Tuesday, August 26, 2014

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மௌனராகம் படத்தை ரீமேக் செய்யும் மணிரத்னம்

மணிரத்னத்தின் அடுத்தப் படம் பற்றிய செய்திகளே கடந்த சில நாட்களாக அதிகம் தென்படுகின்றன. 

மணிரத்னத்தின் அடுத்தப் படத்தின் ஹீரோ என்று தெலுங்கு நடிகர்கள் மகேஷ்பாபு, நாகார்ஜுனா, அவரது மகன் நாக சைதன்யா ஆகியோரது பெயர்கள் அடிபட்டன. 

பின்னர் பாசிலின் மகனும் அண்மையில் நடிகை நஸ்ரியாவை திருமணம் செய்து கொண்டவருமான மலையாள நடிகர் ஃபகத் பாசில் பெயர் அடிபட்டது. பிறகு அவரும் இல்லை என்றாகி, சமீபநாட்களாக மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் பெயர் அடிபட்டு வருகிறது. 

அது மட்டுமல்ல, அலைபாயுதே படம் போல் இளமையான காதல் கதையை இயக்கப்போகிறார் என்றும் சொல்லப்படுகிறது.

லேட்டஸ்ட் தகவல் என்ன தெரியுமா? தன்னுடைய அடுத்தப்படமாக மணிரத்னம் இயக்கவிருப்பது, மௌனராகம் படத்தின் ரீமேக்கைத்தான். 

கார்த்திக் நடித்த வேடத்தில் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் நடிக்க, மோகன் நடித்த வேடத்தில் நிவின் பாலி நடிக்கிறார். நேரம், ட்ராபிக், த மெட்ரோ, பெங்களூர் டேஸ் என மலையாளத்தில் தொடர்ந்து வெற்றிப்படங்களில் நடித்து வருபவர் இவர்.

மலையாளத்தில் பெரிய அளவில் பிசினஸ் பண்ணும் திட்டத்தில்தான் துல்கர் சல்மான், நிவின் பாலி ஆகியோரை நடிக்க வைக்க இருக்கிறார் மணிரத்னம். இந்தப்படத்தை ஹிந்தியிலும் நேரடிப்படமாக வெளியிட இருக்கிறார். 

அதனால்தான், கதாநாயகியாக அலியாபட் என்ற பாலிவுட் நடிகையை தேர்வு செய்து இருக்கிறாராம். மௌனராகம் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த பி.சி.ஸ்ரீராமையே தற்போது எடுக்க உள்ள படத்துக்கும் ஒளிப்பதிவாளராக கமிட் பண்ணி உள்ளார் மணிரத்னம்.

மௌனராகம் படத்தில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட அம்சம்...இளையராஜாவின் இசை. ஏ.ஆர்.ரஹ்மான் இசை இருந்தால்தான் மௌனராகம் படத்தை பெரிய அளவில் பிசனஸ் பண்ண முடியம் என்பதால் இளையராஜா தேவையில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார் மணிரத்னம்.

Sunday, August 24, 2014

சிக்ஸ் பேக்கில் களமிறங்கத் தயாராகும் ஸ்ரீசாந்த்

ஐபிஎல் கிரிக்கெட் ஊழலால் தடை விதிக்கப்பட்ட கேரள மாநிலத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், தமிழ், தெலுங்கில் தயாராகும் படம் ஒன்றில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். 

அதே சமயம் அவர் நடிக்கவும் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. 

சில வாரங்களுக்கு முன் தெலுங்கில் உள்ள பிரபல இயக்குனர்கள் சிலரைச் சந்தித்து வெளிப்படையாக வாய்ப்பு கேட்டிருக்கிறார். 

அதன் பலனாக அவரும் நடிகராக அறிமுகமாக உள்ளதாகத் தெரிகிறது. இதற்காக சிக்ஸ் பேக் உடலமைப்பைக் கொண்டு வரவும் அவர் கடுமையாகப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறாராம்.

தற்போதுதான் ஒரு தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில் பங்கு கொண்டு அவரது நடனத் திறமையை மேலும் வெளிப்படுத்தியிருந்தார். ஏற்கெனவே ஸ்ரீசாந்த் நன்றாக நடனம் ஆடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தெலுங்குத் திரையுலகத்தைப் பொறுத்தவரை நடனம் ஆடத் தெரிந்தவர்களைத்தான் ரசிகர்கள் அதிகம் ரசிப்பார்கள். 

