Monday, June 16, 2014

முண்டாசுப்பட்டி - சினிமா விமர்சனம்

கிராமத்துல இருக்கிற எல்லாரும் முண்டாசு கட்டி இருக்கிறதால படத்துக்குப் பேரு 'முண்டாசுப்பட்டி'யாம். அப்ப வேட்டி மட்டும் கட்டியிருந்தால் 'வேட்டிப்பட்டி'…

அப்புறம்…வேண்டாம் இதோட நிறுத்திக்குவோம். கற்பனையான ஒரு கிராமத்துல நடக்கிற அதி கற்பனையான ஒரு விஷயம்தான் படத்தோட கதை.

தலைக்கு உள்ள சில பல சுவாரசியமான விஷயங்களை யோசிச்ச இயக்குனர் ராம்குமார் தலைக்கு வெளிய இருக்கிற தலைமுடியைப் பத்தி கொஞ்சம் கூட யோசிக்கலை. 

அவனவன் அமெரிக்காவுல இருந்து மேக்கப் மேனையும், ஹேர் டிரஸ்ஸரையும் கூட்டிட்டு வந்து அப்படியே யதார்த்தமா இருக்கிற மாதிரி கெட்-அப்பையே மாத்தறாங்க. இவங்க என்னடான்னா, ஆதி கால சினிமாவுல பயன்படுத்தின அதே 'விக்'கை எடுத்து மாட்டிக்கிட்டு ஃபேன்சி டிரஸ் காம்படிஷன் நடத்தியிருக்காங்க.

1980-கள்னா ஒண்ணு இளையராஜா பாட்டு பின்னணியில பாடணும், இல்லை பெல்பாட்டம் பேண்ட் போடணும், ஸ்டெப் கட்டிங் தலைமுடி இருக்கணும்னு இதுதான் இவங்களுக்குத் தெரிஞ்சது போல. ஆனால், அதையும் மீறி உணர்வுன்னு ஒரு விஷயம் இருக்கிறது இவங்க கண்ணுக்குலாம் தெரியலை.

ஒரு காலத்துல முண்டாசுபட்டி கிராமத்துல ஒரு வெள்ளைக் காரன் வந்து போட்டோ புடிச்சதாலதான் கிராமத்துல இருக்கிற பலர் வித்தியாசமான நோய் வந்து இறக்கறாங்கன்னு ஒரு பீதி. அப்ப எங்க இருந்தோ வந்து விழுற ஒரு எரி கல், அப்படியே கரெக்டா அவங்க கிராமத்து கோயில்ல போயி செட் ஆகிடுது. 

அந்த சாமிதான் இவங்கள காப்பாத்துனதா நினைச்சி அந்த ஊர்ல இருக்கிற யாருமே போட்டோ எடுத்துக்கறதில்லை. அப்படி போட்டோ எடுத்தால் அவங்களுக்கு ஆயுசு முடிஞ்சிடும்னு ஒரு நெனப்பு.

இப்படிப்பட்ட கிராமத்துக்கு இறந்து போன ஊர் பெருசை போட்டோ எடுக்க போட்டோகிராபரான விஷ்ணு விஷால் அவர் உதவியாளர் காளி வெங்கட்டோட ஊருக்குள்ள வர்றாரு. அப்புறம் என்ன வழக்கம் போல ஊர் பெரிய மனுஷர் மகளான நந்திதாவைக் காதலிக்கிறாரு. அப்புறம் எப்படி ஊர் மனசை மாத்தறாருங்கறதுதான் படத்தோட கதை.

படத்துல இருக்கிற ஒரு பெரிய ஆறுதலே தேவையில்லாத காதல் காட்சிகள், காதல் பாடல்கள், முட்டல் மோதல் இப்படி எதுவும் இல்லாததுதான். அதே சமயம் அதுவே ஒரு மைனஸ் பாயின்டாவும் ஆயிடுது. 

