Monday, March 24, 2014

குக்கூ (Cuckoo) - சினிமா விமர்சனம்

குக்கூ', கண் தெரியாதவர்களின் கலர்புல் காதல், காமெடி, உணர்ச்சிகள், கண்ணீர் பின்னணிகள் உள்ளிட்ட இன்னும் பல விஷயங்களை இதுவரை யாரும் திரையில் காட்டிராத சுவாரஸ்யத்துடன், கண்களுடைய எல்லோரும் கண்கொட்டாமல் ரசிக்கும்படியும், பார்வையற்றவர்களுக்காக கடவுளிடம் கண்ணீர் மல்க யாசிக்கும்படியும் தன் முதல் படத்திலேயே 'பக்கா'வாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் ராஜூ முருகன் என்றால் மிகையல்ல!

கதைப்படி, மேடை கலைக்குழு ஒன்றில் இளையராஜா பாடல்களை பாடியபடி எல்லோரையும் வசியபடுத்தும் பார்வையற்ற தமிழ் எனும் 'அட்டக்கத்தி' தினேஷ், மீதி நேரங்களில் சென்னை, மின்சார இரயில்களில், பிற பார்வையற்ற இளைஞர்களுடன் சேர்ந்து சின்ன சின்ன பொருட்களை, பொம்மைகளை விற்று ஜீவனம் நடத்துகிறார். 

தான் இதுமாதிரி பொருட்களை வியாபாரயம் செய்யும் மின்சார இரயில்களில், அடிக்கடி பிரயாணித்து ஆசிரியை ஆக படிக்கும், தன் மாதிரியே பார்வையற்ற சுதந்திரக்கொடி எனும் அறிமுகநாயகி மாளவிகா மீது தமிழ் தினேஷூக்கு முதலில் மோதலும், பின் காதலும் பிறக்கிறது.

தன் காதலை சுதந்திரக்கொடியிடம் ஒரு சிடியில் பேசி நண்பர் உதவியுடன் தமிழ் வெளிப்படுத்த போகும் தருவாயில், நாயகி சுதந்திரத்திற்கு அவருக்கு பல விதத்திலும் உதவும் இளம் சமூக சேவகர் ஒருவர் மீது காதல் இருப்பது தெரிய வருகிறது. கூடவே பார்வை உடைய ஒருவனையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனும் நாயகியின் லட்சியமும் தெரிய வருகிறது. 

அதனால், சுதந்திரக்கொடி பையில் வைத்த சி.டி.யை திரும்ப எடுக்கவும் முடியாமல், காதல் அம்பை தொடுக்கவும் முடியாமல் அறை திரும்புகிறார். இதுஒரு பக்கம் என்றால் மற்றொருபக்கம், சுதந்திரகொடியின் முரட்டு குப்பத்து அண்ணன், தன் ஆட்டோ ஓட்டுநர் நண்பன் செய்யும் பண உதவிகளுக்கு கைமாறாக சுதந்திரத்தை அவனுக்கே கட்டி வைக்க சபதம் பூண்டிருக்கிறார் எனும் விவரமும் தெரியவருகிறது.

நாயகியின் லட்சியம், நாயகி சுதந்திரத்தின் முரட்டு அண்ணனின் சபதம்... உள்ளிட்ட சகலமும் தவிடுபொடியாகி அந்த பார்வையற்ற அழகி சுதந்திரக்கொடி எனும் மாளவிகா, நம் பார்வையற்ற தமிழ் எனும் தினேஷூக்கு கிடைத்தாரா.? அல்லது இளையராஜாவின் சோகப்பாடல்களும், கனவு டூயட்டுகளுமே நம் நாயகருக்கு நிரந்தரமானதா..? என்பதற்கு வித்தியாசமும், விறுவிறுப்பாகவும், நெஞ்சை உலுக்கும் திருப்பங்களுடன் விடை சொல்கிறது 'குக்கூ' திரைப்படத்தின் மீதிக்கதை!

காதலுக்கு கண் இல்லை என்பார்கள்... இதில் கண் தெரியாதவர்கள்குள்ளும் காதல் உண்டு! என்பதை கண் தெரிந்த ரசிகர்கள் எல்லோரும் கண் அயராமல் கண்டுகளிக்கும்படி கலர்புல்லாக காட்சிக்கு காட்சி சொல்லி இருக்கும் காரணத்திற்காகவே இயக்குநர் ராஜூ முருகனுக்கு தயக்கமின்றி ஒருடஜன் 'ஹேட்ஸ் ஆப்' சொல்லலாம்!

தமிழ் கதாபாத்திரத்தில் பார்வையற்ற இளைஞராக வாழ்ந்திருக்கிறார் நாயகர் தினேஷ் என்று தான் சொல்ல வேண்டும். மின்சார இரயில்களிலும், இரயில் நிலையங்களை ஒட்டியும் நாம் அவ்வப்போது கூட்டமாக பார்க்கும் பார்வையற்ற இளைஞர்களில், யாரோ ஒருவரை நம் கண்முன் காட்சிக்கு காட்சி கொண்டு வந்து நிறுத்தி, நம் கண்களில் கண்ணீர் துளிகளை எட்டிபார்க்க செய்து விடுகிறார். 

