Sunday, July 27, 2014

அப்பா படத்தை ரீமேக் செய்யும் மகன்

சிரஞ்சீவி, ஸ்ரீதேவி நடித்து 1990ல் வெளிவந்த 'ஜெகதக வீருடு அதிலோக சுந்தரி' என்ற மாபெரும் வெற்றிப் படத்தை அவருடைய மகன் ராம் சரண் தேஜா நடிக்க ரீமேக் செய்ய உள்ளார்களாம். 

அப்பா சிரஞ்சீவி நடித்த, அந்த படத்தைத் தயாரித்த அஸ்வினி தத் மீண்டும் மகன் ராம் சரண் தேஜா நடிக்கும் இந்த படத்தைத் தயாரிக்க உள்ளாராம். 1990ல் வெளிவந்த படத்தை பிரபல இயக்குனர் கே.ராகவேந்திர ராவ் இயக்கினார், இளையராஜ இசையமைத்தார். 

ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் பல தியேட்டர்களில் அந்தப் படம் 100 நாட்கள் ஓடியது. ஒரு தியேட்டரில் ஒரு வருடத்திற்கும் மேலாக ஓடியது. தமிழில் 'காதல் தேவதை' என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டும் வெளியானது. அந்தக் காலத்திலேயே 10 கோடிக்கும் மேல் வசூல் செய்த படம்.

சிரஞ்சீவி, நான்கு அனாதைக் குழந்தைககளை வளர்த்து வருகிறார். ஒரு குழந்தைக்கு விபத்தில் நன்றாக அடிபட்டு விட, அந்தக் குழந்தையைக் காப்பாற்ற, ஒரு மூலிகையை எடுத்து வர மானசரோவர் செல்கிறார். 

அதே சமயம், இந்த பூமியின் அழகைப் பார்த்து ரசிக்க இந்திரலோகத்து மன்னனான இந்திரனின் மகள் இந்திரஜா அதே பகுதிக்கு வருகிறார். வந்தவர் இந்திரலோகத்து மீண்டும் செல்வதற்கு வேண்டிய முக்கிய மோதிரத்தை தொலைத்து விடுகிறார். 

அந்த மோதிரம் சிரஞ்சீவி கையில் கிடைக்கிறது. அந்த மோதிரம் ஒரு சக்தி வாய்ந்த மோதிரம். அதன் மூலம் சிரஞ்சீவிக்கு பல அதிசயங்கள் நடக்கின்றன. மோதிரத்தை திரும்பப் பெறுவதற்காக சிரஞ்சீவியைத் தேடி அவரின் இருப்பிடத்திற்குச் செல்கிறார் ஸ்ரீதேவி. அதன் பின் நடக்கும் சுவாரசியமான சம்பவங்கள்தான் படத்தின் கதை.

தெலுங்குத் திரையுலக ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட இப்படத்தை இப்போது ரீமேக் செய்தாலும் மீண்டும் வரவேற்பைப் பெறும் என்கிறார் தயாரிப்பாளர் அஸ்வினி தத்.