Saturday, November 29, 2014

காவியத்தலைவன் - சினிமா விமர்சனம்

சினிமாவால் நாடகங்கள் அழிந்தது" எனும் பரவலான பழைய கருத்தை பொய்யாக்கும் விதமாக சினிமாவால் நாடகத்தையும், நாடக காலத்தையும் நம் கண்களுக்கு விருந்தாக காவியத்தலைவன் படம் மூலம் வாழ வைத்திருக்கிறார் இயக்குனர் வசந்தபாலன்.

வசந்தபாலனுக்கு சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, அனைகாசோடி, நாசர், தம்பிராமைய்யா, பொன்வண்ணன், சிங்கம்புலி, மன்சூரலிகான் உள்ளிட்ட ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமும், ஜெயமோகன், நீரவ்ஷா, ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட தொழில்நுட்ப கூட்டமும் உண்மையாக உழைத்து உறுதுணையாக இருந்து, இந்த காலத்து இளம் ரசிகர்களுக்கு ஓர் உன்னதமான காவியத்தை "காவியத்தலைவன்" படமாக தந்திருக்கிறதென்றால் மிகையல்ல!.

இனி காவியத்தலைவன் கரு, கதை, களம், காட்சிபடுத்தல் பற்றி பார்ப்போம்...

நல்ல நட்பும், காதலும்., துரோகி நண்பன்., காதலன்...என்றாலும் அவனுக்காக உயிரைக் கொடுக்கும் நட்புக்கும், காதலுக்கும் துரோகம் செய்தவர்களும் அதைப்பார்த்து நெஞ்சு பொறுக்காமல் உயிரை விடுவார்கள் என்பது தான் காவியத்தலைவன் படத்தின் கரு!. 

நல்ல நட்பிற்கு இலக்கணமாக விளங்கும் இந்த கருவை, நாடக கொட்டகைகளில் களமாக்கி, கலர்புல்லாக காட்சிபடுத்தி இருப்பதில்தான் ஓங்கி உயர்ந்து நிற்கிறார் இயக்குன் வசந்தபாலன்!.

அனுபவத்திலும், வயதிலும் கதைப்படி, பெரிய சுவாமி நாசரின் நாடக குழுவில்  காளி- சித்தார்த்தும், கோமதிநாயகம் - பிருத்விராஜூம் முக்கிய நடிகர்கள். ஸ்திரிபார்ட், சைடுபார்ட் வேடமேற்கும் இவர்களை காட்டிலும் பெரிய நடிகராக ராஜபார்ட்டாக பொன்வண்ணன் அந்த சுற்றுவட்டாரத்திலேயே பிரபலமான நடிகராக இவர்கள் குழுவில் இருக்கிறார். 

வீட்டுவேலையும், விபச்சாரமும் செய்ய விரும்பாத வித்தகி வேதிகா, தன் தாய் குயிலியுடன் முதல் பெண் கலைஞராக அந்த குழுவில் வந்து இணைகிறார். இந்நிலையில், நாசருடன் ஏற்படும் ஈகோ மோதலால், ராஜபாட் பொன்வண்ணன், அந்த நாடக குழுவில் இருந்து பிரிந்து போகிறார்.

காளி - சித்தார்த், கோமதி - பிருத்விராஜ் இருவருக்குள் யார்? அடுத்த ராஜபார்ட் எனும் போட்டி வருகிறது. சீனியர் பிருத்விராஜை காட்டிலும் நாசரின் கண்களுக்கு அதிக திறமை காட்டும் சித்தார்த் ராஜபார்ட்டாகிறார். 

இதில் கடுப்பாகும் பிருத்விராஜ்., அந்த ஊர் ஜமீன் மகளுக்கும், சித்தார்த்துக்கும் உள்ள காதலை, நாசரிடம் போட்டுடைக்க, வெகுண்டெழும் நாசர் சித்தார்த்தை, அத்தனை பேர் எதிரிலும் அடித்து துவைத்து, இனி எடுபிடி வேலைகள் செய் என கட்டளை இடுவதுடன், ஜமீன் மகளை பார்க்கவோ, பேசவோ கூடாது...என்று சத்தியமும் வாங்கி கொண்டு அந்த ஊரில் இருந்து டேராவை காலி செய்கிறார்.

கலை மீது உள்ள காதலில், காதலை மறந்து காதலியை மறந்து..நாடக குழுவுடன் கிளம்பும் சி்த்தார்த் மனப்புழுக்கத்துடன்  கலைஞனாகவும் இல்லாமல், காதலனாகவும் வாழ முடியாமல் நாடக குழுவின் எடுபிடி வேலைகளை செய்தபடி இருக்கிறார். 

இத்தருணத்தில் வயிற்றில் பிள்ளையுடன் சித்தார்த்தின் காதலி அனைகாசோடி மலை மீதிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுவிட்டார்..எனும் தகவல் வருகிறது. 

இதில் பரிதவித்து போகும் சித்தார்த், நாசரை நாடக்குழுவிற்கு முன் கண்டபடி பேசி., குருதான் சிஷ்யருக்கு சாபம் கொடுக்க வேண்டுமா என்ன? யோவ், நான் குருவிற்கே சாபம் தருகிறேன்...என்று நாசருக்கு சாபம் தருகிறார். தன்னால் தன் அவசரத்தால் ஓர் உயிர்போன வருத்தத்தில் நொடிந்து போகும் நாசர் இறந்து போகிறார்...

இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி்க் கொள்ளும் பிருத்விராஜ்., சித்தார்த்தை அந்த குழுவில் இருந்து வெளியேற்றி அவரை ஒருதலையாக காதலிக்கும் வேதிகாவையும் தன்வசப்படுத்த காய் நகர்த்துகிறார். 

பிருத்விராஜின் எண்ணம் பலித்ததா? சிததார்த் ஜெயித்தாரா? வேதிகா யாருக்கு கிடைத்தார்? எனும் சுவாரஸ்யமான கதையுடன், வள்ளி திருமணம், கர்ணமோட்சம், சூரபத்மன் வதை உள்ளிட்ட புராண நாடகங்களையும், புதுமையாக கலந்துகட்டி கலக்கலாக, கமர்ஷியலாக கதை பண்ணியிருக்கிறார்கள். கலர்புல்லாக  அதை காட்சியும் படுத்தி இருப்பதுதான்  காவியத்தலைவனின் பெரும்பலம்!.

சித்தார்த், காளியாக பிச்சி பெடலெடுத்திருக்கிறார். பிருத்விராஜ், கோமதியாக பிரித்து மேய்ந்திருக்கிறார். சைடுபார்ட், ஸ்த்ரிபார்ட், ராஜபார்ட் வரை அத்தனை வேடங்களிலும், இருவரும் பிரமாதமாக நடித்து நம்மை நாடக காலத்திற்கே அழைத்து போகின்றனர். 

