Saturday, May 31, 2014

லொள்ளு சபா ஜீவா வெளியிட்ட கோச்சடையான் ஆதாரம்

கோச்சடையான் படத்தில், ரஜினிக்கு பதிலாக மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் நடித்தது சின்னத்திரை காமெடி நடிகர் லொள்ளு சபா ஜீவாதான் என்ற செய்தி நீண்டகாலமாகவே உலவிக்கொண்டிருக்கிறது. 

இந்த செய்தியை திரையுலகினர் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. ரஜினி ரசிகர்களோ இதை நம்பவே இல்லை. 

இந்நிலையில் அதை உண்மை என நம்ப வைப்பதுபோல் தற்போது ஒரு புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் கோச்சடையான் படத்தில் ரஜினிக்கு பதிலாக பல முக்கிய காட்சிகளில், லொள்ளு சபா ஜீவா நடித்திருப்பது உண்மை என தெரிய வருகிறது.

தற்போது வெளியாகி உள்ள அந்த புகைப்படத்தில்... மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் நடிக்கும்போது நடிகர்கள் அணியும் விசேஷ உடையில் காட்சியளிக்கிறார் லொள்ளு சபாஜீவா. 

சினிமாவில் ஆபத்தான காட்சிகளில் கதாநாயகர்களுக்கு பதிலாக டூப் கலைஞர்கள் நடிப்பது வழக்கம்தான். 

ஆனால் கோச்சடையான் படத்தில் மோஷன் கேப்சர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதால், ஆபத்தான காட்சியில் நடிக்க வேண்டிய அவசியமே கிடையாதே... அப்புறம் என்னத்துக்கு டூப் வைத்து எடுக்க வேண்டும்?

ரஜினிக்கு உடல்நிலை சரியாகி மீண்டும் அவர் நடிக்க வந்தபோது, மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லக் கூடாது என கட்டுப்பாடுகளை சிங்கப்பூர் மருத்துவர்கள் விதித்தனர். 

அதனால்தான் அதிக சிரமமில்லாமல், கோச்சடையான் படத்தை மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் எடுக்க முடிவு எடுத்தார் ரஜினி. அதிக சிரத்தையின்றி நடித்து விடலாம் என்று தீர்மானித்து கோச்சடையான் படப்பிடிப்பை தொடங்கினார்கள். ஆனால் மோஷன் கேப்சர் அரங்கினுள் படப்பிடிப்பு நடத்தியபோது ரஜினி அடிக்கடி களைத்துப்போனாராம். 

அதன் பிறகே ரஜினியை சிரமப்படுத்தக் கூடாது என்று தீர்மானித்து அவரைப்போற் பாடிலாங்குவேஜ் கொண்ட லொள்ளு சபா ஜீவாவை வர வழைத்து நடிக்க வைத்திருக்கிறார்கள். 

தீபிகா படுகோனுடன் உள்ள சண்டைக் காட்சி உள்ளிட்ட முக்கியமான காட்சிகளில் ரஜினிக்கு பதில் ஜீவா நடித்துக் கொடுத்திருக்கிறார்.

Thursday, May 29, 2014

லிங்காவுக்காக பஞ்ச் டயலாக் ரெடி பண்ணிய சந்தானம்

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் ஹீரோவாக நடித்து விட்ட சந்தானம், அந்த படம் வெற்றி பெற்றிருப்பதால், மிகுந்த உற்சாகத்தில இருக்கிறார். 

ஆனபோதும், அடுத்து மீண்டும் கதாநாயகனாக நடிப்பேன் என்று சொன்ன அவர், இப்போது சில படங்களில் காமெடியனாக நடிக்க சான்ஸ் கிடைத்திருப்பதால், ஹீரோ வேடத்துக்கு ஒரு சிறிய இடைவெளி கொடுத்து விட்டு பின்னர் நடிக்கலாம் என்று முடிவெடுத்துள்ளார்.

குறிப்பாக, எந்திரனுக்குப்பிறகு மீண்டும் ரஜினியுடன் லிங்கா படத்தில் நடிக்க சான்ஸ் கிடைத்திருப்பது சந்தானத்திற்கு பெரிய எனர்ஜியாக உள்ளது. 

காரணம், எந்திரனில் ரஜினியுடன் பெரிய அளவில் காமெடி பண்ண சான்ஸ் கிடைக்கவில்லை. ஆனால், இந்த லிங்காவிலோ ரஜினியின் நண்பராக படம் முழுக்க அவருடன் வருகிறாராம்.

ஏற்கனவே ரஜினியும் காமெடியாக நடிப்பதில் வல்லவர் என்பதால், இரண்டு பேரும் சேர்ந்து காமெடியில் கலக்கி எடுக்கப்போகிறார்களாம். 

விரைவில் நடைபெறவிருக்கும் லிங்கா படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பின்போது ரஜினியுடன் நடிக்கவிருக்கும் சந்தானம், ஏற்கனவே அப்படத்தின் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் காமெடி டயலாக்குகளை எழுதுவதில் சிறந்தவர் என்றபோதிலும தனது பங்குக்கும் சில பஞ்ச் டயலாக்குகளை ரெடி பண்ணி வைத்திருக்கிறாராம். 

அதை படத்தில் பயன்படுத்திக்கொள்ள ரஜினி, கே.எஸ்.ரவிக்குமார் இருவரும் ஓ.கே சொல்லிவிட்டால், இளவட்ட ஹீரோக்களுடன் கலக்குவது போன்று ரஜினியுடனும் காமெடி காட்சிகளில் கலக்கல் பண்ணுவாராம் சந்தானம்.

Tuesday, May 27, 2014

ஆந்திராவிலும் கோச்சடையானுக்குப் பின்னடைவு

ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, சரத்குமார மற்றும் பலர் நடித்து வெளிவந்துள்ள கோச்சடையான் திரைப்படம் வெளியான சில தினங்களுக்குள்ளேயே உலகம் முழுவதும் சுமார் 42 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் நேற்று தெரிவித்தது.

ஆனால், தமிழில் மட்டுமே படத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும், மற்ற மொழிகளில் கோச்சடையான் பலமான போட்டியைச் சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

ஹிந்தியில் வெளியான 'ஹீரோபான்டி' படம் கோச்சடையானுக்கு போட்டியாக விளங்குவது போல், இந்திய சினிமாவில் முக்கிய திரையுலகான தெலுங்கிலும் கோச்சடையானுக்குப் போட்டியாக 'மனம்' திரைப்படம் விளங்கி வருகிறது.

ஆந்திரத் திரையுலகில் அனைத்து ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டு வரும் இந்த படத்தால் கோச்சடையான் வசூல் எதிர்பார்த்த அளவு இல்லையென்கிறார்கள். 

இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகிய சில தினங்களுக்குள் 'கோச்சடையான்' சுமார் 4 கோடி ரூபாயை மட்டுமே வசூல் செய்துள்ளது. ஆனால், 'மனம்' திரைப்படம் அதைவிட இருமடங்காக சுமார் 8 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய இந்திய மொழித் திரைப்படங்களுக்குத்தான் அதிக வரவேற்பு இருக்கும். 

மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளைத் தவிர மற்ற நாடுகளில் 'கோச்சடையான்' படம் 'ஹீரோபான்டி, மனம்' படங்களின் போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறதாம்.

முன்னர் திட்டமிட்டபடி கோச்சடையான் படம் மே 9ம் தேதி வெளிவந்திருந்தால் இந்த போட்டி எதுவுமில்லாமல், வசூல் ரீதியாக இன்னும் பல சாதனையை புரிந்திருக்கும் என திரையுலகத்தினர் சொல்கிறார்கள்.