அது ஸ்ரீசாந்திடம் ஏற்கெனவே இருப்பதால் அவருடைய அறிமுகம் அங்கு சிறப்பாக இருக்க வாய்ப்புள்ளது. தெலுங்கைத் தொடர்ந்து ஸ்ரீசாந்த், பாலிவுட்டிலும் நடிகராக அறிமுகமாக ஆசைப்படுகிறாராம். 

இனி, கிரிக்கெட் ஆட முடியாத சூழ்நிலையே இருப்பதால் திரையுலகத்திலாவது ஜொலிக்கலாம் என முடிவெடுத்திருக்கிறாராம். ஆமாம்...இங்குதான் நடிக்க எந்தத் தடையும் விதிக்க முடியாதே...

Tuesday, August 19, 2014

கதை திரைக்கதை வசனம் இயக்கம் - விமர்சனம்

இயக்குநர், நடிகர் ஆர்.பார்த்திபன், இராதா கிருஷ்ணன் பார்த்திபனாக பெயரில் "பெரிய மாற்றம் செய்து கொண்ட பின் பெரிதாக கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கி, சின்னதாக நடித்து(வந்து போகும்) இருக்கும் படம் தான் ""கதை திரைக்கதை வசனம் இயக்கம் திரைப்படம்! 

இந்தப்படத்திற்கு தலைப்பையும், கருத்துக்களையும் தந்து உதவிய படைப்பாளிகளுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும் நன்றி., திருட்டு விசிடியிலயும், இண்டர்நெட்டிலும் திருட்டு தனமா படம் பார்த்து அடுத்தவங்க உழைப்பை சுரண்டாமல் தியேட்டரில் படம் பார்க்கும் ரசிகர்களையும் வரவேற்கிறோம், உள்ளிட்ட வாசகங்களை டைட்டில் கார்டில் முன்னதாக போட்டு "கதை திரைக்கதை வசனம் இயக்கம் எனும் டைட்டிலை மிளிர விட்டதும், ஆர்ட்டிஸ்ட், டெக்னீஷியன் லிஸ்ட்டுகளை ஒளிர செய்து எழுத்தும், இயக்கமும் எனும் கார்டுக்கு பதிலாக இந்தப்படத்தின் தலைப்பாய்... இராதா கிருஷ்ணன் பார்த்திபன் எனும் இடத்தில் தொடங்கும் பார்த்திபன் "டச் படம் முழுக்க பரவி, விரவி கிடப்பது தான் "க.தி.வ.இ படத்தின் பெரும் பலமும், பலவீனமும்!

முற்றிலும் புதுமுகங்களான ஏழெட்டு யுவன், யுவதிகளுடன் ஆர்யாவும், அமலாபாலும் முக்கியபாத்திரத்தில் நடிக்க, அவர்களை காட்டிலும் முக்கிய பாத்திரத்தில் தம்பி ராமைய்யாவும் நடித்திருக்கிறார்! 

விஷால், விஜய்சேதுபதி, பிரகாஷ்ராஜ், டாப்சி உள்ளிட்ட நட்சத்திரங்களை கெஸ்ட் ரோலிலும், விமல், பரத், ஸ்ரீகாந்த், சாந்தனு, இனியா, ஐஸ்வர்யா உள்ளிட்டவர்களை ஒரு புரமோஷன் பாடலுக்கும் ஆங்காங்கே டைரக்ஷ்ன் "டச் ஆக புதுமை எனும் பெயரில் தானும் தலைகாட்டி மொத்த படத்தையும், ‛‛A Tribute to 100 years of Indian Cinema'' என பப்ளிசிட்டி செய்து ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று நாட்டுபற்றுடன் படத்தை திரைக்கு கொண்டு வந்திருக்கும் இராதாகிருஷ்ணன் பார்த்திபனுக்கும், அவரது பயாஸ்கோப் பிலிம் பிரேமர்ஸூக்கும் ஓர் ராயல் சல்யூட் அடிக்கலாம்! அதற்காக "கதை திரைக்கதை வசனம் இயக்கம் எனும் டைட்டிலுக்கு கீழேயே, ‛‛A Film without Story'' என புதுமையாக எழுதியிருக்கும் பார்த்திபனுக்கு, என்னதான் புதுமை என்றாலும் எத்தனை துணிச்சல்?