அதிலும் நண்பனுக்காக உயிரையும் கொடுக்கும் சித்தார்த், தேசபக்தி நிரம்பிய நாடக கலைஞராக ஒருபடி மேலேயும் தெரிகிறார். வடிவு எனும் வடிவாம்பாளாக வேதிகாவும், மாஜி ஜோதிகாவையும் தாண்டி ஜொலித்திருக்கிறார். அனைகாசோடியும் அவர் எடுக்கும் முடிவும் உருக்கி எடுத்து விடுகிறது.

Friday, November 28, 2014

24 மணி நேரத்துக்குள் 2.40 லட்சம் ஹிட்ஸ் - ஆரஞ்சு மிட்டாய் சாதனை

விஜய்சேதுபதி என்றாலே வித்தியாசம் என்று சொல்லப்படுவதை ஆரஞ்சு மிட்டாய் படத்தின் டீசரும் நிரூபித்துவிட்டது. வயதான தோற்றத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் ஆரஞ்சு மிட்டாய் படத்தின் டீஸர் நேற்று (நவம்பர் 26) வெளியானது. 

விஜய்சேதுபதி தயாரித்து நடிக்கும் இப்படத்தை பிஜு விஸ்வநாத் இயக்குகிறார். யுடியூபில் நேற்று வெளியான ஆரஞ்சு மிட்டாய் டீஸருக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. 

அதாவது, ஆரஞ்சு மிட்டாய் டீஸர் வெளியாகி முழுசாக 24 மணி நேரம் கூட ஆகவில்லை. அதற்குள்ளாகவே 2.40 லட்சம் பார்வையாளர்கள் ஆரஞ்சமிட்டாய் டீசரை பார்த்திருக்கின்றனர். 

தன் படத்துக்குக் கிடைத்த இத்ந அபார வரவேற்பை எண்ணி சந்தோஷத்தில் மிதக்கிறார் விஜய் சேதுபதி. ஆரஞ்சு மிட்டாய் படம் எப்படி இருக்கப்போகிறதோ தெரியவில்லை...

ஆனால் இப்படத்தின் டீஸரை வித்தியாசமாக உருவாக்கி உள்ளனர். அதுதான் அனைவரையும் கவர்ந்திருக்கிறது. 

திரும்ப திரும்ப பார்க்க வைத்திருக்கிறது. தன் படத்தைப் பற்றி விஜய் சேதுபதியே சொல்வது போலவும், அதை இன்னொரு விஜய் சேதுபதி இடையிடையே புகுந்து கலாய்ப்பதைப் போலவும் இந்த டீஸரை உருவாக்கியிருக்கிறார்கள். 

அதோடு இந்த டீஸரில் வயதான தோற்றத்தில் விஜய்சேதுபதி போடும் குத்தாட்டமும் செமத்தியாக இருக்கிறது. விஜய் சேதுபதியிடமிருந்து நாங்கள் இதுபோன்ற படங்களைத்தான் எதிர்பார்க்கிறோம் என ஃபேஸ்புக், ட்விட்டர் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Monday, November 24, 2014

லிங்கா படத்துக்கு சென்சாரில் பிரச்சனை வருமா?

ரஜினி நடித்த லிங்கா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர், பாடல்கள், டிரைலர் என அனைத்துமே ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று ஒரு பக்கம் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றன. 

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவான லிங்கா பட ஆல்பத்தில் ரஹ்மான் பாடிய ஓ நண்பனே... என்ற பாடல், இனோ பாடிய மோனா கேசோலினா... என்ற பாடலும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. 

ரஜினி ரசிகர்களுக்கோ எல்லாப்பாடல்களுமே தேசிய கீதம். அதுமட்டுமல்ல  லிங்கா ஆல்பம் ஐ டியூன்ஸிலும் டாப் 10 லிஸ்ட்டில் இடம்பிடித்திருக்கிறது. ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12 ஆம் தேதி லிங்கா படத்தை உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். 

எக்காரணத்தைக் கொண்டும் ரிலீஸ் செய்வதில் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக முன் எச்சரிகையாக லிங்கா படத்தை முன்கூட்டியே சென்சாருக்கு அனுப்ப உள்ளனர்.  

தற்போது படத்தின் இறுதிகட்ட வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.  திட்டமிட்டபடி சென்சாருக்கு அனுப்புவதற்காக இரவு பகலாக உழைத்து வருகிறார்கள். 

ஒருவேளை அதற்குள் படத்தின் பின்னணி இசையை ஏ.ஆர்.ரஹ்மான் முடித்துக்கொடுக்கவில்லை என்றால் டம்மி ட்ராக்கை வைத்து சென்சாருக்கு அனுப்ப தயாராக உள்ளனர். 

ரஜினி படத்தைப் பொறுத்தவரை ஏ சர்டிஃபிகேட் வழங்கும் அளவுக்கு வன்முறையோ..ஆபாசமோ இருக்காது, பெரும்பாலும் யு சர்டிஃபிகேட்தான் கிடைக்கும். 

ஆனாலும், லிங்கா படத்தில் சென்சிடிவ்வான முல்லைப்பெரியாறு அணை பிரச்சனையை கையிலெடுத்திருப்பதால் சென்சாரில் ஏதாவது பிரச்சனை வருமோ டென்ஷனில் இருக்கிறது லிங்கா படத்தின் தயாரிப்பு தரப்பு!

Saturday, November 22, 2014

இயக்குநர், நடிகர் மீது கடுப்பில் இருக்கும் நடிகை

பிக்அப் டிராப் நடிகர் நடிக்கும் கப்பல் தலைவன் படத்தில் பம்ளிமாஸ் நடிகையை ஒரு பாட்டுக்கு செம செக்ஸியாக நடிக்க வைத்ததோடு அதை வெளியில் சொல்லி விளம்பரம் தேடிக்கொண்ட மகிழ்ச்சியான இயக்குனர் மீது கோபத்தில் இருந்தாராம் பம்ப்ளிமாஸ். 

அதனால் மீதமுள்ள சூட்டிங்கில் நடிகையின் இன்வால்வ்மெண்ட் குறைஞ்சிடுச்சாம். இதனால் வெறுத்துப்போன இயக்குனர் கோவாவில் பாட்டு எடுக்கும்போது நடிகையை சுடுகிற மணலில் பல மணிநேரம் படுக்க வைத்து, உருள வைத்து படமாக்கி தனது கோபத்தை தணிச்சிக்கிட்டாராம்.

தன்னை பழிவாங்கத்தான் இப்படி செய்கிறார்னு தெரிஞ்சும் நடிகையால் எதுவும் செய்ய முடியலையாம். வேதனையை தாங்கிகிட்டு நடிச்சாராம். 

மகிழ்ச்சியான இயக்குனர் மனம் முழுக்க இப்போ மகிழ்ச்சிதானாம். தன் பிரியாணி கிளப்புக்குள் பம்ப்ளிமாஸ் நடிகை வராமல் டிமிக்கி கொடுப்பதால் இதனை ஹீரோவும் கண்டுக்கலையாம். 

இயக்குனர் மீதும், பிக்கப் நடிகர் மீதும் செம கடுப்பில் இருக்கிறாராம் நடிகையும், நடிகையின் தாய்குலமும்.

