Monday, March 31, 2014

நெடுஞ்சாலை - சினிமா விமர்சனம்

சில்லுன்னு ஒரு காதலை' முதல் படமாக தந்த கிருஷ்ணாவின் இயக்கத்தில், அடுத்து விலாவாரியாக வெளிவந்திருக்கிறது நம்மூர் இருட்டு நெடுஞ்சாலைகளும், அதன் திருட்டு மறுபக்கங்களும்...! 

அதிலும், திருடனுக்கும், போலீஸ்க்கும் உள்ள கூட்டு களவாணித்தனம், அதேநேரம் ஒரு அழகான பெண்ணால் அவர்களுக்குள் எழும் ஈகோ மோதல், காதல், காமம், காமெடி என சகலத்திலும் புகுந்து விளையாடி இருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணா. 

அவருடன் சேர்ந்து அதகளம் செய்திருக்கின்றனர், செய்திருக்கின்றன.., ஹீரோ ஆரி, ஹீரோயின் ஸ்ரதா, போலீஸ் வில்லன், காமெடி முதலாளி உள்ளிட்டோரும், அவர்களின் நடிப்பும், ஆர்ட் டைரக்டர் சந்தானத்தின் கலர்புல் ஆர்ட்ஸ், செட்ஸ், பன்ச் வசனங்கள் இல்லை என்றாலும் சிரித்து, சிரித்து நம் வயிற்றை 'பஞ்சர்' செய்யும் வசனங்களுடன் நம்மை கதையோடு ஒன்றவிடும் ஆர்.எஸ்.ராமகிருஷ்ணன், இருட்டை மணிரத்னம் படங்களைக்காட்டிலும் அழகாக படம்பிடித்திருக்கும் ராஜவேல் ஒளிவீரனின் ஒளிப்பதிவு, 'எங்கேயும் எப்போதும்' சத்யாவின் இதயத்தை வருடும் இதமான இசை உள்ளிட்ட ப்ளஸ், ப்ளஸ், கூடுதல் ப்ளஸ் சமாச்சாரங்கள்!

கதையென்னவோ., நெடுஞ்சாலையில் ஓடும் சரக்கு லாரிகளில், ஓட்டப்பந்தய வீரனாட்டம் ஓடி, தாவி, ஏறி தார்ப்பாயை பிரித்து, தட்டுப்படும் பொருட்களை எல்லாம் விட்டு வைக்காமல், அந்த லாரியின் பின்னாலேயே வரும் தங்கம் சகாக்களின் வண்டியில் ஏற்றி, தன்னை நம்பியிருக்கும் ஜீவன்களை வாழ வைக்கும் திருட்டு ஹீரோவின் காவல்துறையினருடனான கொடுக்கல், வாங்கல், முட்டல், மோதல் மற்றும் தாபா கடை கதநாயகி உடனான காதல், புரிதல், கொடுக்கல், வாங்கல், இத்யாதி, இத்யாதி... சமாச்சாரங்கள் தான் என்றாலும், அதை இதயத்தை உருக்கும் விதமாகவும், உறைய வைக்கும்விதமாகவும், சொல்லியிருக்கும் படத்தில் தான் 'நெடுஞ்சாலை' ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொள்கிறது.

ஆகமொத்தத்தில், 'நெடுஞ்சாலை'க்கொள்ளை., ரசிகர்களின் நெஞ்சை கொள்ளை கொள்வதோடு, தயாரிப்பாளர்களுக்கும், இப்படத்தை வாங்கி வெளியிட்டுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கும் கொள்ளை லாபத்தையும் தர இருக்கிறது என்றால் மிகையல்ல!

Thursday, March 27, 2014

சாண்டல் காமெடியை பார்த்து காண்டாகும் ஹீரோக்கள்

சாண்டல் காமெடி நடிகர் ஹீரோவானது அவருடன் நடித்த ஹீரோக்கள் யாருக்குமே பிடிக்கவில்லையாம். 

அவருக்கு நெருக்கமான ஹீரோக்கள்கூட ஹீரோவாக நடிச்ச காமெடியன்கள் சீக்கிரமே காணாம போயிடுவாங்கன்னு செல்லமா மிரட்டி பார்த்திருக்காங்க. 

இன்னும் சில ஹீரோக்கள் சாண்டலோடு பேசுவதையே நிறுத்திட்டாங்களாம். புதுசா நடிக்கப்போற படங்கள்ல சாண்டலை போடவேண்டாம் பரோட்டாவை போடுங்கன்னு சில ஹீரோக்கள் சொல்லியிருக்காங்களாம். 

விஷயத்தை கேள்விப்பட்ட சாண்டல் "எல்லோ ஹீரோவும் காண்டுல இருக்காங்க. இவுங்க மட்டும் ஹீரோயின்களோடு விதவிதமா டூயட் பாடுவாங்க. 

நான் மட்டும் அவர்களுக்கு பிரண்டாவே நடிக்கணுமா? நடிக்க வந்தப்போ டி.வில காம்பயர் பண்றவன்லாலம் காமெடி பண்ண வந்துட்டான்னு நக்கல் பண்ணினாங்க. 

அது மாதிரிதான் இதுவும், காமெடியன்லாம் ஹீரோவாயிட்டான்னு நக்கல் பண்றாங்க. 

காமெடியில ஜெயிச்ச மாதிரி இதுலேயும் ஜெயிப்பேன்" என்று பிரண்டுங்ககிட்ட சொல்றாராம் சாண்டல் காமெடி.

Tuesday, March 25, 2014

ரஜினியை வைத்து அடுத்த ஆட்டம் ஆரம்பம்

கோச்சடையான் படம் மே முதல் தேதி வெளியாவதாக உறுதி செய்யப்பட்ட தகவல் வெளியானதும், ரஜினியின் அடுத்தப் படத்தை இயக்கப்போவது யார் என்று அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்து விட்டனர். 

கோச்சடையான் படம் துவங்குவதற்கு முன்பிருந்தே ரஜினியை வைத்து கே.எஸ்.ரவிகுமார் ஒரு படம் இயக்க இருக்கிறார் என்ற தகவல் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. 

அதன் பிறகு, ஒளிப்பதிவாளர் கேவி.ஆனந்த் சொன்ன கதையில் இம்ப்ரஸ் ஆன ரஜினி, அவரது இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுவிட்டார். அந்தப் படத்தை கல்பாத்தி அகோரம் தயாரிக்கிறார் என்று சொல்லப்பட்டது.

சில மாதங்கள் பரபரப்பாக இச்செய்தி அடிபட்டநிலையில், தனுஷை வைத்து கே.வி.ஆனந்த் அனேகன் என்ற படத்தை ஆரம்பித்த பிறகு அப்படியே அமுங்கிப்போனது.

கே.எஸ்.ரவிகுமார், கே.வி.ஆனந்ததைத் தொடர்ந்து ரஜினியின் அடுத்தப் படத்தை இயக்கப்போகிறார் என்ற செய்தியில் அடிபட்டவர் - ஷங்கர். தற்போது ஐ படத்தை இயக்கி வரும் ஷங்கரை ரஜினியே தேடிப்போய் அடுத்தப்படத்தை இயக்க அழைத்ததாகவும் உடனடியாய் அதற்கு ஷங்கர் உடன்பட்டதாகவும் அப்போது சொல்லப்பட்டது.

ரஜினி - ஷங்கர் இணையும் படத்துக்கு 250 கோடி செலவாகும் என்பதால், கல்பாத்தி அகோரத்தை அணுகினார்கள் என்றும், 140 கோடி வரை என்றால் தயாரிக்கிறேன், அதற்கு மேல் என்றால் என்னால் முடியாது என்று அவர் விலகிக்கொண்டதாகவும் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் கோச்சடையான் படத்தில் டைரக்ஷன் சூப்ரவைசராக பணியாற்றியபோது கே.எஸ்.ரவிகுமார், ரஜினிக்கு ஒரு கதை சொன்னதாகவும், அக்கதை ரஜினிக்குப் பிடித்துப்போனதால் அடுத்தப்படமாக அதை பண்ண முடிவு செய்துவிட்டார் ரஜினி என்று இப்போது சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் - திரையுலகில். அதுமட்டுமல்ல, ரஜினியின் ஒப்புதலோடு அனுஷ்காவிடம் கால்ஷீட் கேட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

ரஜினியை இயக்குபவர் ஷங்கரோ... கே.எஸ்.ரவிகுமாரோ..அதை ரஜினி வாயால் சொல்லும் வரை வதந்திதான்.

Monday, March 24, 2014

குக்கூ (Cuckoo) - சினிமா விமர்சனம்

குக்கூ', கண் தெரியாதவர்களின் கலர்புல் காதல், காமெடி, உணர்ச்சிகள், கண்ணீர் பின்னணிகள் உள்ளிட்ட இன்னும் பல விஷயங்களை இதுவரை யாரும் திரையில் காட்டிராத சுவாரஸ்யத்துடன், கண்களுடைய எல்லோரும் கண்கொட்டாமல் ரசிக்கும்படியும், பார்வையற்றவர்களுக்காக கடவுளிடம் கண்ணீர் மல்க யாசிக்கும்படியும் தன் முதல் படத்திலேயே 'பக்கா'வாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் ராஜூ முருகன் என்றால் மிகையல்ல!