Monday, May 26, 2014

இளைத்த ஐஸ்வர்யா ராய் - அசந்து போன புகைப்படக்காரர்கள்

கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள வந்த ஐஸ்வர்யா ராயைப் பார்த்து புகைப்படக்காரர்கள் அனைவருமே அசந்து போய்விட்டார்கள். 

பொதுவாக நடிகைகளுக்குத் திருமணமானால் அவர்களது இமேஜ் குறைந்து விடும். அதிலும் குழந்தை வேறு பெற்று விட்டால் கேட்கவே வேண்டாம். ஆனால், இதற்கெல்லாம் விதிவிலக்கானவர் ஐஸ்வர்யா ராய்.

சில நாட்களுக்கு முன் கேன்ஸ் திரைப்பட விழாவில் ரெட் கார்ப்பெட் வரவேற்பில் பங்கேற்க வந்த இளைத்துப் போன ஐஸ்வர்யா ராயை பார்த்து அனைவருமே வியந்து போனார்கள். 

ஒரு குழந்தைக்குத் தாய் என்று சொல்ல முடியாத அளவிற்கு, மிகவும் இளமையுடன் காட்சியளித்த ஐஸ்வர்யா ராயை நூற்றுக்கும் மேற்பட்ட புகைப்படக் கலைஞர்கள் இடைவிடாது புகைப்படம் எடுத்துத் தள்ளியிருக்கிறார்கள்.

மீன் வடிவ தோற்றம் கொண்ட அலங்காரமான உடையமைப்பில் தோற்றமளித்த ஐஸ்வர்யா ராயை ஆச்சரியத்துடன் பார்த்து பொறாமைப்பட்டவர்கள் எத்தனை பேரோ? ஐஸ்வர்யா ராய் விரைவில் 'ஜாஸ்பா' என்ற ஹிந்திப் படத்தில் நடிக்கப் போகிறாராம். 

அந்த படத்தில் பல ஸ்டன்ட் காட்சிகளில் வேறு நடிக்கப் போகிறார். அதற்காகவே கடுமையாக உடற்பயிற்சி செய்து பழைய அழகை திரும்பப் பெற்றிருக்கிறார்.

ஐஸ்வர்யாவின் வருகையால் மும்பை ஹீரோயின்களுக்கு இப்போதே கிலி வந்து விட்டது என்கிறார்கள்.

Saturday, May 24, 2014

யாமிருக்க பயமே - சினிமா விமர்சனம்

கழுகு' கிருஷ்ணா கதாநாயகராக நடித்து வெளிவந்திருக்கும் கலர்புல், காமெடி, த்ரில், திகில் திரைப்படம் தான் 'யாமிருக்க பயமே!'

கிரண் எனும் கிருஷ்ணா, காதலி ஸ்மிதா எனும் ரூபா மஞ்சரியுடன் வசதியான வாழ்க்கை வாழ வேண்டுமென ஊரை அடித்து உலையில் போடும் காரியங்களில் இறங்கி, அடிக்கடி உதைபடுகிறார். 

ஒருநாள் கிருஷ்ணாவுக்கு அவரது இறந்து போன அப்பா, கொல்லியூரில் ஒரு பெரும் பங்களாவை சொத்தாக விட்டு சென்றிருப்பது தெரிய வருகிறது.

உடனடியாக நடிகை சோனாவை கல்யாணம் செய்து வைப்பதாக கூறி அப்பாவி பாலாஜி மோகனிடம் 40 லட்சத்தை அடித்துக் கொண்டு காதலி ரூபா மஞ்சரியுடன், கொல்லியூர் போகும் கிருஷ்ணா, அங்கு சரத் எனும் கருணாகரனுடனும், அவரது சகோதரி சரண்யா எனும் ஓவியாவுடனும் சேர்ந்து, அப்பா விட்டுச் சென்ற பாழடைந்த பங்களாவை கையில் இருக்கும் காசில் புதுப்பித்து, அதை அவரது அப்பாவின் ஆசைப்படி பெரும் தங்கும் விடுதியாக்கி துட்டு பார்க்க விழைகிறார். ஆனால் அந்த ஹோட்டலுக்கு வந்து இரவில் தங்குபவர்களை எல்லாம் போட்டு தள்ளுகிறது மோகினி அனஸ்வரா எனும் பேய்!

இதுதெரியாமல் கிருஷ்ணா, ரூபா மஞ்சரி, கருணாகரன், ஓவியா உள்ளிட்டோர் ஒருத்தரை ஒருத்தர் சந்தேகப்பட்டு சண்டை போட்டுக் கொள்வதோடு, பேய் செய்த கொலைகளை எல்லாம் வெளியுலகிற்கு தெரியாமல் புதைத்து போலீஸ்க்கு பயந்து வாழ்கின்றனர். 

ஒருகட்டத்தில் பேய் இவர்களை போட்டு தள்ளியதா.? அல்லது உண்மை தெரிந்து மோகினி பேயை இவர்கள் விரட்டி அடித்தனரா.? எனும் கதையுடன் காமெடி, கலர்புல் காதல், காமநெடி, மோகினி பேய்க்கு லவ் ப்ளாஷ்பேக், போலீஸ், திரில், திகில் எல்லாம் கலந்து கட்டி வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் யாமிருக்க பயமே என பயமுறுத்தியிருக்கிறார் இயக்குநர் டி.கே.!

யாமிருக்க பயம் ஏன்? எனும் தமிழ்க்கடவுள் முருகனின் பேமஸ் வாசகத்தையே யாமிருக்க பயமே எனும் திகில் பேய் படத்தின் டைட்டிலாக்கி செம காமெடியாக த்ரில் கதை சொல்லி முதல் படத்திலேயே முத்திரை பதித்திருக்கிறார் இயக்குநர் டி.கே. எனும் டி.கார்த்திகேயன். சபாஷ்!

இயக்குநர் டி.கே. எதிர்பார்த்ததை எள் அளவும் பிசகாமல் நட்சத்திரங்கள் கிருஷ்ணா, ரூபா மஞ்சரி, ஓவியா, காமெடி கருணாகரன், மகாநதி சங்கர், பாலாஜி மோகன், மோகினி அனஸ்வரா, போஸ்வெங்கட், தேவிபிரியா, ரயில் ரவி, நமோ நாராயணா, சோனா, மயில்சாமி, ஆதவ் கண்ணதாசன் உள்ளிட்ட அனைவரும் செய்து அசத்தியிருப்பது யாமிருக்க பயமே படத்தின் பெரும்பலம்! அதிலும் மகாநதி சங்கருடன், கிருஷ்ணாவும், போலி சாமியார் மயில்சாமியுடன் கிருஷ்ணா, கருணாகரன் இருவரும் மல்லுக்கட்டும் இடங்கள் செம காமெடி!

நம்பமுடியாத பேய் கதையை, நம்பும் படியாக படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் ராம்மியும், இசையால் மிரட்டியிருக்கும் பிரசாத்.என்-னும் படத்திற்கு மேலும் பலம் சேர்த்திருக்கின்றனர். 

ஒரு சீரியஸ் சீன், ஒரு சிரிப்பு சீன், ஒரு திகில் காட்சி, ஒரு காதல் காட்சி என அழகாக கத்திரி போட்டிருக்கும் படத்தொகுப்பாளர் ஸ்ரீதர் பிரசாத்தின் பங்கும் அளப்பரியது!

ஆக மொத்தத்தில், இயக்குநர் டி.கே.இயக்கத்தில், தமிழ் சினிமாவில் புதுமுயற்சியாக வெளிவந்திருக்கும் யாமிருக்க பயமே - நல்ல கதையம்சம் இருக்க பயம் ஏன்? என கேட்க வைத்து வசூலை வாரி குவிக்க இருக்கிறதென்றால் மிகையல்ல!!

