Monday, September 29, 2014

லிங்கா-வில் ஒரு பாடலில் த்ரிஷா

தமிழில் உள்ள எந்த ஹீரோயினைக் கேட்டாலும் அவர்களுடைய ஆசையாக ரஜினிகாந்துடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று சொல்வார்கள். அது இன்றைய புதுமுக ஹீரோயின்களின் ஆசையாகவும் இருக்கிறது. 

ஆனால், திரையுலகில் பத்து வருடங்களுக்கும் மேலாக இருந்து வரும் த்ரிஷாவிற்கு மட்டும் அந்த ஆசை நிறைவேறாமலே இருக்கிறது. கமல்ஹாசனுடன் 'மன்மதன் அம்பு' படத்தில் கூட அவர் ஜோடி சேர்ந்து விட்டார். ஆனால், என்னமோ ரஜினிகாந்துடன் மட்டும் அவரால் ஜோடி சேரவே முடியவில்லை.

இதனிடையே 'லிங்கா' படத்தில் ஒரு பாடலுக்கு த்ரிஷா நடனமாட உள்ளார் என்ற செய்தி வேகமாகப் பரவி வருகிறது. சம்பந்தப்பட்டவர்கள் ஒரு பாடலுக்கு நடனமாட த்ரிஷாவை அழைத்தார்களாம். 

ஆனால், ரஜினியுடன் ஜோடியாக மட்டுமே நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு வரும் த்ரிஷா அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார் என்றும் சொல்கிறார்கள். 

இருந்தாலும் த்ரிஷா அப்படி நடிப்பதில் தவறில்லை என்றும் சிலர் கருதுகிறார்கள். ஏனென்றால் ரஜினியுடன் ஜோடியாக நடித்த நயன்தாரா கூட அதன் பின் 'குசேலன்' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார் என்கிறார்கள். 

சிறிய படங்களில் அப்படி ஒரு பாடலுக்கு நடமாடினால்தான் கௌரவக் குறைச்சலாக இருக்கும். ஆனால், ரஜினிகாந்த் போன்ற உச்ச நட்சத்திரத்தின் படங்களில் நடிப்பது சம்பந்தப்பட்ட நடிகைகளுக்கு கௌரவத்தைத்தான் கொடுக்கும் என்றும் அவர்கள் சொல்கிறார்கள். 

இப்போது முன்னணி நடிகைகள் பலரும் ஒரு பாடலுக்கு நடனமாடுவதை ஒரு ஃபேஷனாகவே மாற்றிவிட்ட நிலையில், அதெல்லாம் தற்போது பெரிய விஷயமாகவே பார்க்கப்படுவதில்லை என்கிறார்கள். 

அதனால், த்ரிஷா விரைவில் அதற்கு சம்மதம் தெரிவிக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

Wednesday, September 24, 2014

டாணா படத்திற்கு 6 கிலோ வெயிட் போட்ட சிவகார்த்திகேயன்

மான் கராத்தே படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய படம் டாணா. 

எதிர்நீச்சல் படத்தை இயக்கிய துரை செந்தில் குமாரே இயக்குகிறார். தனது வொண்டர் பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரிக்கிறார். 

இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். இதுவரை காமெடி படங்களில் அசத்தி வந்த சிவகார்த்திகேயன், முதன்முறையாக கொஞ்சம் சீரியஸ் கலந்த ரோலில், அதாவது போலீஸ் கெட்டப்பில் நடிக்கிறார். 

இதற்காக தனது உடல் எடையை சுமார் 6 கிலோ வரை கூட்டியுள்ளார். மேலும் உடலை பிட்டாக காட்ட ஜிம்மிற்கும் சென்று சில உடற்பயிற்சிகளை எல்லாம் மேற்கொண்டுள்ளார். 

தற்போது இந்தப்படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாம், இன்னும் ஒருபாடல் மட்டுமே பாக்கி உள்ளதாம். 

