Wednesday, May 7, 2014

கோச்சடையான் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போனது - முன்பதிவு நிறுத்தம்

மே 9ம் தேதி, ரஜினியின் கோச்சடையான் படம் ரிலீஸ் செய்வது உறுதிசெய்யப்பட்டு, தியேட்டரில் முன்பதிவு எல்லாம் துவங்கிய நிலையில், சில பல காரணங்களால் கோச்சடையான் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போய் உள்ளது. 

ரஜினி நடிப்பில், அவரது இளைய மகள் செளந்தர்யா இயக்குநராக களம் இறங்கியுள்ள படம் கோச்சடையான். இந்தியாவிலேயே முதன்முறையாக ஹாலிவுட் படங்களில் தயாரான மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் இப்படம் தயாராகியுள்ளது. 

3டி அனிமேஷன் படமாக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக உருவாகி வந்த இப்படம், இப்போது ரிலீஸ்க்கு தயாராகிவிட்டது. 

ஏற்கனவே ஐந்துமுறை தள்ளிப்போன ரிலீஸ் தேதி, வருகிற மே 9ம் தேதி ரிலீஸ் செய்வது உறுதி செய்யப்பட்டது. 

தமிழகத்தில் மட்டும் சுமார் 500 தியேட்டர்களில் இப்படம் ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு, இன்று முதல் முன்பதிவும் துவங்கியது. 

சென்னையில் பல மால் தியேட்டர்களில் மூன்று தினங்களுக்கு புக்கிங் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், திடீரென கோச்சடையான் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டு, முன்பதிவுகள் எல்லாம் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. என்ன காரணத்திற்காக ரிலீஸ் தள்ளிப்போகிறது என்று படக்குழு தெரிவிக்கவில்லை. 

மேலும் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற தேதியையும் படக்குழு தெரிவிக்கவில்லை. மே 23ம் தேதி ரிலீஸ் ஆகலாம் என்று கூறப்படுகிறது, ஆனால் அதுவும் உறுதி கிடையாது என்கிறார்கள்.