Saturday, May 3, 2014

என்னமோ நடக்குது - சினிமா விமர்சனம்

கதைப்படி, விஜய் வசந்த்., அப்பா இல்லாது அம்மாவுடன் வாழும் குப்பத்து இளைஞர். 

பகலில் போஸ்டர் ஒட்டுவதும், இரவில் நண்பர்களுடன் குவாட்டர் குடிப்பதுமா வாழ்க்கையை குதுகலமாக ஓட்டும் அவரது வாழ்க்கையில், அம்மா சரண்யா பொன்வண்ணன் இறக்கும் தருவாயில், வசந்தமாக குறுக்கிடுகிறார் மிடில் கிளாஸ் நர்ஸ் மஹிமா! 

அம்மணியும், அவரது அப்பா அழகம் பெருமாளும் பட்ட 5 லட்சம் கடனுக்காக, வங்கி பணத்தை கடத்தி வட்டிக்கு விட்டு துட்டு பார்க்கும் ஒரு மாபியா கும்பலிடம் வேலைக்கு சேருகிறார் விஜய் வசந்த்!

ரகுமான் தலைமையிலான அந்த மாபியா கும்பலுக்கு ஆப்பு வைக்க முயலுகிறார், அவர்களால் ஏற்கனவே பாதிப்பிற்கு உள்ளான பிரபு! அதில் பகடைகாயாக பந்தாடப்படும் விஜய் வசந்த், காதலியை கடன் சுமையிலிருந்து மீட்டாரா?, ரகுமான் - பிரபு கோஷ்டிகளுக்கு இடையே சிக்கி சின்னாபின்னமானாரா.? என்பது தான் “என்னமோ நடக்குது” படத்தின் கதை! 

இந்த கதையை எத்தனை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் படம் பிடிக்க முடியுமோ அத்தனை வித்தியாசமாகவும், அழகாகவும், அம்சமாகவும் படம் பிடித்திருப்பதற்காகவே இயக்குநர் பி.ராஜபாண்டியை எத்தனை முறை வேண்டுமானாலும் பாராட்டலாம். 

இப்படி ஒரு படத்தை தயாரித்திருப்பதற்காக வி.வினோத் குமாரை (இவர் விஜய் வசந்த்தின் சகோதரர்) சீராட்டலாம்!

விஜய் வசந்த் பெரிதாக மேக்கப் இல்லாமல், தன் முந்தைய படங்களை காட்டிலும் இயல்பாக நடித்து, குப்பத்து இளைஞராகவே பேசி, சிரித்து ரசிகர்களை சீட்டோடு கட்டி போட்டு விடுகிறார். பேஷ், பேஷ்!!

மஹிமாவும், கனடாவில் படிக்க வேண்டிய கனவுடன் நர்ஸாக நன்றாகவே நடித்திருக்கிறார். விஜய் வசந்த், மஹிமா மாதிரியே பிரபு, ரகுமான், சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமைய்யா, சுகன்யா, கும்கி அஸ்வின், நமோ நாராயணா, திருமுருகன், அழகம் பெருமாள், வின்செண்ட் அசோகன், சௌந்தர்யா உள்ளிட்ட ஒவ்வொருவரும் நச் என்று நடித்து நம்மை டச் செய்து விடுகின்றனர்.

உன் கடனுக்கு ஏன் தல-யை அடகு வைக்கிற? உன் மது பொதுவாகி விடுவார்... உள்ளிட்ட பளிச், பளிச் பன்ச் வசனங்கள் தான் என்னமோ நடக்குது படத்தில் செம கிக்!

பிரேம்ஜி அமரன், இனி நடிப்பதை விட்டுவிட்டு, முழுநேர இசையமைப்பாளராகலாம் எனும் அளவிற்கு பாடல்களிலும், பின்னணி இசையிலும் மிரட்டியிருக்கிறார் மிரட்டி! ஏ.வெங்கடேஷின் ஒளிப்பதிவும், ஆக்ஷன் படத்திற்கே உரிய அதிரடியில் மிரட்டி இருக்கிறது பலே! பலே!! 

ராதகிருஷ்ணனின் வசனம், பிரேம்ஜியின் இசை, ஏ.வெங்கடேஷின் ஒளிப்பதிவு, விஜய் வசந்த்தின் இயல்பான நடிப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளும், சேர்ந்து பி.ராஜபாண்டியின் இயக்கத்தில், “என்னமோ நடக்குது” படத்தை எக்கச்சக்க எதிர்பார்ப்புடன் நடக்க விட்டிருக்கிறது என்றால் மிகையல்ல!

ஆகமொத்தத்தில், “என்னமோ நடக்குது” - என்னமாய் இருக்கிறது எனவே எல்லோருக்கும் பிடித்திருக்கிறது!