Thursday, July 31, 2014

தெலுங்கு அஞ்சான் ரிலீஸ் தள்ளி வைப்பு

தமிழ்த் திரைப்படங்களில் சில முக்கிய நடிகர்கள் நடிக்கும் படங்கள் தெலுங்கில் தொடர்ச்சியாக 'டப்பிங்' செய்யப்பட்டு வருகின்றன. 

ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி, ஆகியோர் நடிக்கும் படங்களுக்குத் தெலுங்குத் திரையுலகிலும் வரவேற்பு இருந்து வருவதால் அவர்கள் நடிக்கும் படங்களை அங்குள்ள தயாரிப்பாளர்கள் வாங்கி டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள். 

சில படங்கள் பெரும் லாபத்தைக் கொடுத்தாலும் சில படங்கள் தோல்வியையும் சந்திக்கின்றன. ஆனால் தோல்வியடைந்தாலும் நஷ்டம் ஆவதில்லை என்றும் சொல்கிறார்கள்.

இதனிடையே, சூர்யா, சமந்தா நடித்துள்ள 'அஞ்சான்' படத்தை ஆகஸ்ட் 15ம் தேதி தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் வெளியிட முடிவு செய்திருந்தார்கள். 

தெலுங்கில் 'சிக்கந்தர்' என பெயர் வைத்திருக்கிறார்கள். ஆனால், அதே தினத்தில் தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான ஜுனியர் என்டிஆர், சமந்தா நடித்துள்ள 'ரபாஷா' படமும் வெளியாக உள்ளது. 

எனவே, 'ரபாஷா' படத்துடன் ஒரு 'டப்பிங்' படம் போட்டி போட முடியாது என்பதால் 'அஞ்சான்' படத்தின் தெலுங்கு டப்பிங்கான 'சிக்கந்தர்' படத்தை ஒரு சில நாட்கள் கழித்தோ அல்லது ஒரு வாரம் கழித்தோ வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.

ஆனால், அதற்குப் பின்னால் வேறு விவகாரம் உள்ளதாக பேசிக் கொள்கிறார்கள். சமீப காலமாக பல தமிழ்ப் படங்களை தெலுங்கில் டப்பிங் செய்து ரிலீஸ் செய்வதை பல தெலுங்குப் பட தயாரிப்பாளர்கள் எதிர்த்து வருகிறார்கள். 

தமிழில் வெளியான சில வாரங்கள் கழித்தே அந்தப் படங்களை வெளியிட வேண்டும் என்று எதிர்ப்புக் குரல் எழுப்புகிறார்கள். ஒரு வேளை தமிழில் அந்தப் படங்கள் தோல்வியடைந்து விட்டால், தெலுங்கில் வெளியிட முடியாது, வரவேற்பும் கிடைக்காது என்பதே அதற்குக் காரணம் என்கிறார்கள் தமிழ்ப் படத் தயாரிப்பாளர்கள்.

'அஞ்சான்'ன்னு பேரை வச்சிட்டு அஞ்சலாமா ?

Sunday, July 27, 2014

அப்பா படத்தை ரீமேக் செய்யும் மகன்

சிரஞ்சீவி, ஸ்ரீதேவி நடித்து 1990ல் வெளிவந்த 'ஜெகதக வீருடு அதிலோக சுந்தரி' என்ற மாபெரும் வெற்றிப் படத்தை அவருடைய மகன் ராம் சரண் தேஜா நடிக்க ரீமேக் செய்ய உள்ளார்களாம். 

அப்பா சிரஞ்சீவி நடித்த, அந்த படத்தைத் தயாரித்த அஸ்வினி தத் மீண்டும் மகன் ராம் சரண் தேஜா நடிக்கும் இந்த படத்தைத் தயாரிக்க உள்ளாராம். 1990ல் வெளிவந்த படத்தை பிரபல இயக்குனர் கே.ராகவேந்திர ராவ் இயக்கினார், இளையராஜ இசையமைத்தார். 

ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் பல தியேட்டர்களில் அந்தப் படம் 100 நாட்கள் ஓடியது. ஒரு தியேட்டரில் ஒரு வருடத்திற்கும் மேலாக ஓடியது. தமிழில் 'காதல் தேவதை' என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டும் வெளியானது. அந்தக் காலத்திலேயே 10 கோடிக்கும் மேல் வசூல் செய்த படம்.

சிரஞ்சீவி, நான்கு அனாதைக் குழந்தைககளை வளர்த்து வருகிறார். ஒரு குழந்தைக்கு விபத்தில் நன்றாக அடிபட்டு விட, அந்தக் குழந்தையைக் காப்பாற்ற, ஒரு மூலிகையை எடுத்து வர மானசரோவர் செல்கிறார். 

அதே சமயம், இந்த பூமியின் அழகைப் பார்த்து ரசிக்க இந்திரலோகத்து மன்னனான இந்திரனின் மகள் இந்திரஜா அதே பகுதிக்கு வருகிறார். வந்தவர் இந்திரலோகத்து மீண்டும் செல்வதற்கு வேண்டிய முக்கிய மோதிரத்தை தொலைத்து விடுகிறார். 