இதனைத்தொடர்ந்து ரஜினி முருகன் படத்தில் நடிக்கிறார். முன்னதாக டாணா படத்தில், போலீஸ் உடையணிந்து நடித்தபோது, தனது அப்பாவை அடிக்கடி நினைவில் கொண்டு வந்து கண்கலங்கினாராம் சிவகார்த்திகேயன்.

Monday, September 22, 2014

விதார்த்தின் அடுத்த வித்தியாசமான படம்

மைனா என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தில் நடித்த விதார்த், தொடர்ந்து நடித்த பல படங்களில் நடித்தாலும் வெற்றி என்னவோ அவருக்கு எட்டாக்கனியாகவே இருந்தது. 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நிஜமான வெற்றி கிடைத்த சந்தோஷத்தில் திளைத்து கொண்டிருக்கிறார் விதார்த். அவரது நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஆள் திரைப்படம் அனைத்து சென்டர்களிலும் அமோக வரவேற்புடன் அரங்குநிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறதாம். 

ஒவ்வொரு ஊரிலிருந்தும் தியேட்டர் அதிபர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விதார்த்தைப் பாராட்டியதோடு, ஆள் படத்துக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பையும் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.

ஆள் படத்துக்கு மக்கள் மத்தியில் கிடைத்த மகத்தான வரவேற்பு விதார்த்தை மகிழ்ச்சியில் திளைக்க வைத்திருக்கிறது. இந்த வெற்றியைத் தேடிக்கொடுத்த ரசிகர்களுக்கும் மீடியாக்களுக்கும் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் - என்று உணர்ச்சிவசப்படும் விதார்த், தற்போது இன்னொரு வித்தியாசமான படத்தில் நடித்து வருகிறார்.

சக்கரவர்த்தி ஃபிலிம் இண்டர்நேஷ்னல் சார்பில் நந்து தயாரிப்பில், ஸ்டாலின் ராமலிங்கம் இயக்கத்தில் உருவாகி உள்ள காடு என்ற படம்தான் அது. தர்மபுரி மாவட்டம், அரூர் அருகில் உள்ள மலைகிராமம் ஒன்றில் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் நடைபெற்றிருக்கிறது. 

அந்த மலைக்கிராமத்தில் உள்ள வீடுகளுடன் சில வீடுகளை செட் போட்டு காடு படத்தின் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார்கள். அது இயக்குநர் ஸ்டாலின் ராமலிங்கம் சொந்த ஊர்.

காடு பற்றி விதார்த் என்ன சொல்கிறார்? இந்தப் படம் என் லைஃபில் திருப்புமுனையைத் தரப்போகிற படம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மைனா, தற்போது ஆள் படங்களுக்கு ஆதரவு தந்த ரசிகர்கள், காடு படத்துக்கும் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்கிறார். 

காடு படத்தில் கதாநாயகியாக சமஸ்கிருதி என்ற புதுமுகம் நடிக்கிறார். இவர் கேரள வரவு. கேகே இசையமைக்கிறார்.

Saturday, September 20, 2014

தனுஷுக்கு வழங்கப்பட்ட விருதை பெற்றுக் கொண்ட சிம்பு

சிம்புவுக்கும் தனுஷுக்கும் இடையில் மிகப்பெரிய பனிப்போர் நடந்ததை நாடறியும்! குறிப்பாக, ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை தனுஷ் திருமணம் செய்த பிறகு சிம்பு தனுஷ் சண்டை உச்சத்தைத் தொட்டது. 

சினிமா விழாக்களில் நேருக்கு நேர் சந்தித்தபோது கூட ஒரு ஹலோ கூட சொல்லிக்கொள்ளாமல் இருவருமே முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்றனர். 

பத்திரிகை பேட்டிகளிலும் ஒருவரை ஒருவர் தாக்குவதுபோல் தொடர்ந்து பேசி வந்தனர். 

இந்நிலையில் கடந்த வருடம் திடீரென சிம்புவும் தனுஷும் நண்பர்களாகிவிட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அதை யாரும் நம்பவே இல்லை. 

நம்ப வேண்டிய சூழல் வெகு விரைவிலேயே வந்தது. யெஸ்.. சிம்புவும், தனுஷும் கைகோர்த்தபடி சினிமா விழாக்களிலும் பார்ட்டிகளிலும் தென்பட்டனர். 