கதைப்படி, மேடை கலைக்குழு ஒன்றில் இளையராஜா பாடல்களை பாடியபடி எல்லோரையும் வசியபடுத்தும் பார்வையற்ற தமிழ் எனும் 'அட்டக்கத்தி' தினேஷ், மீதி நேரங்களில் சென்னை, மின்சார இரயில்களில், பிற பார்வையற்ற இளைஞர்களுடன் சேர்ந்து சின்ன சின்ன பொருட்களை, பொம்மைகளை விற்று ஜீவனம் நடத்துகிறார். 

தான் இதுமாதிரி பொருட்களை வியாபாரயம் செய்யும் மின்சார இரயில்களில், அடிக்கடி பிரயாணித்து ஆசிரியை ஆக படிக்கும், தன் மாதிரியே பார்வையற்ற சுதந்திரக்கொடி எனும் அறிமுகநாயகி மாளவிகா மீது தமிழ் தினேஷூக்கு முதலில் மோதலும், பின் காதலும் பிறக்கிறது.

தன் காதலை சுதந்திரக்கொடியிடம் ஒரு சிடியில் பேசி நண்பர் உதவியுடன் தமிழ் வெளிப்படுத்த போகும் தருவாயில், நாயகி சுதந்திரத்திற்கு அவருக்கு பல விதத்திலும் உதவும் இளம் சமூக சேவகர் ஒருவர் மீது காதல் இருப்பது தெரிய வருகிறது. கூடவே பார்வை உடைய ஒருவனையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனும் நாயகியின் லட்சியமும் தெரிய வருகிறது. 

அதனால், சுதந்திரக்கொடி பையில் வைத்த சி.டி.யை திரும்ப எடுக்கவும் முடியாமல், காதல் அம்பை தொடுக்கவும் முடியாமல் அறை திரும்புகிறார். இதுஒரு பக்கம் என்றால் மற்றொருபக்கம், சுதந்திரகொடியின் முரட்டு குப்பத்து அண்ணன், தன் ஆட்டோ ஓட்டுநர் நண்பன் செய்யும் பண உதவிகளுக்கு கைமாறாக சுதந்திரத்தை அவனுக்கே கட்டி வைக்க சபதம் பூண்டிருக்கிறார் எனும் விவரமும் தெரியவருகிறது.

நாயகியின் லட்சியம், நாயகி சுதந்திரத்தின் முரட்டு அண்ணனின் சபதம்... உள்ளிட்ட சகலமும் தவிடுபொடியாகி அந்த பார்வையற்ற அழகி சுதந்திரக்கொடி எனும் மாளவிகா, நம் பார்வையற்ற தமிழ் எனும் தினேஷூக்கு கிடைத்தாரா.? அல்லது இளையராஜாவின் சோகப்பாடல்களும், கனவு டூயட்டுகளுமே நம் நாயகருக்கு நிரந்தரமானதா..? என்பதற்கு வித்தியாசமும், விறுவிறுப்பாகவும், நெஞ்சை உலுக்கும் திருப்பங்களுடன் விடை சொல்கிறது 'குக்கூ' திரைப்படத்தின் மீதிக்கதை!

காதலுக்கு கண் இல்லை என்பார்கள்... இதில் கண் தெரியாதவர்கள்குள்ளும் காதல் உண்டு! என்பதை கண் தெரிந்த ரசிகர்கள் எல்லோரும் கண் அயராமல் கண்டுகளிக்கும்படி கலர்புல்லாக காட்சிக்கு காட்சி சொல்லி இருக்கும் காரணத்திற்காகவே இயக்குநர் ராஜூ முருகனுக்கு தயக்கமின்றி ஒருடஜன் 'ஹேட்ஸ் ஆப்' சொல்லலாம்!

தமிழ் கதாபாத்திரத்தில் பார்வையற்ற இளைஞராக வாழ்ந்திருக்கிறார் நாயகர் தினேஷ் என்று தான் சொல்ல வேண்டும். மின்சார இரயில்களிலும், இரயில் நிலையங்களை ஒட்டியும் நாம் அவ்வப்போது கூட்டமாக பார்க்கும் பார்வையற்ற இளைஞர்களில், யாரோ ஒருவரை நம் கண்முன் காட்சிக்கு காட்சி கொண்டு வந்து நிறுத்தி, நம் கண்களில் கண்ணீர் துளிகளை எட்டிபார்க்க செய்து விடுகிறார். 

கதாநாயகி முதலில் நாயகருடன் ஏற்படும் முட்டல் மோதலில், முதல்நாள் நாயகருக்கு ஏற்படுத்திய நெற்றி காயத்தில், மறுநாள் கைவைத்து கடவுளை பிரார்திக்கும் காட்சியில், ஹீரோவின் மெய்சிலிர்ப்பு ஆகட்டும், பின்னணியில் புல்லாங்குழல் வாசித்துப்போகும் பெரியவர், கலர் பலூன்கள், பஞ்சுமிட்டாய்கள் கொண்டு செல்லும் வியாபாரிகள் என காட்டுமிடத்தில் நாயகர் தினேஷின் பிலீங், படம் பார்க்கும் நம்மையும் அவர்களின் காதலுக்குள் அழைத்து போய்விடுகிறது. 

அதன்பின் தமிழ்-தினேஷூக்கு ஏற்படும் இன்பம், துன்பம், காதல், கலாட்டா, காமெடி, அடி, உதை, இழப்பு, ஏற்பு... எல்லாவற்றிலும் பார்வையற்ற பாத்திரமென்றாலும்... ரசிகனான நம்மை, அந்த இடத்தில் தமிழ் தினேஷாகவே பொருத்திக் கொண்டும், புகுத்திக் கொண்டும் படம் முழுதையும் பார்க்க முடிவது தான் 'குக்கூ'வின் பெரிய பிளஸ்! இதற்கு பெரிய காரணம் இயக்குநர் ராஜூ முருகன் என்றாலும், தினேஷின் உயிரை கொடுக்கும் நடிப்பும், பாத்திரமும் முக்கிய காரணியாகும்! குட் ஆக்டிங்! 'கீப் இட் அப் தினேஷ்!!'

'அட்டக்கத்தி' தினேஷ் மாதிரியே அறிமுக நாயகி மாளவிகா மேனனும் பார்வையற்ற பெண்ணாக மிரட்டி இருக்கிறார் மிரட்டி! இரண்டாவது சந்திப்பிலேயே நாயகர், தன்னை நான்கு ஸ்டாப் தள்ளி இறக்கி விட வைத்த கொடூரம் கண்டு, அம்மணி மாளவிகா பொங்குவதும், அதற்காக அடுத்தமுறை நாயகருக்கு அவர் தரும் அதிரடியும் ஒரு நிமிடம் நம்மை ஆடிப்போகச் செய்து விடுகிறது. 

லூசு, லூசு... என அம்மணி, தினேஷை கொஞ்சும் இடங்களில் ஆகட்டும், செக்யூரிட்டியாக ஏ.டி.எம். வாசலில் சாப்பிட்டபடி இருந்து கொண்டே இல்லை என சொல்லும் அண்ணன் பற்றி, அண்ணி வச்ச மீன் குழம்பு வாசனை எனக்குத் தெரியாதா என தோழியிடம் தன் மனப்பக்குவத்தை வெளிப்படுத்தும் இடத்தில் ஆகட்டும், தினேஷிடம் மனதை பறிகொடுக்கும் இடங்களில் ஆகட்டும் தேர்ந்தெடுத்த நடிகையாக மிளிர்ந்திருக்கிறார் அம்மணி!

மேடை கலைக்குழுவில் எம்.ஜி.ஆர்., அஜீத், விஜய்யாக வலம் வரும் நட்சத்திரங்கள் சந்திரபாபுவாக 3 மனைவிகளின் கணவனாக கலக்கி, கலைகுழுவையும் நடத்தும் ஈஸ்வர், 'ஆடுகளம்' முருகதாஸ், இயக்குநர் ராஜூ முருகன் எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.

சந்தோஷ் நாராயணின் மனதை வருடும் பாடல்கள், இசை, (பின்னணி இசை விட்டுவிட்டு ஒலிப்பதின் பின்னணி என்னவோ.?), பி.கே.வர்மாவின் கண்களை கவரும் ஒளிப்பதிவு உள்ளிட்டவைகள் பெரிய பிளஸ் பாயிண்ட்டுகள்.

''அண்ணனை விட தம்பிக்கு தான் பவர்...'', ''இருட்டில் கிடைத்த சுதந்திரம்...'', தமிழுக்கும், தமிழர்களுக்கும் தொடர்ந்து கிடைத்து வரும் அவமரியாதைகள், உள்ளிட்ட லோக்கல்-இன்டர்நேஷனல் பாலிட்டிக்ஸ்களை நக்கல் அடிப்பது, என படத்தில் பாத்திரங்கள் பேசும் வசனங்கள் இயக்குநர் ராஜூ முருகனுக்கு ஒரு 'ஷொட்டு' வைக்க தூண்டுகிறது.