Friday, November 21, 2014

பசங்க டீம் இணையும் 4வது படம்

பசங்க படத்தில் அறிமுகமான ஸ்ரீராம், கிஷோர், குட்டிமணி ஆகியோர் கோலிசோடாவில் மீண்டும் இணைந்தார்கள். தற்போது வஜ்ரம் என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். 

இப்போது இந்த டீம் கமர்கட்டு என்ற படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கிறது. வஜ்ரம் படத்தில் நடிக்கும் மனீஷா ஜித் இதிலும் நடிக்கிறார். 

பைசல் இசை அமைக்கிறார், ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார். ராம்கி ராமகிருஷ்ணன் இயக்குகிறார்.

"கமர்கட்டு சிறியதாக இருந்தாலும் இனிப்பு மிக்கது. ருத்ராட்சம் சிறிதாக இருந்தாலும் சக்தி மிக்கது. 

யாரையும் உருவத்தை பார்த்து எடைபோடக்கூடாது செயலைப் பார்த்துதான் எடைபோடவேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்து படத்தை எடுக்கிறோம். 

பொடியன்கள் என்று எல்லோரும் ஓதுக்கித் தள்ளும் சிறுவர்கள் பெரியவர்கள்கூட செய்ய முடியாத ஒரு காரியத்தை செய்து முடிக்கிறார்கள். அது என்ன என்பதுதான் கதை. 

ஜவ்வாது மலையில் பிரமாண்ட லிங்கம் செட் அமைத்து வருகிறோம். வருகிற 24ந் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது" என்றார் இயக்குனர் ராம்கி ராமகிருஷ்ணன். 

Thursday, November 20, 2014

இப்போதைக்கு அரசியலில் ஈடுபட மாட்டேன் - ரஜினி

அரசியலில் இப்போதைக்கு ஈடுபட மாட்டேன் என கோவாவில் நடிகர் ரஜினிகாந்த் கூறினார். கோவாவில் 45வது சர்வதேச திரைப்பட விழா இன்று முதல் துவங்குகிறது. 

சுமார் 10 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து சுமார் 300 படங்கள் திரையிடப்பட இருக்கின்றன. 

இந்நிலையில், இந்தாண்டு இந்திய சினிமா நூற்றாண்டு விருது, நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்பட இருக்கிறது. இதில் பங்கேற்பதற்காக ரஜினி, தனது மனைவி லதா உடன் கோவா சென்றுள்ளார். 

கோவா சென்ற ரஜினி அங்கு அளித்த பேட்டியின் போது, மத்திய அரசு எனக்கு இந்த விருதை கொடுப்பது பெருமையாகவும், மிகப்பெரிய கவுரவமாகவும் இருக்கிறது என்றார். 

மேலும் நடிகர் அமிதாப் உடன் இணைந்து நடிப்பீர்களா என்று கேட்டபோது அதை நான் முடிவு செய்யமுடியாது, அவர் தான் முடிவு செய்யணும், அவர் சரி என்று சொன்னால் நான் நடிக்க தயாராக இருக்கிறேன் என்றவரிடம், அரசியலில் ஈடுபடுவது குறித்து உங்கள் கருத்து என்ன என்று கேட்க, இப்போதைக்கு அரசியலில் ஈடுபட மாட்டேன் என்று கூறினார். 

Monday, November 17, 2014

திருடன் போலீஸ் - விமர்சனம்

அட்டக்கத்தி, குக்கூ படங்களுக்கு பின் தினேஷ் நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம், பீக்கில் இருக்கும் கதாநாயகிகள் ஒத்தப்பாட்டுக்கு குத்தாட்டம் போடுவது போல கதாநாயகன் விஜய் சேதுபதி ஒத்த பாட்டுக்கு ஆட்டம் போட்டிருக்கும் திரைப்படம், 

அதற்கும் மேல் ஆஸ்தான நாயகி (!) ஐஸ்வர்யா ராஜேஷ் அட்டக்கத்தி தினேஷூக்கு ஜோடியாக விஜய் சேதுபதி விட்டு்த் தந்திருக்கும் திரைப்படம், இவை எல்லாவற்றிற்கும் மேல் போலீஸ் துறையை பொளந்து க(கா)ட்டி புகழ்ந்து கட்டியிருக்கும் வெற்றி திரைப்படம் தான் திருடன் போலீஸ்.

கதைப்படி, போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் ஹெட்கான்ஸ்டபிள் சிங்காரம் எனும் நடிகர் ராஜேஷின் மகன் தான் விஷ்வா எனும் ஹீரோ தினேஷ். இவருக்கும் இதே குடியிருப்பில் வசிக்கும் ஏ.சி.யின் மகனுக்குமிடையில் அடிக்கடி முட்டல், மோதல்கள் ஏற்பட்டு, அதனால் அந்த போலீஸ் குடியிருப்பே அல்லோல கல்லோலப்படுகிறது. 

இதில் கடுப்பாகும் ஏ.சி., ஹெட்கான்ஸ்டபிள் ராஜேஷை கூப்பிட்டு கடிந்து கொள்ள, நேர்மையான ஏட்டாக வரும் ராஜேஷ், சும்மா குதிக்காதீங்க சார், உங்க புள்ள, உங்க பவரை பயன்படுத்தி செய்த ஒரு கற்பழிப்பு பற்றிய ஆதாரத்தை நானும் திரட்டி முடிச்சுட்டேன். 

கூடிய விரைவில் கமிஷனர்கிட்டே உங்க ரெண்டு பேத்தையும் மாட்டி விடுறேன் என்று உண்மையை போட்டுடைக்க, இதில் வெகுண்டெழும் ஏ.சி., தன் கைக்கூலி - ரவுடி நான் கடவுள் ராஜேந்திரனை தூண்டிவிட்டு ஏட்டு ராஜேஷை போட்டு தள்ளுகிறார். ராஜேஷ் இறந்தால் ஏட்டு குடும்பமே போலீஸ் குடியிருப்பில் இருந்து காலி செய்து போகும் எனும் கனவில் சந்தோஷப்படுகிறது ஏ.சி. குடும்பம்!.

மாறாக கமிஷனர் ஆடுகளம் நரேன், ராஜேஷின் நேர்மையை பாராட்டி அவரது வாரிசு ஹீரோ தினேஷூக்கு போலீசில் வேலை தருகிறார். இதில் மேலும் கடுப்பாகிறது ஏ.சி.யும், அவரது குடும்பமும். 

ஆனால் உயிருடன் இருந்தவரை எப்போதும் கண்டிப்பாக நடந்துகொண்ட அப்பா ராஜேஷையும், அவரது போலீஸ் வேலையையும் பிடிக்காத தினேஷூக்கு, அப்பா இறந்தபின்பு தான் அவரது அருமையும், போலீஸ் வேலையின் கடுமையும் புரிய வருகிறது. 