Friday, May 23, 2014

கோச்சடையான் - சினிமா விமர்சனம்



உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரஜினிகாந்தின் கோச்சடையான் 3டி அனிமேஷன் திரைப்படம், ஒருவழியாக தடை பல கடந்து, உலகமெங்கும் இன்று முதல் கோலோச்ச களம் இறங்கியுள்ளது!

கறுப்பு வெள்ளை காலத்தில், திரையுலகில் அடியெடுத்து வைத்து, ஈஸ்ட்மென் கலர், கலர் என்று பல ஆண்டுகளை கடந்து இன்று சலனபதிவாக்க தொழில்நுட்ப வடிவம் எனும் அனிமேஷன் உலகிலும் அதிரடியாக அடியெடுத்து வைத்திருக்கும் ரஜினி, அத்தொழில்நுட்பத்தை தன் மகள் செளந்தர்யா ரஜினியின் இயக்கத்தின் மூலம் மிக பிரமாண்டமாக அறிமுகப்படுத்தி வைத்திருக்கும் பெருமைக்கும் சொந்தக்காரராக திகழ்கிறார். 

திரையுலகின் மேற்கண்ட நான்காவது காலக்கட்டத்திலும், தன் கோச்சடையான் ஸ்டைலால் தனி முத்திரையை பதித்திருக்கும் ரஜினி, இப்படத்தில் கோச்சடையான், ராணா, சேனா என்று மூன்று முகங்களை காட்டி நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

இனி கோச்சடையான் ரசிகர்கள் மனதில், வெற்றி சிம்மாசனம் போட்டு கோலோச்சும் விதம் குறித்து, கதை, களம் குறித்தும், கதாபாத்திரங்கள் குறித்தும் பார்ப்போம்...

பல நூறு ஆண்டுகளாக அருகருகே இருக்கும் கோட்டைபட்டினம் நாட்டுக்கும், கலிங்காபுரி நாட்டுக்கும் பெரும் பகை. இருநாட்டு அரசர்களுக்கும் பரம்பரை பரம்பரையாக பெரும்பகை இருந்து வருகிறது... 

கோட்டைபட்டினம் நாட்டை சார்ந்த ராணா, சிறு வயதிலேயே, வீட்டை பிரிந்து காடு, மலை எல்லாம் கடந்து கலிங்காபுரிக்கு வந்து, தான் எந்த நாட்டை சார்ந்தவர் என்பதை காண்பித்து கொள்ளாமலேயே அந்த ஊர் அரசன் ஜாக்கி ஷெரப்பிற்கு, பெரியவனானதும் போர்படை தளபதியாகிறார். 

ஜாக்கியின் மகனும், இளவரசருமான ஆதியின் நட்பையும் பெறும் ராணா ரஜினி, தங்கள் கோட்டைபட்டினம் நாட்டு போர் கைதிகளை அடிமைகளாக பிடித்து வைத்திருக்கும் கலிங்காபுரி மன்னர் ஜாக்கியிடமிருந்தும், மகன் ஆதியிடமிருந்தும் காபந்து செய்ய வேண்டி அவர்களையே கலிங்காபுரி போர் வீரர்களாவும் ஆக்கி பெரும்படையுடன் கோட்டைபட்டினத்தின் மீது படை எடுக்க போகிறார் ராணா ரஜினி. 

அவ்வாறு போன இடத்தில் கோட்டைபட்டினத்தின் இளவரசரும், தன் பால்ய சிநேகிதனுமான சரத்குமாரிடம், தான் இன்னார் என்பதை புரிய வைத்து., கோட்டைபட்டின வீரர்களை சொந்த நாட்டு போர்படையில் சேர்த்து, தானும் சேர்ந்து எஞ்சிய கலிங்காபுரி வீரர்களை மட்டும் கலிங்காபுரிக்கு ஓட விடுகிறார். இதற்கெல்லாம் காரணம், ராணா ரஜினியின் அப்பா, கோச்சடையான் ரஜினி, நயவஞ்சகமாக கோட்டைபட்டினம் அரசர், நாசரால் கொல்லப்பட்டதும், அவர் போட்டு சென்ற சபதமும் தான் என்று ப்ளாஷ்பேக் விரிகிறது...

அப்பா கோச்சடையான் ரஜினி விட்டு சென்ற பணியை மகன் ராணா ரஜினி எப்படி சிரமேற்கொண்டு முடிக்கிறார். தளபதி கோச்சடையான் புகழ் பிடிக்காமல் கோட்டைப்பட்டினம் மன்னர் நாசர் அவரை கொல்லத்துணியும் அளவு செய்த சதி என்ன? கலிங்காபுரி மன்னர் ஜாக்கிக்கும், கோச்சடையானின் சபதத்திற்கும் என்ன சம்பந்தம்? 

அந்த சபதத்தை ராணா ராஜினி எப்படி நிறைவேற்றுகிறார்? கோச்சடையானின் எதிரி, துரோகிகளை ராணா ரஜினி எப்படி பழிதீர்க்கிறார்? தீபிகா படுகோன் யார்? அவரை ராணா ரஜினி காதலித்து கைபிடிப்பது எப்படி? சரத்-ரஜினியின் பால்யகால சிநேகம், மாமன்-மச்சான் பந்தமாவது எப்படி? 

மூத்த மகன் சேனாவை மிஞ்சி கோச்சடையானின் இளைய மகன் ராணா வீரனாக திகழ்வது எப்படி? எனும் எண்ணற்ற கேள்விகளுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும், பிரமாண்டமாகவும், பில்டப்பாகவும் பதில் அளிக்கும் கோச்சடையான் படத்தின் க்ளைமாக்ஸில் வந்து சேரும் சேனா ரஜினி - ராணா ரஜினியின் மோதலை கோச்சடையான் பகுதி-2ல் பார்க்கலாம் என எதிர்பார்ப்பையும் கிளப்பி விட்டு படத்தை முடிக்கிறார் இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின்.

ஹாலிவுட் படங்களுக்கு நிகரான சலனபதிவாக்க தொழில்நுட்ப வடிவம்(அதாங்க, அனிமேஷன்...) பிரமாண்ட செட்டுகள், பில்-டப்பான ஷாட்டுகள், ரஜினியின் ஸ்டைல் குதிரை சாகஸ என்ட்ரி, கப்பலில் குதிரையுடன் தாவி, தாவி ரஜினி போடும் சண்டைகள், மாறுவது ஒன்றே மாறதது, சூரியனுக்கு முன் எழு, சூரியனையே வெற்றி கொள்ளலாம், வாய்ப்புகள் அமையாது நாம் தான் அமைத்து கொள்ள வேண்டும்... உள்ளிட்ட பன்ச்கள், ஆன்மிக அவதாரங்கள், என சகலத்திலும் கோச்சடையான், ராணா என ரஜினி ஜொலித்திருக்கிறார்.

ரஜினிக்கு இணையாக, தீபிகா படுகோனும் ஆக்ஷ்னில் பொளந்து கட்டியிருக்கிறார். அனிமேஷன் என்பதையும் தாண்டி சிற்பமாக அற்புதமாக ஜொலித்திருக்கிறார் அம்மணி!

சரத்குமார், நாசர் ஜாக்கி ஷெரப், ஆதி, ஷோபனா உள்ளிட்ட எல்லோரும் பாத்திமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில், வைரமுத்து - வாலியின் வரிகள், கே.எஸ்.ரவிக்குமாரின் கதை, வசனம், ரசூல் பூக்குட்டியின் ஒலிப்பதிவு, ஆர்.மாதேஷின் கிரியேட்டிவ், ஆண்டனியின் படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் செளந்தர்யா பிரமாண்டமாக ஜெயித்திருக்கிறார்!

