Sunday, October 12, 2014

மீண்டும் ரஜினியை இழுக்கும் அரசியல் சக்திகள்.?

1996ல் திமுகவுக்கு ஆதரவாக சேனல்கள் மூலம் பிரச்சாரம் செய்தவர் ரஜினி. அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றதால், ரஜினியின் செல்வாக்கு உயர்ந்தது. 

இதனையடுத்து அவர் அரசியலில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பின்னர் அவர் அரசியலில் ஈடுபடவில்லை. அதையடுத்து, 2004ல் பாமகவுடன் மோதல் ஏற்பட்டபோது ரஜினி தனிக்கட்சி தொடங்கி விடுவார் என்று எதிர்பார்க்கபபட்டது. அப்போதும் அவர் அமைதியாகி விட்டார். 

இந்த நிலையில், ராணா படத்தில் நடிப்பதற்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, ரஜினி இனிமேல் அரசியலுக்கு வருவது கடினம் என்றுதான் கருதப்பட்டது. 

கடந்த பார்லிமென்ட் தேர்தலுக்கு முன்பு ரஜினியை மரியாதை நிமித்தமாக பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தது மீண்டும் ரஜினி எதிர்காலத்தில் அரசியலுக்கு வரக்கூடும் என்கிற எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதையடுத்து, பாஜகவினர் ரஜினிக்கு அழைப்பு விடுத்தும் அவர் அதற்கு எந்த பதிலும் இதுவரை சொல்லவில்லை.

இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் அசாதாரண அரசியல் சூழல் நிலவி வருகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழகத்தில் தங்களது கட்சிகளை பலப்படுத்த தேசிய கட்சிகள் முதல் தமிழகத்தில் உள்ள சிறிய கட்சிகள் வரை தீவிரமாக இறங்கியுள்ளது. 

இந்தவகையில், நடிகர் ரஜினிகாந்த்தை சில கட்சிகள் அழைக்க எண்ணியுள்ளதாம். இதேப்போல், சில அரசியல் ஆர்வலர்களும் ரஜினி அரசியலுக்கு வருவதற்கு இதுதான் சரியான நேரம் என்று அவரை உசுப்பேற்றி விட்டும் வருகிறார்களாம். 

ஆனால், தற்போதைய நிலவரப்படி யாருக்கும் எந்த பதிலும் சொல்லாமல், நடப்பதை உற்று நோக்கியபடி, வழக்கபடி அமைதியே உருவாக இருந்து வருகிறார் ரஜினி.