போதாக்குறைக்கு இருவரும் செல்ஃபி எடுத்து ட்விட்டரிலும் வெளியிட்டு வந்தனர். சிம்பு உடனான நட்பை ரஜினி குடும்பத்தினர் விரும்பவில்லை என்றும், அதையும் மீறி என்ன காரணத்தினாலோ சிம்பு உடன் அதீத நெருக்கத்தை காட்டுகிறார் தனுஷ் என்று திரைப்படத்துறையில் கிசுகிசு எழுந்தது. 

அது மட்டுமல்ல, இந்த பிரச்சனை காரணமாகவே தனுஷுக்கும் அவரது மனைவிக்கும் மன வருத்தம் என்றெல்லாம் சொல்லப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் கடந்த வாரம் மலேஷியாவில் ஒரு விருது விழா நடைபெற்றது. அந்த விழாவில் தனுஷுக்கு விருது வழங்கினார்கள். 

அந்த விழாவுக்கு தனுஷ் செல்லாததினால், அவருக்கு பதில் சிம்பு பெற்றுக் கொண்டார். இந்த விஷயம் தனுஷுக்கு சொல்லப்பட்டதும் சிம்புவுக்கு போனிலேயே நன்றி சொன்னாராம். நண்பேன்டா! 

Wednesday, September 17, 2014

ஈகோவில் வெடித்து சிதறிய மெகா டைரக்டர்கள்

மண்வாசனை இயக்குனர் தயாரிக்கும் படமொன்றை இயக்கி வந்தார் அந்த காதல் கோட்டை இயக்குனர். அந்த படத்தில் தனது மகளையே நாயகியாக ஒப்பந்தம் செய்த அவர் அவுட்டோருக்கும் கிளம்பினார். 

ஆனால், மேற்படி இயக்குனர்கள் இருவருக்கும் கதையை படமாக்கும் விசயத்தில் ஏகப்பட்ட அக்கப்போராம். 

ஆளுக்கொரு கருத்தை சொல்ல, இப்போது இதெல்லாம் சரிப்பட்டு வராது என்று அவுட்டோரில் இருந்து மூட்டை முடிச்சுக்களை கட்டிக்கொண்டு திரும்பி வந்து விடடாராம் காதல்கோட்டை. 

இதையடுத்து, அவர்களின் கருத்து மோதலை சரிசெய்யும் பேச்சுவார்த்தை சீரியசாக நடந்து கொண்டிருக்கிறது. 

இருப்பினும், தாமரை இலை தண்ணீர் போலத்தான் இரண்டு பேருமே உருண்டு கொண்டிருக்கிறார்களாம்.

Tuesday, September 9, 2014

அசத்தும் ஷாரூக்கானின் 8 பேக்

ஒரு காலத்தில் 'சிக்ஸ் பேக்'கில் நடிகர்கள் அசத்துவது ஒரு ஃபேஷனாக ஆனது. தமிழில் பல நடிகர்கள் 'சிக்ஸ் பேக்' டிரை செய்து தங்களது உடல் வலிமைய வெளிப்படுத்தினர். 

சமீபத்தில் அதர்வா 'இரும்பு குதிரை' படம் வரை இந்த சிக்ஸ் பேக் கலாச்சாரம் இருந்து கொண்டுதானிருக்கிறது. ஆனால், பாலிவுட்டில் ஷாரூக்கான் ஒரு படி, இல்லை இரண்டுபடி மேலே போய் 'எய்ட் பேக்'கில் தோன்றும் புகைப்படத்தை வெளியிட்டு ஒரு பரபப்பை ஏற்படுத்தியிருக்கிறார். 

48 வயதில் அவர் உடலை இப்படி மாற்றியிருப்பதைப் பார்த்து அவருடைய ரசிகர்கள் மட்டுமல்ல திரையுலகினரும் ஆச்சரியப்படுகிறார்கள்.

