Saturday, April 5, 2014

ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் - சினிமா விமர்சனம்

வம்சம்', 'மெளன குரு', 'தகராறு' ஆகிய படங்களைத் தொடர்ந்து அருள்நிதி நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம், சிம்புதேவனின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் மற்றும் அருள்நிதியின் தந்தை மு.க.தமிழரசு தயாரிப்பில், மோகனா மூவிஸ் பேனரில், ஜெ.எஸ்.கே.பிலிம் கார்ப்பரேஷன் ஜெ.சதீஷ்குமார் வழங்கிட வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் 'ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்'

ஒருவன் குறித்த நேரத்தில் ஒரு வேலையை ஆரம்பித்தால் அது ஒரு விதமாகவும், 2நிமிடம் தள்ளி ஆரம்பித்தால் அது இன்னொரு விதமாகவும், இன்னும் சில நிமிடங்கள் கழித்து ஆரம்பித்தால் அது மேலும் சில மாற்றங்களுடனும் நடந்தேறும் என்பதை காமெடியாகவும், கலைரசனையுடனும் தனக்கே உரிய பாணியில், ஒரே கதையை மூன்று விதமாக காட்சிப்படுத்தி வென்றிருக்கிறார் இயக்குநர் சிம்புதேவன்.

அருள்நிதியின் காதலிக்கு திருவான்மியூர் சர்ச்சில் வேறொருவருடன் திருமணம் நடக்க இருக்கிறது. அதை தடுத்து நிறுத்த விரும்பும் அருள்நிதிக்கு, அம்மணியை கடத்த சொல்லி 30 லட்சம் பணமும் தர சம்மதிக்கிறார் காதலியின் தந்தை ரவிராகவேந்தரின் தொழில்போட்டியாளர் நாசர்! 

கரும்பு தின்னகூலியா.?! எனக் கேட்காமல் தன் தோழன் பகவதி பெருமாள் எனும் பக்ஸ், தோழி பிந்து மாதவி உள்ளிட்டோருடன் காதலி கம் மணப்பெண்ணை கடத்த கிளம்பும் அருள்நிதி, எதிர்கொள்ளும் சோதனைகளும், சாதனைகளும் தான் 'ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்'.

இந்தகதையை சிவபெருமான் - நாரதர் உள்ளிட்டோர் பங்குபெற மூன்று விதமாக போரடிக்காமல் இயக்கி இருப்பதும், சிம்புதேவனுக்கு அதில் அருள்நிதி, பிந்துமாதவி, 'பக்ஸ்' பகவதி பெருமாள், சிஸர், கிரேன் மனோகர்கள், டெல்லி கணேஷ், எம்.எஸ்.பாஸ்கர், பாண்டு உள்ளிட்டோர் பக்கபலமாக இருந்து இருப்பது தான் 'ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்' படத்தின் பெரும்பலம்!

அருள்நிதியின் அலட்டிக் கொள்ளாத நடிப்பு, அம்மா சென்டிமெண்ட், காதலி கடத்தல் எல்லாமே சூப்பர்ப்! பிந்து மாதவியின் நடிப்பும், துடிப்பும் ஓ.கே. மற்றொரு நாயகி ஹர்சிதா ஷெட்டி நடிப்பும் கூட டபுள் ஓ.கே. 

எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு, நடராஜன் சங்கரனின் இசை, வைரமுத்துவின் வரிகள், ராஜா முகமதுவின் படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் சிம்புதேவனின் இயக்கத்தில், கதை சொன்ன விதத்தில் சற்றே ''12பி'' பட சாயல் தெரிந்தாலும், ''ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் - ஒரு டிக்கெட்டில் 3 காமெடி படம் பார்த்த திருப்தி!''