உயர் அதிகாரிகளின் படுத்தலையும் தாண்டி, கமிஷனரின் ஒப்புதல் ப்ளஸ் பாராட்டுதலோடும் போலீஸ் நண்பன் பாலசரவணனின் உதவியோடும் அப்பாவை கொன்றவர்களை ஹீரோ தினேஷ் கூண்டோடு பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தும் கதை தான் திருடன் போலீஸ். படத்தின் மொத்த கதையும், இந்த கதையோடு நாயகி ஐஸ்வர்யா ராஜேஷூடனான தினேஷின் லவ்வையும், கவுன்சிலர் தம்பியாக வந்து ஒத்தப்பாட்டுக்கு கெட்ட ஆட்டம்  போட்டு போகும் விஜய் சேதுபதியின் லந்தையும் கலந்துகட்டி திருடன் போலீஸ் திரைப்படத்தை, வித்தியாசமும், விறுவிறுப்புமாக தந்திருக்கிறார் அறிமுக இயக்குனர் கார்த்திக் ராஜூ.

அட்டக்கத்தி தினேஷ், விஷ்வா பாத்திரத்தில் அட்டையாக ஒட்டிக்கொண்டு பக்காவாக நடித்திருக்கிறார். அப்பா ராஜேஷ் உயிருடன் இருக்கும்வரை அவரது கண்டிப்பை தப்பாக புரிந்துகொண்டு கடுப்பாகும் தினேஷ், அப்பாவின் மறைவிற்கு பின் கொஞ்சம், கொஞ்சமாக பொறுப்பான போலீஸ் ஆகும் காட்சிகளில் நடிப்பில் மிளிர்ந்திருக்கிறார். 

பிணவறைக்கு போய் வந்து வாந்தி எடுக்கும் அப்பாவை, நக்கல் அடிப்பதிலாகட்டும், திருடனை கோர்ட்டுக்கு அழைத்து போகும் போது கைவிலங்கை தன் கையிலும் மாட்டிக்கொண்டு போய் கையில் காயம் ஏற்பட்டு திரும்பும் அப்பா ராஜேஷூக்கு ஆயின்ட்மெண்ட் கொடுத்துவிட்டு நல்லா போடுங்க, வேணுமுன்னா இன்னும் வாங்கி வருகிறேன் என்றபடி போலீஸ் அடியில் அக்கியூஸ்ட்டுகளுக்கு தான் காயம் ஏற்படும் இங்க,. 

போலீஸூக்கே காயம் என்று முனகியபடி கிண்டல் அடித்ததெல்லாம், தான் போலீஸ் ஆனபின், தனக்கு நேரும் காட்சிகளில், பக்காவாக நடிப்பை வாரிவழங்கி,.நம் விழியோரம் நீர் கசிய விடுகிறார் மனிதர். ஐஸ்வர்யாவுடனான ரொமான்ஸ் காட்சிகளிலும் தினேஷ் கச்சிதம்..

ஏரியாவிற்கு புதிதாக குடிவரும் சப் இன்ஸ்பெக்டர் மகளாக பூர்ணிமாவாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தினேஷின் மனதை மட்டுமல்ல, ரசிகர்களின் மனங்களையும் கொள்ளை கொள்கிறார். 

தினேஷ், இவருக்கு லிப்ட் கொடுக்கும் இடங்களும், இவர் தினேஷிற்கு லிப்ட் கொடுக்கும் இடங்களும் சூப்பர்ப்!.தினேஷின் சீனியர் கான்ஸ்டபிள் வணங்காமுடியாக, தினேஷின் நண்பராக வரும் பாலசரவணன் தான் ஏற்று நடித்த குட்டிப்புலி பப்புவையும், பண்ணையாரும் பத்மினியும் பீடையையும் தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டிருக்கிறார் இப்பட பாத்திரத்தின் மூலம். ஒரு பொம்பளைகிட்டே அடி வாங்கிட்டு வந்த போலீஸூன்னும் நான் கைதிகளுக்கு சாப்பாடு வாங்கப்போற போலீஸூன்னும் யாருக்கும் தெரியாது. 

நம்ம போலீஸூக்குள்ள மரியாதையை இப்ப பாருன்னு., மக்கள் இவர்கள் யூனிபார்முக்கு கொடுக்கும் மரியாதையை தினேஷூக்கு புரிய வைக்கும் இடங்களில் தொடங்கி சீனுக்கு சீன் காமெடி சரவெடிகளை கொளுத்தி போடும் இடங்களில் பாலசரவணன், நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்கிறார்.

பாலசரவணன் மாதிரியே ரவுடி மாணிக்கமாக வரும் நான் கடவுள் ராஜேந்திரனும் அவரது சகோதரர் மரவட்டையாக வரும் ஜான்விஜய்யும், விக்கு தலையும் கட்டின புடவையுமாக பண்ணும் அலப்பறைகள், தியேட்டரில் அடிக்கடி சிரிப்பலைகளை ஏற்படுத்துகிறது.வில்லன் ராஜேந்திரன் இனி காமெடியனாக தாராளமாக நடிக்கலாம், கலக்கலாம்.

கெஸ்ட் ரோல் விஜய் சேதுபதி, எஸ்.பி.பி., ராஜேஷ், ஆடுகளம் நரேன், ரேணுகா, உமா பத்மனாபன், முட்டை கண்களுடன் மிரட்டும் ஏ.சி.யின் வாரிசு நிதின் சத்யா உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.

யுவன்சங்கர் ராஜாவின் இசையும், சி்த்தார்த்தின் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரும்பலம்! புதியவர் கார்த்திக் ராஜூவின் எழுத்து, இயக்கத்தில் நாம் ஓப்பனிங்கிலேயே சொன்ன மாதிரி போலீஸ் துறை உயர்அதிகாரிகளின் குறிப்பாக அவர்களது குடும்பத்தை சார்ந்தவர்களின் அக்கிரமங்களை காமெடியாக பொளந்து க(கா)ட்டி, அத்துறையின் அருமை பெருமைகளையும் புகழந்து காட்டியிருக்கிறது திருடன் போலீஸ்! 

"மொத்தத்தில் திருடன் போலீஸ், திரும்ப, திரும்ப பார்த்தாலும் திகட்டாத போலீஸ்!".

Sunday, November 16, 2014

நான் அரசியலுக்கு வர பயப்படவில்லை, தயங்குகிறேன் - ரஜினி

திரைப்படத்துறையினராலும்  ரசிகர்களாலும், குறிப்பாக ரஜினி ரசிகர்களாலும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட லிங்கா படத்தின் இசைவெளியீட்டு விழா மிகப்பெரிய கொண்டாட்டமாக நடந்து முடிந்தது. 

கன்னடப் படத்தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் லிங்கா படம்தான் கடந்த சில மாதங்களாக, ரசிகர்களின் அதிகபட்ச எதிர்பார்ப்புக்குரிய படமாக இருந்த வருகிறது. 

எனவே லிங்கா படத்தின் இசைவெளியீட்டுவிழாவும் எதிர்பார்ப்புக்குரியதாகவே இருந்தது. இன்று காலை சென்னை சத்யம் திரையரங்கில் தொடங்கிய லிங்கா இசைவெளியீடு நடைபெற்று முடிந்தது. 

இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன்,  ஷங்கர், அமீர், விக்ரமன், சேரன், தயாரிப்பாளர் கேயார், கன்னட நடிகர் சுதீப், மற்றும் லிங்கா படத்தில் பங்களித்த கவிஞர் வைரமுத்து, இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு, அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா உட்பட பல திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.

லிங்கா படத்தின் இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் விழாவில் கலந்து கொள்ளவில்லை. அவருடைய பேச்சு வீடியோ பதிவாக ஒளிபரப்பப்பட்டது. சிறப்பு விருந்தினர்கள் என்று யாரையும் குறிப்பிட்டு அழைக்காமல் லிங்கா படத்தில் பங்கு பெற்றவர்களும், மேடையில் இருந்த பிரபலங்கள் முன்னிலையில் லிங்கா படத்தின் இசையை ரஜினி வெளியிட்டார்.

பின்னர் பேச வந்தார் ரஜினி. மைக்கைப் பிடித்து அவர் பேசத்தொடங்குவதற்கு முன்னரே ரசிகர்களின் கைதட்டல், விசில், ஆரவாரம் அரங்கத்தை அதிர வைத்தது. “என்னை வாழ  வைத்த  தெய்வங்களே” என்று பேச்சைத் தொடங்கினார் ரஜினி. அவரது பேச்சில் குறிப்பிட்ட முக்கிய விஷயங்களின் தொகுப்பு...

இந்த விழாவில் பலர் நிறைய விஷயங்கள் பற்றி பேசி விட்டனர். எனக்கு என்ன பேசுவது என்று புரியவில்லை. உடம்பு சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் இருந்தபோது மீண்டும் நடிக்க முடியுமா? டான்ஸ் ஆட முடியுமா? என்றெல்லாம் சந்தேகம் ஏற்பட்டது. முன்பு மாதிரி நடிக்க முடியாது என்றே நினைத்தேன். 

உடல்நிலை சரியானதும் கோச்சடையான் படத்தில் நடித்தேன். சவுந்தர்யா டைரக்டு செய்தார். அந்த படம் நிறைய அனுபவங்களை அவருக்கு கற்றுக் கொடுத்தது. நான் பணம் சம்பாதிக்கிறேன். அந்த பணத்தை சவுந்தர்யா விரயம் செய்யாமல் இருந்தாலே போதும். ஆனாலும் சினிமாவைப் பற்றி நிறைய விஷயங்களை அந்த படம் சவுந்தர்யாவுக்கு புரிய வைத்தது. கோச்சடையான் படத்தினால் எனக்கு நிறைய நஷ்டம்.

படம் எடுக்கிறது ஈஸிங்க. அரசியலுக்கு போறது ஈஸிங்க. ஆனால் வெற்றி கொடுக்கணுமே... நான் லேட் பண்ணுவேன். ஆனா ஒரு விஷயத்துல இறங்குனும்னு நினைச்சா உடனே இறங்கிடுவேன்".  அரசியல் ஆழம், டேஞ்சர் தெரியும். நான் அரசியலுக்கு வர பயப்படவில்லை தயங்குகிறேன். நாளைக்கு என்ன நடக்கும்னு எனக்கே தெரியல. அப்படி  ஏதாவது நடந்தால்... கண்டிப்பா மக்களுக்காக நல்லது பண்ணுவேன்.

இந்தப் படத்தை 6 மாசத்துக்குள்ளே முடிக்கணும்னு நினைச்சேன். அப்படி முடிக்கக் கூடிய ஒரே ஆள் கே.எஸ்.ரவிகுமார்தான். கஷ்டப்பட்டு படத்தை எடுத்தோம். அரங்குகள், சண்டை காட்சிகள், அணைப் பகுதியில் நடந்த படப்பிடிப்புகள், பெரிய டெக்னீஷியன்களை ஒருங்கிணைப்பது, படப்பிடிப்புக்கு அனுமதி பெறுவது என நிறைய சிரமங்கள் இருந்தன. 

அதை எல்லாம் சந்தித்து இந்த படத்தை எடுத்து முடித்துள்ளோம். படப்பிடிப்பில் என்னை ஒரு குழந்தை மாதிரி பார்த்துக் கொண்டனர். பாதுகாப்புக்கு நிறைய ஆட்கள் இருந்தார்கள். இந்த அன்புக்கெல்லாம் என்ன கைமாறு செய்வது என்று புரியவில்லை.

2 வருஷத்துக்கு முன்னால் நான் ஹாஸ்பிட்டல்ல இருந்தேன். உடம்புக்கு முடியாமப் போன பிறகு மறுபடியும் எனர்ஜியோடு எழுந்து வந்து இப்படி நடிப்பேன் என்று நினைத்தே பார்க்கவில்லை. 

என் ரசிகர்களுக்கு நன்றி.  என்றவர், லிங்கா படம் தொடங்கியது முதல் மீடியாக்களுடன் பேசாததற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டார் ரஜினி.

Thursday, November 13, 2014

அடை மழையிலும் நாளை 8 படங்கள் ரிலீஸ்

தமிழ்நாடு முழுவதும் அடைமழை பெய்து கொண்டிருக்கிறது. அப்படி இருந்தும் நாளை (நவ 14) 8 படங்கள் ரிலீசாகிறது. 

நாளை ரிலீசாகும் திருடன் போலீஸ், அப்புச்சி கிராமம், புலிப்பார்வை, ஞானகிறுக்கன், முறுகாற்றுப்படை, விலாசம் போன்ற படங்கள் மீடியம் பட்ஜெட் படங்கள். அன்பென்றாலே அம்மா, சிறு முதலீட்டு படம். உளவுக்கன்னி - ஆங்கிலப் படம்.

அட்டகத்தி தினேஷ், ஐஸ்வர்யா நடித்திருக்கும் திருடன் போலீஸ் அப்பா மகன் உறவை சொல்லும் படம். புலிபார்வை இலங்கை போரில் கொல்லப்பட்ட விடுதலைபுலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கதை. 

உலகம் அழியப்போவதாக நினைத்துக் கொண்டு ஒரு கிராமத்தில் நடக்கும் கலாட்டாக்கள் அப்புச்சி கிராமத்தின் கதை. அநாதையாக பிறந்த ஒருவன் தன் பெற்றோரை தேடிச் செல்வது விலாசத்தின் கதை, கிராமத்தில் வறுமை காரணமாக சென்னைக்கு வந்து இங்கும் வாழ போராடும் இளைஞனின் கதை ஞானக்கிறுக்கன், ரியல் எஸ்டேட் தாதாக்களின் கதை முறுகாற்றுப்படை.

எல்லா படங்களுமே சராசரியாக 50லிருந்து 100 தியேட்டர்கள் வரை ரிலீசாகிறது. அன்பென்றாலே அம்மா என்ற படம் மட்டும் திருநெல்வேலி, நாகர்கோவில், செங்கோட்டை, முக்கூடல் ஆகிய இடங்களில் தலா ஒரு தியேட்டரில் ரிலீசாகிறது.

அடைமழை பெய்தாலும் இப்படி ரிலீஸ் மழை பொழியக் காரணம் லிங்கா. சூப்பர் ஸ்டாரின் லிங்கா டிசம்பர் 12 வெளிவருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 

அடுத்து பொங்கலுக்கு கமல் படங்களில் ஒன்று கட்டாயம் ரிலீசாகும். எனவே சிறு பட்ஜெட் படங்கள் இந்த நேரத்தை தவிர விட்டால் பிப்ரவரி மாதமே வெளியிட முடியும். அதனால்தான் வரிசை கட்டி படங்கள் ரிலீசாகிறது.

Tuesday, November 11, 2014

திப்பு சுல்தானை இயக்கும் கமல்

நடிகர் கமல்ஹாசன், சமீபத்தில் தனது 60வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த வயதிலும் இளமை துடிப்போடு நடித்து வருகிறார். 

இவரது நடிப்பில் உத்தம வில்லன், பாபநாசம், விஸ்வரூபம்-2 அடுத்தடுத்து மூன்று படங்கள் வெளியாக இருக்கின்றன. 

இதில் பாபநாசம், உத்தமவில்லன் படங்களின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்சன்ஸ் வேலைகள் நடந்து வருகிறது. விஸ்வரூபம்-2 படத்தில் மட்டும் இன்னும் சில காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது. 

இந்நிலையில், இந்த மூன்று படங்களுக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன், திப்பு சுல்தானின் வாழ்க்கையை படமாக இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதில் கமல்ஹாசனே, திப்பு சுல்தான்-ஆக நடிக்கவும் செய்கிறாராம், கூடவே இப்படத்தை அவரே தயாரிக்கவும் இருப்பதாகவும், இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்புகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

விரைவில் இப்படம் பற்றிய அறிவிப்புகளை கமல்ஹாசன் வெளியிடுவார் என தெரிகிறது. 

கடந்தாண்டே, கமல்ஹாசன், திப்பு சுல்தானின் வாழ்க்கையை படமாக்க இருப்பதாக அறிவித்தார் கமல். ஆனால் விஸ்வரூபம் என அடுத்தடுத்து கமல் பல படங்களில் பிஸியானதால் இப்படத்தை இயக்கமுடியவில்லை. 

இப்போது மீண்டும் திப்பு சுல்தானை கையில் எடுத்து இருக்கிறார். ஏற்கனவே, 'மருதநாயம்' எனும் சரித்திர கதையை படமாக்கி பின்னர் நிதி பிரச்னையினால் கிடப்பில் போட்டார் கமல், இப்போதும் அதை உயிர்பிக்கும் முயற்சியில் தொடர்ந்து இருந்து வருகிறார். 

இந்நிலையில் இப்போது மீண்டும் ஒரு சரித்திர கதையை கையில் எடுத்து இருக்கிறார் கமல் என்பது குறிப்பிடத்தக்கது. 

Sunday, November 9, 2014

அர்ஜூனின் ஜெய்ஹிந்த் 2 - விமர்சனம்

பல வருடங்களுக்கு முன் வெளிவந்து வெற்றி பெற்ற தனது ஜெய்ஹிந்த் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் என ஆக்ஷன் கிங் அர்ஜூன் கல்லா கட்ட முயன்றிருக்கும் திரைப்படம் தான் ஜெய்ஹிந்த் 2. 

அதை இன்னும் கொஞ்சம் நல்லா காட்ட அர்ஜூன் முயன்றிருந்தால் ஜெய்ஹிந்த் - 2 வும் ஜெயித்திருக்கும் !

கதைப்படி, கராத்தே மாஸ்டரான அர்ஜூன், ஒரு ஐந்து வயது ஏழை பெண் குழந்தை பணக்கார கல்விக்கு ஆசைப்பட்டு அநியாயமாக குடும்பத்தோடு பலியாவது கண்டு வெகுண்டெழுகிறார். "இந்தியாவில் தனியார் பள்ளிகளே கூடாது. எல்லா தனியார் பள்ளிக்கூடங்களையும் அரசே ஏற்று நடத்த வேண்டும். 

ஏழை, பணக்காரர் வீட்டு பிள்ளைகள் பாகுபாடின்றி எல்லோருக்கும் ஒரே மாதிரி கல்வி தர அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்" என கல்வி சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் சிலவற்றை மீடியாக்களை கூட்டி அறிவித்து தனியார் பள்ளி முதலாளிகள் சிலரின் கொலை வெறிக்கு ஆளாகிறார்.

அந்த சில தனியார் பள்ளி முதலாளிகள் ஒன்று கூடி ஆக்ஷன்கிங் செய்யாத குற்றங்களை எல்லாம் அவர் மீது சுமத்தி அவரை பிடித்து ஜெயிலில் போடுகின்றனர். கூடவே அவரை கொலை செய்யவும் ஆட்களை அனுப்புகின்றனர். 

சககைதிகள் தொடங்கி சிறை வார்டன்கள் வரை ஒட்டுமொத்த சிறையும் அர்ஜூனை கொல்ல முயன்றும், ஒரு நல்ல எண்ணமுடைய கைதியின் உதவியுடன் அங்கிருந்து தப்பிக்கும் ஆக்ஷன்கிங் நேராக லண்டன் போய் இறங்கி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உயர்படிப்பு படிக்கும் ஏழு இந்திய மாணவர்களை கடத்தி இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் எல்லா பள்ளி மாணவர்களுக்கும் சமமான கல்வி கிடைக்க முயற்சிக்கிறார். 

ஆக்ஷன்கிங் அர்ஜூனின் முயற்சி வெற்றி பெற்றதா? அந்த ஏழு லண்டன் மாணவர்கள் யார்? அவர்களுக்கும் இந்திய ஏழை பள்ளி மாணவர்களுக்கும் என்ன சம்பந்தம்? என இன்னும் ஏகப்பட்ட கேள்விகளுக்கு வித்தியாசமாக விடையளிக்கிறது அர்ஜூனின் ஜெய்ஹிந்த் -2 .

தற்காப்பு கலை கற்றுத்தரும் குருவாக, அபிமன்யுவாக அர்ஜூன். இத்தனை வயதிலும் உடம்பை கச்சிதமாக வைத்துக் கொண்டு ஆக்ஷன் காட்சிகளில் வழக்கம் போலவே அதிரடி செய்து கதாநாயகி சுர்வின் சாவ்லாவை மட்டுமல்லாது லண்டன் மாணவி சிம்ரன் கபூரையும் கவருகிறார். 

கூடவே ரசிகர்களையும் சீட்டோடு கட்டி போடுகிறார் ஆக்ஷன் சீன்களில் மட்டும் ! மற்றபடி ஆக்ஷன்கிங்கின் ரொமான்ஸ், பர்ப்பாமெண்ட்ஸ் இதெல்லாம் காமெடியாக இருக்கிறது.

நாயகி சுர்வின் சாவ்லா அர்ஜூன் சாருக்கு மகள் மாதிரி தெரிந்தாலும் மனதில் நிற்கிறார். ஜெயிலுக்கே வந்து அவர் அபிமன்யுவை மணமுடிக்கும் காட்சிகள் நச் சென்று படமாக்கப்பட்டிருக்கிறது. 

நாயகி சுர்வின் சாவ்லாவே ஆக்ஷன்கிங்கிற்கு மகள் மாதிரி தெரிகிறார் என்றால் அர்ஜூனால் கடத்தி பின் காப்பாற்றப்படும் லண்டன் இந்திய மாணவி சிம்ரன் கபூர் சாருடன் டூயட் பாடுவதெல்லாம் ரொம்ப ஓவர் ! ஆனாலும் சுர்வின் மாதிரியே சிம்ரனும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

காமெடி பிரம்மானந்தம், ராகுல்தேவ், ரவிகாளே, அதுல் மாதூர், மயில்சாமி, விஜய் பிரசாத், நரசிம்மராஜூ, கெளதம் சுந்தர்ராஜன், பரத்குமார், சுமீத்திவாரி, பேபி யுனிதா என பெரும் நட்சத்திர பட்டாளமே படத்தில் இருக்கிறது. இருந்து என்ன பயன்? பிரம்மானந்தம், மயில்சாமியால் கூட சிறப்பான சிரிப்பு தர முடியாதது வேதனை!

அர்ஜூன் ஜெனியாவின் இசை இருப்பதே தெரியவில்லை. ஹச்.சி.வேணு கோபாலின் ஒளிப்பதிவு படத்தின் பெரிய ப்ளஸ் ! "இந்தியாவில் எல்லா மாணவர்களுக்கும் ஏழை, பணக்காரர் வித்தியாசமின்றி கல்வி வழங்க அரசு முயற்சிக்க வேண்டும் !" எனும் அழகான மெஸேஜ், ஆக்ஷன், ரொமான்ஸ், காமெடி கடி, சென்டிமென்ட் என அர்ஜூனின் எழுத்து, இயக்கத்தில் தலையை சுற்றி மூக்கை தொட முயன்றிருப்பதால் சலிப்பை ஏற்படுத்துகிறது. 

ஆக மொத்தத்தில் ஜெய்ஹிந்த்-வுக்கும் 2-க்கும் பெயரில் மட்டுமே பெரும் ஒற்றுமை ! கதையில், காட்சிபடுத்தலில், வெற்றியில்....?!

Saturday, November 8, 2014

மீண்டும் மருதநாயகம் சாத்தியமா?

கமல்ஹாசன் நடிப்பில் விஸ்வரூபம் 2, உத்தம வில்லன், பாபநாசம் என மூன்று படங்களும் அடுத்து அடுத்தாக ரிலீசாக இருக்கின்றன. 

இதில் உத்தமவில்லன் மற்றும் பாபநாசம் படங்களின் படப்பிடிப்பு முடிந்துவிட்டன. தற்போது அப்படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. 

விஸ்வரூபம் 2 படத்திற்கு இன்னும் சில காட்சிகளை படம் பிடிக்க வேண்டும். விஸ்வரூபம் 2, உத்தம வில்லன், பாபநாசம் ஆகிய இந்த மூன்று படங்களில் உத்தம வில்லன் படம்தான் முதலில் வெளியாகவிருப்பதாக சமீபத்தில் கமல்ஹாசனே கூறியிருக்கிறார்.  

தன்னுடைய படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருப்பது கமலுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தாலும், அவருக்கு ஒரு வருத்தமும் உண்டு. அதுதான்... மருதநாயகம் படம் கிடப்பில் கிடப்பது. 

கமலின் பிறந்தநாளை ஒட்டி அவர் கொடுத்த பேட்டி ஒன்றில் தன் கனவுப்படமான மருதநாயகம் படம் பற்றி பேசி இருக்கிறார்...,  மருதநாயகம் படத்தின் வேலைகள் எப்போது வேண்டுமானாலும் துவங்கலாம். 

இந்தப் படத்தை இப்போது தயாரிக்க நிச்சயமாக 100 கோடி தேவைப்படும். நான் சொல்வது உண்மையிலேயே 100 கோடி. மருதநாயகம் படத் தயாரிப்புக்கு பணம் மட்டும் ஒரு பிரச்சனையல்ல. 

படத்தை உலகம் முழுக்க கொண்டு சேர்க்க பவர்ஃபுல்லான ஒரு டிஸ்ட்ரிப்யூஷன் நெட்வொர்க் தேவை. 

அதற்கான ஆட்கள் வரவேண்டும். காரணம் இந்தப் படத்தை எடுப்பதாக இருந்தால் ஆங்கிலம், ஃப்ரெஞ்ச், தமிழ் மொழிகளில் எடுக்க வேண்டும். 

அந்தந்த மொழிகளில் உலகம் முழுக்க ரிலீஸ் செய்ய வேண்டும். அதற்கான வசதிகள் அமைந்தால் மருநதநாயகம் படத்தின் வேலைகளை உடனே துவங்குவேன். 

ஏற்கெனவே இப்படத்திற்காக 30 நிமிட காட்சிகளை படம் பிடித்துள்ளேன். இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு தேவையான காட்சிகளை மட்டும்தான் படம் பிடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் கமல்.

Wednesday, November 5, 2014

நெருங்கி வா முத்தமிடாதே - சினிமா விமர்சனம்

ஆரோகணம் படத்தை இயக்கிய நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனின் இரண்டாவது படைப்பு தான் ''நெருங்கி வா முத்தமிடாதே''. 

டைட்டிலை வைத்துக் கொண்டு மேலோட்டமாக பார்த்தால் இது ஒரு காதல் படைப்பாக தெரிந்தாலும், நெடுஞ்சாலையில் நடக்கும் டீசல் கடத்தலும், அதை ஒட்டி நிகழ இருக்கும் அசம்பாவிதமும், தேச துரோகமும், அதை தடுக்கும் ஹீரோவின் சாமர்த்தியமும் தான் ''நெருங்கி வா முத்தமிடாதே'' படத்தின் மொத்த கதையும். 

அதனூடே காதல், காமெடி, சென்டிமெண்ட் எல்லாவற்றையும் கலந்து கட்டி வித்தியாமும், விறுவிறுப்புமாக கதை சொல்ல முயன்று அதில் கொஞ்சம் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குநர் லட்சுமி !

நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு கடுமையாக நிலவும் சூழலில், ஊரை அழிக்க ஊடுருவும் தீவிரவாத கும்பலும் தான் என்ன செய்கிறோம் என்பது தெரியாமலே லாரியில் டீசல் கடத்தி செல்கிறார் ஹீரோ ! 

ஒரு கட்டத்தில் உண்மை தெரிந்து அந்த கடத்தலின் பின்னணியில் இருக்கும் லோக்கல் எம்.எல்.ஏ.,வில் தொடங்கி, முன்னாள் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் லட்சுமி ராமகிருஷ்ணன் வரை சகலரையும் சட்டத்தின் முன் நிறுத்தி தான் எப்படி தப்பிக்கிறார் எனும் கதையுடன், இரண்டு காதலையும் (நாயகர் மீதான நாயகியின் காதல் உள்பட) கலந்து கட்டி பக்காவாக கதை, திரைக்கதை எழுதியிருக்கும் இயக்குநர் லட்சுமி ராகிருஷ்ணன், தலையை சுற்றி மூக்கை தொடும் விதமாக இக்கதையை இயக்கி இருப்பதால் அந்த இயக்கத்தில் மட்டும் சற்றே கோட்டை விட்டிருக்கிறார்.

நாயகராக புதுமுகம் ஷபீர் ஒரே லுங்கி சட்டையுடன் வீம்பும், வீராப்புமாக தன் பாத்திரத்திற்கேற்ற நடிப்பை வாரி வழங்கி இருக்கிறார். அப்பா ஒய்.ஜி.மகேந்திரனிடம் அப்படி என்னதான் ஷபீருக்கு கோப தாபமோ.?!

நாயகி பியா, அப்பா யார்? என்று சொல்லாத அம்மா விஜி சந்திரசேகர் மீது காட்டும் வெறுப்பில் ஆகட்டும், நண்பன்(காதலன்?) என்று உடன் வந்தவன் இக்கட்டான சூழலில் 'எஸ்' ஆகிவிட, காப்பாற்றி கரை சேர்த்த லாரி ஓட்டுநரும், உரிமையாளருமான ஹீரோ ஷபீர் மீது காதல் கொள்ளும் காட்சிகளிலாகட்டும்... ஒவ்வொன்றிலும் உருக்கி விடுகிறார் அம்மணி. 'கீப் இட் அப்' பியா!

விஜி சந்திரசேகர், நான்குபேர் சேர்ந்து செய்த 'கேங்ரேப்'பில் தான் நீ பொறாந்தாய்.? என தன் அப்பா யார்? என்று அடிக்கடி கேட்கும் பெண்ணிடம், ஒருநாள் வெடித்து உண்மையை உடைத்து சொல்லிவிட்டு அந்த சூடு ஆறுவதற்குள் மலேசியாவிற்கு பாட்டு கச்சேரிக்கு பாட கிளம்புவதெல்லாம் ரொம்ப ஓவர். ஆமாம், கடைசிவரை விஜி ஸ்டேஜில் பாடவே இல்லையே? ஏன்.?

சித்தப்பா சாவுக்காகவும், சொத்துக்காகவும் காத்திருக்கும் பாலசரவணனின் காமெடி ஓ.கே! லாரியில் லிப்ட் கேட்டு ஏறும் தம்பி ராமையாவின் காமெடி கடி! எம்.எல்.ஏ. ஏ.எல்.அழகப்பன், மத்திய மந்திரி லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோரின் வில்லத்தனமும், சதி செயல்களும் புரியாத புதிர். 'தலைவாசல்' விஜய்யின் காதல் அட்வைஸூம், ரோட்டோரத்து பாலியல் தொழிலாளியின் இரக்க சுபாவமும் ஈரம்!

மெலடி புளூஸின் இனிய இசை, வினோத் பாரதியின் அழகிய ஒளிப்பதிவு எல்லாம் இருந்தும் லட்சுமி ராமகிருஷ்ணனின் இயக்கத்தில், நடுக்கடலில் நிற்கும் கப்பலுக்கு போக, படகில் டீசல் இல்லாமல் காத்திருக்கும் தீவிரவாதி யார்.? 

அவன் காரைக்காலில் செய்த அல்லது செய்ய இருக்கும் சதிச்செயல் என்ன.? ஒய்.ஜி.எம்.முக்கு மகன் ஷபீர் மீது அப்படி என்ன வெறுப்பு.? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு விடை அளிக்கப்பட்டிருந்ததென்றால் ''நெருங்கி வா முத்தமிடாதே'' ரசிகர்களை இன்னும் கிறங்கி போய் முத்தமிட வைத்திருக்கும்! அவ்வாறு இல்லாதது படத்தில் உள்ள பலங்களை மிஞ்சிற்கும் பலவீனம்!

மொத்தத்தில், ''நெருங்கி வா முத்தமிடாதே'' - பல இடங்களில் ரசிகர்களை ''நெருங்கி'' கிறங்கிபோக செய்யும்! சில சீன்களில் ''உறங்கிபோகவும் செய்யும்!!''

Tuesday, November 4, 2014

என்னை அறிந்தால் படத்தின் ஆடியோ வெளியீட்டுக்கு அஜித் வருவாரா?

இந்த வருடம் வெளியாகும் படங்களில் அதிக எதிர்பார்ப்புக்குரிய படம்... கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் என்னை அறிந்தால்... படம்தான். படத்தின் தலைப்பை சஸ்பென்ஸாக வைத்திருந்தவர்கள். 

கடந்த சில நாட்களுக்கு முன் இப்படத்தின் தலைப்பையும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரையும் வெளியிட்டனர். தொடர்ந்து என்னை அறிந்தால் படத்தின் போஸ்டர்கள் தினம் ஒன்றாக வெளியாகி, அஜித் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது. 

தங்களது சந்தோஷத்தின் வெளிப்பாடாக என்னை அறிந்தால்... படத்தலைப்பை டுவிட்டரில் உலகளவில் டிரென்ட் செய்தார்கள் தல ரசிகர்கள். 

என்னை அறிந்தால்... படத்தின் வேலைகள் திட்டமிட்டபடி சரியாக நடந்து வருவதால் ஏற்கெனவே கௌதம் வாசுதேவ் மேனன் அறிவித்தபடி, இந்த மாதத்தில் ஃபர்ஸ்ட் லுக் டீஸரை வெளியிட உள்ளனர். 

அதை வெளியிடுவதற்கு பரபரப்பாக ஆயத்தமாகி வருகிறது கௌதமின் டீம்! என்னை அறிந்தால் படத்தின் டீஸரை நவம்பர் 20 ஆம் தேதி வெளியிட உள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உருவாகி வரும் பாடல்களை டிசம்பர் முதல் வாரத்தில் வெளியிட இருப்பதாகவும் தகவல்.

பொதுவாகவே அஜித் தன் படங்கள் சம்பந்தப்பட்ட எந்த விழாக்களிலும் கலந்து கொள்ள மாட்டார். என்னை அறிந்தால் படத்தின் இசைவெளியீட்டுவிழாவுக்கு அஜித் வர மாட்டார் என்பதால், என்னை அறிந்தால்... படத்தின் ஆடியோ வெளியீட்டை ஏதாவது ஒரு எஃப்.எம். ஸ்டேஷனில் வைக்கலாமா என யோசித்து வருகிறார்கள். 

அல்லது எவ்வித விழாவும் இல்லாமல் நேரடியாக கடைகளில் விற்பனைக்கு அனுப்பி வைக்கலாமா என்றும் பரிசீலித்து வருகிறார்கள். 

என்னை அறிந்தால்... படத்தை கிறிஸ்துமஸ் அல்லது பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதியும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.