'எய்ட் பேக்' குறித்து ஷாரூக் அதை உருவாக்கக் காரணமானவர்களுக்கு நன்றி தெரிவித்து, “இதற்கு மேல் என்னை கஷ்டப்படுத்தாதீர்கள் என 'ஹேப்பி நியூ இயர்' படத்தின் இயக்குனரான ஃபரா கானிடம் ஜாலியாக கேட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு ஃபரா கான் “எனக்காக இதை செய்ததற்காக நன்றி,” என்று ஷாரூக்கானுக்கு பதிலளித்திருக்கிறார்.

ஷாரூக் கானின் எய்ட் பேக் உடலமைப்பைப் பார்த்து இன்னும் எத்தனை நடிகர்கள் அதை தொடர இருக்கிறார்களோ, இன்னும் எத்தனை லட்சம் ரசிகர்கள் அவருக்கு புதிதாக சேர இருக்கிறார்களோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. 

ஆமீர் கான் ஒரு பக்கம் ஆடை இல்லாமல் போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்க மறுபக்கம் ஷாரூக் கான் எய்ட் பேக்குடன் ஒரு புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். 

Wednesday, September 3, 2014

அமர காவியம் படத்தில் உறைய வைக்கும் உண்மை சம்பவம்

நடிகர் ஆர்யா தன் தம்பி சத்யாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள அமர காவியம் படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. 

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியை நடிகராக அறிமுகப்படுத்திய நான் பட இயக்குநர் ஜீவா ஷங்கர் இயக்கியிருக்கும் இப்படத்தில் சத்யாவுக்கு ஜோடியாக மலையாள நடிகை மியா ஜார்ஜ் நடித்திருக்கிறார். 

அமர காவியம் படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஜிப்ரான். சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற இசைவெளியீட்டுவிழாவுக்குப் பிறகு அமர காவியம் படத்தின் பாடல்கள் பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ளன. 

எனவே அமர காவியம் படத்துக்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைக்கும் நம்பிக்கையில் இருக்கிறார் தனது ஷோ பீப்பிள் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்திருக்கும் நடிகர் ஆர்யா.

அமர காவியம் படம் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளதை முன்னிட்டு படத்தில் ஏதாவது மாற்றங்கள் செய்யலாமா என்ற எண்ணத்தில் கடந்த வாரம் மீண்டும் அமரகாவியம் படத்தை பார்த்துள்ளனர். 

படம் பார்த்த அனைவருமே ஒட்டுமொத்தமாக சொன்ன கருத்து... க்ளைமேக்ஸ், படம் பார்ப்பவர்களை உறைய வைக்கும் என்பதுதானாம். இந்தக் காட்சியை தான் கேள்விப்பட்ட 1982ல் நடந்த, ஒரு நிஜ சம்பவத்தை மையமாக வைத்தே உருவாக்கியிருக்கிறாராம் இயக்குநர் ஜீவா ஷங்கர்.

இந்த உண்மை சம்பவத்தை படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியாக வைக்க வேண்டும் என்பதற்காகவே அமரகாவியம் படத்தின் கதை 80களில் நடப்பதுபோல் உருவாக்கப்பட்டுள்ளதாம். 

க்ளைமாக்ஸ் பற்றி இப்ப்டியொரு பாராட்டு கிடைத்ததினால் அமரகாவியம் படம் நிச்சயம் வெற்றியடையும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் ஜீவா சங்கர்.

Monday, September 1, 2014

சலீம் - சினிமா விமர்சனம்

நான்" படத்தின் மூலம் நாயகரான இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி நடித்து வெளிவந்திருக்கும் இரண்டாவது படம் சலீம். 

இந்த படமும், முதல் படம் மாதிரியே முத்தான படமாகவும், நான் பட தொடர்ச்சி போன்று முத்தாய்ப்பாகவும் வெளிவந்திருப்பதும் தான் விஜய் ஆன்டனிக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய வெற்றி.