சரி அப்படி என்ன தான் கதை? கதையே இல்லை என பார்த்திபனே கூறும்போது "க.தி.வ.இ படத்தில்...? என்ன என பகுத்தெறிந்து பார்த்தோமென்றால்... கோடம்பாக்கத்தில் சினிமா கனவுகளுடன் போராடும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கை போராட்டங்கள் தான் இப்படத்தின் கரு, கதை, களம் எல்லாம்! 

அதிலும் சந்தர்ப்ப சூழ்நிலையால் சம்சாரி ஆன ஓர் இளம் இயக்குநரின் வீட்டுக்கு ‛உள்ளே வெளியே' போராட்டத்தையும், அவருக்கு உதவியும், உபந்திரமும் பண்ணும் சுற்றம், நட்பு மற்றும் சொந்த பந்தத்தையும் கட்டம் கட்டி தன் பாணி கிண்டல், கேலி, நக்கல், நையாண்டியுடன் சீன் பை சீன் செதுக்கியிருக்கிறார் இராதாகிருஷ்ணன் பார்த்திபன். 

பார்த்திபனின் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்டு இயக்குநர் வாய்ப்பு தேடி அலையும் இளைஞராக நடித்திருக்கும் புதுமுகம் தமிழில் தொடங்கி அவரது காதல் மனைவியாக வரும் புதுமுகம், இயக்குநராக ஆக துடிக்கும் இணை, துணை இயக்குநர்களாக வலம் வரும் இளைஞி, இளைஞர்கள் மற்றும் 2 பொண்டாட்டி, 28 வயது மகள், 40 வருட அனுபவத்துடன் 58 வயதான துணை இணை இயக்குநராகவே போராட்டகரமான வாழ்க்கை நடத்தும் தம்பி ராமைய்யா வரை சகலரும், பலே, பலே சொல்லும் அளவிற்கு பளிச்சிட்டிருக்கின்றனர். இவர்களை காட்டிலும் கெஸ்ட்ரோலில் வந்து பெஸ்ட் பர்பாமென்ஸ் கொடுத்திருக்கின்றனர் பிரபல சீனியர் கதாசிரியர் கலைஞானம், தயாரிப்பாளர் யுடிவி தனஞ்செயன் தொடங்கி ஆர்யா, அமலாபால் வரை, ஆக பிரமாதம் எனும் அளவில் நடித்திருக்கின்றனர். 

அதிலும் ஓப்பனிங் சீனில் சுனாமியால் மாட்டியபடி தவிக்கும் விஷால், வேலையில்லா இளைஞராக, ""பழைய சாதம், பெரிசா? பிரியாணி பெரிசா? என பெற்ற தாயிடம் கேள்விகேட்டு பிரியாணி ஒரு மணிநேரத்தில் செஞ்சிடுவாங்க, பழையது ரெடியாக ஒன்றரை நாள் வேண்டும், அதனால் பழைய சாதம் தான் பெரிசு என்றபடி... சீலிங்பேனை கழட்டிபோகும் விஜய் சேதுபதி, ஈழத்தில் குண்டடிப்பட்டு கிடக்கும் நிலையிலும் கற்பை காபந்து செய்து கொள்ள வீணை கம்பியால் கழுத்தை அறுத்துக் கொண்டு மாண்டுபோகும் டாப்சி, பிரம்மா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டவர்களும் "க.தி.வ.இ படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கின்றனர்.

எங்கேயும் எப்போதும் சத்யாவின் பின்னணி இசை, ஷரத், விஜய் ஆண்டனி, எஸ்.எஸ்.தமன், அல்போன்ஸ் ஜோஸ் உள்ளிட்டவர்களின் பாடல்கள் இசை, ராஜரத்தினத்தின் ஒளிப்பதிவு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்டுகள் இருந்தும், இயக்குநர் பார்த்திபனின் "டச் சில இடங்களில் ஓவர் டோஸாகி விடுவது தான் "கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் பலமும், பலவீனமும்! 

