Wednesday, January 21, 2015

ஐ படம் வசூல் ரூ.100 கோடியை தாண்டியது

விக்ரம், எமிஜாக்சன் ஜோடியாக நடித்த ‘ஐ’ படம் பொங்கலன்று ரிலீசாகி ஓடிக் கொண்டு இருக்கிறது. உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டது. தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியானது. 

பொங்கல் விடுமுறை தினங்களில் ‘ஐ’ படம் பார்க்க கூட்டம் அலை மோதியது. தியேட்டர்கள் நிரம்பி வழிந்தன. இந்த படம் உலகம் முழுவதும் முதல் ஒரு வாரத்தில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

விக்ரமின் முந்தைய படங்கள் இதுபோன்று வசூல் சாதனை நிகழ்த்தியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் ரிலீசான முதல் ஓரிரு தினங்களிலேயே ரூ.8 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. ‘மனோகருடு’ என்ற பெயரில் அங்கு ரிலீஸ் செய்யப்பட்டது. இந்தியில் இதுவரை ரூ.7 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியுள்ளது. 

இந்த நிலையில் ‘ஐ’ படத்துக்கு எதிராக திருநங்கைகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களை அவமதிப்பது போல், காட்சி மற்றும் வசனங்கள் படத்தில் இடம் பெற்றுள்ளதாக கண்டித்து இப்போராட்டத்தை நடத்துகின்றனர். 

சர்ச்சை காட்சிகளை நீக்க வேண்டும் என்று வற்புறுத்தி தணிக்கை குழுவிடம் மனு அளித்துள்ளனர். ஆனால், தணிக்கை குழு அவர்கள் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது. திருநங்கைகள் போராட்டத்தை தொடர்ந்து படத்தின் இயக்குனர் ஷங்கர் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.