Friday, January 16, 2015

ஐ (2015) - சினிமா விமர்சனம்

ஜிம் வைத்து நடத்தி வரும் விக்ரம், மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தை வெல்வதற்காக அதிக ஈடுபாட்டுடன் பயிற்சி எடுத்து வருகிறார். இவருக்கு சர்வதேச மாடலான எமி ஜாக்சன் மீது அதீத பிரியம். 

அவர் எந்த விளம்பரத்தில் நடித்தாலும், அவர் விளம்பரப்படுத்தும் பொருளை வாங்கி வைத்துக் கொள்ளும் அளவுக்கு எமி மீது பைத்தியமாக இருக்கிறார். 

இந்நிலையில், தனது நண்பன் சந்தானம் மூலம் எமி ஜாக்சனை நேரில் சந்திக்கும் வாய்ப்பு விக்ரமுக்கு கிட்டுகிறது. எமியை படப்பிடிப்பிற்கு சென்று சந்திக்கும் விக்ரம், அவளுடன் போட்டோ எடுத்துக் கொள்வதோடு, தனது விசிட்டிங் கார்டையும் அவளிடம் கொடுத்துவிட்டு திரும்புகிறார். 

இதற்கிடையே எமியுடன் இணைந்து நடிக்கும் மாடலான உபேன் பட்டேல், அவளுக்கு பாலியல் தொந்தரவு தருகிறார். இதுகுறித்து தனது குடும்ப டாக்டரான சுரேஷ் கோபியிடம் முறையிடுகிறாள் எமி. அவர், உபேன் பட்டேலை நேரடியாக எச்சரிக்கிறார். 

இதனால் கோபமடையும் உபேன் பட்டேல், தன்னுடன் ஜோடியாக நடிக்கும் விளம்பர படங்களில் இருந்து எமி ஜாக்சனை நீக்கி விடுகிறார். எமி ஜாக்சனுக்கு வேறு மாடல் யாரும் இல்லாததால் அவளுக்கு விளம்பர படங்களும் கிடைப்பதில்லை. 

அந்த வேளையில், விக்ரம் இவளிடம் கொடுத்துச் சென்ற விசிட்டிங் கார்டை பார்க்கும் எமி ஜாக்சன், அவனை தனக்கு மாடலாக உருவாக்கி அதன் மூலம் விளம்பர படங்களை பெறலாம் என்று முடிவு செய்து விக்ரமை தேடி செல்கிறாள். எமி ஜாக்சன் மீது தீவிர பற்றுடன் இருக்கும் விக்ரமும் அவளுடன் சேர்ந்து நடிப்பதில் ஆர்வமாகி, தனது லட்சியத்தை விட்டுவிட்டு மாடலாக உருவாகிறார். 

விக்ரமுக்கு மேக்கப் மேனாக ஒரு திருநங்கையை நியமிக்கிறாள் எமி ஜாக்சன். திருநங்கை விக்ரமை ஒருதலையாக காதலிக்கிறாள். ஆனால், விக்ரமோ எமிஜாக்சனை காதலிப்பதால், அவளது காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் விக்ரமை பழிவாங்க திருநங்கை காத்துக் கொண்டிருக்கிறாள். 

எமியும்-விக்ரமும் இணைந்து பல்வேறு விளம்பரங்களில் மாடலாக நடிக்கிறார்கள். இவர்களது விளம்பரத்திற்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைப்பதால், இவர்களை தேடி நிறைய விளம்பரங்கள் வருகிறது. 

ஒருநாள் பெரிய விளம்பர கம்பெனி ஒன்றை நடத்தும் ராம்குமாரின் விளம்பரத்தில் நடிக்க விக்ரம் மறுப்பு தெரிவிக்கிறார். இதனால், விக்ரம் மீது ராம்குமார் வெறுப்பில் இருக்கிறார். இவர்களது வளர்ச்சி பிடிக்காத மாடலான உபேன் பட்டேலும் விக்ரமை பழிவாங்க காத்துக் கொண்டிருக்கிறார். 

இப்படிப்பட்ட சூழலில் விக்ரமின் முகம் திடீரென அகோரமாக மாறுகிறது. இதற்கு யார் காரணம்? அவர்களை விக்ரம் பழிவாங்கினாரா? என்பதே மீதிக்கதை. 