குழப்பமான கதைகளமும், காட்சிபடுத்தலும் வித்தியாசம் என்ற பெயரில் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், முன்பாதியைவிட விறுவிறுப்பாக படமாக்கபட்டிருக்க வேண்டிய பின்பாதி படம் அவ்வாறு படமாக்கப்படாமல் இருப்பது, பின்னால் வருவதை முன்கூட்டியே அறியும் "இன்துசிஸ் இத்யாதி இத்யாதி விவகாரங்கள், பிரிவுகள், சோகங்கள், முடிவை சரியாக சொல்ல முடியாத க்ளைமாக்ஸ் என சற்றே போரடிக்கிறது.

சினிமாக்காரர்களுக்கு சட்டென புரியும் இக்கதை, வெகுஜனங்களுக்கும் புரியும் வகையில் இன்னும் தெளிவாக சொல்லப்பட்டிருந்ததென்றால், "கதை திரைக்கதை வசனம் இயக்கம் மொத்தபடமும், சினிமா விழாக்களில் ஜொலிக்கும் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் போலவே இருந்திருக்கும்! இன்னும் இனித்திருக்கும்!!

Sunday, August 17, 2014

நயன்தாரா, த்ரிஷாவுக்கு அதிர்ச்சி கொடுத்த சமந்தா

பாணா காத்தாடி படத்திலேயே கவர்ச்சி கதவுகளை திறந்து விட்டவர்தான் சமந்தா. அதையடுத்து ஆந்திர சினிமாவில் பல நடிகைகள் துகிலுரிந்து நின்றதைப்பார்த்து சமந்தாவும் அதிரடி கிளாமர் நடிப்புக்கு தயாரானார். 

ஆனால், அவரை சார்ந்தவர்கள் உனது உடல்கட்டுக்கு கிளாமர் செட்டாகாது என்று சமந்தாவுக்கு அட்வைஸ் செய்தனர். அதனால், அவரும் கிளாமருக்கு தடை விதித்து நடித்து வந்தார்.

இருப்பினும், மிதமான கிளாமர் மூலம் ஆந்திர சினிமாவில் நம்பர் ஒன் நடிகையானார். 

ஆனால், தமிழில் நீதானே என் பொன்வசந்தம் படம் வரை ஹோம்லியாகவே நடித்து வந்த சமந்தா, அஞ்சான், கத்தி படங்கள் மூலம் கிளாமர் குயினாக அவதரித்துள்ளார். 

அதிலும் அஞ்சானில் டூ-பீஸ் மட்டுமின்றி பிகினி உடையணிந்து சமந்தா நடித்திருப்பது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ள அதே வேளையில், மார்க்கெட்டில் இருககும் பல நடிகைகளுக்கு பெரிய அதிர்ச்சியாகியிருககிறது.

குறிப்பாக, ஏற்கனவே பிகினியில் கலக்கிய நயன்தாரா மற்றும் த்ரிஷா போன்ற நடிகைகளே சமந்தாவைக்கண்டு ஆடிப்போய் இருக்கிறார்கள். 

இதன்காரணமாக, அடுத்து டோட்டல் முன்னணி ஹீரோக்களின் படவாய்ப்புகளும் சமந்தா பக்கம் திரும்பி விடுமே என்று பெருத்த கவலையில் இருக்கும் இவர்களில், நயன்தாரா மீண்டும் பிகினிக்கு மாற நினைக்காத போதும், த்ரிஷாவோ, இது கடைசி ரவுண்டு. 

அதனால் நாமும் பிகினி அவதாரம் எடுத்தாலென்ன என்று யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.

த்ரிஷா பிகினி உடையணிந்தால் எப்படி இருக்கும்? ரசிக மகா ஜனங்களே கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்...

Tuesday, August 12, 2014

ஏழு தோல்விக்குப் பிறகு தனுஷூக்கு கிடைத்த வெற்றி

2011 ஆம் ஆண்டு வெளியான ஆடுகளம் படத்துக்குப் பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் பாக்ஸ்ஆபிசில் வெற்றிப்படங்கள் இல்லை. 

சீடன், மாப்பிள்ளை, வேங்கை, மயக்கம் என்ன, 3, மரியான், நய்யாண்டி என கடந்த சில வருடங்களாக தொடர்ந்து தோல்விப்படங்களைக் கொடுத்து வந்தார் தனுஷ். 

