Sunday, December 21, 2014

லிங்கா படத்தால் நஷ்டம் - நாளை ரஜினியை சந்திக்க விநியோகஸ்தர்கள் திட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த லிங்கா படம் கடந்த 12ந் தேதி வெளிவந்தது. 4 வருடங்களுக்கு பிறகு ரஜினி நடித்த படம் என்பதால் படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. 

இதனால் விநியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் பெரிய விலை கொடுத்து வாங்கினார்கள். ஆனால் படம் எதிர்பார்த்த வசூலைக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

இதனால் விநியோகஸ்தர்கள் நஷ்டமான தொகையை தயாரிப்பாளரிடம் திருப்பிக் கேட்க முடிவு செய்திருக்கிறார்கள்.

"அரையாண்டு தேர்வுகள் நடைபெற்றதாலும், 600 தியேட்டர்களில் ரிலீஸ் செய்ததாலும் எதிர்பார்த்ததை விட வசூல் குறைவாக இருந்தது. இப்போது பிக்அப் ஆகிவிட்டது. படத்தின் வசூல்பற்றி அவதூறு பரப்புகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று படத்தை வாங்கி விநியோகித்த வேந்தர் மூவீஸ் அறிவித்தது.

இதற்கிடையில் லிங்கா படத்தை வாங்கி நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்கள் நாளை (டிச 22) ராகேவந்திரா திருமண மண்டபத்தில் ரஜினியை சந்திக்க முடிவு செய்திருக்கிறார்கள். இதற்காக அவர்கள் நேற்று (டிச 20) போலீஸ் கமிஷனரை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர்.

 "ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தை கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கி திரையிட்டோம். ஆனால் படம் எதிர்பார்த்த வசூலைக் கொடுக்கவில்லை. 

இதனால் தியேட்டர்காரர்கள் எங்களை நெருக்குகிறார்கள். இது தொடர்பாக 22ந் தேதி ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினியை சந்தித்து கோரிக்கை விடுக்க இருக்கிறோம். 

தமிழ்நாடு முழுவதுலுமிருந்து விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் வருகிறார்கள் அதனால் எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று அந்த மனுவில் கூறியுள்ளனர்.