அந்த மோதிரம் சிரஞ்சீவி கையில் கிடைக்கிறது. அந்த மோதிரம் ஒரு சக்தி வாய்ந்த மோதிரம். அதன் மூலம் சிரஞ்சீவிக்கு பல அதிசயங்கள் நடக்கின்றன. மோதிரத்தை திரும்பப் பெறுவதற்காக சிரஞ்சீவியைத் தேடி அவரின் இருப்பிடத்திற்குச் செல்கிறார் ஸ்ரீதேவி. அதன் பின் நடக்கும் சுவாரசியமான சம்பவங்கள்தான் படத்தின் கதை.

தெலுங்குத் திரையுலக ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட இப்படத்தை இப்போது ரீமேக் செய்தாலும் மீண்டும் வரவேற்பைப் பெறும் என்கிறார் தயாரிப்பாளர் அஸ்வினி தத். 

Thursday, July 24, 2014

தள்ளிப்போன படம் - இயக்குநரும், நடிகரும் அப்செட்

மதுரையில் புகழ்பெற்ற குளிர்பான பெயர் கொண்ட படம் தள்ளிப்போனதில் படத்தோட இயக்குனரும், புத்தரின் பூர்வாசிரம பெயர் கொண்ட ஹீரோவும் செம கடுப்புல இருக்காங்களாம். 

இதுதொடர்பாக இரண்டு பேரும் அவுங்கவுங்க சங்கத்துல முறையிட்டாங்களாம். "ஒரு படத்தை எப்போ ரிலீஸ் பண்ணணுங்றது அந்த தயாரிப்பாளரோட உரிமை அதுல நாங்க தலையிட முடியாது"ன்னு இரண்டு சங்கத்துலேயும் கை விரிச்சிட்டாங்களாம். 

அதனால பட ரிலீசப்போ புரமோசன் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கிறதுன்னு ரெண்டு பேரும் முடிவு பண்ணியிருக்காங்களாம். தனக்காக படத்தை தள்ளி வைத்த தயாரிப்பாளருக்காக ஹீரோ, இயக்குனர் இரண்டு பேர்கிட்டேயும் ஒல்லிபிச்சான் நடிகர் சமாதானம் பேசி வருகிறாராம்.

Wednesday, July 23, 2014

வசூலில் சாதனை படைக்கும் வேலையில்லா பட்டதாரி

கடந்த வாரம் (ஜூலை 18) வெளியான 'வேலையில்லா பட்டதாரி' படத்துக்கு அனைத்து ஏரியாக்களிலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. 

தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 400 திரையரங்குகளுக்கு மேல் வெளியிடப்பட்ட வேலையில்லா பட்டதாரி முதல் மூன்று நாட்களில் மட்டும் 15 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது. 

நாளுக்குநாள் அதிகரித்து வரும் வேலையில்லா பட்டதாரி படத்தின் வசூல் நிலவரம் திரையுலகினரை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

இதுவரை தனுஷ் நடிப்பில் வெளிவந்த படங்களிலேயே வேலையில்லா பட்டதாரி படம்தான் மிகப்பெரிய வசூல் செய்திருப்பதாக விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கினர் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. 

அது மட்டுமல்ல, இந்த வருடம் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் ஹிட்டடித்த கோலிசோடா உட்பட அனைத்து படங்களின் வசூலையும் வேலையில்லா பட்டதாரி படம் முறியடித்துவிட வாய்ப்பிருக்கிறது என்ற பேச்சும் அடிபடுகிறது.

கடந்த சில வருடங்களாக தொடர்ந்து தோல்விப்படங்களைக் கொடுத்து வந்த தனுஷுக்கு, வேலையில்லா பட்டதாரி படத்தின் வெற்றி மிகப்பெரிய தெம்பைக் கொடுத்திருக்கிறது. 

தமிழகத்தில் மட்டும் மூன்று நாட்களில் கிட்டத்தட்ட 15 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ள வேலையில்லா பட்டதாரி படம், வெளிநாடுகளிலும் முதல் வாரத்தில் சுமார் 8 கோடி ரூபாய்களை வசூல் செய்துள்ளதாம். 

தனுஷ் நடித்த படத்திலேயே வெளிநாட்டில் மிகப்பெரிய வசூலை அள்ளிய படமும் வேலையில்லா பட்டதாரி படம்தானாம்.

Sunday, July 20, 2014

வாலு படத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா டயலாக்கை புகுத்திய சிம்பு

சிம்பு நடித்த படங்களில் கெளதம்மேனன் இயக்கத்தில் அவர் நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா முக்கியமான படம். 

வழக்கமான காதல் கதைதான் என்றாலும், அதை கெளதம்மேனன் சொன்ன விதம் புதுமையாக இருந்தது. இன்றைய இளவட்ட ரசிகர்களை கவரும் வகையில் அவரது ஸ்கிரிப்ட் இருந்தது. 

கூடவே அதுவரை தான் நடிக்கும் படங்களை எந்த இயக்குனர்கள் இயக்கினாலும், தனது பாணியையும் கலந்தே நடித்து வந்த சிம்பு, அந்த படத்தில்தான் டைரக்டரின் நடிகராக மாறி நடித்திருந்தார். அதனால்தான் அதில் வேறு மாதிரியான சிம்புவை காண முடிந்தது.

கெளதம் மேனனைப்போலவே அந்த படத்திற்கு பிறகு சிம்புவுக்கும் பெரிய ஹிட்டாக அதற்கடுத்து எந்த படமும் அமையவில்லை. அதனால், தனது நடிப்பில் இரண்டு வருடங்களுக்குப்பிறகு வெளியாகும் வாலு படத்தைதான் தற்போது பெரிதாக நம்பிக்கொண்டிருக்கிறார் சிம்பு. அதோடு. இந்த படம் தனக்கு இன்னொரு விண்ணைத்தாண்டி வருவாயா படமாக இருக்க வேண்டும் என்றும் நினைக்கிறார் அவர்.

அதனால், அப்படத்தில் தான் பயன்படுத்திய சில டயலாக்குகளையும் இந்த படத்தில் சில இடங்களில் பிரயோசித்துள்ளாராம் சிம்பு. 

குறிப்பாக, ஒரு காட்சியில், நாம நண்பர்களாகவே இருந்திடலாமா? என்று காதலை முறித்துக்கொள்வதற்காக சிம்புவிடம் கூறுவார் த்ரிஷா. அப்போது சிம்பு செம டென்சனை காட்டுவார். அதையடுத்து, சிம்புவைப்பார்த்து த்ரிஷா, ஐ ஹேட் யூ என்ற வசனத்தை பேசிவிட்டு நகருவார். அதற்கு சிம்பு தேங்க்யூ என்பார்.

அதேபோல், இப்போது வாலு படத்தில் ஒரு காரசாரமான காதல் மோதல் காட்சி உள்ளதாம். அந்த காட்சியிலும் சிம்புவைப்பார்த்து ஹன்சிகா, ஐ ஹேட் யூ என்பாராம். அதற்கு சிம்பு தேங்க்யூ என்று பதில் கொடுப்பாராம். 

இதேபோல் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை நினைவுபடுத்தும் வகையில் வாலு படத்தில் ஆங்காங்கே காட்சிகளும், வசனங்களும் எட்டிப்பார்க்கிறதாம்.

Saturday, July 19, 2014

சதுரங்க வேட்டை - சினிமா விமர்சனம்

தமிழ் சினிமாவில் தற்போது ஒரு படத்தை விளம்பரப்படுத்துவது மட்டுமே படத்தை ஒட வைத்து விடும் என்ற அசாத்திய நம்பிக்கை ஏற்பட்டு விட்டது. 

கொஞ்சம் சுமாரான படத்தைக் கூட நாலு விஐபிக்களை விட்டு சூப்பர் படம்..அருமையான படம்...எனச் சொல்ல வைத்து ரசிகர்களை திரையரங்குகளுக்கு ஈர்க்க முயற்சிக்கிறார்கள். 

அப்படியே அவர்கள் சொல்வதை நம்பி வந்தாலும் படம் பார்க்கும் சராசரி ரசிகன், அவனுக்குப் பிடித்திருந்தால் மட்டுமே அந்தப் படத்தைப் பற்றி மற்றவர்களிடமும் சொல்கிறான். அவன் சொல்வதைக் கேட்டுத்தான் அவனுடைய நண்பர்களும் படம் பார்க்கச் செல்கிறார்கள்.

ஆக, ஒரு படத்தின் வெற்றியை அந்தப் படத்தைப் பற்றிப் பேசும் படம் சம்பந்தப்பட்டவர்களோ, அல்லது அந்த படத்தைச் சாராத மற்றவர்களோ நிர்ணயிப்பது இல்லை. திரையரங்கில் காசு கொடுத்து படம் பார்க்கும் ரசிகனே தீர்மானிக்கிறான். 

இன்றைய சூழ்நிலையில் ஒரு படத்தின் வெற்றிக்காக பல வேட்டைகளை நடத்த வேண்டியிருக்கிறது. பல ஆடு, புலி, ஆட்டங்களை ஆட வேண்டியிருக்கிறது. 

நல்ல கதை, விறுவிறுப்பான திரைக்கதை, நறுக்கென்ற வசனங்கள், பொருத்தமான நட்சத்திரங்கள் இவற்றுடன் வரும் படங்கள் வெற்றி என்ற எல்லைக் கோட்டைத் தொட்டு விடுகின்றன.

இந்த சதுரங்க வேட்டையில் அறிமுக இயக்குனர் வினோத், புதிய பாதையில் பயணிக்க முயற்சித்தாலும், அவர் பயணம் செய்யும் வண்டி கொஞ்சம் பழைய வண்டியாகத்தான் உள்ளது. எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்குளால் கொஞ்சம் கவனத்தை ஈர்க்கிறார் இயக்குனர் வினோத்.

தினசரி நாம் பத்திரிகைகளில் பார்க்கும் சில செய்திகளை கதையாக உருவாக்கி, அதை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் கொடுத்திருக்கிறார். உழைத்து சம்பாதிப்பதை விட கொஞ்சம் உட்கார்ந்த இடத்திலேயே கோடிகளையும், லட்சங்களையும் அள்ள வேண்டும் எனத் துடிக்கும் சிலர் புத்திசாலித்தனமான சில மோசடி வியாபாரிகளால் ஏமாற்றப்பட்டு தெருக்கோடிக்கு வருவதை ஆண்டாண்டு காலமாக பார்த்து வருகிறோம், படித்து வருகிறோம். அப்படி சீக்கிரமே பணக்காரர் ஆகத் துடிக்கும் சாதாரண பொதுமக்களை ஏமாற்றி கோடி கோடியாக சம்பாதிக்கும் ஒருவனின் கதைதான் இந்த சதுரங்க வேட்டை.

சிறு வயதில் அனாதையாக்கப்பட்டு, அவமானப்படுத்தப்படும் நட்ராஜ் வளர்ந்து பெரியவனாவதற்குள் குறுக்கு வழியில் எப்படியெல்லாம் பணம் சம்பாதிக்கலாம் என்பதில் கை தேர்ந்த ஒரு திருட்டுப் பயல். அவருக்கென ஒரு கூட்டணி அமைத்துக் கொண்டு பல விதங்களில், பல வழிகளில், பல தோற்றங்களில் அடுத்தவரை அழகாக ஏமாற்றுவதில் பலே கில்லாடி. “செட்டியாரும் டபுள் டெக்கரும், எம்எல்எம், பணம்அச்சடித்த ஆயுதம், இரிடியம் என்ற ரைஸ் புல்லிங்” இப்படி பல பெயரைக் கொண்ட ஏமாற்று வேலைகளை கனகச்சிதமாக செய்யும் அசகாய சூரன். ஒரு சந்தர்ப்பத்தில் காவல் துறையிடம் மாட்டிக் கொண்டாலும் பண பலத்தால் வெளியே வருகிறார். அதன் பின் முன்னர் செய்த ஒரு தொழிலில் பாதிக்கப்பட்ட ஒருவனால் ஆள் வைத்து கடத்தப்படுகிறார். 

அதன் பின் தன்னைக் கடத்தியவனையே கூட பங்குதாரராக சேர்த்துக் கொண்டு, ஒரு 100 கோடி ரூபாய் ஏமாற்றுத் திட்டத்தில் இறங்குகிறார். இதனிடையே இஷாராவைக் காதலித்து கல்யாணம் செய்து கொண்டு நல்ல வழியில் போக முடிவெடுத்தாலும், 100 கோடி ரூபாய் திட்டத்தின் பங்குதாரர் நட்ராஜை மிரட்டி அழைத்துச் செல்கிறார். இதன் பின் 100 கோடி ரூபாய் திட்டம் நடந்ததா, நட்ராஜ் திருந்தி வருகிறாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

கடந்த ஆண்டு பார்த்து ரசித்த வெற்றிகரமான ஓடிய சூது கவ்வும் மாதிரியான ஒரு படம். பத்திரிகைகளில் வந்ததை, நம்ம ஊரில் மக்கள் ஏமாந்ததை அப்படியே அச்சு அசலாக கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் இயக்குனர் வினோத். ஒவ்வொரு ஏமாற்றுத் தொழிலும் எப்படி உருவாகிறது, அதை எப்படி செயல்படுத்துகிறார்கள், அதில் எப்படிப்பட்டவர்களை சிக்க வைக்கிறார்கள் என்பது உண்மையிலே தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்தான். 

உண்மைக்கு மிக அருகில் படத்தைக் கொண்டு சேர்த்திருக்கிறார். ஏமாற்றும் விஷயங்களைக் கொண்ட காட்சிகள் அனைத்துமே சினிமாத்தனம் இல்லாமல், அப்படியே நம் கண்முன் நடப்பது போன்றே தெரிந்தாலும், அவ்வளவு பெரிய அயோக்கியனை, ஒரு அப்பாவிப் பெண் காதலிப்பதும், அப்புறம் அவன் அடிபட்டுக் கிடக்கும் போது, அந்தப் பெண்ணே காப்பாற்றுவதும், பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ்வதும் என வழக்கமான சினிமாத்தனமான காட்சிகளை வைத்து, இடைவேளைக்குப் பின் சுவாரசியத்தைக் குறைத்து விட்டார். அது, கிளைமாக்ஸ் வரையிலும் இருப்பதுதான் இது முற்றிலும் வித்தியாசமான படம் என்று சொல்ல முடியாமல் தடுக்க வைத்து விடுகிறது.

இந்தித் திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான நட்ராஜ், “நாளை, சக்கர வியூகம், மிளகா, முத்துக்கு முத்தாக” ஆகிய படங்களுக்குப் பிறகு இந்த படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். நாளை படத்திற்குப் பிறகு இந்தப் படம் அவருக்கு ஒரு குறிப்பிட்ட படமாக அமைய வாய்ப்புண்டு. 

பாம்பு கடத்தும் போது ஒரு தோற்றம், எம்எல்எம் வியாபாரம் செய்யும் போது வேறொரு தோற்றம், நகைக் கடை திட்டம், இரிடியம் ரைஸ் புல்லிங், ஆகியவற்றின் போது மற்றொரு தோற்றம் என அப்படியே அந்தந்த ஏமாற்று வேலைக்குப் பொருத்தமான ஆளாகவே மாறி விடுகிறார். வேறு யாராவது முன்னணி ஹீரோ நடித்திருந்தால் அந்த கதாபாத்திரத்தின் ஜீவனே மாறிப் போயிருக்கும். ஆனால், நட்ராஜ் நடித்திருப்பதைப் பார்க்கும் போது, ஏதோ அவருக்காகவே உருவாக்கப்பட்ட கதை போன்றும், கதாபாத்திரம் போன்றே தோன்றுகிறது.

நட்ராஜை, அப்படியே நல்லவர் என நம்பும் அப்பாவிப் பெண்ணாக இஷாரா. இந்தக் காலத்தில் இப்படி ஒரு பெண்ணா என யோசிக்க வைக்கிறார். சொந்தக் குரலும் அவருடைய அப்பாவித் தனத்திற்கு பொருந்திப் போகிறது. மொத்தமாக அரை மணி நேரம் வந்தாலும், அன்பு, பாசம், நேசம் என பேசி உருக வைக்கிறார். சினிமாவுக்கு வேண்டுமானால் ஓ.கே. நிஜ வாழ்க்கையில் யாரை இப்படி திருந்த வைக்க முடியும்.

இவர்கள் இருவரைத் தவிர படத்தில் தெரிந்த முகம் என்று பார்த்தால் பொன்வண்ணன் மட்டும்தான். அவரும் ஓரிரு காட்சிகள் மட்டுமே வருகிறார். மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் யாருமே சினிமாத்தனமான முகம் இல்லாதவர்கள், இப்போதுதான் புதிதாகப் பார்ப்பவர்களைப் போல் உள்ளார்கள். படத்தில் இடம் பெறும் பல வசனங்கள் கை தட்டல் பெறுகின்றன, யதார்த்தத்தைச் சொல்வதால்...

ஷான் ரோல்டன், காட்சிகளுக்கு பொருத்தமில்லாத பின்னணி இசையைத் தந்திருக்கிறார். இரண்டும் ஒன்றோடொன்று சேர்ந்து பயணிக்காத உணர்வே ஏற்படுகிறது. குறிப்பாக எம்எல்எம்-ல் கிடைத்த பணத்தை எடுத்துக் கொண்டு ஹோட்டலை விட்டு வெளியேறும் காட்சியில்...அதற்கு சிறிதும் பொருத்தமில்லாத ஒரு பின்னணி இசை. இப்படி பல காட்சிகளைச் சொல்லலாம்.

சதுரங்க வேட்டை - ராஜாவின் வேட்டை மட்டும்...!

Friday, July 18, 2014

லிங்கா படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்கிறார் ரஜினி

லிங்கா படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஆந்திராவில் நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் உள்ள மைசூரில் இப்படத்துக்கு பூஜை போடப்பட்டது. 

அங்கேயே லிங்கா படத்தின் முழு படப்பிடிப்பையும் நடத்த ரஜினி திட்டமிட்டிருந்தார். அதற்கான ஏற்பாடுகளை அவரது நண்பரான கன்னட நடிகர் அம்பரீஷ் செய்து கொடுத்திருந்தார். 

படப்பிடிப்பு தொடங்கிய சில தினங்களில் அங்குள்ள சில அமைப்புகள் ரஜினிக்கு எதிராக போராட்டத்தில் குதித்தன. எனவே கர்நாடகாவில் இருந்து ஆந்திராவுக்கு இடம் பெயர்ந்தது லிங்கா படக்குழு.

தற்போது ஆந்திராவில் தங்கு தடையில்லாமல் லிங்கு படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 

இன்னும் சில நாட்களில் லிங்கா படப்பிடிப்புக்கு பிரேக் கொடுத்துவிட்டு சென்னை திரும்புகிறது யூனிட். 

சென்னை திரும்பியதும் இதுவரை படமாக்கப்பட்ட காட்சிகளை எடிட் பண்ணி பார்க்க திட்டமிட்டு உள்ளனர். அதன் பிறகே அடுத்த கட்ட படப்பிடிப்பை முடிவு செய்ய இருக்கிறாராம் ரஜினி. 

லிங்கா படத்தை தனது பிறந்தநாளான டிசம்பர் 12 அன்று ரிலீஸ் செய்தே தீர வேண்டும் என்பதில் ரஜினி உறுதியாக இருக்கிறாராம்.

Wednesday, July 16, 2014

சிங்கம் ரிட்டர்ன்ஸ் சுதந்திர தினத்தில் வெளியீடு

ஹரி இயக்கத்தில், சூர்யா நடித்து சூப்பர் ஹிட்டான சிங்கம், இந்தியில் அதே பெயரில் 2011ம் ஆண்டு ரீமேக் செய்யப்பட்டு அங்கும் ஹிட்டானது. 

அதைத் தொடர்ந்து அதே ஹரி, சூர்யா காமினேஷனில் வெளிவந்து ஹிட்டான சிங்கம் 2 இப்போது இந்தியில் சிங்கம் ரிட்டர்ன் என்ற பெரியல் ரீமேக் ஆகிறது. 

இதில் அஜய்தேவ்கான், கரீனா கபூர் நடித்து வருகிறார்கள். ரோகிஷ் ஷெட்டி இயக்குகிறார்.

இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடபட்டு லைக்குகளை குவித்துக் கொண்டிருக்கிறது. 

படத்தை ஆகஸ்ட் 15ந் தேதி சுதந்திர தினத்தன்று வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். 

"காக்கி சீருடை அணிந்தவர்களைப்போல பொதுமக்களும் தேச பற்றுடன் நடந்து கொண்டால் உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக பொருள். 

சிங்கம் ரிட்டன்ஸ் டிரைலருக்கு கிடைத்துள்ள வரவேற்பு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று அஜய் தேவ்கன் டுவிட்டரில் எழுதியிருக்கிறார்.

Sunday, July 13, 2014

சூர்யாவை பின்னுக்குத் தள்ளிய சன்னி லியோன்

இப்போதெல்லாம் ஒரு படம் தியேட்டரில் நன்றாக ஓடுகிறதோ இல்லையோ, யு டியூப்பில் நன்றாக ஓடினாலே அந்தப் படம் வெற்றி பெற்றுவிடும் என சிலர் நம்புகிறார்கள். 

யு டியூப்பில் அதிகம் பேர் பார்த்துவிட்டார்கள் என்பதெற்கெல்லாம் வேறு விழா எடுக்கிறார்கள். 'அஞ்சான்' படத்திற்கு இப்படி ஒரு விழா நடந்தது ஆச்சரிய அலைகளை ஏற்படுத்தியது. 

சமீபத்தில் இந்திய அளவில் பரபரப்பாக பேசப்பட்ட இரண்டு யு டியூப் ஹிட்ஸில் ஒன்று 'அஞ்சான்' பட டீஸர், அடுத்தது சன்னி லியோன் பங்கேற்ற 'பின்க் லிப்ஸ்' என்ற பாடலின் வீடியோ.

சன்னி லியோன் நடித்து விரைவில் வெளிவர உள்ள 'ஹேட் ஸ்டோரி 2' என்ற படத்தில்தான் இந்த 'பின்க் லிப்ஸ்' வீடியோ பாடல் இடம் பெற்றுள்ளது. 

கடந்த 2ம் தேதி வெளியிடப்பட்ட இந்தப் பாடலை இதுவரை 23 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். 

ஆனால், கடந்த 5ம் தேதி வெளியிடப்பட்ட 'அஞ்சான்' டீஸரை இதுவரை 21 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மட்டுமே பார்த்துள்ளனர். இந்திய அளவில் இந்த இரண்டு வீடியோக்களும்தான் ஒன்றுக்கொன்று போட்டி போட்டு வருகின்றன. 

இளைஞர்களால் பெரிதும் கவரப்பட்ட சன்னி லியோன், சூர்யாவை பின்னுக்குத் தள்ளியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அடுத்தடுத்த நாட்களில் யார் யாரை மிஞ்சுகிறார்கள் என கடும் போட்டி நிலவ வாய்ப்புள்ளது.

இருந்தாலும் 'ஹேட் ஸ்டோரி 2' படக்குழுவினர் 'அஞ்சான்' டீசருக்கு விழா எடுத்ததுபோல் எந்த விழாவையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, July 10, 2014

மீண்டும் சினிமாவில் முழுமூச்சோடு இறங்கிய நடிகை

அரசியலில் ஈடுபட்டு கோஷ்டி அரசியலை சமாளிக்க முடியாமலல் நொந்து திரும்பி இருக்கும் பூ நடிகை. சினிமாவில் விட்ட இடத்தை மீண்டும் பிடிக்க தயாராகிக்கிட்டிருக்காராம். 

சினிமாவில் அக்கா, அண்ணி வேடம், சின்னத்திரையில் தொகுப்பாளினி, சினிமா தயாரிப்பாளர் என அத்தனை அவதாரங்களிலும் மீண்டும் முழு மூச்சோடு இறங்கப்போகிறாராம். 

இன்னொரு கட்சியில் சேருவதான முடிவுக்கு கணவர் குலம் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால் இப்போது மீண்டும் சின்னத்திரை, பெரிய திரை பக்கம் வரப்போகிறாராம். 

இவரைப்போலவே கன்னடத்தில் அரசியல் கசந்த ரம்யமான குத்து நடிகையும் சினிமாவே நமக்கு போதும். இருக்கிற விட்டு பறக்குறதுக்கு ஆசைப்பட வேண்டாமுன்னு முடிவு பண்ணியிருக்காராம்.

Sunday, July 6, 2014

அரிமா நம்பி - சினிமா விமர்சனம்

அறிமுக இயக்குனர் ஒருவரின் படம் என்றால் அவ்வளவு எதிர்பார்ப்புடன் அந்தப் படத்தைப் போய் பார்க்க மாட்டோம். அதிலும் வளர்ந்து வரும் ஒரு நாயகனின் மூன்றாவது படம். 

இப்படி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு படத்தைப் போய்ப் பார்க்கும் போது அந்தப் படம் நன்றாக இருந்தால் கண்டிப்பாக நம்மை ஆச்சரியப்படுத்திவிடும். அப்படித்தான் இந்த அரிமா நம்பி அமைந்துள்ளது. 

இயக்குனர் ஏ.ஆர். முருகதாசிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த ஆனந்த் சங்கர் இயக்குனராக அறிமுகமாகியுள்ள படம். 

ஆனந்த் சங்கரை தன்னுடைய சிறந்த உதவி இயக்குனர்களில் ஒருவர் என முருகதாஸ் பெருமையாக காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம். அந்த அளவிற்கு குருவின் பெயரைக் காப்பாற்றியிருக்கிறார் ஆனந்த் சங்கர்.

படத்தில் அதிகமான கதாபாத்திரங்கள் இல்லை, அனாவசியமான காதல் காட்சிகள் இல்லை, சிரிக்க வைக்காத நகைச்சுவைக் காட்சிகள் இல்லை, மொத்தமாக ஒரு மூன்று கதாபாத்திரங்கள்தான் படத்தில் முக்கியமாக வருகின்றன. 

அவர்களை வைத்து ஒரு அதிரடி ஆக்ஷன் த்ரில்லரைக் கொடுத்திருக்கிறார்கள். சமீப காலமாக த்ரில்லர் படங்கள் என்று சொல்லிக் கொண்டு வரும் சில படங்கள் எந்த த்ரில் விஷயங்களையும் சேர்க்காமல் நம்மை சோதிக்கவே செய்தன. 

ஆனால், இந்தப் படத்தில் திரைக்கதையை த்ரில்லாகவும், பரபரப்பாகவும் அமைத்து படத்தை வேகமாக நகர்த்தியிருக்கிறார் இயக்குனர். இடைவேளை வந்தது கூடத் தெரியாத அளவிற்கு அவ்வளவு வேகம் படத்தில் அமைந்துள்ளது.

ஒரு ஹோட்டல் பப்பில் வைத்து பிரியா ஆனந்தைப் பார்க்கிறார் விக்ரம் பிரபு. அப்புறம் என்ன பார்த்ததுமே காதல் பற்றிக் கொள்கிறது. அடுத்த நாளே டின்னருக்கு பிரியாவை விக்ரம் அழைக்க அவரும் சம்மதித்து வருகிறார். அங்கு சாப்பிடும் சாரி, நன்றாகக் குடித்து விட்டு, பின்னர் பிரியாவின் வீட்டிற்கும் சென்று இருவரும் குடிக்கிறார்கள். 

அப்போது யாரரோ இருவரால் பிரியா ஆனந்த் கடத்தப்படுகிறார். விக்ரமால் அவர்களைத் துரத்தியும் கண்டுபிடிக்க முடியாமல் போகிறது. போலீசிடம் புகார் கொடுத்து அவர்களுடன் திரும்பவும் வந்து பிரியா வீட்டுக்குள் நுழைந்து பார்த்தால் அப்படி எதுவுமே நடக்காதது போல் அவர் வீடு அமைதியாக இருக்கிறது. 

ஏதோ, சந்தேகம் வந்து விக்ரம் , பிரியா ஆனந்தின் அப்பா இருக்குமிடத்திற்குச் செல்ல, அவருக்கு அங்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. தொடர்ந்து சில கொலைகள் நடக்க, பிரியா ஆனந்தைத் தேடிப் புறப்படுகிறார் விக்ரம். அவர் பிரியாவைக் கண்டுபிடித்தாரா, அவரை ஏன் கடத்தினார்கள் என்பதுதான் படத்தின் பரபரப்பான மீதி கதை.

இவன் வேற மாதிரி படத்திலும் இப்படி ஒரு கதாபாத்திரத்தைத்தான் தேர்ந்தெடுத்தார் விக்ரம் பிரபு. ஆனால், அந்தப் படம் அவருக்கு வேற மாதிரியான ரிசல்ட்டைக் கொடுத்திருந்தாலும், இந்தப் படம் அவரை ஏதோ ஒரு விதத்தில் நம்ப வைத்திருக்கும். 

அந்த நம்பிக்கை அவருக்கு வீண் போகவில்லை. அடுத்த ஆக்ஷன் ஹீரோ அவதாராத்திற்கு விக்ரம் தயாராகி வருகிறாரோ என யோசிக்க வைக்கிறது இந்தப் படம். அவருக்கு வைத்திருக்கும் சண்டைக் காட்சிகளின் தாக்கத்தைப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது. 

ஆனாலும், ஆறடி உயர விக்ரம் அடிக்கிறார் என்றால் திரையில் நம்பவே முடிகிறது. முகத்தில் இருக்கும் விறைப்பை மட்டும் இன்னும் குறைத்துக் கொள்ளலாம். அவர் அப்பாவிடம் இருக்கும் குழந்தைத்தனமான சிரிப்பை நிறையவே கடன் வாங்கிக் கொள்ளலாம்.

விக்ரமுக்கு ஜோடியாக பிரியா ஆனந்த். ஆனால், இருவருக்கும் இடையில் கிளைமாக்சில் மட்டும்தான் காதல் காட்சியை வைத்திருக்கிறார் இயக்குனர். அதுவரை இவர்களிருவருக்கும் காதலை சொல்லக் கூட நேரமில்லை. வழக்கமாக கிளாமரான நடிப்பிலும், அழகான ஆடையிலும் அசத்தலாக இருப்பார் பிரியா ஆனந்த். 

ஆனால், இந்தப் படத்தில் அதற்கெல்லாம் வேலையே இல்லை. ஒரே ஒரு டூயட் பாடல் மட்டுமே. இருந்தாலும் படம் முழுவதும் விக்ரமுடன் பயணிக்கும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டராக அமைந்துள்ளது. பொதுவாக ஆக்ஷன் படங்களில் பாடல்களுக்கு மட்டும்தான் நாயகியை பயன்படுத்துவார்கள். இந்தப் படத்தில் கொஞ்சம் ஆக்ஷனுக்கும் சேர்த்து பயன்படுத்தியிருக்கிறார்கள்.

படத்தில் வில்லனாக சக்கரவர்த்தி. எவ்வளவு நாளைக்குத்தான் உள்ளூர் அரசியல்வாதிகளையே வில்லன்களாக பார்த்து வருவது, இந்தப் படத்தில் சக்கரவர்த்தி ஒரு மத்திய அமைச்சர். 

ஆரம்பத்தில் அவர் கேரக்டருக்கு ஏன் அவ்வளவு சஸ்பென்ஸ் எனத் தெரியவில்லை. அதிலும் அவரது கையை மட்டும் காட்டும் போது, அது ஏதோ ஒரு பெண்ணின் கையைப் போன்றே தெரிந்தது. அட...பரவாயில்லையே ஒரு பெண்ணை வில்லனாக்கியிருப்பார்களோ, என நினைத்தால் அப்புறம் சக்கரவர்த்தியைக் காட்டுகிறார்கள். ஆனால், அவ்வளவு பவர்ஃபுல்லாக இவரது கதாபாத்திரம் உருவாக்கப்படவில்லை.

டிரம்ஸ் சிவமணி இசையமைப்பாளராக இந்தப் படத்தில் அறிமுகமாகியிருக்கிறார். பின்னணி இசையில் காட்டிய ஈடுபாட்டை, பாடல்களில் காட்டத் தவறிவிட்டார். ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவுதான் படத்திற்கு மிகப் பெரிய பலம். குறிப்பாக சின்ன சின்னத் தெருக்களில் நடக்கும் அந்த சேசிங் காட்சியில் அவர் காமிரா வேகமாக ஓடியிருக்கிறது.

ஆக்ஷன் படம் என்றாலே லாஜிக் பார்க்கக் கூடாது என்பது என்ன வேண்டுதலோ...பல இடங்களில் லாஜிக் ஓட்டைகள். பிரியா வீட்டுக்கு விக்ரம் வந்தது எப்படி காமிராவில் பதிவாகாமல் போனது என்பதற்கு விளக்கமில்லை. 

அதன் பின், பிரியா அப்பாவின் சேனல் அலுவலகத்திற்குள் அவ்வளவு கெடுபிடிகளுக்கிடையில் விக்ரம் பிரபு நுழைந்து, எம்டி கேபினில் சுலபமாக நுழைகிறார். 

எந்த அலுவலகத்தில் எம்டி கேபின் திறந்தேயிருக்கும். கடத்தி வைக்கப்பட்டுள்ள பிரியாவை கடத்தல்காரர்களை சுலபமாக ஏமாற்றிவிட்டு காப்பாற்றி வருகிறார் விக்ரம். இப்படி ஒரு சில ஓட்டைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் படத்தை ரசிக்கலாம்.

அரிமா நம்பி - அறிமுக இயக்குனரை நம்பி படத்தைப் பார்க்கலாம்

Wednesday, July 2, 2014

ஹீரோக்களிடம் சான்ஸ் கேட்கும் மாஜி ஹீரோயின்

படத் தயாரிப்பு, தொலைக்காட்சி சீரியல், தொகுப்பாளினி இப்படி எதிலும் பெரிதாக சாதிக்க முடியாத மாஜி கனவு கன்னியான அந்த ஸ்லிம்ரன் நடிகை ரொம்பவே கவலையில் இருக்கிறாராம். 

கடன் வாங்கி ஈசியாரில் கட்டிய கனவு மாளிகையின் வங்கி டியூவை கட்டவே சிரமப்படுகிறாராம். 

இதனால் தனக்கு ஜோடியாக நடித்த ஹீரோக்களுக்கு போன்போட்டு அவர்கள் நடிக்கும் படத்தில் சான்ஸ் கேக்குறாராம். 

ஹீரோக்கள் சாதுரியமாக இயக்குனர், தயாரிப்பாளர் பக்கம் கைகாட்டி விட்டுவிடுகிறார்களாம். 

"அக்கா அண்ணி கேரக்டர்ல நடிக்கிறீங்களா?"ன்னு இயக்குனர்கள் கேட்க ஸ்லிம்ரன் பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறாராம்.