ஜூலை 18ஆம் தேதி வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தின் வெற்றி தனுஷுக்கு மிகப்பெரிய உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. 

வேலையில்லா பட்டதாரி படத்திற்கு உலகமெங்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததன் காரணமாக, படம் வெளியான முதல் மூன்று நாட்களிலேயே சுமார் 15 கோடிகளை வசூல் செய்து சாதனை புரிந்தது.

உலகளவில் மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்ததினால் விஐபியின் முதல் வார வசூல் 20 கோடிகளைத் தொட்டது. முதல் வாரம் மட்டுமல்லாமல் அதற்கு அடுத்த வாரமும் விஐபியின் வசூல் குறையவில்லை. 

ஜிகர்தண்டா படத்தை தள்ளிப்போட வைத்ததால், வேறு எந்த பெரிய படமும் அப்போது ரிலீஸாகவில்லை. எனவே போட்டியில்லாமல்போய் வேலையில்லா பட்டதாரி திரைப்படம் இரண்டாவது வாரமும் நல்ல வசூலைக் குவித்தது. 

மூன்றாவது வாரத்தில் ஜிகர்தண்டா படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றதால், விஐபியின் வசூல் கொஞ்சம் குறைந்தாலும் பெரிய பாதிப்பில்லை.

தற்போதைய சூழலில் மூன்றாவது வாரத்திற்கு மேல் எந்த ஒரு படமும் தாக்குப்பிடிப்பதில்லை என்ற சூழலில் தற்போது 25 நாட்களை எட்டியுள்ளது விஐபி. 

தமிழகம் மட்டுமல்லாமல் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா உட்பட வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பு! தனுஷ் நடித்த படங்களிலேயே வெளிநாட்டில் முதல் முறையாக பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது விஐபி படத்துக்குத்தான். 

25 நாட்களில் உலகளவில் கிட்டத்தட்ட 50 கோடி ரூபாயை வசூலித்துள்ளது விஐபி. தனுஷ் படங்களிலேயே அதிக அளவில் வசூல் செய்திருக்கும் படம் என்ற பெருமை வேலையில்லா பட்டதாரி படத்துக்குக் கிடைத்திருக்கிறது.

Saturday, August 9, 2014

விருது நிறுவனம் மீது கோபத்தில் இருக்கும் பிரம்மாண்ட இயக்குனர்

தமிழ்த் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயர் எடுத்த ஜென்டில்மேனான அந்த இயக்குனர் தற்போது இயக்கி வரும் ஒற்றை எழுத்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான விருது நிறுவனம் மீது கடும் கோபத்தில் இருக்கிறாராம். 

அந்த நிறுவனம் கடந்த சில வருடங்களாகவே திட்டமிட்டபடி படத்தை வெளியிடாமல் பல காரணங்களுக்காக படத்தை தாமதப்படுத்தி வெளியிட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

கடந்த மாதம் அவர்கள் தயாரிப்பில் வெளிவந்த 'கல்யாணம்' படம் முடிந்து பல மாதங்களான பின்னரும் தேதியை அறிவித்து, அறிவித்து தள்ளி வெளியிட்டதால் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமலே போய்விட்டது என்கிறார்கள்.

தற்போது வெற்றியை தன்னுடைய பெயருடன் இணைத்திருக்கும் நாயகன் நடித்துள்ள 'உலகம்' படத்தையும் இதோ, அதோ என்று தள்ளித் தள்ளி வெளியீட்டுத் தேதியை சொல்லிக் கொண்டேயிருக்கிறார்களாம். அதோடு உலக நாயகன் நடிக்கும் படம் வேறு தயாராகி முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறதாம். 

இப்படி பெரிய படங்களால் விருது நிறுவனம் விக்கித்துப் போயிருக்கிறதாம். ஒரு படத்தை முடித்து விட்டே வெளியிட முடியாமல் தவிக்கும் நிறுவனங்களுக்கு மத்தியில் ஒரே நேரத்தில் இத்தனை படங்களை ஆரம்பித்து வைத்து எதற்கு தடுமாற வேண்டும் என்று பிரம்மாண்ட இயக்குனர் ஒரு யோசனை சொன்னாராம். 

