Sunday, March 1, 2015

காமெடி நடிகரின் கேரக்டரை மாற்றிய தேசியவிருது

மலையாள சினிமா சம்பந்தப்பட்ட எந்த விழாவானாலும் அதில் மம்முட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி  என ஒருவர் விடாமல் அவர்களைப்போலவே அதுவும் அவர்கள் முன்னிலையிலேயே மிமிக்ரி செய்து காண்பிக்கும் தைரியமான திறமைசாலி ஒருத்தர் இருக்கிறார். 

அவர் தான் மலையாள நகைச்சுவை நடிகர் சுராஜ் வெஞ்சாரமூட். 2005ல் மம்முட்டி நடித்த  'ராஜமாணிக்கம்'' படத்தில் அவருக்கு திருவனந்தபுரம் பாஷையை சொல்லிக்கொடுப்பதற்காக மலையாள சினிமாவில் கால்பதித்தவர் தான் இந்த சுராஜ் வெஞ்சாரமூட்.  

'பேரறியாதவர்' என்கிற படத்தில் குணச்சித்திர வேடத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக, கடந்த 2013க்கான சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றிருக்கிறார். 

ஆனால் அதன்பின்னர் அவரது போக்கிலும் அதாவது நடிப்பிலும் கொஞ்சம் மாற்றம் ஏற்படவே செய்திருக்கிறது. காமெடி வேடங்களை குறைத்து கேரக்டர் ரோல்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். 

'கர்ப்பஸ்ரீமன்', 'காட் பார் சேல்' ஆகிய படங்களை பார்த்தவர்களுக்கு இது நன்றாகவே தெரியும். இப்போது மீண்டும் 'எண்டே சத்யநேஸ்வன பரீட்சைகள்' என்கிற படத்தில் அறுபது வயது பெரியவராக கிட்டத்தட்ட நாற்பது வருடங்கள் திருவனந்தபுரம் கோர்ட்டில் கிளார்க் வேலைபார்ப்பவராக நடித்திருக்கிறார். 

நான்ஸ்டாப் காமெடிக்கு சொந்தக்காரரான சுராஜ் இப்படி குணச்சித்திர பாதையில் இறங்கியது காமெடி ரசிகர்களுக்கு சற்று வருத்தம் தான். அவர்களுக்கு ஆறுதலாக சில காமெடி படங்களிலும் கமிட் ஆகியிருக்கிறார் சுராஜ்.