கோச்சடையான் , சேனா, ராணா, செங்கோடகன், வீர மகேந்திரா, பீஜூ மகேந்திரா, ரிஷி கோடம் என அரசர் காலத்து பாத்திர பெயர்களுக்கே பெரிதும் யோசித்து இருப்பார்கள் போலும்... பேஷ், பேஷ்!

மலை மீது பிரமாண்ட அரண்மனைகள், அரங்குகள், அழகிய நீர்வீழ்ச்சிகள், இன்னும் இயற்கை எழில் மிகுந்த பகுதிகள், பிரமாண்ட காலற்படை, குதிரைபடை, யானைபடை என்று நம்மை அரசர் காலத்திற்கு கொண்டு சென்று விடுகிறார் இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்த் என்றால் மிகையல்ல.

லதா ரஜினிகாந்தின் பின்னணி குரலில், படத்தின் டைட்டில் கார்டு திரையில் ஓடும் போதே ஒரு பெப் தொற்றிக் கொள்கிறது. அது இந்தி நடிகர் அமிதாப்பின் முன்னோட்டம், கதை, களம் என தொடர்ந்து அது க்ளைமாக்ஸ் வரை நீங்காது இருப்பதில் கோச்சடையான் ஜெயித்திருக்கிறான்!

சிறியவர்களுக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் மிகவும் பிடிக்கும்., பெரியவர்களுக்கும் பிடிக்கும்... எனும் அளவில் இருக்கிறது கோச்சடையான்!

ஆகமொத்தத்தில், கோச்சடையான் - கோலோச்சுகிறான் - இன்னும் கோலோச்சுவான்!!

Wednesday, May 21, 2014

6 ஆயிரம் தியேட்டர்கள் - பரபரப்பானது கோச்சடையான் வெளியீடு

கோச்சடையான் படம் வெளியாக இன்னும் இரு தினங்களே இருப்பதால் படத்திற்கான ரிலீஸ் வேலைகள் பரபரப்பு அடைந்துள்ளன. சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள படம் கோச்சடையான். 

ரஜினி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். ரஜினி ஜோடியாக இந்தி நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். கூடவே சரத்குமார், ஆதி, நாசர், ஜாக்கி ஷெரப், ஷோபனா, ருக்மணி உள்ளிட்ட ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

கே.எஸ்.ரவிக்குமாரின் மேற்பார்வையில், ரஜினியின் இளையமகள் செளந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தை இயக்கி, இயக்குநராக களம் இறங்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

இந்தியாவிலேயே முதன்முதலாக மோசன் கேப்சர் அனிமேஷன் தொழில்நுட்பத்தில் தயாராகி உள்ளது இப்படம். சுமார் 150 கோடி ரூபாய் செலவில் தயாரகி உள்ள இந்தப்படத்தை ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும், மீடியா ஒன் குளோபல் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.

பல்வேறு பிரச்னைகளால் இப்படம் ரிலீஸ் ஆவதில் அடிக்கடி தாமதம் ஏற்பட்டது. இதுவரை இப்பட ரிலீஸ் 6 முறை தள்ளிப்போய் உள்ளது. இந்நிலையில் வருகிற மே 23ம் தேதி படம் ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டு, அதற்கான வேலைகளும் பரபரப்பாக நடந்து வருகிறது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 6 மொழிகளில் இப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

உலகம் முழுக்க சுமார் 6000 தியேட்டர்களில் கோச்சடையான் வெளியாக இருக்கிறது. இதில் தமிழகத்தில் மட்டும் சுமார் 450 தியேட்டர்களிலும், கேரளாவில் 140 தியேட்டர்களிலும், ஆந்திராவில் 650 தியேட்டர்களிலும், கர்நாடகாவில் 300 தியேட்டர்களிலும், போஜ்புரி, பஞ்சாபி, இந்தி, குஜராத்தி உள்ளிட்ட மொழி பேசும் மாநிலங்களில் 1200 தியேட்டர்களிலும் ஆக மொத்தம் இந்தியாவில் மட்டும் 3000 தியேட்டர்களிலும், வெளிநாடுகளில் 3000 தியேட்டர்களிலும் கோச்சடையான் ரிலீஸ் ஆக இருக்கிறது. 

நேற்றே வெளிநாடுகளுக்கான தேவையான 3000 பிரிண்ட் காப்பிகளும் அனுப்பி வைக்கப்பட்டு விட்டன. தமிழகம் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களில் பிரிண்ட் காப்பிகள் அனுப்பி வைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.


வெளியீட்டில் சாதனையை நிகழ்த்துகிறது கோச்சடையான்!

'கோச்சடையான்' திரைப்படத்தை சென்னையில் மட்டும் 50க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட தீர்மானித்துள்ளனர். இவற்றில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில்தான் அதிகமான எண்ணிக்கையில் வெளியாகிறது. 

சென்னையில் உள்ள முக்கியமான மல்ட்டிபிளக்ஸ்களான சத்யம் எஸ்கேப் வளாகத்தில் 3 திரையரங்குகள், சத்யம் வளாகத்தில் 3 திரையரங்குகள், ஐனாக்ஸ் வளாகத்தில் 3 திரையரங்குகள், அபிராமி வளாகத்தில் 4 திரையரங்குகள், பிவிஆர் வளாகத்தில் 3 திரையரங்குகள், எஸ் 2 பெரம்பூர் வளாகத்தில் 3 திரையரங்குகள், வில்லிவாக்கம் ஏஜிஎஸ் வளாகத்தில் 4 திரையரங்குகள், ஓஎம்ஆர் ஏஜிஎஸ் வளாகத்தில் 3 திரையரங்குகள், உதயம் வளாகத்தில் 3 திரையரங்குகள், எஸ் 2 தியாகராஜா வளாகத்தில் 2 திரையரங்குகள், தேவி வளாகத்தில் 2 திரையரங்குகள், உட்லண்ட்ஸ் வளாகத்தில் 2 திரையரங்குகள் என பல திரையரங்குகளில் வெளியாகிறது.

கிழக்குக் கடற்கரைச்சாலையில் உள்ள சென்னையின் புறநகர் பகுதியான காணாத்துர் என் இடத்தில் உள்ள மாயாஜால் வளாகத்தில் 16 தியேட்டர்கள் உள்ளன. இங்கு அனைத்து திரையரங்குகளிலும் 'கோச்சடையான்' படம் மட்டுமே வெளியாகிறது. 

அதாவது இந்த மல்ட்டிபிளக்ஸ் தியேட்டர்களில் மட்டும் 100 காட்சிகள் நடைபெறவிருக்கிறது. சென்னையில் மட்டும் ஒரே நாளில் மொத்தம் 300 காட்சிகள். இதுவரை எந்த ஒரு தமிழ்த் திரைப்படமும் புரியாத மிகப் பெரிய சாதனை இது என திரையுலகினர் கூறுகின்றனர்.

Sunday, May 18, 2014

ரஜினியின் லிங்கா - ஓர் முன்னோட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதிரடியாக நடித்து வரும் படம் லிங்கா. ரஜினியின் அடுத்த படம் என்ன என்று ஆளாளுக்கு ஜோதிடம் சொல்லிக்கொண்டிருந்தபோது எல்லோருடைய கணிப்பையும் பொய்யாக்கிவிட்டு மைசூரில் களத்தில் குதித்து விட்டார் ரஜினி. லிங்கா பற்றிய முதல் தகவல் அறிக்கை இது...

* சூப்பர் ஸ்டார் எப்போதுமே நட்புக்கு மரியாதை கொடுப்பவர். அந்த வகையில் தன்னை வைத்து 25 படங்கள் இயக்கிய எஸ்.பி.முத்துராமனுக்காக பாண்டியன் படத்தில் நடித்துக் கொடுத்தார். 