என்னதான் உண்மை என்றாலும் பார்வையற்றவர்களை பிடிவாதக்காரர்கள், நினைத்ததை நினைத்த மாத்திரத்திலேயே செய்து முடிக்க நினைக்கும் அடம்பாவிகள், என்றெல்லாம் சொல்லாமல் சொல்லி சித்தரித்து இருப்பதற்காக இயக்குநருக்கு ஒரு 'குட்டு' வைக்கவும் தோன்றுகிறது.

''குக்கூ'' என சத்தமிடும் கதாநாயகியின் கடிகாரத்திற்கும், ஒரு அப்பா இமேஜை கொடுத்து அதிலும் சென்டிமென்ட்டை புகுத்தியிருக்கும் இயக்குநர் ராஜூ முருகன், ஒரு சில இடங்களில் நீள அகலங்களை சற்றே குறைத்து இருந்தார் என்றால் 'குக்கூ' இன்னும் அழகாக கூவியிருக்கும்.

ஆனாலும், ''குக்கூ - 'செம கிக்கூ...', தயாரிப்பாளர்களுக்கும், புதுமை விரும்பும் ரசிகர்களுக்கும் ஒருசேர லக்கூ!''

Sunday, March 23, 2014

கேரள நாட்டிளம் பெண்களுடனே - சினிமா விமர்சனம்

பூ, "களவாணி படங்களின் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரனின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இரண்டாவது திரைப்படம் தான் ""கேரள நாட்டிளம் பெண்களுடனே!

எஸ்.எஸ்.குமரன், இவரது இயக்கத்தில் முதலாவதாக வெளிவந்த ""தேனீர் விடுதி திரைப்படத்தை கருத்தில் கொள்ளாமல், இத்திரைப்படத்தை காண சென்றோமென்றால், "கேரள நாட்டிளம் பெண்களுடனேயும் குளிர்ச்சியான கேரளாவிலும், சில மணித்துளிகள் வாழ்ந்து திரும்பிய குதூகலத்தை உணரலாம்!

கதைப்படி, கேரளாவில் சில வருடங்கள் வாழ்ந்த ஞான சம்பந்தத்திற்கு, திருமணம் செய்து கொண்டால் கேரளத்து இளம் பெண்ணையே திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்ற ஆசை, நிராசை ஆகிறது. 

அதனால் தன் மகன் அபி சரவணனை, சின்ன வயது முதல் நீ ஒரு கேரள பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று உசுப்பேற்றி கேரள கலாச்சாரம், உணவு முறைகளை ஊட்டி ஊட்டி வளர்க்கிறார். 

இதற்கு அபி சரவணனின் அம்மா ரேணுகா கடும் எதிர்ப்பு தெரிவித்து, தன் சொந்தத்தில் ஒரு பெண் போலீஸ் அதிகாரியை தேடிப்பிடிக்கிறார். போலீஸ் என்றதும் அலறும் அபி சரவணன், நைசாக எஸ்கேப் ஆகி, பெங்களூர் வேலைக்கு செல்வதாக சொல்லி அப்பாவின் ஐடியாபடி கேரளா சென்று, காதலிக்க நண்பர் காளி உதவியுடன் பெண் தேடுகிறார்.

மீடியாவில் வேலை பார்க்கும் காயத்ரி சிக்குகிறார். இருவரும் உருகி உருகி காதலிக்கின்றனர். இன்னொரு பக்கம் ஒரு இஸ்லாமிய பெண்ணும் அபி சரவணனை ஒரு தலையாக காதலிக்கிறார். 

இந்நிலையில் காயத்ரியின் அப்பா, அபியுடனானா-காயத்ரியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். மற்றுமொருபக்கம் பெண் போலீசும் அபியை அடைய துடிக்கிறார். அபி, யாருக்கு கிடைத்தார்.?! 

ஞானசம்பந்தம் சபதம் நிறைவேறியதா..?! காயத்ரி மெய்யாலுமே கேரள நாட்டிளம் பெண் தானா...?! என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு அழகிய கேரள பின்னணியில் வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் விடை சொல்கிறது ""கேரள நாட்டிளம் பெண்களுடனே படத்தின் மீதிக்கதை!

அபி சரவணன், அறிமுகம் என்பதையும் தாண்டி நம்பிக்கைக்குரியவராக தெரிகிறார். காயத்ரி, பெண் போஸ் மீன்கொடி, இஸ்லாமிய பெண் மூவரில் காயத்ரிக்கே நடிக்க நிறைய "ஸ்கோப் இருக்கிறது. அதை அவரும் சிறப்பாக செய்திருக்கிறார்.

ஞானசம்பந்தம், ரேணுகா இருவரின் ஜோடி பொருத்தம் "சூப்பர்ப், ஓரே வீட்டுக்குள் அவர்களது கலாச்சார வேறுபாடு தான் செம காமெடி. நாயகரின் நண்பராக வரும் காமெடி காளியும் கவருகிறார்.

எஸ்.எஸ்.குமரனின் எழுத்து, இசை, இயக்கம் எல்லாவற்றுக்கு மகுடம் சேர்த்திருக்கிறது, வைரமுத்துவின் வரிகளும், யுவாவின் ஒளிப்பதிவும்!

மொத்தத்தில் ஒருசில குறைகள் இருந்தாலும், ""கேரள நாட்டிளம் பெண்களுடனே - நம்மூர் ஆண்களுக்கு கலர்புல் கதகளி!

Wednesday, March 19, 2014

விஜய்யிடம் கதை சொல்லி ஓ.கே பண்ணிய சமுத்திரகனி

நிமிர்ந்து நில் படத்தில் நடித்து வந்தபோது, சமுத்திரகனியிடம் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தாலும் சமுதாயத்தைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பார். 

அவர் மூலமாக நிறைய நாட்டு நடப்புகளை நான் தெரிந்து கொண்டேன் என்று அமலாபால் கூறிவந்தார். அதை மெய்ப்பிக்கும் வகையில், நிமிர்ந்து நில் படத்தை சமுதாயத்துக்கு தேவையான கதையில் இயக்கி, ரசிகர்களிடம் மட்டுமின்றி, சகாயம் ஐ.ஏ.எஸ், மற்றும் தேவாரம் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெற்றுள்ளார் சமுத்திரகனி. 

மேலும், இந்த படத்திற்கு பிறகு கோலிவுட்டில் முன்னணி ஹீரோக்களின் கவனத்துக்கும் வந்து விட்டார் அவர். அந்த வகையில், சமீபத்தில் விஜய்க்கும் ஒரு கதை சொல்லியிருக்கிறார் சமுத்திரகனி. 

கதை விஜய்க்கும் பிடித்து விட்டதாம். இறுதி சுற்று பேச்சுவார்த்தை முடிந்தபிறகு அப்படம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளாராம் சமுத்திரகனி.

Tuesday, March 18, 2014

கோச்சடையான் படம் வெளிவருவதில் புதிய சிக்கல்



ரஜினி நடிக்கும் கோச்சடையான் படம் கோடைவிடுமுறை விருந்தாக ஏப்ரல் 11 ஆம் தேதி வெளிவருவதாக சொல்லப்பட்டது. 

தற்போது கிடைத்த புதிய தகவலின்படி, கோச்சடையான் படம் இப்போதைக்கு வெளிவர வாய்ப்பே இல்லையாம். என்ன காரணம்? 

கோச்சடையான் படத்துக்கு ஆரம்ப முதலீடு செய்தது மும்பையைச் சேர்ந்த ஈராஸ் படநிறுவனம். அதன் பிறகு கோச்சடையான் படத்தை ரஜினி சார்பாக மீடியா ஒன் நிறுவனம் அண்டர்டேக் பண்ணியது. 

அப்போது செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, கோச்சடையான் படத்தை வெளியிடுவதற்கு முன் சுமார் 50 கோடியை ஈராஸ் நிறுவனத்துக்கு ரஜினி திருப்பிக் கொடுக்க வேண்டும். 

அப்படி கொடுத்த பிறகுதான் கோச்சடையான் படத்தை ரஜினியால் ரிலீஸ் செய்ய முடியுமாம்.

தற்போதைய சூழலில் 50 கோடியை தியேட்டர்காரர்களிடமிருந்து அட்வான்ஸ் தொகையாக வாங்கினால்தான் ஈராஸ் நிறுவனத்துக்குக் பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியும்.

ஆனால் தியேட்டர்காரர்கள் தரப்பிலிருந்து அவ்வளவு பெரிய தொகை கிடைக்க வாய்ப்பில்லை என்கிறார்கள் விநியோகஸ்தர்கள். 

இந்தப் பிரச்னையின் காரணமாக, ஏப்ரல் மாதம் கோச்சடையான் வெளிவராது என்று உறுதியாக கூறுகிறார்கள். 

