Sunday, May 4, 2014

உத்தம வில்லனில் கமல் தீவிரம் - விஸ்வரூபம் 2 என்னாச்சு?

விஸ்வரூபம் படம் பல வில்லங்கங்களை தாண்டி ரிலீசாகி ஹிட்டானது. விஸ்ரூபம் தயாராகும்போதே அதன் இரண்டாம் பாகத்துக்கான பெரும்பகுதி படப்பிடிப்பையும் முடித்திருந்தார் கமல். 

விஸ்வரூபம் ரிலீசுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினார். ஆண்ட்ரியா, பூஜா குமார், இசை அமைப்பாளர் ஜிப்ரான் கூட்டணியில் வேகமாக வளர்ந்தது விஸ்வரூபம் 2.

இந்த நிலையில் உத்தம வில்லன் படத்தை திடீரென அறிவித்து அதன் படப்பிடிப்பில் தீவிரமாகி விட்டார் கமல். கமலின் நண்பர் ரமேஷ் அரவிந்த் இயக்குனர், லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிப்பு. பீரியட் மற்றும் நிகழ்கால கதை கொண்ட படம். 

கமல் சென்ற நூற்றாண்டு கூத்து கலைஞனாகவும் நிகழ்காலத்தில் சினிமா நடிகராகவும் நடித்துள்ளார். அவரது ஆசான் கே.பாலச்சந்தர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

உத்தம வில்லன் தொடங்கிய பிறகு விஸ்வரூபம் 2 பற்றிய செய்திகள் அணைந்து விட்டன. விஸ்வரூபம் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் சர்ச்சைகள் அதிகம் இருக்கிறது. 

தேவையில்லாமல் மீண்டும் ஒரு பிரச்னையில் சிக்க வேண்டாம் என்ற கமல் கருவதாகவும், அதனால்தான் அதை அப்படியே வைத்து விட்டு உத்தம வில்லனில் தீவிரம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

ஒரே மாதிரியான படத்தை அடுத்தடுத்து தர வேண்டாம் வெரைட்டி இருக்க வேண்டும் என்று கமல் கருதுகிறார். அதனால் விஸ்வரூம் 2க்கு முன்னதாக இன்னொரு படத்தை கொடுத்து விட்டால் இந்த இடைவெளி விஸ்வரூபம் 2க்கு சாதகமாக இருக்கும். 

இல்லாவிட்டால் விஸ்வரூபம் போன்றே இரண்டாவது பாகமும் இருக்கிறது என்ற நெகட்டிவ் விமர்சனம் வரும் அதற்காகவே உத்தம வில்லன் வேகம் எடுக்கிறது என்கிறார்கள்.

விஸ்வரூபம் 2வுக்கு இன்னும் பத்து நாள் படப்பிடிப்பு நடத்த வேண்டியது இருக்கிறது. அதற்கு பெரும் தொகை செலவாகும் அதை ஈடுகட்டவே உத்தம வில்லனில் கமல் நடிப்பதாக இன்னொரு தகவலும் இருக்கிறது.