Monday, June 9, 2014

பூவரசம் பீப்பீ - சினிமா விமர்சனம்

ஹலிதா ஷமீம் எனும் இளம் அறிமுக பெண் இயக்குநர், கவுரவ் காளை, பிரவீன் கிஷோர், வசந்த் ஆகிய மூன்று சிறுவர்களை வைத்து கொண்டு புதுமையாக கதை சொல்லியிருக்கும் படம் தான் ''பூவரசம் பீப்பீ!'' 

ஆனால், ஹலிதா ஷமீம் புதுமை கதை சொல்லல... சில இடங்களில் முகசுளிப்பையும், பல இடங்களில் முன்முறுவலையும் ரசிகர்களிடையே ஏற்படுத்துவது தான் ''பூவரசம் பீப்பீ'' படத்தின் பலம், பலவீனம் எல்லாம்!

கதைப்படி பள்ளி விடுமுறையில், மாணவர்கள் ஊர், உறவு என வேறு ஒரு புதுமாதிரி உலகத்தை அனுபவிக்கும் தருணத்தில், ஆறாங்கிளாஸ் மாணவர்கள் மூவர் தங்கள் ஊரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்படும் ஒரு அபலையின் கொலையில், குற்றவாளிகளை துப்பறிந்து கண்டுபிடித்து, சட்டத்தின் முன் நிறுத்துவதும், புத்தாலி சிறுவர்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் எனும் 'தீமும்' தான் 'பூவரசம் பீப்பீ' படத்தின் கதை, களம் எல்லாம்!

இந்த நல்ல கதையில் சிறுவர்களின் செக்ஸ் தேடல், மீசை அரும்பாத வயசிலேயே ஆசை அரும்பும் பருவமாற்றங்கள் உள்ளிட்ட எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா விஷயங்களையும் சேர்த்து சற்றே விஷமாக கதை சொல்லியிருப்பதில் இயக்குநர் ஹலிதா ஷமிம் சற்றே கவனிக்க பட வைக்கிறார் என்பதுடன், கண்டனத்திற்கும் உள்ளாகி இருக்கிறார் என்பது தான் ஷைலைட்!

கவுரவ், பிரவீன், வசந்த் மூன்று சிறுவர்களும் யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள். அவர்களை மாதிரியே வர்ஷினி, அகல்யா உள்ளிட்ட சிறுமிகளும், காளி, ஸ்ரீஹரி உள்ளிட்ட வில்லன்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். 

குற்றவாளிகளை பேய், பிசாசு என பயமுறுத்தி உண்மையை வெளிக் கொண்டு வருவது, விளையாட்டு ஹெலிகாப்டரில் காமிரா பொறுத்தி கண்காணிப்பது, உண்மையை ஊருக்கு உரைக்க, பீப்பீ எப்.எம். என 6ம் கிளாஸ் மாணவர்களின் மனநிலையில் புதுமையாக சிந்தித்து ரசிகர்களை கவர்ந்து விடுகிறார் இயக்குநர்!

அருள்தேவின் பின்னணி இசை, மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு, ஹலிதா ஷமீமின் இயக்கம் உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்டுகள், ஒரு சில குறைகள் இருந்தாலும் ''பூவரசம் பீப்பீ'' - ''புதுமை பீப்பீ''-யாக காட்டிவிடுகின்றன என்றால் மிகையல்ல!