரஜினியின் லிங்கா படத்தை பார்த்து தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை லட்சுமி ராய் நேற்று லிங்கா படத்தை பார்த்து தனது கருத்தை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அதில் லிங்கா படம் செம மாஸாக இருந்தது, தலைவர் மாதிரி யாராலும் வர முடியாது. படத்தின் இரண்டாம் பகுதி என் மனதை மிகவும் தொட்டது, ஒருக்கட்டத்தில் நான் கண் கலங்கிவிட்டேன். 

சோனாக்ஷி சின்ஹா மிக அற்புதமாக நடித்துள்ளார், அவரது கேரியரில் இந்தப்படம் சிறப்பானதாக இருக்கும், அவவரைப்போலவே அனுஷ்காவும் ரொம்ப அழகாக நடித்திருக்கிறார், 

லிங்கா படத்தை மிகவும் ரசித்து பார்த்தேன், மொத்த படக்குழுவுக்கும் நன்றி. லிங்கா செம மாஸ் அண்ட் கிளாஸ் என்று கூறியுள்ளார். 

Thursday, December 11, 2014

லிங்கா படத்தின் டிக்கெட் விலை 1000 ரூபாய்

எந்திரன் படத்திற்குப் பிறகு சுமார் 4 வருடங்கள் கழித்து(ரியல் ரஜினியாக, கோச்சடையான் அனிமேஷன்) மீண்டும் தங்கள் தலைவனை திரையில் பார்க்கும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். 

லிங்கா படத்தை ரஜினியின் பிறந்தநாளான 12.12.2014 அன்று வெளியிடுவது என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டாலும், லிங்கா கதை தொடர்பாக கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குகள் காரணமாக முன்பதிவை தொடங்குவதில் தயக்கம் இருந்தது. 

வழக்குகளினால் ஏற்பட்ட பிரச்சனைகள் அமுங்கிப்போக, ஒருவழியாக முன்பதிவை தொடங்கினார்கள். லிங்கா படத்திற்கான முன்பதிவுகள் நேற்று அதிகாலையிலேயே துவங்கியது. காலையில் எழுந்து முதல் வேலையாக லிங்கா டிக்கெட்டை முன்பதிவு செய்ய ஆன்லைனுக்குச் சென்ற ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

காரணம்...பெரும்பாலான தியேட்டர்களில் லிங்கா படத்திற்கான முதல் மூன்று நாட்களுக்கான அனைத்து காட்சிகளுக்கான டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்துபோய்விட்டன. 

குறிப்பாக சென்னையில் - ராயப்பேட்டை, வேளச்சேரி, பெரம்பூர், திருவான்மியூரில் உள்ள, சத்யம் சினிமாஸின் தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல். மற்ற காம்ப்ளக்ஸ் தியேட்டர்களிலும் ஹவுஸ்ஃபுல். எனவே லிங்கா படத்தை முதல் மூன்று நாட்களில் பார்க்க முடியாதநிலை ஏற்பட்டதும், பலருக்கும் அதிர்ச்சி. இப்படி ஏமாந்த ரசிகர்களை சாமர்த்தியாமாக கே(ஷ்)ட்ச் பண்ணிவிட்டனர் ரஜினி ரசிகர்கள். 

சென்னையில் உள்ள முக்கிய தியேட்டர்களில் நள்ளிரவு காட்சி அதிகாலை காட்சிக்கு தியேட்டர்களை புக் பண்ணி சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்துவிட்டனர். 

இந்த தகவலை போஸ்டர்கள், எஸ்எம்எஸ், வாட்ஸ்அப், ட்விட்டர், பேஸ்புக் மூலம் விளம்பரம் செய்துவிட்டனர். இந்த சிறப்பு காட்சிக்கு ஒரு டிக்கெட்டின் விலை எவ்வளவு தெரியுமா? 600 ரூபாய் தொடங்கி, 1000 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

Wednesday, December 10, 2014

நான்கு பிரபலங்களின் வாரிசுகள் இணைந்த வை ராஜா வை

வை ராஜா வை எனும் ஒரே படத்தில் நான்கு சினி பிரபலங்களின் வாரிசுகள் இணைந்துள்ளனர். 3 படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியுள்ள படம் ''வை ராஜா வை''. 

கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்க, ஹீரோயின்களாக ப்ரியா ஆனந்த்தும், டாப்சியும் நடித்துள்ளனர். கேம்ளிங்கை மையப்படுத்தி, ''வை ராஜா வை'' படம் உருவாகியுள்ளது. 

மேலும் வை ராஜா வை படத்தில் நான்கு பிரபலங்களின் வாரிசுகள் இணைந்துள்ளனர். அதாவது, ரஜினியின் மகள் ஐஸ்வர்யா தனுஷ் இயக்குநராகவும், கார்த்திக்கின் மகன் ஹீரோவாகவும், வைரமுத்துவின் மகன் மதன் கார்கி பாடலாசிரியாகவும், இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். ஆக ஒரே படத்தில் இந்த நான்கு பிரபலங்களின் வாரிசுகள் இணைந்துள்ளனர். 

இதனிடையே இப்படத்தின் இசை வௌியீட்டு விழா இன்று(டிச.,10ம் தேதி) சென்னையில் நடந்தது. தனுஷ் தலைமையில் இந்த ஆடியோ விழா நடந்தது. 

விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய வீடியோ ஔிப்பரப்பு செய்யப்பட்டது. ரஜினி பேசுகையில், ஐஸ்வர்யா தனது முதல் படத்தை ஆர்ட் பிலிமாக இயக்கி இருந்தார். 

அதன்பிறகு என்னிடம் ஒரு ஆக்ஷ்ன் நிறைந்த கமர்ஷியல் கதை ஒன்று தயாராக உள்ளதாகவும், விரைவில் அதை இயக்க இருப்பதாகவும் கூறினார். அப்போது அவர் சொன்ன கதை, இப்போது ''வை ராஜா வை'' மூலமாக நிறைவேறியிருக்கிறது. 

இந்தப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நான் அவருடைய பருத்திவீரன், பில்லா போன்ற படங்களின் இசையை மிகவும் ரசித்துள்ளேன். 

அவரது இசைக்கு நான் பெரிய ரசிகன். வை ராஜா வை படத்தின் பாடல்களையும் கேட்டேன், சிறப்பாக இருக்கிறது. இந்தப்படம் வெற்றி பெற இந்த டீமுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று பேசினார். 

வை ராஜா வை படத்தின் இசை வௌியீட்டு விழாவில், ஹீரோ கௌதம் கார்த்திக், ஹீரோயின்கள் ப்ரியா ஆனந்த், டாப்சி,  இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ், ஔிப்பதிவாளர் வேல்ராஜ், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, சிறப்பு விருந்தினர்கள் தனுஷ், லதா ரஜினிகாந்த், இயக்குநர் பாலா, அனிரூத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

2015 ரேஸில் முந்தப்போவது நயன்தாரவா? ஹன்சிகாவா?

இன்றைக்கும் தமிழ் சினிமாவில் டாப்பில் இருப்பது நயன்தாரா, ஹன்சிகாதான். 2014ம் ஆண்டில் இது கதிர்வேலன் காதல், நீ எங்கே என் அன்பே என்ற இரண்டு படத்தில்தான் நயன்தாரா நடித்தார். 

ஹன்சிகா மான் கராத்தே, அரண்மனை என்ற இரண்டு படத்தில் நடித்தார். ஆனால் 2015ம் ஆண்டில்தான் இருவருக்குமே கடுமையான போட்டி இருக்கிறது. 

காரணம் இருவர் கையிலும் கணிசமான படங்கள் இருக்கிறது. உதயநிதியுடன் ''நண்பேன்டா'', சிம்புவுடன் ''இது நம்ம ஆளு'', ஜெயம் ரவியுடன் ''தனி ஒருவன்'', சூர்யாவுடன் ''மாஸ்'', விஜய் சேதுபதியுடன் ''நானும் ரவுடிதான்''. 

தனி ஹீரோயினாக ''நைட் ஷோ'', ''பாஸ்கர் தி ராஸ்கல்'' என்ற மலையாளப்படம், பெயரிடப்படாத ஒரு தெலுங்கு படம் என நயன்தாரா கையில் 8 படங்கள் இருக்கிறது. 

அனைத்து படங்களுமே 2015ல் ரிலீசாகிறது.

