Thursday, July 31, 2014

தெலுங்கு அஞ்சான் ரிலீஸ் தள்ளி வைப்பு

தமிழ்த் திரைப்படங்களில் சில முக்கிய நடிகர்கள் நடிக்கும் படங்கள் தெலுங்கில் தொடர்ச்சியாக 'டப்பிங்' செய்யப்பட்டு வருகின்றன. 

ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி, ஆகியோர் நடிக்கும் படங்களுக்குத் தெலுங்குத் திரையுலகிலும் வரவேற்பு இருந்து வருவதால் அவர்கள் நடிக்கும் படங்களை அங்குள்ள தயாரிப்பாளர்கள் வாங்கி டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள். 

சில படங்கள் பெரும் லாபத்தைக் கொடுத்தாலும் சில படங்கள் தோல்வியையும் சந்திக்கின்றன. ஆனால் தோல்வியடைந்தாலும் நஷ்டம் ஆவதில்லை என்றும் சொல்கிறார்கள்.

இதனிடையே, சூர்யா, சமந்தா நடித்துள்ள 'அஞ்சான்' படத்தை ஆகஸ்ட் 15ம் தேதி தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் வெளியிட முடிவு செய்திருந்தார்கள். 

தெலுங்கில் 'சிக்கந்தர்' என பெயர் வைத்திருக்கிறார்கள். ஆனால், அதே தினத்தில் தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான ஜுனியர் என்டிஆர், சமந்தா நடித்துள்ள 'ரபாஷா' படமும் வெளியாக உள்ளது. 

எனவே, 'ரபாஷா' படத்துடன் ஒரு 'டப்பிங்' படம் போட்டி போட முடியாது என்பதால் 'அஞ்சான்' படத்தின் தெலுங்கு டப்பிங்கான 'சிக்கந்தர்' படத்தை ஒரு சில நாட்கள் கழித்தோ அல்லது ஒரு வாரம் கழித்தோ வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.

ஆனால், அதற்குப் பின்னால் வேறு விவகாரம் உள்ளதாக பேசிக் கொள்கிறார்கள். சமீப காலமாக பல தமிழ்ப் படங்களை தெலுங்கில் டப்பிங் செய்து ரிலீஸ் செய்வதை பல தெலுங்குப் பட தயாரிப்பாளர்கள் எதிர்த்து வருகிறார்கள். 

தமிழில் வெளியான சில வாரங்கள் கழித்தே அந்தப் படங்களை வெளியிட வேண்டும் என்று எதிர்ப்புக் குரல் எழுப்புகிறார்கள். ஒரு வேளை தமிழில் அந்தப் படங்கள் தோல்வியடைந்து விட்டால், தெலுங்கில் வெளியிட முடியாது, வரவேற்பும் கிடைக்காது என்பதே அதற்குக் காரணம் என்கிறார்கள் தமிழ்ப் படத் தயாரிப்பாளர்கள்.

'அஞ்சான்'ன்னு பேரை வச்சிட்டு அஞ்சலாமா ?