Wednesday, June 25, 2014

கலெக்டர் வேடத்தில் நடிக்கும் ரஜினி

பெரும்பாலும் சாமான்யனாக நடிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டுபவர் ரஜினி. அதனால் பெரிய பெரிய பொறுப்புகளில் இருக்கும் அதிகாரி வேடங்களை தவிர்ப்பார். 

அப்படித்தான் ஷங்கர் இயக்கிய முதல்வன் படத்தில் நடிப்பதற்கும் மறுப்பு தெரிவித்தார். 

அந்த படத்தில் கதைப்படி முதல்வராவது போன்று கதை பண்ணியிருந்ததால், அதில் தான் நடித்தால் அதை வைத்தே சர்ச்சைகள் வரும் என்று அப்போதைய அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு முதல்வன் படத்தில் நடிக்க மறுத்தார் ரஜினி.

ஆனால், இப்போது காலங்களின் மாற்றம், ரஜினியின் உடல் நிலை மாற்றம் என்று ஏற்பட்டிருப்பதால், அதற்கேற்ப கதையை தேர்ந்தெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் ரஜினி, தற்போது தான் நடித்து வரும் லிங்காவில் ஒரு கேரக்டரில் கலெக்டராக நடிக்கிறாராம். 

ஒரு மாவட்டத்தின் ஆட்சியாளராக இருக்கும் அவர் மக்கள் நலனில் ஈடுபடும்போது என்னென்ன எதிர்விளைவுகளை சந்திக்கிறார் என்பதுதான் கதையாம்.

மேலும், கோச்சடையான் ரசிகர்களை ஏமாற்றிவிட்டது என்பதால், இந்த லிங்கா அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யக்கூடிய படமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு விசயத்தையும் பார்த்து பார்த்து செய்து வரும் ரஜினி, தனது பழைய வெற்றி செண்டிமென்ட்டுகளையும் இந்த படத்தில் பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்.

ஒரு படம் வெற்றி பெற வேண்டுமென்றால் நல்ல கதைதான் அவசியம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், ஏற்கனவே வெற்றியை கொடுத்த படங்களில் தான் கடைபிடித்தவற்றை தொடர்வது சினிமா உலகின் பாலிஸி என்பதால், தான் நடித்ததில் ரயில் சண்டை காட்சிகள் இடம்பெற்ற படங்கள் அனைத்துமே ஹிட்டடித்திருக்கின்றன என்பதால், இந்த படத்திலும் கட்டாயம் ஒரு ரயில் சண்டை காட்சி வேண்டும் என்று செண்டிமென்டுக்காக கதைக்குள் புகுத்தியிருக்கிறாராம் ரஜினி. அந்த காட்சியையும் ஐதராபாத்திலேயே படமாக்கப்போகிறார்களாம்.