முழுக்க முழுக்க ஒரு நகைச்சுவைக் கதையில காதலுக்குலாம் கூட பெரிய முக்கியத்துவம் கொடுத்த மாதிரி தெரியலை. மூடநம்பிக்கையை எதிர்க்கறோம்னு உஷாரா ஃபிராடா இருக்கிற மத்தவங்க மேலயும், பல்லி மேலயும் காட்சிகளை வச்சி எதுக்கு வம்பும்னு தப்பிச்சிக்கறாங்க.

விஷ்ணு விஷால், அவருக்குக் கொஞ்சமும் பொருந்தாத ஒரு விக், பொருத்தமில்லாத ஒரு பேண்ட், சட்டையோட முடிஞ்சவரைக்கும் முட்டி மோதி பார்த்திருக்காரு. டயலாக் டெலிவரியை நிதானமா சொல்லி புரியற மாதிரி பேசறதுல கொஞ்சம் தப்பிச்சிக்கிறாரு. 

அதுலயும், சத்தமேயில்லாம நந்திதாவை சைட் அடிக்கிறதுல சான்ஸே இல்லை. ஆனாலும், நடிப்புத் திறமையை கொட்டறதுக்கு படத்துல எந்த காட்சியும் இல்லை. அப்படியே இருந்துட்டாலும்னு நீங்க கேக்கறது புரியுது. நம்பிக்கையை தளர விடாதீங்க விஷ்ணு, இப்படியே கொஞ்சம் கொஞ்சமா போனால் விஷால் மாதிரி ஆகிடலாம்.

'அட்டகத்தி' நந்திதா, முண்டாசுபட்டி கிராமத்தோட ஊர் பெரிய மனிதரோட ஒரே செல்லப் பொண்ணு. அப்புறம் கேக்கணுமா, கண்டிப்பா ஹீரோவைத்தான் லவ் பண்ணும். நீலம், சிகப்பு, பச்சை கலர்ல பாவாடை தாவணி, காமாட்சி டாலர் செயின் இதுதான் 80களோட ஹீரோயின் தோற்றம்னு இயக்குனர் ஃபிக்ஸ் ஆகிட்டாப்ல, என்ன பண்றது. ஆனாலும், நந்திதாவுக்கு இந்த கதாபாத்திரமும் அழகு. இப்படி நல்லா நடிக்கிற பொண்ணை அப்படியே சும்மா பார்க்கிறதுலயும், நடக்கிறதுலயும் மட்டுமே விட்டுட்டாரு இயக்குனர்.

படத்தோட கலகலப்புக்கு ரெண்டு பேர் உத்தரவாதம். ஒண்ணு காளி வெங்கட், இன்னொண்ணு ராமதாஸ். காளி வெங்கட் , விஷ்ணுவோட உதவியாளர் அப்பப்பட சரியான சமயத்துல சரியா பேசி கொஞ்சம் சிரிக்க வைக்கிறாரு. 

ஆனாலும் , நகைச்சுவையில இவரை ஓவர் டேக் பண்ணிடறாரு ராமதாஸ். சினிமா ஆசையில முனீஷ்காந்த்-னு பேரை வச்சிக்கிட்டு கிராமத்துல இவர் பண்ற அட்டூழியம் அப்பப்ப கொஞ்சம் பொறுமைய சோதிச்சாலும் சில காட்சிகள்ல சிரிக்க வைக்குது.

ஷான் ரோல்டன் இசையில் “இது என்ன….' பாடலும், “ராசா மகராசா…” பாடலும் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையில் வாசித்துத் தள்ளுகிறார். சில இடங்களில் வசனங்கள் கூடப் புரியவில்லை. கிராமத்துக் காட்சிகளில் ஷங்கரின் ஒளிப்பதிவு பாராட்ட வைக்கிறது.

முண்டாசுப்பட்டி - வண்ணக் காலத்தில் ஒரு கருப்பு வெள்ளை…!