விக்ரம் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்திருப்பது திரையில் பார்க்கும்போது தெளிவாக தெரிகிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அதற்கேற்ற முகபாவணையையும், உடல் மொழியையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். 

குறிப்பாக, கூனன் கதாபாத்திரத்தில் வரும் விக்ரமை பார்க்கும்போது, விக்ரம் தானா? என்று வியக்கும் அளவுக்கு மிக தத்ரூபமான நடிப்பை தந்திருக்கிறார். ரசிகர்களுக்கு தனது நடிப்பால் பொங்கல் விருந்தளித்திருக்கிறார் என்று தான் சொல்லவேண்டும்.

நாயகியாக வரும் எமி ஜாக்சன் வெளிநாட்டு பெண் என்றாலும், படத்தில் அது தெரியாத அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார். கவர்ச்சியிலும் எல்லை மீறாமல் நடித்திருக்கிறார். நடிப்பில் நல்ல ஸ்கோர் பண்ணக்கூடிய கதாபாத்திரத்தை இயக்குனர் வழங்கியிருக்கிறார். அதை அவரும் மிகச்சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார். 

மாடல் வில்லனாக வரும் உபேன் பட்டேல், மாடலாகவும், வில்லனாகவும் அழகாக மனதில் பதிகிறார். விளம்பர கம்பெனி அதிபராக வரும் ராம்குமாரும் வில்லத்தனத்தில் ஆக்ரோஷம் காட்டியிருக்கிறார். படம் முழுக்க நல்லவராகவே சித்தரிக்கப்படும் சுரேஷ் கோபியின் கதாபாத்திரம் இறுதியில் மாற்றம் ஏற்படுவது ஷங்கருக்கே உரித்தான பாணியை காட்டுகிறது. 

சந்தானம் வழக்கமான காமெடியில் ரசிக்க வைக்கிறார். பவர் ஸ்டார் சீனிவாசன் ஒரு சில காட்சிகள் வந்தாலும் கலகலக்க வைத்திருக்கிறார். திருநங்கையாக வருபவரும் சிறப்பாக நடித்திருக்கிறார். கதாநாயகிக்கு இணையான கதாபாத்திரம் இவருடையது. அதை அசத்தலாக செய்து கைதட்டல்களை பெறுகிறார். 

இயக்குனர் ஷங்கர் தனது வழக்கமான பிரம்மாண்ட காட்சிகளால் மிகவும் கவர்கிறார். சண்டைக் காட்சிகளில் மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டத்தை காட்டியிருக்கிறார். ஆனால், அவற்றின் நீளம் தான் ரசிகர்களை சீட்டை விட்டு எழுந்திருக்க வைக்கிறது. 

ஒவ்வொரு சண்டைக்காட்சியையும் 10 நிமிடங்கள் காட்சிப்படுத்தியிருப்பது போரடிக்கிறது. அவற்றை மட்டும் சற்று குறைத்தால் நன்றாக இருந்திருக்கும். விக்ரமின் கெட்டப்பிற்காக ரொம்பவும் சிரமப்பட்டிருக்கிறார் என்பது படத்தில் நன்றாக தெரிகிறது.

மற்றபடி, பாடல்கள், காட்சிகள், கதை சொன்ன விதம், திரைக்கதை அமைத்த விதம் என அனைத்தும் ஷங்கர் தனது வழக்கமான பாணியையே பின்பற்றியிருக்கிறார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.

படத்திற்கு மற்றொரு பெரிய பலம் ஏ.ஆர்.ரகுமானின் இசை தான். இவருடைய பின்னணி இசையாகட்டும், பாடல்களாகட்டும் இரண்டிலும் தான் ஒரு இசைப்புயல் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பின் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் கண்களுக்கு அழகான விருந்தளிக்கிறது. குறிப்பாக, பாடல் காட்சிகளிலும், சண்டை காட்சிகளிலும் இயக்குனரையே மிஞ்சிவிட்டார். 

மொத்தத்தில் ‘ஐ’ ஆச்சர்யம்.