அதாவது, அவருடைய பிரம்மாண்ட ஒற்றை எழுத்து படத்தை வேறு நிறுவனத்திற்கு தானே மொத்தமாக வியாபாரம் செய்து கொடுத்துவிடுகிறேன், அவர்களுக்குத் தாருங்கள் என்றாராம். 

ஆனால், விருது நிறுவனம் அதெல்லாம் முடியாது, தாங்களே படத்தை வெளியிட்டுக் கொள்கிறோம் என்று கறாராக சொல்லி விட்டார்களாம். 

இதனால் அந்த நிறுவனத்தின் மீது கடும் கோபத்தில் இருக்கிறாராம் பிரம்மாண்ட இயக்குனர். இரண்டு வருடமாக கஷ்டப்பட்டு எடுத்த படம், சரியான நேரத்துல வந்து ஆச்சரியப்படற வெற்றியைத் தரணுமேன்னு கவலையாக இருக்கிறாராம் இயக்குனர்.

Tuesday, August 5, 2014

அமீர்கானுக்கு எதிரான சர்ச்சையை கிண்டல் அடித்த ஷாருக்கான்

அமீர்கானின் புதிய படமான பிகே.,விற்காக அவர் நிர்வாணமாக, டேப்ரிக்கார்டரால் மறைத்தபடி நிற்பது போன்ற போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. 

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் படத்தின் ஹீரோ அமீர்கானுக்கு எதிராக மட்டுமின்றி அந்த படக்குழுவினருக்கும் எதிராக பெரும் எதிர்ப்புக்களை ஏற்படுத்தியது.

அமீர்கானுக்கு எதிராக எழுந்துள்ள சர்ச்சை கருத்துக்கள் தொடர்பாக சமீபத்தில் நிகழச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கேள்வி எழுப்பினார். 

அப்போது ஷாருக்கான் பேசுகையில், அமீர்கான் தனது இடுப்புக்கு கீழ் ஏதும் வைக்கவில்லை என்றால் அப்போது தான் அது ஆபாசம்...இடுப்புக்கு கீழ் ஏன் அதை வைத்துள்ளார் என்பதை தான் உலகத்தார் சர்ச்சையாக்கி பார்க்கிறார்களோ என கிண்டலாக கூறி சிரித்தார்.

Monday, August 4, 2014

தனுஷின் அடுத்த இந்தி படம் தயார்

ராஞ்சனா படம் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்த தனுசுக்கு அப்படம் எதிர்பாராத வெற்றியை கொடுத்தது. 

அவர் அப்படத்தில் நடித்தபோது பாலிவுட்டின் ஆஜானபாகு நடிகர்களெல்லாம் இவர் என்ன பெரிதாக சாதித்து விடப்போகிறார் என்ற கணக்கில்தான் பார்த்தனர். 

ஆனால், அப்படம் வெளியானபிறகுதான் தனுசுக்குள் இருக்கும் மெகா நடிகனைப்பார்த்து அசந்துபோய் நின்றனர்.

அதோடு, அந்த படமும் ஒரு வாரத்திலேயே 100 கோடி வசூலித்து இந்தி சினிமாவின் வசூல் சாதனை படப்பட்டியலில் சேர்ந்து கொண்டது. 

அதனால்தான், தற்போது அமிதாப்பச்சன் நடிக்கும் ஷமிதாப் படத்திலும் மாற்றுத்திறனாளி வேடத்தில் நடித்து வருகிறார் தனுஷ். 

இப்படத்தில் தனுஷின் நடிப்பை பார்த்து தனது டுவிட்டரில் அவ்வப்போது பாராட்டி வருகிறார் அமிதாப்பச்சன்.

இந்த நிலையில், தற்போது தமிழில் தனுஷ் நடித்து வெளியாகியுள்ள வேலையில்லா பட்டதாரி படத்தையும் அடுத்து இந்தியில் ரீமேக் செய்யும் வேலைகள் நடைபெற உள்ளதாம். 

தமிழில் நடித்த தனுஷே நாயகனாக நடிக்க, மற்ற நடிகர்-நடிகைகள் அனைவரும் பாலிவுட் கலைஞர்கள் நடிக்கிறார்களாம். விரைவில் இப்படம் பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது.