Tuesday, December 23, 2014

இயக்குநர் பாலச்சந்தர் காலமானார்

நாடக இயக்குநர், திரைப்பட இயக்குநர், நடிகர், கதாயாசிரியர், தயாரிப்பாளர், தொலைக்காட்சி சீரியல் இயக்குநர் என பன்முக திறமை கொண்டவர் கே.பாலச்சந்தர். 

"இயக்குநர் சிகரம்' மற்றும் "தமிழ் சினிமாவின் பீஷ்மர்' என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். தமிழ் திரையுலக வரலாற்றில் தனி இடம் பிடித்த இவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் காலமானார்

1930 ஜூலை 9ம் தேதி திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடி என்ற கிராமத்தில், சினிமாவுக்கு தொடர்பில்லாத குடும்பத்தில் பிறந்தார். தந்தை கைலாசம், தாயார் காமாட்சியம்மாள். 

நன்னிலத்தில் பள்ளியில் படிக்கும் போதே நாடகம் மற்றும் சினிமா மீது விருப்பம் கொண்டார். நண்பர்களை வைத்து திண்ணை நாடகங்களை நடத்தினார். 

அப்போதைய தமிழ் சினிமாவின் "சூப்பர் ஸ்டாராக' விளங்கிய தியாகராஜ பாகவதரின் படங்களால் ஈர்க்கப்பட்டார். 12 வயதிலேயே சினிமா மற்றும் நாடகங்களுக்கு அடிக்கடி சென்றார். 

இதன் மூலம் அவர் மனதில் சினிமா ஆசை வளரத் தொடங்கியது. பின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி., (விலங்கியல்) படிப்பில் சேர்ந்தார். கல்லூரியில் படிக்கும் போதும் கதை எழுதுவது, நாடகங்களில் நடிப்பது போன்ற திறமைகளை வளர்த்துக் கொண்டார். 

கல்லூரிகளில் விழா என்றால் அதில் பாலசந்தரின் நாடகம் கண்டிப்பாக இடம்பெறும். 1949ல் பட்டப்படிப்பை முடித்ததும், முத்துப்பேட்டையில் உள்ள பள்ளியில் ஓராண்டு ஆசிரியராக பணியாற்றினார். 

அங்கும் மாணவர்களை வைத்து நாடகம் நடத்துவார். 1950ல் சென்னை வந்தார். அங்கு மத்திய அரசின் அக்கவுண்டண்ட் ஜென்ரல் அலுவலகத்தில் கிளார்க் பணியில் சேர்ந்தார். 

அங்கு இருக்கும்போதே கிடைக்கும் நேரத்தில் நாடக கம்பெனியில் சேர்ந்து நாடகம் இயக்கும் திறமையை வளர்த்துக்கொண்டார். 

ஆங்கிலத்தில் வெளியான "மேஜர் சந்திரகாந்த்' என்ற நாடகத்தை தமிழில் மொழி பெயர்த்து இயக்கினார். இந்நாடகம் பெரும் வரவேற்பை பெற்றது. இதன் பின் நீர்க்குமிழி, சர்வர் சுந்தரம், மெழுகுவர்த்தி, நாணல், நவக்கிரகம் உள்ளிட்ட நாடகங்களையும் இயக்கினார்.