தன் நண்பன் நட்ராஜுக்காக அன்புள்ள ரஜினிகாந்த் நடித்துக் கொடுத்தார். வறுமையில் வாடிய வி.கே.ராமசாமி, பண்டரிபாய்க்காக அருணாச்சலத்தில் நடித்தார். பள்ளிக்கால நண்பர்களுக்காக வள்ளி, படையப்பாவில் நடித்தார். இப்போது தனது நண்பர் ராக்லைன் வெங்கடேசுக்காகவும், தன் அண்ணன் சத்யநாராயணராவ் கெய்ட்வாட்டுக்காகவும் லிங்கா படத்தை நடித்துக் கொடுக்கிறார்.

* படத்தில் ரஜினி இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ஒருவர் குட்டி ஜமீன்தார் மாதிரி இருப்பார். முறுக்கிய மீசை, சுருள்முடி கொண்ட தோற்றம். இவர் 100 சதவிகிதம் நல்லவர். அடுத்த ரஜினி தாதா மாதிரி தலையில் கட்டிய ரிப்பன், பரட்டை தலை, விதவிதமா உடைகள் கொண்ட கேரக்டர். இவர் 25 சதவிகிதம் நல்லவர் 75 சதவிகிதம் வில்லன்.

* கதை: 50 ஆண்டுகளுக்கு முன்பு கொடூரமான தண்ணீர் பஞ்சம் வருகிறது. அதை போக்குவதற்காக ஊர் பண்ணையார் ரஜினி தன் சொந்த செலவில் ஆற்றின் குறுக்கே அணை கட்டுகிறார். ஊர் செழித்தால் தங்கள் பிழைப்பு போய்விடும் என்று கருதும் சமூகவிரோத கூட்டம் அணை கட்டும் ரஜினி பற்றி தவறான செய்திகளை ஊருக்குள் பரப்புகிறது. அதை நம்பும் ஊர் மக்கள் ரஜினியை தூற்றுகிறார்கள். இதனால் மனம் வருந்தும் ரஜினி அணையை கட்டிவிட்டு ஊரைவிட்டே சென்று விடுகிறார்.

அதன் பிறகு அணையை மக்கள் கடந்து செல்லும்போது அடிக்கடி விபத்து நடக்கிறது. சிலர் கொலை செய்யப்படுகிறார்கள். அணை கட்டிய ரஜினியை அவமானப்படுத்தியதால்தான் இப்படியெல்லாம் நடக்கிறது என்று கருதும் மக்கள் பல ஆண்டுகளுக்கு பிறகு அவரை தேடிக் கண்டுபிடித்து அழைத்து வருகிறார்கள். அவர் வந்ததும் என்ன நடக்கிறது என்பது ஒரு கதை.

* அடுத்து இன்னொரு ரஜினியின் கதை. எந்த கட்டுப்பாடும் இல்லாமல் அடிதடி, திருட்டு, கடத்தல் என வாழும் தாதா ரஜினி. அவரை போலீஸ் வலைவீசி தேட அணையில் வந்து மறைந்து தலைமறைவாக இருக்கிறார். அப்போதான் அந்த அணைக்குள் ஒரு கூட்டம் ஒழிந்து இருந்து அந்த வழியாக வருகிறவர்களிடம் வழிப்பறி செய்வது, கொலை செய்வது பெண்களை மானபங்கபடுத்துவது போன்ற காரியங்களை செய்து வருவது தெரிகிறது.

அணையை காப்பாற்ற வந்த பெரியவர் ரஜினியும், அணையில் பதுங்க வந்த வில்லன் ரஜினியும் இணைந்து எப்படி அணையை மீட்டு மக்களை காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் கதை என்று இப்போதைக்கு கசிந்திருக்கிறது.

* படத்துக்காக மைசூரில் பிரமாண்ட அரண்மணை செட்டும், அணை செட்டும் போடப்பட்டுள்ளது. அதில்தான் தற்போது படப்பிடிப்புகள் நடந்து வருகிறது.

* அணையை கட்டும் ரஜினிக்கு சோனாக்ஷி சின்ஹா ஜோடி. வில்லன் ரஜினிக்கு அனுஷ்கா ஜோடி.

* இளைய ரஜினியின் நண்பனாக வடிவேலு நடிக்க பேச்சு நடந்து வருகிறது. இன்னொரு நண்பனாக நான் ஈ சுதீப்பும், வில்லனாக ஜெகபதி பாபுவும் நடிக்கிறார்கள்.

* இரண்டு பாடல் காட்சிகள் சுவிட்சர்லாந்தில் படமாக்கப்பட உள்ளது.

* பிரியாமணி ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகளாக நடித்த சாருலதா படத்தை இயக்கிய பொன்ராம் கதை, வசனத்தை எழுதி உள்ளார். அதனை கே.எஸ்.ரவிகுமார் இயக்குகிறார்.

* படத்தின் மொத்த பட்ஜெட் 200 கோடி.

*வருகிற டிசம்பர் மாதம், அல்லது பொங்கல் ரிலீசாக படம் வெளிவருகிறது.

Tuesday, May 13, 2014

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் - சினிமா விமர்சனம்

அறை எண் 305-ல் கடவுள்", "கண்ணா லட்டு திண்ண" ஆசையா இரண்டு படங்களிலும் இரண்டு மூன்று நாயகர்களில் ஒருவராக நடித்த காமெடி நடிகர் சந்தானம், ஸோலோ ஹீரோவாக நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் "வல்லவனுக்கு புல்லும்" ஆயுதம். 

"நான்" ஈ ராஜமௌலி இயக்கத்தில், தெலுங்கில் சூப்பர்-டூப்பர் ஹிட்டான "மரியாதை ராமண்ணா"வின் தமிழ் ரீ-மேக்!

சந்தானத்தின் நெருங்கிய நண்பரும், காமெடி நடிகருமான ஸ்ரீநாத்தின் இயக்கத்தில், தமிழில் வெளிவந்திருக்கும் "வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்" எப்படி? இனி பார்ப்போம்...

கதைப்படி ஹீரோ சந்தானம், பழைய சைக்கிள் ஒன்றில் கடை கடையாக வாட்டர்கேன் போடும் வாட்டர் சப்ளையர் வேலை பார்க்கிறார். சந்தானத்தின் "கறார் முதலாளி ஒருநாள், லோன் போட்டாவது நீ "சின்ன யானை லோடு ஆட்டோ வாங்கி வந்தால் தான் உனக்கு வேலை, அதுவரை நம் பிஸினஸூக்கு இந்த ஓட்(டை)ட சைக்கிளும் ஒத்து வராது, நீயும் ஒத்து வரமாட்டாய்... என உதறிவிட, கதறி துடிக்கும் சந்தானம் காசுக்காக நாயாய், பேயாய் அலைகிறார்.

காலணா காசு கிடைத்தபாடில்லை... கடுப்பாகும் சந்தானம், அப்பா, அம்மாவை இழந்து அநாதையான தனக்கு, அடைக்கலம் கொடுத்திருக்கும் தூரத்து உறவிடம் பொழப்புக்கு என்ன செய்வேன்? என புலம்புகிறார். அந்த உறவோ, ஏன்? உனக்கென்ன குறை...? உனக்கு ஊரில் உங்க அப்பா சொத்து கொஞ்சம் இருக்கிறது என உயிலை எடுத்து காண்பிக்கிறார். 

அது கண்டு முகம் மலரும் சந்தானம் அதை கொடுங்கள், அந்த சொத்தை வித்து நான் பிழைத்து கொள்கிறேன் என்கிறார். ஆனால் அந்த உறவோ, அந்த ஊரில் பெரும் பகையும் உன் குடும்பத்திற்க இருக்கு என்பதால் தான் கடைசி வரை இந்த சொத்து விபரத்தை உன்னிடம் கூறாமல், வீட்டு வேலை செய்து உன்னை வளர்த்தார் உன் தாய்... 

அதனால் இந்த உயிலை இப்போதைக்கு உன்னிடம் தர முடியாது, நீ வெறுத்து போய் பேசியதால் உனக்கு ஆறுதல் அளிக்கும்படியாக இந்த உயிலை காண்பித்தேன், என்று கூற, பிடிவாதமாக அவரிடம் உயிலை பிடுங்கி கொண்டு அரவங்காடு எனும் அழகிய ஊரில் இருக்கும் தன் பூர்வீக சொத்தை விற்க ரயிலேறுகிறார் சந்தானம். தனக்கு ஆபத்பாந்தனாக அதுநாள் வரை இருந்த சைக்கிளையும் ஒரு தொண்டு நிறுவனத்திற்கு கொடுத்து விட்டு கிளம்பும் சந்தானம், ரயிலில் ஹீரோயினை சந்திக்கிறார். 

தன் பூர்வீக சொத்து விற்பனை சம்பந்தமாக ஊர் பெரிய மனிதரான ராயர் வீட்டுக்குபோகும் ஹீரோ சந்தானம், அங்கு அவர்கள் வழக்கப்படி விருந்தாளியாக உபசரிக்கப்படுகிறார். என்ன ஆச்சர்யம்.?! ராயரின் மகள்தான் சந்தானம் ரயிலில் சந்தித்த நாயகி ஆஷ்னா சவேரி என்பதும், அதைவிட ஆச்சர்யம், ப்ளஸ் அதிர்ச்சி, ஆஷ்னா சவேரி சந்தானத்தின் முறைப்பெண் என்பதும், ஆஷ்னாவின் அப்பா ராயரும், சகோதரர்களும் தான் 27 வருட பகையுடன் சந்தானத்தை போட்டுத்தள்ள காத்திருக்கும் பகையாளிகள் என்பதும் தான். இந்த டுவிஸ்ட். டுவிஸட்டுக்கே டுவிஸ்ட் தான் வல்லவனுக்கு புல்லும் ஆயுதத்திற்கு பெரும் ப்ளஸ்!

தங்கள் வீட்டிற்குள் கொலை செய்வதில்லை... எனும் கொள்கையுடைய ராயரும், அவரது மகன்களும் விருந்தாளியான சந்தானத்தை வெளியில் வரவைத்து கொல்ல திட்டம் தீட்டுகின்றனர். அதை தெரிந்து கொள்ளும் சந்தானம், அவர்கள் வீட்டை விட்டு வெளியில் வராமல் ஜமாய்ப்பது தான் "வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் காமெடி கதைக்களம்! இதில் அதகளம் செய்திருக்கும் சந்தானம், வீட்டை விட்டு வெளியில் வந்தாரா? பகையாளிகளை வென்றாரா? பகையை கொன்றாரா? நாயகியின் காதலை உணர்ந்தாரா.? அவரை மணந்தாரா? என்பது தான் வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கப்பட்டிருக்கும் க்ளைமாக்ஸ்!

சந்தானம் வழக்கம் போலவே வரும் சீன்களில் எல்லாம் வாய்விட்டு சிரிக்க வைத்திருக்கிறார். அதிலும் ராஜகுமாரன் கோஷ்டியுடன் அவர் செய்யும் அலும்பு செம காமெடி! ஹீரோவாக நடித்திருப்பதால் உஷாராக வழக்கமான தனது இரட்டை அர்த்த வசனங்களை எல்லாம் தவிர்த்து "பன்ச் டயலாக்கு பேசி பட்டையை கிளப்பி இருக்கிறார் மனிதர் என்றால் மிகையல்ல! அதிலும், "டைமிங்காக, ""மதுரை பெருமை பேச சசிக்குமார், விஷால் எல்லாம் இருக்காங்க, சென்னையை பற்றி பேச என்னை விட்டா யார் இருக்கா.? எனக்கேட்டும் இடத்திலாகட்டும், ""பொண்ணுங்களோட "ஆக்சலேஷன் மையிண்டு தான் பல காதல் பிரிவுக்கு காரணம் என்றும், அதையும் மீறி அப்பா அம்மா, எப்படியும் பிரிச்சுடுவாங்கக்கிற தைரியத்தல தான் பொண்ணுங் காதலிக்கவே செய்றாங்க என்றும்..., அவர் அடிக்கும் பன்ச்கள் ஆகட்டும், அதற்கு உதாரணமாக அதே ரயிலில் பிரயாணிக்கும் ஒரு ஆணையும், பெண்ணையும் வைத்து சொல்லும் ரஜினி, கமல், மாதவன், சிம்பு, டயலாக்குகள் ஆகட்டும்... இன்னும் இஷ்டத்திற்கு கொளுத்தி போடும் சிரிப்பு வெடிகளில் ஆகட்டும் தியேட்டரில் கிளாப்ஸ் அள்ளுகிறது. கீப் இட் அப் சந்தானம்!

ஆஷ்னா சவேரி, அசப்பில் சற்றே சதை போட்ட ஐஸ்வர்யா ராய் மாதிரி இருக்கிறார். நடிப்பிலும், இளமை துடிப்பிலும் கூட அப்படியே. "மிர்ச்சி செந்தில், விடிவி கணேஷ், ராஜகுமாரன் உள்ளிட்டவர்களும் ஓ.கே.!

சித்தார்த் விபினின் பின்னணி இசை பலம். பாடல்களும், அதன் இசையும் பலவீனம். (ரீ-மேக் படத்திற்கு கூட டப்பிங் படங்கள் மாதிரியே தான் பாடல்கள் இருக்க வேண்டுமா? என்ன.?!) சக்தி, ரிச்சர்ட் என்.நாதன் இருவரின் ஒளிப்பதிவும் படத்திற்கு மேலும் மெருகூட்டுகிறது. ரஜினியின் அண்ணாமலை படத்திற்குப்பின் "மிதிவண்டியையும் ஒருபாத்திரமாக்கி, அதற்கு டி.ஆர். டைப்பில் ஒரு குரலையும் கொடுத்திருப்பதற்காக இயக்குநர் ஸ்ரீநாத்தை பாராட்டலாம்!

ஆகமொத்தத்தில், ""வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் - ரசிகர்களிடம் "சந்தானத்தை ஹீரோவக்கியுள்ள ஆயுதம்!"

Monday, May 12, 2014

கோச்சடையான் படத்தை வெளியிட புதிய திட்டம்

மே 9 ஆம் தேதி வெளி வந்திருக்க வேண்டிய கோச்சடையான் படம் வெளிவரவில்லை. மாறாக மே 23 அன்று வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

காலதாமதத்துக்கு தொழில்நுட்பக்கோளாறு என்று காரணம் சொல்லப்பட்டது. 

ஆனால், கோச்சடையான்' திரைப்படம் தயாரிப்பதற்காக வங்கிகளில் சுமார் 40 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டது என்றும், அந்தத் தொகையை தயாரிப்பாளர் திருப்பி செலுத்தாததால்தான், கோச்சடையான் படத்தின் வெளியீடு தள்ளிப் போனது என்ற தகவல் பின்னர் வெளியானது.

வங்கிக் கடன் பிரச்சனையில் சிக்கியது மீடியா ஒன் குளோபல் நிறுவனம்தான். கோச்சடையான் படத்திற்காக பல கோடிகள் முதலீடு செய்ததோ மும்பையைச் சேர்ந்த ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம். 

இவ்விரு நிறுவனங்களும் இணைச் கோச்சடையான் படத்தைத் தயாரித்திருப்பதாக சொல்லப்பட்டது. 

தற்போது மீடியா ஒன் குளோபல் நிறுவனம் நிதி சிக்கலில் மாட்டி இருப்பதால், கோச்சடையான் படத்தின் முதன்மை முதலீட்டுத் தயாரிப்பு நிறுவனமான ஈராஸ் இன்டர்நேஷனல், தாங்களாகவே படத்தை வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல் அடிபடுகிறது.

அதாவது, நிதி சிக்கலில் மாட்டி உள்ள மீடியா ஒன் நிறுவனத்தை கழட்டிவிட்டு, மற்ற பிரச்சனைகளையும் தாங்களே சுமுகமாக தீர்த்துவிட்டு கோச்சடையான் படத்தை வெளியிட முடிவெடுத்திருக்கிறார்களாம். 

ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் இந்த முயற்சி வெற்றியடைந்தால் 'கோச்சடையான்' படத்தை 23ம் தேதியன்று வெளிவருவது உறுதி என்கிறார்கள் திரையுலகை சேர்ந்தவர்கள்.

Wednesday, May 7, 2014

கோச்சடையான் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போனது - முன்பதிவு நிறுத்தம்

மே 9ம் தேதி, ரஜினியின் கோச்சடையான் படம் ரிலீஸ் செய்வது உறுதிசெய்யப்பட்டு, தியேட்டரில் முன்பதிவு எல்லாம் துவங்கிய நிலையில், சில பல காரணங்களால் கோச்சடையான் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போய் உள்ளது. 

ரஜினி நடிப்பில், அவரது இளைய மகள் செளந்தர்யா இயக்குநராக களம் இறங்கியுள்ள படம் கோச்சடையான். இந்தியாவிலேயே முதன்முறையாக ஹாலிவுட் படங்களில் தயாரான மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் இப்படம் தயாராகியுள்ளது. 

3டி அனிமேஷன் படமாக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக உருவாகி வந்த இப்படம், இப்போது ரிலீஸ்க்கு தயாராகிவிட்டது. 

ஏற்கனவே ஐந்துமுறை தள்ளிப்போன ரிலீஸ் தேதி, வருகிற மே 9ம் தேதி ரிலீஸ் செய்வது உறுதி செய்யப்பட்டது. 

தமிழகத்தில் மட்டும் சுமார் 500 தியேட்டர்களில் இப்படம் ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு, இன்று முதல் முன்பதிவும் துவங்கியது. 

சென்னையில் பல மால் தியேட்டர்களில் மூன்று தினங்களுக்கு புக்கிங் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், திடீரென கோச்சடையான் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டு, முன்பதிவுகள் எல்லாம் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. என்ன காரணத்திற்காக ரிலீஸ் தள்ளிப்போகிறது என்று படக்குழு தெரிவிக்கவில்லை. 

மேலும் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற தேதியையும் படக்குழு தெரிவிக்கவில்லை. மே 23ம் தேதி ரிலீஸ் ஆகலாம் என்று கூறப்படுகிறது, ஆனால் அதுவும் உறுதி கிடையாது என்கிறார்கள்.

Tuesday, May 6, 2014

தல படத்தின் டைட்டில் என்ன? தலையை பிய்த்துக்கொள்ளும் அஜீத் ரசிகர்கள்

ஆரம்பம் படத்தில் அஜீத் நடித்து வந்தபோது படப்பிடிப்பு முடியும் வரை அதன் டைட்டீலையே அறிவிக்கவில்லை. 

இதனால், அஜீத் ரசிகர்கள் அதுவாக இருக்குமோ? இதுவாக இருக்குமோ? என்று தலையை பிய்த்துக்கொண்டார்கள். 

கடைசியில், ஆரம்பம் என்று அறிவித்தபோது. அட இதை ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தா நாங்க இவ்ளோ டென்சன் ஆகியிருக்க மாட்டோமில்ல என்று ரிலாக்ஸ் ஆனார்கள்.

அதன்காரணமாக, அதையடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்தபோது, தொடக்கத்திலேயே வீரம் என்று தலைப்பை அறிவித்து விட்டே நடிக்கத் தொடங்கினார் அஜீத். 

ஆனால், இப்போது என்ன காரணமோ மீண்டும் அவரது 55வது படத்திற்கு தலைப்பு வைக்காமல் நடித்து வருகிறார். இதனால் மறுபடியும் ரசிக கோடிகளில் ஆர்வத்தின் உச்சத்திற்கே சென்று கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில், தற்போது நடிக்கும் படத்தில் அஜீத் சத்யதேவ் என்ற போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிப்பதால். இதுதான் படத்தின் தலைப்பாக இருக்கும் என்று அஜீத்தின் ரசிகர்களே இந்த செய்தியை இணையதளங்களில் பரப்பி விட்டு வருகின்றனர். 

ஏற்கனவே ஆரம்பம் படத்திற்கு வலை, வலைதளம் என்று பரப்பியவர்கள் இப்போது சத்யதேவ் தான் தல படத்தின் டைட்டில் என்று அடித்து சொல்லி வருகின்றனர்.

இந்த சேதி கெளதம் மேனனின் கவனத்துக்கு செல்ல, இன்னும் தாமதித்தால் அவர்களே படத்திற்கு ஒரு புதிய கதையை சொல்லி, படத்தையே எடுத்து விடுவார்கள். அதனால் சீக்கிரமே டைட்டிலை அறிவித்து விடுவோம் என்று அஜீத்துடன் விவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

Monday, May 5, 2014

டுவிட்டரில் இணைந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

இன்றைய நவநாகரீக உலகம பேஸ்புக், டுவிட்டர் என்று சமூக வலைதளங்களில் மூழ்கி கிடக்கிறது. 

குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைதளங்களில் இணைந்துள்ளனர். அதிலும் அரசியல் பிரபலங்கள், திரை நட்சத்திரங்களும் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். 

இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனில் இருந்து நம்மூர் வடிவேலு வரை டுவிட்டரில் இருக்கின்றனர். 

அந்தவகையில் தமிழ் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த்தும் முதன்முறையாக டுவிட்டரில் இன்று(மே 5ம் தேதி) முதல் இணைந்துள்ளார்.

இதுகுறித்து ரஜினி அளித்துள்ள பேட்டியில், என் ரசிகர்கள் ஏராளமானோர் நான் சமூக வலைத் தளத்தில் இருக்க வேண்டும் என விரும்பினர். அவர்கள் விருப்பத்தை ஏற்று இன்று முதல் டுவிட்டரில் இணைந்துள்ளேன். 

இனி தன் சம்பந்தப்பட்ட படங்கள், மற்ற விஷயங்கள் உள்ளிட்ட அனைத்தையும் டுவிட்டர் மூலமாக பகிர்ந்து கொள்ள இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

ரஜினி டுவிட்டருக்கு வந்த சில நிமிடங்களிலேயே 85 ஆயிரம் பேர் அவரை பாலோ பண்ண தொடங்கியுள்ளனர். ரஜினி டுவிட்டருக்கு வந்ததை, டுவிட்டர் இந்தியாவின் தலைமை அதிகாரி ரிஷி ஜெட்லி வரவேற்றுள்ளார். 

இதேப்போல் சிவகார்த்திகேயன், பிரேம்ஜி அமரன், துரை தயாநிதி அழகிரி உள்ளிட்ட திரைபிரபலங்களும் ரஜினி டுவிட்டருக்கு வந்ததை வரவேற்று வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

அதிலும் நடிகை ஹன்சிகா, ரஜினி சார் டுவிட்டருக்கு வந்ததால், டுவிட்டர் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

ரஜினியின் அதிகாரப்பூர்வ் டுவிட்டர் பக்கம் இதுதான்... @superstarrajini

Sunday, May 4, 2014

உத்தம வில்லனில் கமல் தீவிரம் - விஸ்வரூபம் 2 என்னாச்சு?