ஹன்சிகாவுக்கு சிம்புவுடன் ''வாலு'', ''வேட்டை மன்னன்'', ஆர்யாவுடன் ''மீகாமன்'', விஷாலுடன் ''ஆம்பள'', ஜெயப்பிரதா மகனுடன் ''உயிரே உயிரே'', ஜெயம் ரவியோடு ''ரோமியோ ஜூலியட்'', ''இதயம் முரளி'', விஜய் நடிக்கும் பெயரிடப்படாத படம் உள்பட 9 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படங்கள் அனைத்தும் 2015ல் வெளிவருகிறது.

ஆக நயன்தாராவும், ஹன்சிகாவும் சமபலத்துடன் 2015ல் மோதுகிறார்கள். யார் படங்கள் அதிக அளவில் வெற்றி பெறுகிறதோ. அவர்கள் கையில் 2015 டிசம்பரில் வெற்றிக் கோப்பை இருக்கும்.

Tuesday, December 9, 2014

ரஜினி நடிக்க ஆசைப்பட்ட ஜிகர்தண்டா அசால்ட் சேது

''பீட்சா'' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய மற்றுமொரு சூப்பர் ஹிட் திரைப்படம் ''ஜிகர்தண்டா''. சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா நடித்த இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 

தற்போது கார்த்திக் சுப்புராஜ் தனது அடுத்த பட வேலைகளில் பிஸியாகிவிட்டார். இதனிடையே தற்போது தமிழகம் முழுக்க லிங்கா பேச்சு தான் அடிபடுகிறது. 

திரை பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் லிங்காவை பற்றி தான் பேசி வருகின்றனர். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜூம் தன் பங்கிற்கு லிங்காவை பற்றி பேசி வருகிறார். 

படம்வௌியாக இன்னும் மூன்று நாட்கள் தான் இருக்கிறது, இரண்டு நாட்கள் தான் இருக்கிறது என்று தன் டுவிட்டர் பக்கத்தில் கவுண்ட்-டவுன் கொடுத்து வருகிறார். கூடவே தான் ரஜினியை சந்தித்த அனுபவத்தையும் தெரிவித்துள்ளார். .

''லிங்கா'' படத்தின் படப்பிடிப்பு சிமோகாவில் நடந்தபோது அங்கு ரஜினியை சந்தித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் கார்த்திக் சுப்புராஜ் கூறியிருப்பதாவது, லிங்கா படம் ரிலீஸாக இருப்பதால் இந்த தருணத்தில் இதை சொல்ல விரும்புகிறேன். 

சிமோகாவில் லிங்கா படப்பிடிப்பு நடந்தபோது ரஜினி சாரை சந்தித்தேன். அப்போது எனது ஜிகர்தண்டா படத்தையும், எனது டீமையும் பாராட்டினார். அவரின் பாராட்டை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். 

மேலும் ஜிகர்தண்டா படத்தில் வரும் அசால்ட் சேது, கேரக்டரை தான் செய்ய விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். சிம்ஹாவின் நடிப்பை பார்த்தபோது ''16 வயதினிலே'' படத்தில் தனது 'பரட்டை' கேரக்டர் ஞாபகம் வந்ததாகவும் தெரிவித்தார். 

இதுபோதும் தலைவா, நன்றி. இப்படியொரு சந்திப்பு நிகழ காரணமான இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், கருணாகரன் ஆகியோருக்கு எனது நன்றி.

Monday, December 8, 2014

லிங்கா பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நந்தினி மதன் கார்க்கி

ரஜினி நடித்த எந்திரன் படத்தில் இரும்பிலே ஒரு இதயம் முளைத்ததோ, பூம் பூம் ரோபோடா போன்ற பாடல்களை எழுதியவர் மதன் கார்க்கி. 

ரஜினிக்காக அவர் எழுதிய முதல் இரண்டு பாடல்களுமே ஹிட்டானது மதன் கார்க்கிக்கு பெரிய உற்சாகத்தைக் கொடுத்தது. 

அதோடு, தான் பாடல் எழுதிய இரண்டாவது படத்திலேயே ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பாடல் எழுதி விட்டார். அப்படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயககியிருந்தார். 

ஆக, எந்திரன் மதன் கார்க்கிக்கு ஒரு பெரிய ஓப்பனிங்காக அமைந்தது. அதனால் குறுகிய காலத்திலேயே நிறைய படங்களுக்கு பாடல் எழுதியுள்ள அவர், தற்போது ரஜினி நடித்துள்ள லிஙகா படத்திலும் மோனோ காஸோலினோ என்றொரு பாடலை எழுதியிருக்கிறார். இந்த பாடலும் தற்போது மெகா ஹிட்டாகியிருக்கிறது.

ஆனால், லிங்கா படம் உலகம் முழுவதிலும் வெளியாவதால், அந்த பாடல் வரிகளின் பொருளை மற்ற மொழியைச்சேர்ந்தவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, அப்பாடலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் மதன் கார்க்கி. 

அதோடு, அந்த பாடலை தனது மனைவி நந்தினி மதன் கார்க்கி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தாகவும் குறிப்பிட்டுள்ளார் அவர். 

அதைத்தொடர்ந்து, அப்பாடலை படிக்கும் ஏராளமான ரஜினி ரசிகர்கள் லைக் கொடுத்து வருகிறார்களாம். 

Sunday, December 7, 2014

அமெரிக்காவில் அதிக தியேட்டர்கள் - லிங்கா சாதனை

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து, இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ள லிங்கா திரைப்படம், அமெரிக்காவில், 200க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாக உள்ளது. 

இந்திய திரைப்படம் ஒன்று, அமெரிக்காவில் அதிக தியேட்டர்களில் வெளியாக உள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 310 தியேட்டர்களில் வெளியாக உள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Saturday, December 6, 2014

தலயை தலையில் வைத்துக் கொண்டாடும் தல ரசிகர்கள்

ஷங்கர் இயக்கத்தில், விக்ரம் நடித்த 'ஐ' படத்தின் டீஸர் 'யூடியூப்' பில் 50 லட்சம் பார்வையாளர்களைப் பெற்று சினிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தது.  

முதன்முறையாக ஒரு தென்னிந்திய படத்தின் டீஸர் சாதனை படைத்தது என்றால் அது ஐ டீஸர்தான்.  அதோடு இந்திய அளவிலான டிரைலர் / டீஸர் 'யூடியூப்' பார்வையாளர்களின் 'டாப் 10' பட்டியலில் 7வது இடத்தைப் பிடித்திருக்கிறது 'ஐ'. 

விரைவில் இந்த எண்ணிக்கை 1 கோடியைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

திரைப்படங்களின் டீஸர்,டிரைலர்,மோஷன் போஸ்டர்'யூடியூப்'பில் வெளியிடப்படும்போது இதுவரை பார்வையாளர்களின் எண்ணிக்கை மட்டுமே சாதனையாகப் பார்க்கப்பட்டது.  சமீபகாலமாக, அவை பெறும் 'லைக்'குகளையும் சாதனையாகப் பார்க்க ஆரம்பித்துள்ளனர். 

இந்திய அளவில் 50 ஆயிரம் 'லைக்'குகளை வெறும் 48 மணி நேரத்தில் பெற்று சாதித்திருக்கிறது அஜித்தின் 'என்னை அறிந்தால்' டீஸர் .  இதற்கு முன்பு சல்மான் கானின் 'கிக்' டிரைலர் 72 மணி நேரத்திற்குள் இந்த சாதனையைச் செய்திருக்கிறது. 

அதேபோல் ட்விட்டரில் 'டிரென்ட்' செய்யும் கலாச்சாரமும் தற்போது பிரபலமாகிவருகிறது.  எந்த நடிகருடைய 'டேக்' எத்தனை நாட்கள் டிரென்டில் இருக்கிறது, அதன் மூலம் எத்தனை லட்சம் 'ட்வீட்'கள் செய்யப்படுகின்றன என்பதும் இப்போது சாதனையாகப் பார்க்கப்படுகிறது.  

அந்த வகையில் தென்னிந்தியாவிலேயே அஜித் ரசிகர்கள் தொடர்ந்து 4 நாட்களாக #YennaiArindhaalTeaserStormOnDec4 என்ற ஹேஷ்டேக்கை தொடர்ந்து இந்திய டிரென்டில் வைத்திருக்கிறார்கள்.  அதோடு இந்த டேக்கைப் பயன்படுத்தி இதுவரை 4 லட்சத்திற்கும் மேற்பட்ட ட்வீட்களும் செய்யப்பட்டுள்ளதாம்.  

தென்னிந்திய படங்களைப் பொறுத்தவரை இந்த நிமிடம் இதுதான் அதிகபட்ச சாதனையாக உள்ளது.  நடிகர்களிலேயே ஆசி பெற்ற நடிகர் அஜித். அவருடைய ரசிகர்கள் அஜித்தை கொண்டாடுவதுபோல் வேறு எந்த நடிகரின் ரசிகர்களும் தங்களின் நட்சத்திரத்தை கொண்டாடுவதில்லை.  

Friday, December 5, 2014

விஜய் நடிக்கும் புதிய படத்தின் பெயர் கருடா

திரையுலகில் நுழைந்து 22 வருடங்களைக் கடந்திருக்கும் விஜய், இதுவரை 57 படங்களில் நடித்து முடித்திருக்கிறார். 

தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் நடித்து வரும் பெயரிடப்படாத படம் விஜய் நடிக்கும் 58 ஆவது படம். எனவே விஜய் 58 என்றே அப்படத்தைப் பற்றி குறிப்பிட்டு வருகிறார்கள். 

மேலும் இப்படத்திற்கு மாரீசன் என்று பெயர் வைத்திருப்பதாக சொன்னாலும் அந்த தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. 

இந்நிலையில் விஜய் 58 படத்துக்கு கருடா என்று தலைப்பு சூட்டப்பட்டடிருப்பதாகவும், ஜனவரி 1 அன்று அதிகாரபூர்வமாக தலைப்பை அறிவிக்க உள்ளதாகவும் தகவல் அடிபடுகிறது. 

விஜய் 58  என்கிற கருடா படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகாவும், ஸ்ருதிஹாசனும் நடித்து வருகிறார்கள்.  இரண்டு வித்தியாசமான காலகட்டங்களில் இப்படத்தின் கதை கிழ்கிறது. 

மன்னர் காலகட்டத்தில்  ராஜ்ஜியத்தின் ராணியாக ஸ்ரீதேவியும், இளவரசியாக அதாவது விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகாவும் தளபதியாக சுதீப்பும் நடிக்கிறார்கள். 

இக்காட்சிகளுக்கான படப்பிடிப்பு கடந்த 20 நாட்களுக்கும் மேலாக சென்னை ஈசிஆரில் உத்தண்டி என்ற இடத்தில் போடப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான தர்பார் செட்டில் நடைபெற்று வருகிறது. 

முதல் கட்டப்படப்பிடிப்பு முடிந்து தற்போது 2ம் கட்டப் படப்பிடிப்பு துவங்கியிருக்கிறது.  இதில் ஹன்சிகா பங்குபெறும் சில வாள் சண்டைக் காட்சிகளும் இடம்பெறவிருக்கிறது. 

இதற்காக ஹன்சிகா வாள் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த தகவலை அவரே ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.

Monday, December 1, 2014

சண்டக்கோழி 2 படத்தில் இணையும் விஷால் - லிங்குசாமி



பூஜை படத்தை அடுத்து சுந்தர்.சி.இயக்கத்தில் ஆம்பள படத்தில் தற்போது நடித்து வரும் விஷால், அடுத்து வேந்தர் மூவீஸ் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். 

இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.  பாண்டிய நாடு படத்திற்குப் பிறகு சுசீந்திரனும், விஷாலும் இணையும் இப்படத்தைத் தொடர்ந்து லிங்குசாமி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் விஷால். 

செல்லமே படத்தில் அறிமுகமான விஷால் தன் இரண்டாவது படமாக லிங்குசாமி இயக்கத்தில் சண்டக்கோழி படத்தில் நடித்தார். அப்படத்தை விஷாலின் அப்பா தயாரித்தார். 

அப்போது ஏற்பட்ட பிரச்சனையினால் விஷால் - லிங்குசாமி இருவரும் பல வருடங்களாக பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்தனர்.  கடந்த சில வருடங்களாக மறுபடியும் நட்பானார்கள்.  

இந்நிலையில்தான் தற்போது லிங்குசாமியும் விஷாலும் மீண்டும் இணைகின்றனர்.  இப்படம் சண்டக்கோழி படத்தி இரண்டாம் பாகம் என்று சொல்லப்படுகிறது.  

சூர்யா நடிப்பில் அஞ்சான் படத்தை இயக்கிய லிங்குசாமி, தற்போது கார்த்தியை வைத்து எண்ணி ஏழு நாட்கள் படத்தை இயக்கவிருக்கிறார்.  

இந்தப் படம் முடிந்ததும் விஷால் நடிக்கும் சண்டக்ககோழி - 2 படத்தின் வேலைகள் ஆரம்பமாகுமாம்!