இந்தத் தகவலை உண்மை என்று நம்ப வைப்பதுபோல், தயாரிப்பாளர் தரப்பிலிருந்து கோச்சடையான் படத்துக்காக இன்னும் தியேட்டர்காரர்களை அணுகாமலே இருக்கிறார்கள்.

Monday, March 17, 2014

அஜீத்தை காப்பி அடிக்கும் மலையாள ஹீரோக்கள்

ஹீரோக்கள் என்றால் மொழு மொழுவென்று சேவிங் செய்து, பளபள முகத்துடன் இருக்க வேண்டும் என்பதை மாற்றி அமைத்தவர் அஜீத். 

அவர்தான் முதன் முதலாக பத்து நாள் தாடியுடன் நடித்தார். அன்று தொடங்கிய டிரண்டுதான் இன்று வரை ஓடிக்கொண்டிருக்கிறது. 

இப்போது எல்லா ஹீரோக்களும் பத்து நாள் தாடியுடன்தான் நடிக்கிறார்கள். 

அடுத்து மங்காத்தா, ஆரம்பம், ஜில்லா படங்களில் சால்ட் அண்ட் பெப்பர் லுக் டிரண்டை துவக்கி வைத்தார். அதனை இப்போது மலையாள ஹீரோக்கள் காப்பி அடிக்கத் தொடங்கிவிட்டார்கள். 

ஆஷிக் அபு இயக்கும் கேங்ஸ்டார் படத்தில் மம்முட்டியும், பி.உன்னிகிருஷ்ணன் இயக்கும் மிஸ்டர்.பிராட் படத்தில் மோகன்லாலும், செவன்த் டே என்ற படத்தில் பிருத்விராஜும், அஜீத்தை காப்பி அடித்து சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்து வருகிறார்கள். 

இவர்கள் தவிர இன்னும் சில ஹீரோக்களும் நடித்து வருகிறார்கள்.

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கை மட்டுமல்லாது, அஜீத்தின் மேனரிசம், ஸ்டைல், டயலாக் டெரிவரியையும் காப்பி அடிக்க ஆரம்பித்திருக்கிறார். 

கவுதம் மேனன் இயக்கும் படத்தில் அடுத்த டிரண்டை ஆரம்பித்து வைக்க தயாராகிக் கொண்டிருக்கிறார் அஜீத்.

Sunday, March 16, 2014

ஆதியும் அந்தமும் - சினிமா விமர்சனம்

ஊட்டி மருத்துவக் கல்லூரி ஒன்றில் சைக்காலஜிஸ்ட் டாக்டராக வந்து சேருகிறார் நாயகன் ஆதி. மருத்துவமனையும், கல்லூரியும் ஒரே இடத்தில் இருக்கும் அந்த கல்லூரியிலேயே தங்கி பணிபுரிந்து வருகிறார். 

இவர் தங்கி இருக்கும் அறையில் இரவு 1 மணி ஆனதும் ஒரு பெண்ணின் ஆவி வந்து செல்கிறது. அது யார் என்பதை அறிய ஆதி முற்படுகிறார். அந்த ஆவியை தினமும் பின்தொடர்கிறார். ஆனால், அதில் அவருக்கு விடை கிடைப்பதில்லை. 

இந்நிலையில், அந்த மருத்துவமனைக்கு டிவியில் இருந்து ஒரு பெண் வருகிறாள். அவள் அந்த மருத்துவமனையைப் பற்றி நிகழ்ச்சி ஒன்றை தயாரிப்பதற்காக கேமராவுடன் வந்து அங்கேயே தங்குகிறாள். 

அவளை சந்திக்கும் நாயகன் அவளிடம் எனது அறையில் தினமும் 1 மணிக்கு ஒரு பெண்ணின் ஆவி வந்து போகிறது. அந்த பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம். அதற்கு இந்த மருத்துவமனையில் வேலை செய்பவர்கள் காரணமாக இருக்கலாம். அதை நீயும், நானும் சேர்ந்து கண்டுபிடிக்கலாம் என கூறுகிறார். 

இதற்கு ஒத்துக்கொள்ளும் அந்த பெண், நாயகனுடன் சேர்ந்து ஒருநாள் அந்த மருத்துவமனையின் ஒரு பகுதியில் இருக்கும் கல்லறைக்கு சென்று இதற்கான காரணத்தை அறிய முற்படுகின்றனர். அப்போது, நாயகன் திடீரென காணாமல் போய்விடுகிறார். 

இதற்கு அந்த கல்லூரி நிர்வாகம்தான் காரணம் எனக்கூறி அடுத்தநாள் காலையில் கல்லூரி முதல்வரிடம் சென்று இதுகுறித்து சண்டை போடுகிறாள். அந்த கல்லூரி முதல்வரோ, நாயகனான ஆதி மனநிலை பாதிக்கப்பட்டவர் என அவளிடம் கூறுகிறார். இதைக்கேட்டு அந்த பெண் அதிர்ந்து போகிறாள். 

நாயகன் எப்படி மனநிலை பாதிக்கப்பட்டார்? அவளுடைய அறைக்கு வந்து செல்லும் அந்த பெண்ணின் ஆவி யாருடையது? அவள் எதற்காக கொலை செய்யப்பட்டாள்? என்பதை சஸ்பென்ஸ், திரில்லருடன் மீதிக் கதையில் சொல்லியிருக்கிறார்கள். 

கல்லூரி பேராசிரியர் கதாபாத்திரத்திற்கு அஜய் சரியான தேர்வாக இருக்கிறார். தன்னுடைய கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறார். நடிப்பில் இரண்டு பரிணாமங்களை காட்டி அசத்தியிருக்கிறார். நாயகி கவிதா அழகாக இருக்கிறார். இரண்டாம் பாதியிலேயே இவருடைய கதாபாத்திரம் வெளிச்சத்துக்கு வருகிறது. நடிப்பாலும், அழகாலும் வசீகரிக்கிறார். 

கல்லூரி முதல்வர் வேடத்தில் வருபவரும் யதார்த்தமாக நடித்திருக்கிறார். டிவி காம்பியராக வரும் இன்னொரு நாயகியும் அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். 

முதல் பாதியில் திகிலுடன் கதையை நகர்த்தும் இயக்குனர் கௌசிக், பிற்பாதியில் என்ன நடக்குமோ? என ரசிகர்களை யோசிக்க வைத்து கதைக்கு விறுவிறுப்பை கொடுத்திருக்கிறார். ஆனால், இரண்டாம் பாதியில் சீக்கிரமே அந்த ரகசியத்தை உடைத்து விடுவது கொஞ்சம் எதிர்பார்ப்பை குறைத்து விடுகிறது. 

இதுமாதிரியான திரில்லர் படங்களுக்கு ஒளிப்பதிவும், பின்னணி இசையும் மிகப்பெரிய பலமாக அமையவேண்டும். அது இந்த படத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. எல்.வி.கணேசன் இசை தியேட்டரில் பயத்தை கொடுக்கிறது. வாசனின் ஒளிப்பதிவும் முழு நிறைவை தருகிறது. 

மொத்தத்தில் ‘ஆதியும் அந்தமும்’ நிச்சயம் பயமுறுத்தும்.

Saturday, March 15, 2014

கோலி சோடா 50 நாளில் அமோக விற்பனை

பெரிய பெரிய ஜாம்பவான்களின் படங்களுக்கு மத்தியில் பசங்க நடித்த கோலிசோடா ரொம்ப பவர்புல்லாக அமைந்து விட்டது. கோலிசோடாவின் சவுண்டு பலரை தூக்கத்திலிருந்து தட்டி எழுப்பியிருக்கிறது. 

தொடர்ந்து 50 நாட்களாக கோலிசோடாவின் விற்பனை குறையவில்லை. 

75 லட்சம் ரூபாய் தயாரிக்கப்பட்ட கோலிசோடா, இதுவரைக்கும் 7 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாகவும், தயாரிப்பாளர் ஷேர் மட்டும் 5 கோடிக்கு மேல் கிடைத்திருப்பதாகவும் விநியோகஸ்தர்கள் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.

படத்தை இயக்கிய விஜய் மில்டனை, விஜய்யிலிருந்து விஜய் சேதுபதி வரைக்கும் பாராட்டி, அடுத்து எனக்கொரு கதை ரெடி பண்ணுங்க என்று கேட்டிருக்கிறார்கள். 

படத்தில் நடித்த கிஷோர், ஸ்ரீராம், பாண்டி, முருகேஷ், சாந்தினி, சீதா ஆகியோருக்கும் அடுத்த படங்கள் கிடைத்திருக்கிறது.

விஜய் மில்டன் தற்போது பாலாஜி சக்திவேலின் ரா...ரா...ரா...ராஜ்குமார் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 

இதே நிறுவனத்திற்கு தான் விஜய்மில்டன் அடுத்த படம் இயக்க இருக்கிறார். கோலிசோடாவை பார்க்க தவறவிட்டவர்கள் இப்போதும் சத்யம், எஸ்கேப், தேவி, அபிராமி, பிவிஆர், மாயாஜால் மால் தியேட்டர்களில் பார்க்கலாம்.

Friday, March 14, 2014

கிரிக்கெட் ஊழலை சொல்லும் இன்னொரு படம்

சென்னை 28ல் இருந்து தமிழ் சினிமாவுக்கு அடிக்க ஆரம்பித்து விட்டது கிரிக்கெட் ஜூரம். 

போட்டா போட்டி, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், போன்ற படங்களில் கிரிக்கெட் முக்கிய இடம் பிடித்தது. 

சுசீந்திரன் அடுத்து இயக்கப்போகும் படமும் கிரிக்கெட்டை மையமாக கொண்டது. 

கிரிக்கெட்டில் நடக்கும் மேக்ஸ் பிக்சிங் ஊழல்களை மையமாக வைத்து திருநங்கை ரோஸ் கிரிக்கெட் ஸ்கேண்டல் என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். 

இந்த நிலையில் தில்லு முல்லு படத்திற்கு பிறகு பத்ரி சொந்தமாக பி அண்ட் சி என்ற தயாரிப்பு கம்பெனியை தொடங்கி அதன் சார்பாக தயாரித்து இயக்கி வரும் படம் 'ஆடாம ஜெயிச்சோமடா'. 

இதுவும் கிரிக்கெட் ஊழலை மையமாக கொண்ட படம்தான். ஆனால் அதனை சீரியசாக சொல்லாமல் லோக்கல் கிரிக்கெட் மூலம் காமெடியாக சொல்ல இருக்கிறார்.

கருணாகரன், சிம்ஹா, பாலாஜி என சமீத்திய காமெடியன்கள்தான் படத்தின் ஹீரோஸ். சென்னை 28 கிரிக்கெட்டில் அறிமுகமான விஜயலட்சுமி ஹீரோயின். கே.எஸ்.ரவிகுமார் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். தில்லு முல்லு ஹீரோ சிவா வசனம் எழுதுகிறார்.

"கிரிக்கெட்டில் நடக்கும் ஊழல்கள், சூதாட்டம் ஆகியவற்றை அடிப்டையாக வைத்து கொஞ்சம் கற்பனை கலந்து படம் தயாரகி வருகிறது. கிரிக்கெட் முறைகேடுகள் பற்றி தெளிவாக அறிந்து கொண்ட பிறகே திரைக்கதையை எழுதினேன். 

மும்பைக்கு சென்று கிரிக்கெட் புக்கிகளிடம் விபரங்களை சேர்த்து கதையை உருவாக்கி உள்ளேன். மே மாதம் ரிலீசாகிறது" என்கிறார் பத்ரி.

Thursday, March 13, 2014

உத்தமவில்லன் கமலின் காமெடி கலாட்டா

ஒரு ஆக்ஷன் படத்தில் நடித்தால் அதற்கடுத்து ரசிகர்களை ரிலாக்ஸ் செய்வதற்காக ஒரு காமெடி படத்தில் நடிப்பதை வழக்கமாக கொண்டிருப்பவர் கமல். 

விஸ்வரூபம் படத்தைப்பொறுத்தவரை அடுத்தடுத்து இரண்டு பாகங்களையும் இயக்கியதால் அடுத்து காமெடி படம் அமையவில்லை. 

ஆனால் இப்போது நடிகர் ரமேஷ்அரவிந்த் இயக்கத்தில் நடிக்கும் உத்தமவில்லன் படத்தில் காமெடியில செம கலக்கு கலக்கப்போகிறாராம் கமல்.

அதனால் தன்னுடன் தெனாலி, பஞ்சதந்திரம் படங்களில் நடித்த மலையாள நடிகர் ஜெயராமையும் இந்த படத்தில் தன்னுடன் கூட்டணி சேர்த்திருக்கும் கமல், அப்படத்தை இயக்கும் ரமேஷ் அரவிந்தையும் இப்போது இணைத்துள்ளார். 

ஏற்கனவே பஞ்சதந்திரம் படத்தில் கமலுடன் ஜெயராம், ரமேஷ் அரவிந்த் ஆகிய இருவரும் இணைந்து நடித்திருப்பவர்கள் என்பதால், இந்த படத்தில் அவர்களின் காமெடி கூட்டணி சூப்பராக ஒர்க் அவுட்டாகியுள்ளதாம்.

தற்போது, அவர்கள் சம்பந்தப்பட்ட கலகலப்பான காட்சிகள் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டுக்கொண்டிருப்பதால், அக்கம் பக்கம் கவனத்தை சிதற விடாமல் நடித்து வருகிறார் கமல். 

அதனால் தெனாலி, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், பஞ்சதந்திரம், பம்மல் கே.சம்பந்தம் படங்களை மிஞ்சும் வகையில் நூறு சதவிகிதம் காமெடியை கொடுத்து ரசிகர்களின் வயிற்றை உத்தமவில்லன் பதம் பார்ப்பார் என்று இப்போதே கியாரண்டி கொடுக்கிறார்கள்.

Wednesday, March 12, 2014

அமீர்கானை அதிர வைத்த பேஸ்புக் செய்தி

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் தாறுமாறாக வெளியாகும் அவதூறு செய்திகளால் அதிர்ந்து கிடக்கிறார்கள் பிரபலங்கள். 

குறிப்பாக சினிமா நடிகர்-நடிகைகள் தங்களைப்பற்றி உண்மைக்கு புறம்பாக வெளியாகும் செய்திகள் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு சைபர் கிரைம் போலீஸை நாடிக்கொண்ட வருகிறார்கள். 

அந்த வகையில், இந்தி நடிகர் அமீர்கானும் கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பை போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.

அதில், நான் தற்போது தொலைக்காட்சி ஒன்றில் சத்யமேவ ஜெயதே என்றொரு நிகழ்ச்சி நடத்தி வருகிறேன். 

அதில், பெண்களுக்கு இழைக்கப்படும் வன்கொடுமை, பெண் சிசு கொலை உள்பட நாட்டில் நடக்கும் பல சமூக அவலங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. 

இந்த நிலையில், நான் ஒரு சமூக அமைப்பிடம் பெருந்தொகையை பெற்று அதை, மசூதி கட்டவும், முஸ்லீம் இளைஞர்களின் நலனுக்காகவும் வழங்கியதாக பேஸ்புக்கில் தவறான செய்தி பரவியுள்ளது. 

அதனால் இந்த செய்தியை வெளியிட்ட நபரை கண்டுபிடித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

அமீர்கானின் இந்த புகாரை அடுத்து பேஸ்புக்கில் இந்த செய்தியை பரப்பியவரை கண்டு பிடிக்க சைபர் கிரைம் போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.

Tuesday, March 11, 2014

நிமிர்ந்து நில் - சினிமா விமர்சனம்

பி.சமுத்திரகனியின் இயக்கத்தில், சமூகபொறுப்புணர்வுடன் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் ''நிமிர்ந்து நில்''. 

பொதுவாக இதுமாதிரி சமூகத்திற்கு பாடம் சொல்லும் நற் கருத்துடைய திரைப்படங்கள், போதனையாக, சோதனையாக... போரடிக்கும்! 

ஆனால் பெரும் சாதனையாக சமுத்திரகனியின் 'நிமிர்ந்து நில்' திரைப்படம், தியேட்டரில் சீட்டு நுனியில் நம்மை நிமிர்ந்து உட்கார வைத்து, ஆரம்பகாட்சி முதல் இறுதிகாட்சி வரை கண்கொட்டாமல் கை தட்டவைப்பது தான் ஹைலைட்!

கதைப்படி, அரவிந்த் சிவசாமி எனும் ஜெயம் ரவி, இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப வளைந்து கொடுத்து வாழத்தெரியாமல் சட்டத்திட்டங்களுக்கு மட்டுமே கட்டுப்பட்டு, ஒரு பைசா லஞ்சம் கொடுக்காமல் வாழும் ஒரு தனியார் நிறுவன ஊழியர். 

ஒருநாள் அறை நண்பரும், அலுவலக நண்பருமான சூரி உடன் இல்லாமல் பைக்கில் வேலையாக கிளம்பும் ஜெயரம் ரவி, லைசன்ஸ், ஆர்.சி. புக், இன்சூரன்ஸ் உள்ளிட்ட எல்லா பேப்பர்களும் இருந்தும் டிராபிக் போலீஸ் எதிர்பார்க்கும் காந்தி தாள் தராததால் போலீஸ், கோர்ட், கேஸ் என ஏகத்துக்கும் அலைகழிக்கப்படுகிறார். 

டிராபிக் கான்ஸ்டபிளில் தொடங்கி புரோக்கர் வைத்து லஞ்சம் வாங்கும் நீதிபதி வரை எல்லோரையும் போட்டு உடைக்கும் அரவிந்த் சிவசாமி அதாங்க, ஜெயம் ரவி, இச்சயமத்தில் தன்னை லஞ்சம் தந்து காபந்து செய்த ஆரூயிர் நண்பர் சூரியையும், அவருக்கு ஐடியா தரும் (ஜெயம் ரவியை ஒரு தலையாக காதலித்த படி) அமலாபாலையும் கூட போட்டுக் கொடுக்க, படம் பார்க்கும் நமக்கே 'பகீர்' என்கிறது.

அப்புறம்? அப்புறமென்ன? ஜெயம் ரவி அதிகார வர்க்கத்தால் சட்டத்திற்கு புறம்பாக செமையாக பந்தாடப்படுகிறார். குற்றுயிரும், கொலை உயிருமாக குப்பையில் கிடக்கும் ரவியை தேடிப்பிடித்து மருத்துவமனையில் சேர்த்து மெல்ல தேற்றுகின்றனர் சூரி, அமலாபால் மற்றும் கோர்ட்டில் ஜெயம் ரவியின் நேர்மை கண்டு ஈர்க்கப்பட்ட வக்கீல் சுப்பு பஞ்சு உள்ளிட்டோர். 

இவர்களது கனிவாலும், கவனிப்பாலும் விரைந்து தேறும் ரவி, மீண்டும் திமிருகிறார். ஆனால் இந்தமுறை சும்மா சட்டம் பேசிக் கொண்டிருக்காமல், மருத்துவத்துறை, மின்சாரத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, நீதித்துறை.. என சகலத்துறைகளிலும் இருக்கும் ஊழல் பெருச்சாளிகளை ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் அடையாளம் காட்டும் விதமாக புத்திசாலித்தனமாக களம் இறங்க திட்டமிடுகிறார் ரவி! 

இதில் நமக்கெதுக்கு வேண்டாத வேலை... என வெகுண்டெழும் அமலாபால், தான் ரவியின் நேர்மைகண்டு ஆறுமாத காலமாக ரவிக்கே தெரியாமல் ரவியை பின்தொடர்ந்து, அவரை காதலிக்கத் தொடங்கியவர் என்பதையும் மறந்து அரவிந்த் சிவசாமி 'அலைஸ்' ஜெயம் ரவியை பிரிகிறார். ஜெயம் ரவி அதுப்பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் சூரி, வக்கீல் சுப்பு பஞ்சு, நேர்மையான ஏட்டு தம்பி ராமைய்யா, உண்மை டிவி. 

அபாரதீப்பந்தம் நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் மற்றும் நேர்மையான அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் உதவியுடன் பல்வேறு துறைகளில் இருக்கும் ஊழல் பேர்வழிகள் 147 பேருக்கு உண்மை டி.வி. கோபிநாத் ஆப்பு வைக்கிறார். அதில் ரவியை அடித்து துவைத்த போலீஸ்காரர்களும் அடக்கம்!

பாதிக்கப்பட்ட 147 பேரும் சேர்ந்து ஒரு குழு அமைத்து 14.7 கோடி கொடுத்து, ஜெயம் ரவி சாயலிலேயே ஆந்திராவில் இருக்கும் மற்றொரு ஜெயம் ரவியை நரசிம்மரெட்டி எனும் பெயருடைய ரவியை அழைத்து வந்து, தங்கள் மீது போடப்பட்ட வழக்குகளை நமத்து போகச் செய்து தங்களது அரசு உத்தியோகத்தையும், சலுகைகளையும் தக்க வைத்துக் கொள்ள காய் நகர்த்துகின்றனர். 

இறுதியில் வென்றது ஆந்திர ஜெயம் ரவியும், அவரது பின்னணியில் இருக்கும் 147 ஊழல் பேர்வழிகளுமா? அல்லது தமிழக ரவியா.? அமலாபாலும் அவரது காதலும் என்னவாயிற்று...? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் விடையளிக்கிறது 'நிமிர்ந்து நில்' படத்தின் மீதிக்கதை!

ஜெயம் ரவி, அரவிந்த் சிவசாமியாகவும், நரசிம்ம ரெட்டியாகவும் இருவேறு பரிமாணங்களில் பொளந்து கட்டியிருக்கிறார். அதிலும் அரவிந்த சிவசாமி ரவி, ஊழல் எதிர்ப்பாளராக அலட்டிக் கொள்ளாமல் நடித்து அசால்ட்டாக ஸ்கோர் செய்திருக்கிறார். ஆரம்பகாட்சிகளில் அநியாயங்களை கண்டு அவர் பொங்கும் காட்சிகளில் தியேட்டரே அதிர்கிறது. வளைந்து கொடுத்து போகத்தெரியாதவனை வாழத்தெரியாதவன் என சிரிப்பது தானே நம் இயல்பு, அப்படித்தான் சிரிக்கிறோம்... 

ஆரம்பகாட்சிகளில் ஜெயம் ரவியை பார்த்து, ஆனால் அதன்பின் அவர் எடுக்கு அவதாரங்களும், விஸ்வரூபங்களும் தான் 'நிமிர்ந்து நில்' படத்தில் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கும் விஷயங்கள்! வாவ், ஜெயம் ரவி வாயிலாக இயக்குநர் சமுத்திரகனி தெரிகிறார், என்ன துடிப்பு, என்ன நடிப்பு!

ஆந்திரா, ராஜமுந்திரி - நரசிம்ம ரெட்டியாக வரும் மற்றொரு ஜெயம் ரவியும், அவரது கன்னியர் புடை சூழ்ந்த ஆந்திர இருப்பிடமும் ஒருமாதிரி தெரிந்தாலும், அவரும் ஹீரோ தான் என க்ளைமாக்ஸில் நிரூபிக்கும் இடங்கள் சூப்பர்ப்! ஆனாலும் 'ஆதிபகவன்' ஜெயம் ரவிகளின் மேனரிஸங்கள் இரண்டு ரவிகளிடமும் இந்தப்படத்திலும் இருப்பது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்! (ஆனாலும் 'ஆதிபகவன்' தோல்வியையும், 'நிமர்ந்து நில்' வெற்றி ஜெயம் ரவிக்கு ஈடுகட்டிவிடும் என்பது சிறப்பு!)

''உன்னை மாதிரி நேர்மையாக எல்லா சந்தர்ப்பத்திலும் என்னால் வாழமுடியாது... ஆனால், உன்கூட வாழமுடிவு செய்துவிட்டேன்...'' என ஜெயம்ரவியை உருகி உருகி காதலிக்கும் அமலாபால், ஒருகட்டத்தில் அதே நேர்மைக்காக அவரை பிரிவது சினிமாட்டிக்காக இருக்கிறது. ஆனால், அதேநேரம் ரவியுடன், அமலாபால் திரும்ப சேருவது அமலாவின் அப்பாவும், ஊழல் பேர்வழிகளில் ஒருவர் என்பது தெரிந்ததும் வீட்டில் போராடுவது அமலாவின் பாத்திரத்திற்கும், படத்திற்கும் வலு சேர்க்கின்றன!

சூரி, இப்போதெல்லாம் கடிப்பதில்லை... கலாய்க்கிறார், ஜமாய்க்கிறார் என்பது 'நிமிர்ந்து நில்' படத்திற்கும் பலம்! கெஸ்ட் ரோலில் வரும் சரத்குமாரின் நேர்மை, 'இன்ஸ்' இம்சை அனில் மேனன், டாக்டர் நமோ நாராயணன், ஆமாம்மா அய்யாசாமி எம்.பி. ஞானசம்பந்தம், ஜட்ஜ் - சித்ரா லெட்சுமணன், ஏட்டு - தம்பி ராமையா, இன்னொரு நாயகி ராகினி திவேதி உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். அதனால் 'நிமிர்ந்து நில்' படமும் பளிச்சிடுகிறது! 

எம்.சுகுமார், எம்.ஜீவன் சகோதரர்களின் ஒளிப்பதிவு, ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசை, ஏ.எல்.ரமேஷின் படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் சமுத்திரகனியின் இயக்கத்தில் 'நிமிர்ந்து நில்' படம், பார்க்கும் ரசிகர்களையும் ஜெயம் ரவி மாதிரி லஞ்சம் கொடுப்பதில்லை... வாங்குவதில்லை... என உறுதி ஏற்க செய்வது தான் இப்படத்தின் இமாலய வெற்றி!

''அரசியல்வாதிக்கு ஆயுள் 5 ஆண்டு தான், ஆனா அவங்களுக்கு தப்பா ரூட் போட்டு கொடுக்கும் அரசு அதிகாரிகளுக்கு 58 வயசு வரை அதிகாரம்!'' என்பது உள்ளிட்ட இன்னும் பல அனல் பறக்கும் வசனங்களில் நம்மை கவரும் சமுத்திரகனி, சரத்குமாரின் காரை பறக்கவிட்டு டி.வி. லைவ் ரிலே டிரையிலர் லாரியை மோத விடுவதும், ஜெயம் ரவிகளை தேவை இன்றி மோதவிடுவதையும் தவிர்த்திருந்தார் என்றால் 'நிமிர்ந்து நில்' இன்னும் 'தில்'லாக இருந்திருக்கும்! 

ஆனாலும், ''நிமிர்ந்து நில்'' - ''சமுத்திரகனியின் - தில்'' - ''ரசிகர்களின் நெஞ்சில்!''

Monday, March 10, 2014

காதல் பிரிவால் கலங்கி நிற்கும் தயாரிப்பாளர்



வம்பு நடிகரும், பம்ளிமாஸ் நடிகையும் நாங்கள் காதலிக்கவில்லை சிங்கிள்தான் என்று ஈசியா டுவிட்டி விட்டு பிரிந்து விட்டார்கள். 

இதனால் அவர்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை. ஆனால் தயாரிப்பாளர்தான் கதிலகங்கி போய் இருக்கிறாராம். 

அவர்கள் இருவரும் நடித்த விலங்கின் பின் உறுப்பின் பெயரைக் கொண்ட படத்தை நல்ல விலை கொடுத்து வாங்கியவர்கள் இப்போது படம் எங்களுக்கு வேண்டாம் பணத்தை திருப்பிக் கொடுங்கள் என்று கேட்டு நச்சரிக்கிறாங்களாம். 

ரெண்டு பேரும் பிரிஞ்சிட்டதால படத்துல வர்ற எந்த லவ் சீனையும் ஆடியன்ஸ் ரசிக்க மாட்டாங்க தியேட்டர்ல மோசமான கமெண்டுதான் வரும். ரெண்டு பேரும் காதல்ல ஜெயிக்கிற மாதிரி கதை வச்சிருக்கீங்க நிஜத்துல பிரிஞ்சுட்டாங்க. 

படத்தோட புரமோஷனுக்கு ரெண்டு பேரும் சேர்ந்து வரமாட்டாங்க அதனால இது சரிப்பட்டு வராது பணத்தை செட்டில் பண்ணுங்கன்னு கேட்க ஆரம்பிச்சிட்டாங்களாம். 

படம் லேட்டால ஏகப்பட்ட பிரச்னையில இருக்குற அந்த மன்னாதி மன்னரான தயாரிப்பாளர் என்ன செய்றதுன்னு தெரியாமல் விழி பிதுங்கி நிக்குறாராம்.

Thursday, March 6, 2014

வல்லினம் - சினிமா விமர்சனம்



திருச்சியில் கல்லூரி ஒன்றில் நகுலும், கிருஷ்ணாவும் நண்பர்களாக படித்து வருகின்றனர். இருவரும் கூடைப்பந்து விளையாட்டில் நன்கு தேர்ச்சி பெற்றவர்கள். இவர்களுடைய விளையாட்டு அந்த கல்லூரியில் பிரபலம். 

இந்நிலையில், ஒருநாள் விளையாடிக் கொண்டிருக்கும்போது நகுல் அடிக்கும் பந்து எதிர்பாராத விதமாக கிருஷ்ணா நெஞ்சில் பட்டுவிட அந்த இடத்திலேயே கிருஷ்ணா இறந்து விடுகிறார். 

தன் நண்பன் மரணத்தை தாங்க முடியாத நகுல், அந்த கல்லூரியில் இருந்தே விலகுகிறார். மேலும், தன் நண்பன் சாவுக்கு காரணமான கூடைப் பந்தை இனிமேல் விளையாடக்கூடாது என்றும் முடிவெடுக்கிறார்.

அதன்படி, சென்னைக்கு வந்து ஒரு கல்லூரியில் சேர்ந்து படிக்கிறார். இதே கல்லூரியில் படிக்கும் மிருதுளா, சந்துரு ஆகியோர் நகுலுடன் நட்பு கொள்கிறார்கள். 

நாளடைவில் நகுலின் நடவடிக்கைகள் நாயகி மிருதுளாவிற்கு பிடித்துப்போக அவரை காதலிக்க ஆரம்பித்து விடுகிறார். நகுலும் அவளை காதலிக்கிறார். 

சந்துரு அந்த கல்லூரியில் கூடைப்பந்து விளையாட்டில் நன்கு தேர்ச்சி பெற்றவர். இருந்தும் தன்னுடைய அணியால் கல்லூரிக்கு இதுவரை ஒரு கோப்பைகூட பெற்றுத்தர முடியாத ஆதங்கத்தில் இருந்து வருகிறார். 

அதே கல்லூரியில் இறுதி ஆண்டில் படித்து வரும் மாணவர்கள் கிரிக்கெட் விளையாட்டில் கல்லூரியின் பெயரை நிலைநிறுத்திய தலைக்கணத்தில் இவர்களைப் பார்த்து கிண்டலடிக்கின்றனர். மேலும், கூடைப்பந்து விளையாட்டை தரக்குறைவாகவும் பேசுகின்றனர். 

இதனால் வெகுண்டெழும் நகுல், சந்துருவுடன் இணைந்து கூடைப்பந்து விளையாட்டின் மகத்துவத்தை அவர்களுக்கு புரிய வைக்க முடிவெடுக்கிறார். இறுதியில், கூடைபந்து விளையாட்டில் நகுல் தன்னுடைய முழு திறமையைப் பயன்படுத்தி கல்லூரிக்கு கோப்பையை வாங்கிக் கொடுத்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

இப்படத்தின் நாயகன் நகுல், ஒரு கூடைப்பந்து வீரருக்குண்டான எல்லா தகுதியும் இவருக்கு இருப்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார். மாறுபட்ட நடிப்பில் எல்லோரையும் கவர்ந்திருக்கிறார். 

கூடைப்பந்து விளையாடும்போது ஒரு அனுபவ வீரரைப் போலவே விளையாடியிருக்கிறார். கதை முழுவதும் இவரை மையப்படுத்தியே நகர்வதால், நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரம் இவருடையது. அதை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார். 

நாயகி மிருதுளாவுக்கு நாயகனை காதலிப்பது மட்டுமே வேலை என்பதால், இப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்புக் குறைவே. இருந்தாலும் பாடல் காட்சிகளில் கவர்ச்சி காட்டி ரசிக்க வைத்திருக்கிறார். 

திருச்சியில் நண்பராக வரும் கிருஷ்ணா, அங்கு பயிற்சியாளராக வரும் நடிகர் ஆதி ஆகியோர் சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கின்றனர். சென்னையில் நண்பராக வரும் சந்துருவும், நடிப்பில் நகுலுக்கு போட்டி போட்டிருக்கிறார். 

கல்லூரி முதல்வராக வரும் ஒய்.ஜி.மகேந்திரன், பயிற்சியாளராக வரும் அதுல் குல்கர்னி, கதாநாயகியின் தந்தையாக வரும் ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் நடிப்பில் மிளிர்கின்றனர். 

தமிழில் கிரிக்கெட், கபடி போன்ற விளையாட்டுக்களை மையப்படுத்தி படங்கள் வந்திருக்கிறன. ஆனால், கூடைப்பந்து விளையாட்டை வைத்து தமிழில் இதுவரை ஒரு படம்கூட வந்ததில்லை. அதை இயக்குனர் அறிவழகன் சரியாக புரிந்துகொண்டு, அழகாக படமாக்கியதற்காக பாராட்டலாம். நட்பை மையப்படுத்தி, அதில் விளையாட்டை புகுத்தி படத்தை விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறார். 

கே.எஸ்.பிரபாகரன் ஒளிப்பதிவில் கூடைப்பந்து விளையாட்டை அழகாக படமாக்கியிருக்கிறார். இவருடைய கேமரா கண்கள் படத்தின் காட்சிகள் நம் கண்களை உறுத்தாமல் இருக்க ரொம்பவும் விளையாடியிருக்கிறது. பாடல் காட்சிகளில் இவரது ஒளிப்பதிவு குளுமையாக இருக்கிறது. தமன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையும் ஓ.கே. ரகம்தான். 

மொத்தத்தில் ‘வல்லினம்’ வலிமை.

Wednesday, March 5, 2014

வடிவேலு கொடுத்த காமெடி டிப்ஸ்

விஜயகாந்த் நடித்த விருதகிரி, அஜீத் நடித்த பில்லா-2 ஆகிய படங்களில் நடித்தவர் மீனாட்சி தீட்ஷித். இவர் தற்போது வடிவேலு இரட்டை வேடங்களில் நடித்துள்ள ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன் படத்தில் நடித்துள்ளார். 
தெலுங்கு, மலையாளம், இந்தி என பரவலாக நடித்துள்ள மீனாட்சிக்கு வடிவேலுவுடன் நடித்துள்ள இந்த படம் கோலிவுட்டில் பெரிய இடத்தை பிடித்துத்தரும் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளதாம்.

காரணம் கேட்டால், இப்படம் சரித்திர பின்னணியில் உருவாகியிருந்தாலும், பக்கா கமர்சியல் படம். அந்த காலத்து கவர்ச்சிகரமான உடைதரித்து நடித்திருக்கிறேன். 

வடிவேலுவுடன் டூயட் பாடும் அதே வேளையில் காமெடி காட்சிகளிலும் நடித்திருக்கிறேன். 

சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தாலும் இதுவரை காமெடி வாய்ப்புகள்தான் எனக்கு சரியாக கிடைக்காமல் இருந்தது. ஆனால், இப்போது காமெடி படமே கிடைத்து விட்டது.

அதனால், வடிவேலு சார் கொடுத்த காமெடி டிப்ஸை உள்வாங்கிக்கொண்டு காதல் காட்சிகள் மட்டுமின்றி, காமெடியிலும் அதிக ஈடுபாடு காட்டி நடித்திருக்கிறேன் என்று சொல்லும் மீனாட்சி தீட்ஷித், வடிவேலு சாருடன் நடித்தபோது ரொம்ப ஜாலியாக இருந்தது. 

அவர் எப்போதும் கலகலப்பாகவே இருந்ததால், அந்த கதையில் அதிக ஈடுபாட்டுடன் நடிக்க முடிந்தது. 

அந்த வகையில் நான் நடித்த ஹீரோக்களில் கலகலப்பானவரும் வடிவேலுதான். நான் நடித்ததில் கலகலப்பான படமும் ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன்தான் என்கிறார் மீனாட்சி தீட்ஷித்.

Tuesday, March 4, 2014

விஜய் படத்தை கைப்பற்ற போட்டிக் கோதாவில் குதித்த நடிகைகள்

துப்பாக்கியைத் தொடர்ந்து மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தீரன் படத்தில் பிசியாக நடித்து வருகிறார் விஜய். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது. 

முதலில் வில்லனுடன் விஜய்யை மோத விட்ட முருகதாஸ், இப்போது ரொமான்ஸ் காட்சிகளில் சமந்தாவுடன் விஜய்யை மோத விட்டு வருகிறார். ஆக இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில மாதங்களில் முடிந்து விடும் என்று தெரிகிறது.


இந்த நிலையில், தனது அடுத்த படத்தை செப்டம்பர் மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளாராம் விஜய். சிம்புதேவன் சொன்ன ரொமான்ஸ் கலந்த காமெடி கதை ஓ.கே. வாகி விட்டதால், அவருக்கு கால்சீட்டை கொடுத்து விட்டாராம் விஜய். 

அப்படத்தில் விஜய்க்கு இரண்டு ஜோடிகளாம். அதில் ஒருவர்தான் பிரியங்கா சோப்ராவாம். தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையான அவர் தமிழன் படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு என்பதால் டபுள் ஓ.கே சொல்லிவிட்டாராம்.



ஆனால், இன்னொரு கதாநாயகியைத்தான் இதுவரைக்கும் முடிவு செய்யவில்லையாம். தற்போது கதை, லொகேசன் சம்பந்தப்பட்ட வேலைகள் நடந்து கொண்டிருப்பதால் அதை நிலுவையில் வைத்திருக்கிறார் சிம்புதேவன. 

ஆனபோதும், கோலிவுட்டின் சில முன்னணி நடிகைகள் அந்த வாய்ப்பை கைப்பற்ற போட்டிக்கோதாவில் இறங்கியுள்ளனர். அவர்களில் விஜய்யுடன் ஏற்கனவே நடித்த காஜல்அகர்வால், ஹன்சிகா, அமலாபால் ஆகியோர் முக்கிய இடம் பிடிக்கிறார்களாம்.

Monday, March 3, 2014

பனிவிழும் மலர்வனம் - சினிமா விமர்சனம்


புலி உறுமும் - "பனிவிழும் மலர்வனம் என விளம்பரப்படுத்தப்பட்டு வரும் "பனிவிழும் மலர்வனம் திரைப்படம் மெய்யாலுமே தமிழ் சினிமா இதுநாள்வரை கண்டிராத புலிஉறுமும் திரைப்படம் தான் என்றால் மிகையல்ல! 

அதற்காக அதன் இயக்குநர் பி.ஜேம்ஸ் டேவிட்டிற்கு ஆரம்பத்திலேயே ஒரு "ஹேட்ஸ் ஆப் சொல்லிவிடுவோம்! "ஹேட்ஸ் ஆப் யூ - பி.ஜேம்ஸ் டேவிட்!

கதைப்படி., நாயகன் அபிலாஷூம், நாயகி சானியதாராவும் காதலர்கள். இருவரும் இருவீட்டு எதிர்ப்பால் நாட்டை விட்டு(அதாங்க ஊரைவிட்டு) ஓடி, தேனி பக்கம் ஒரு காட்டில் அடைக்கலாம் ஆகின்றனர். 

அங்கு சில வெறி கொண்ட மனிதர்களிடம் சிக்கி சின்னாபின்னமாகாமல் தப்பிக்கும், அதுவும் ஒருமலைவாழ் பெண்ணால் தப்பிக்கும் இருவரும், அப்பெண்ணின் உடம்பு முடியாத சிறுவனுக்கு உதவுவதற்காக அங்கேயே சில நாட்கள் தங்குகின்றனர். 

ஒருநாள் சிறுவனின் மருத்துவத்திற்கு கிளம்பும் நால்வரும் ஒரு காட்டு புலியிடம் சிக்கி செய்வதறியாது ஒரு மரக்கிளையில் ஏறி தவிக்கின்றனர், தத்தளிக்கின்றனர். 

ஒரு முழு இரவு புலியின் கண்ணியில் சிக்கிய அதன் குட்டியும் அந்த இடத்தை விட்டு நகர மறுக்க., புலியிடமிருந்து உடல்நிலை மோசமான நிலையில் இருக்கும் தன் மகனையும், மற்றவர்களையும் காக்க மரத்தை விட்டு இறங்குகிறார் அந்த தாய், கண்ணியில் மாட்டிக்கொண்டு இருக்கும் புலிக்குட்டியை மீட்கும் அவர், புலியிடம் சிக்கி சிதைகிறார். சிறுவனும், காதலர்களும் உயிர் பிழைக்கின்றனர். 

தன் மகனுக்காக உயிரை இழந்த அந்த தாயின் வாயிலாக தாய்மையின் புனிதம் உணர்ந்து காதலை துறந்து, சிறுவனை அவனது தந்தையிடம் சேர்த்து விட்டு தங்களது பெற்றோரை நோக்கி புறப்படுகின்றனர் காதலர்கள். 

அறிமுகம் அபிலாஷ், சானியதாரா, வர்ஷா அஸ்வதி, பாவா லெட்சுமணன், ஜெகன்.ஜி, செந்தியாதவ், அனுராதா, செவ்வாளை சுருளிமனோகர் உள்ளிட்டோர் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். புலியும், அதன் குட்டியும் கூட பிரமாதம். 

புலியையும் அதன் உறுமலையும் கிராபிக்ஸோ, ஸ்பெஷல் எபெக்ட்ஸோ, எப்படியோ இயக்குநர் நம் கண்முன் மிரட்டலாக, இதுவரை தமிழ் சினிமாவை யாரும் காட்டிராத அளவிற்கு உலாவவிட்டிருக்கிறார். அது ஒன்றுக்காகவே "பனிவிழும் மலர்வனம் படத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.

"லைப் ஆப் பை ஹாலிவுட் ஸ்டைலில் புலியையும், அதன் உறுமலையும் நம் கண்முன் ரியலாக உலாவவிட்டிருக்கும் இயக்குநர், சில இடங்களில் கோட்டைவிட்டிருப்பதும் தெரிகிறது. 

குறிப்பாக மரக்கிளையில் இருக்கும் ஹீரோ அபிலாஷின் ரத்தத்தை ஒரு சந்தர்ப்பத்தில் ருசிபார்க்கும் காட்டுபுலி க்ளைமாக்ஸில் நாயகரையும், நாயகி மற்றும் அந்த சிறுவனுடன் கோட்டை விட்டுவிட்டு, புலிக்குட்டியை காபந்து செய்ய வரும் சிறுவனின் தாயரை கடித்து குதறுவது லாஜிக்காக இடிக்கிறது (பொதுவாக புலிமாதிரி பிராணிகள் முதலில் நுகர்ந்த ரத்த வாடை உடைய மனிதர்களை தான் சுவாகா செய்யும் என்று எங்கோ படித்த ஞாபகம்...)

என்.ராகவ்வின் இருட்டிலும் மிளிரும் ஒளிப்பதிவு, பி.ஆர்.ரஜின் மரட்டும் இசை உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் பி.ஜேம்ஸ் டேவிட்டின் எழுத்து-இயக்கத்தில், "பனிவிழும் மலர்வனம் - தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதிய புலி உறும்பும் ""திகில் வனம்!

Saturday, March 1, 2014

நண்பர்களுக்கு கண்டிஷன் போடும் காமெடி நடிகர்

பரோட்டா நடிகர், நடிக்க வந்த புதிதில் அவருக்கு ஏராளமான நண்பர்கள் இருந்தார்களாம். 

வாய்ப்புகள் இல்லாமல் இருந்த சமயத்தில் இவர்கள்தான் பரோட்டா நடிகருக்கு பல்வேறு உதவிகளை செய்தார்களாம். 

அவர்களுடன் சகஜமாக பழகிவந்த பரோட்டா நடிகர் தற்போது, புகழின் உச்சிக்கு சென்று விட்டார். 

தங்களுடைய பழைய நட்பை மனதில் வைத்து நண்பர்கள் அனைவரும் அவருக்கு போன் செய்து நலம் விசாரித்தால் தன்னை சார் என்று மரியாதையாகத்தான் அழைக்க வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறாராம்.