விஸ்வரூபம் படம் பல வில்லங்கங்களை தாண்டி ரிலீசாகி ஹிட்டானது. விஸ்ரூபம் தயாராகும்போதே அதன் இரண்டாம் பாகத்துக்கான பெரும்பகுதி படப்பிடிப்பையும் முடித்திருந்தார் கமல். 

விஸ்வரூபம் ரிலீசுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினார். ஆண்ட்ரியா, பூஜா குமார், இசை அமைப்பாளர் ஜிப்ரான் கூட்டணியில் வேகமாக வளர்ந்தது விஸ்வரூபம் 2.

இந்த நிலையில் உத்தம வில்லன் படத்தை திடீரென அறிவித்து அதன் படப்பிடிப்பில் தீவிரமாகி விட்டார் கமல். கமலின் நண்பர் ரமேஷ் அரவிந்த் இயக்குனர், லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிப்பு. பீரியட் மற்றும் நிகழ்கால கதை கொண்ட படம். 

கமல் சென்ற நூற்றாண்டு கூத்து கலைஞனாகவும் நிகழ்காலத்தில் சினிமா நடிகராகவும் நடித்துள்ளார். அவரது ஆசான் கே.பாலச்சந்தர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

உத்தம வில்லன் தொடங்கிய பிறகு விஸ்வரூபம் 2 பற்றிய செய்திகள் அணைந்து விட்டன. விஸ்வரூபம் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் சர்ச்சைகள் அதிகம் இருக்கிறது. 

தேவையில்லாமல் மீண்டும் ஒரு பிரச்னையில் சிக்க வேண்டாம் என்ற கமல் கருவதாகவும், அதனால்தான் அதை அப்படியே வைத்து விட்டு உத்தம வில்லனில் தீவிரம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

ஒரே மாதிரியான படத்தை அடுத்தடுத்து தர வேண்டாம் வெரைட்டி இருக்க வேண்டும் என்று கமல் கருதுகிறார். அதனால் விஸ்வரூம் 2க்கு முன்னதாக இன்னொரு படத்தை கொடுத்து விட்டால் இந்த இடைவெளி விஸ்வரூபம் 2க்கு சாதகமாக இருக்கும். 

இல்லாவிட்டால் விஸ்வரூபம் போன்றே இரண்டாவது பாகமும் இருக்கிறது என்ற நெகட்டிவ் விமர்சனம் வரும் அதற்காகவே உத்தம வில்லன் வேகம் எடுக்கிறது என்கிறார்கள்.

விஸ்வரூபம் 2வுக்கு இன்னும் பத்து நாள் படப்பிடிப்பு நடத்த வேண்டியது இருக்கிறது. அதற்கு பெரும் தொகை செலவாகும் அதை ஈடுகட்டவே உத்தம வில்லனில் கமல் நடிப்பதாக இன்னொரு தகவலும் இருக்கிறது.

Saturday, May 3, 2014

என்னமோ நடக்குது - சினிமா விமர்சனம்

கதைப்படி, விஜய் வசந்த்., அப்பா இல்லாது அம்மாவுடன் வாழும் குப்பத்து இளைஞர். 

பகலில் போஸ்டர் ஒட்டுவதும், இரவில் நண்பர்களுடன் குவாட்டர் குடிப்பதுமா வாழ்க்கையை குதுகலமாக ஓட்டும் அவரது வாழ்க்கையில், அம்மா சரண்யா பொன்வண்ணன் இறக்கும் தருவாயில், வசந்தமாக குறுக்கிடுகிறார் மிடில் கிளாஸ் நர்ஸ் மஹிமா! 

அம்மணியும், அவரது அப்பா அழகம் பெருமாளும் பட்ட 5 லட்சம் கடனுக்காக, வங்கி பணத்தை கடத்தி வட்டிக்கு விட்டு துட்டு பார்க்கும் ஒரு மாபியா கும்பலிடம் வேலைக்கு சேருகிறார் விஜய் வசந்த்!

ரகுமான் தலைமையிலான அந்த மாபியா கும்பலுக்கு ஆப்பு வைக்க முயலுகிறார், அவர்களால் ஏற்கனவே பாதிப்பிற்கு உள்ளான பிரபு! அதில் பகடைகாயாக பந்தாடப்படும் விஜய் வசந்த், காதலியை கடன் சுமையிலிருந்து மீட்டாரா?, ரகுமான் - பிரபு கோஷ்டிகளுக்கு இடையே சிக்கி சின்னாபின்னமானாரா.? என்பது தான் “என்னமோ நடக்குது” படத்தின் கதை! 

இந்த கதையை எத்தனை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் படம் பிடிக்க முடியுமோ அத்தனை வித்தியாசமாகவும், அழகாகவும், அம்சமாகவும் படம் பிடித்திருப்பதற்காகவே இயக்குநர் பி.ராஜபாண்டியை எத்தனை முறை வேண்டுமானாலும் பாராட்டலாம். 

இப்படி ஒரு படத்தை தயாரித்திருப்பதற்காக வி.வினோத் குமாரை (இவர் விஜய் வசந்த்தின் சகோதரர்) சீராட்டலாம்!

விஜய் வசந்த் பெரிதாக மேக்கப் இல்லாமல், தன் முந்தைய படங்களை காட்டிலும் இயல்பாக நடித்து, குப்பத்து இளைஞராகவே பேசி, சிரித்து ரசிகர்களை சீட்டோடு கட்டி போட்டு விடுகிறார். பேஷ், பேஷ்!!

மஹிமாவும், கனடாவில் படிக்க வேண்டிய கனவுடன் நர்ஸாக நன்றாகவே நடித்திருக்கிறார். விஜய் வசந்த், மஹிமா மாதிரியே பிரபு, ரகுமான், சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமைய்யா, சுகன்யா, கும்கி அஸ்வின், நமோ நாராயணா, திருமுருகன், அழகம் பெருமாள், வின்செண்ட் அசோகன், சௌந்தர்யா உள்ளிட்ட ஒவ்வொருவரும் நச் என்று நடித்து நம்மை டச் செய்து விடுகின்றனர்.

உன் கடனுக்கு ஏன் தல-யை அடகு வைக்கிற? உன் மது பொதுவாகி விடுவார்... உள்ளிட்ட பளிச், பளிச் பன்ச் வசனங்கள் தான் என்னமோ நடக்குது படத்தில் செம கிக்!

பிரேம்ஜி அமரன், இனி நடிப்பதை விட்டுவிட்டு, முழுநேர இசையமைப்பாளராகலாம் எனும் அளவிற்கு பாடல்களிலும், பின்னணி இசையிலும் மிரட்டியிருக்கிறார் மிரட்டி! ஏ.வெங்கடேஷின் ஒளிப்பதிவும், ஆக்ஷன் படத்திற்கே உரிய அதிரடியில் மிரட்டி இருக்கிறது பலே! பலே!! 

ராதகிருஷ்ணனின் வசனம், பிரேம்ஜியின் இசை, ஏ.வெங்கடேஷின் ஒளிப்பதிவு, விஜய் வசந்த்தின் இயல்பான நடிப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளும், சேர்ந்து பி.ராஜபாண்டியின் இயக்கத்தில், “என்னமோ நடக்குது” படத்தை எக்கச்சக்க எதிர்பார்ப்புடன் நடக்க விட்டிருக்கிறது என்றால் மிகையல்ல!

ஆகமொத்தத்தில், “என்னமோ நடக்குது” - என்னமாய் இருக்கிறது எனவே எல்லோருக்கும் பிடித்திருக்கிறது!