கதாநாயகி முதலில் நாயகருடன் ஏற்படும் முட்டல் மோதலில், முதல்நாள் நாயகருக்கு ஏற்படுத்திய நெற்றி காயத்தில், மறுநாள் கைவைத்து கடவுளை பிரார்திக்கும் காட்சியில், ஹீரோவின் மெய்சிலிர்ப்பு ஆகட்டும், பின்னணியில் புல்லாங்குழல் வாசித்துப்போகும் பெரியவர், கலர் பலூன்கள், பஞ்சுமிட்டாய்கள் கொண்டு செல்லும் வியாபாரிகள் என காட்டுமிடத்தில் நாயகர் தினேஷின் பிலீங், படம் பார்க்கும் நம்மையும் அவர்களின் காதலுக்குள் அழைத்து போய்விடுகிறது. 

அதன்பின் தமிழ்-தினேஷூக்கு ஏற்படும் இன்பம், துன்பம், காதல், கலாட்டா, காமெடி, அடி, உதை, இழப்பு, ஏற்பு... எல்லாவற்றிலும் பார்வையற்ற பாத்திரமென்றாலும்... ரசிகனான நம்மை, அந்த இடத்தில் தமிழ் தினேஷாகவே பொருத்திக் கொண்டும், புகுத்திக் கொண்டும் படம் முழுதையும் பார்க்க முடிவது தான் 'குக்கூ'வின் பெரிய பிளஸ்! இதற்கு பெரிய காரணம் இயக்குநர் ராஜூ முருகன் என்றாலும், தினேஷின் உயிரை கொடுக்கும் நடிப்பும், பாத்திரமும் முக்கிய காரணியாகும்! குட் ஆக்டிங்! 'கீப் இட் அப் தினேஷ்!!'

'அட்டக்கத்தி' தினேஷ் மாதிரியே அறிமுக நாயகி மாளவிகா மேனனும் பார்வையற்ற பெண்ணாக மிரட்டி இருக்கிறார் மிரட்டி! இரண்டாவது சந்திப்பிலேயே நாயகர், தன்னை நான்கு ஸ்டாப் தள்ளி இறக்கி விட வைத்த கொடூரம் கண்டு, அம்மணி மாளவிகா பொங்குவதும், அதற்காக அடுத்தமுறை நாயகருக்கு அவர் தரும் அதிரடியும் ஒரு நிமிடம் நம்மை ஆடிப்போகச் செய்து விடுகிறது. 

லூசு, லூசு... என அம்மணி, தினேஷை கொஞ்சும் இடங்களில் ஆகட்டும், செக்யூரிட்டியாக ஏ.டி.எம். வாசலில் சாப்பிட்டபடி இருந்து கொண்டே இல்லை என சொல்லும் அண்ணன் பற்றி, அண்ணி வச்ச மீன் குழம்பு வாசனை எனக்குத் தெரியாதா என தோழியிடம் தன் மனப்பக்குவத்தை வெளிப்படுத்தும் இடத்தில் ஆகட்டும், தினேஷிடம் மனதை பறிகொடுக்கும் இடங்களில் ஆகட்டும் தேர்ந்தெடுத்த நடிகையாக மிளிர்ந்திருக்கிறார் அம்மணி!

மேடை கலைக்குழுவில் எம்.ஜி.ஆர்., அஜீத், விஜய்யாக வலம் வரும் நட்சத்திரங்கள் சந்திரபாபுவாக 3 மனைவிகளின் கணவனாக கலக்கி, கலைகுழுவையும் நடத்தும் ஈஸ்வர், 'ஆடுகளம்' முருகதாஸ், இயக்குநர் ராஜூ முருகன் எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.

சந்தோஷ் நாராயணின் மனதை வருடும் பாடல்கள், இசை, (பின்னணி இசை விட்டுவிட்டு ஒலிப்பதின் பின்னணி என்னவோ.?), பி.கே.வர்மாவின் கண்களை கவரும் ஒளிப்பதிவு உள்ளிட்டவைகள் பெரிய பிளஸ் பாயிண்ட்டுகள்.

''அண்ணனை விட தம்பிக்கு தான் பவர்...'', ''இருட்டில் கிடைத்த சுதந்திரம்...'', தமிழுக்கும், தமிழர்களுக்கும் தொடர்ந்து கிடைத்து வரும் அவமரியாதைகள், உள்ளிட்ட லோக்கல்-இன்டர்நேஷனல் பாலிட்டிக்ஸ்களை நக்கல் அடிப்பது, என படத்தில் பாத்திரங்கள் பேசும் வசனங்கள் இயக்குநர் ராஜூ முருகனுக்கு ஒரு 'ஷொட்டு' வைக்க தூண்டுகிறது.

என்னதான் உண்மை என்றாலும் பார்வையற்றவர்களை பிடிவாதக்காரர்கள், நினைத்ததை நினைத்த மாத்திரத்திலேயே செய்து முடிக்க நினைக்கும் அடம்பாவிகள், என்றெல்லாம் சொல்லாமல் சொல்லி சித்தரித்து இருப்பதற்காக இயக்குநருக்கு ஒரு 'குட்டு' வைக்கவும் தோன்றுகிறது.

''குக்கூ'' என சத்தமிடும் கதாநாயகியின் கடிகாரத்திற்கும், ஒரு அப்பா இமேஜை கொடுத்து அதிலும் சென்டிமென்ட்டை புகுத்தியிருக்கும் இயக்குநர் ராஜூ முருகன், ஒரு சில இடங்களில் நீள அகலங்களை சற்றே குறைத்து இருந்தார் என்றால் 'குக்கூ' இன்னும் அழகாக கூவியிருக்கும்.

ஆனாலும், ''குக்கூ - 'செம கிக்கூ...', தயாரிப்பாளர்களுக்கும், புதுமை விரும்பும் ரசிகர்களுக்கும் ஒருசேர லக்கூ!''