நான் படத்தில் சலீம்எனும் மருத்துவம் படிக்கும் மாணவராக வந்து வித்தியாசமும், விறுவிறுப்புமாக ரசிகர்களை கவர்ந்த விஜய் ஆன்டனி, இதில் டாக்டர் சலீம்மாக வந்து தனியார் மருத்துவத்தின் மனிதாபிமானமற்ற குற்றங்களையும், அரசியல்வாதிகளின் வாரிகள் செய்யும் அராஜகங்களையும், அதற்கு உடந்தையக இருக்கும் உயர் அதிகாரிகளையும் அரசியலமைப்பு சட்டங்களையும் தோலுரித்துக்காட்டி திகிலூட்டியிருக்கிறார்! பேஷ்,பேஷ்!!

கதைப்படி, ஒரு தனியார் மருத்துவமனையில் மிகச் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரியும் விஜய் ஆன்டனி, மிகவும் இரக்க சுபாவி! ஒருநாள் இரவு., காத்திருக்கும் காதலியை மறந்து, கற்பழிக்கப்பட்ட நிலையில், 'காஸ்ட்லீ' காரில் இருந்து சாலையில் தூக்கி வீசப்படும் அபலை பெண்ணை அள்ளி வந்து சிகிச்சை தருகிறார் டாக்டர் சலீம் எனும் விஜய்! 

இதனால் வருங்கால மனைவி நிஷாவுடன் நடக்க இருக்கும் திருமணம் நின்று போவது மட்டுமின்றி, பணம், பணம் என்று அலையும் மருத்துவமனை நிர்வாகத்தில் இருந்தும் பணிநீக்கம் செய்யப்படுகிறார் ஹீரோ. இதில், வெக்ஸாகும் விஜய் ஆன்டனி, எடுக்கும் அவதாரம் தான் சலீம் படம் மொத்தமும்!

விஜய் ஆன்டனி, நான் படத்தை காட்டிலும் நடிப்பில் நன்கு முன்னேறி இருக்கிறார். டாக்டர் சலீமாக அறுவை சிகிச்சை நிபுணராக அசத்தும் காட்சிகளிலும் சரி, ஏழைப் பெண்ணின் கற்பழிப்பு மற்றும் கொலைக்கு காரணமான அமைச்சரின் வாரிசுகளையும், அவரது சகாக்களையும் பிடித்து வைத்துக் கொண்டு அசால்டாக காவல்துறை அதிகாரிகளுக்கும், அமைச்சருக்கும் சவால் விடும் இடங்களிலும் சரி, விஜய் ஆன்டனி வெளுத்து வாங்கியிருக்கிறார். 

இவைகளைக் காட்டிலும் லேட்டா வந்தா அர்ச்சனா ஸ்வீட்டுடன் வந்தாலும் கூட அலட்டும், மிரட்டும் காதலி அக்ஷாவிடம் கனிவும், பணிவும் காட்டும் இடங்களிலும் கூட அமர்க்களமாக நடித்து ஸ்கோர் அள்ளியிருக்கிறார் மனிதர் என்றால் மிகையல்ல!

புதுமுக நாயகி அக்ஷா, 'பிடிவாத' நிஷா பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார். சற்றே சதை போட்ட த்ரிஷா மாதிரி இருந்து கொண்டு மிரட்டலான நடிப்பை வழங்கி இருக்கிறார் அம்மணி.

சாஃப்ட்டான டாக்டராக, சலீமின் நண்பராக வரும் சாமிநாதனில் தொடங்கி, ஹோம் மினிஸ்டராக வரும் ஆர்.என்.ஆர்.மனோகர் வரை சகலரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். அதிலும் அமைச்சர் தவபுண்ணியமாக வரும் ஆர்.என்.ஆர்.வாவ்சொல்ல வைக்கும் வில்லனாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறார்.

விஜய் ஆன்டனியின் நடிப்பு மாதிரியே இசையும் சலீம் படத்திற்கு பெரும் பலம்!

கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவு, புதியவர் நிர்மல் குமாரின் போரடிக்காத புதுமையான எழுத்து, இயக்கம் எல்லாமும் சேர்ந்து விஜய் ஆன்டனியின் சலீம்முக்கு ரசிகர்களை சலாம்போட வைத்துள்ளது!

மொத்தத்தில் சலீம்முக்கு நாமும் போடுவோம் ஒரு ராயல் சலாம்!!